போன முறை இந்த நிறுத்தணும் பதிவு போடும் பொழுது இவ்வளவு பேர் படிப்பாங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை. இவ்வளவு பேர் ஆர்வமாப் படிக்கறாங்க என்பதே என்னை அடுத்த பதிவை எழுத தூண்டி விடுது. (அதுக்காக இந்தப் பதிவை படிக்காம விட்டா நிறுத்திடுவேன்னு நினைக்காதீங்க!)
இந்த முறை குறிப்பிடும் தவறுகள் முன்பே பல முறை சொல்லி இருப்பதுதான். ஆனாலும் தொடர்ந்து கண்ணில் தவறான வடிவம் பட்டுக் கொண்டே இருப்பதால் திரும்பவும் சொல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது. சொல்லும் முறை மாறினாலாவது மனத்தினுள் செல்கிறதா என்று பார்க்கலாம்.
கண்ணில் படுவது : அமுல்
எழுத வேண்டியது : அமல்
அமல் என்றால் கட்டாயமாக செயல்படுத்துதல் என்று பொருள். இன்றிரவு முதல் புதிய ரயில் கட்டணங்கள் அமுலுக்கு வருகின்றன். அந்த விதியை அப்படியே அமுல் செய்வது ஆபத்தானது என்று அச்சு ஊடகத்தில் கூட அதிகம் பார்க்கிறோம். அமுல் என்பது தவறான பயன்பாடு. அமல் என்பதே சரியான சொல். Enforcement Directorate என்பதை அமலாக்கத்துறைன்னு தமிழில் எழுதுவது. இதை அமுலாக்கத்துறைன்னு சொன்னாத் தப்பு. அமல் செய்வது என்றால் செயல்படுத்துவது அமுல் செய்வது என்றால் எதோ பால் சம்பந்தப்பட்ட மேட்டர். அமுல் பால், அமலா பால்? இல்லையா? அமலா பாலில்லை என்று ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டியதுதான்
கண்ணில் படுவது : பொரி
எழுத வேண்டியது : பொறி
பொரி, பொறி ரெண்டுமே தமிழ் வார்த்தைகள்தான். ஆனா வேற வேற அர்த்தம். பொரி என்றால் எண்ணெய் கொண்டோ, அது இல்லாமலோ வறுப்பது. அப்படி வறுத்த அரிசியையும் பொரி என்கிறோம். பொரித்த மீன், பொரியுருண்டை என்றெல்லாம் சொல்லும் பொழுது இந்தப் பொரி என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். ஒருவர் கடுமையாகத் திட்டிப் பேசுவதையும் பொரிந்து தள்ளுகிறான் என்கிறோம்.
பொறி என்னும் சொல்லுக்குப் பல விதமான அர்த்தங்கள் உண்டு. தீப்பொறி, எலிப்பொறி, பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டியது என்றெல்லாம் சொல்லும் பொழுதே - Spark, Trap, Carve என அர்த்தம் தெளிவாகவே தெரிகிறது அல்லவா? பொறி வைத்துப் பிடித்தேன் என்று எழுத வேண்டிய இடத்தில் பொரி வைத்துப் பிடித்தேன் என்றால் எலியும் அணிலும்தான் கிடைக்கும் இல்லையா. பொரி - Fry, பொறி - Machine
கண்ணில் படுவது : உரி
எழுத வேண்டியது : உறி
பொரி பொறி போன்று உரி, உறி இரண்டுமே தமிழ்ச் சொற்களே. ஆனால் பொருள் வேறு. உரி என்றால் தோல். அதனால்தான் மரவுரி எனச் சொல்கிறோம். இந்த தோலை அகற்றுவதையும் உரி என்கிறோம். வாழைப்பழத் தோலை உரித்த பின் உண்ண வேண்டும். உறி என்பதற்கு முக்கியமாய் இரண்டு அர்த்தங்கள். உறிஞ்சிக் குடிப்பது மற்றும் கயிறு கொண்டு கட்டி மேலெழுப்புவது. மோர் தயிர் பாத்திரங்களை அப்படி மேலே கட்டி இருப்பதனால்தான் உறி எனப் பெயர். உறியில் இருப்பதை உறிஞ்சு. உரி- Peel உறி - Sip
கண்ணில் படுவது : பண்ணிரெண்டு
எழுத வேண்டியது : பன்னிரண்டு
பண் என்றால் பாடல். பண் என்றால் இசை. பண் என்றால் தகுதி. எண் என்பதற்கு எதுகை என்பதைத் தவிர பண்ணுக்கும் எண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பதினொன்று எனச் சொல்கிறோம். பத்து+ இன் + ஒன்று = பதினொன்று என வருகிறது. அது போல பத்து+ இரண்டு என்பது பன்+இரண்டு = பன்னிரண்டு என மாறுகிறது. இதை பண்ணிரெண்டு, பண்ணிரண்டு என்றெல்லாம் எழுதினால் தவறு. பண்ணிரண்டுன்னா ரெண்டு பாட்டு. பன்னிரண்டுதான் 12.
கண்ணில் படுவது: அணைத்து
எழுத வேண்டியது : அனைத்து
மீண்டும் ணகரக் குழப்பம். அனைத்து உயிர்கள்பால் அன்பு செலுத்த வேண்டும் என்பதை அணைத்து உயிர்கள்பால் அன்பு செலுத்த வேண்டும் என்றால் அநர்த்தம் ஆயிடும். இந்த மாதிரி ணகரப்பிழைகளுக்குக் காரணம் தவறான உச்சரிப்புதான். உச்சரிக்கும் பொழுது சரியாக அனைத்து எனச் சொல்லத் தொடங்கினால் எழுதும் பொழுது பிழை வராது. அனைத்து மக்களையும் அணைத்து வாழவேண்டும். அணைத்து பெண்களை மதிக்க வேண்டும் என்றால் எவனாச்சும் அதைப் பண்ணப் போய் - எதுக்கு வம்பு?
கண்ணில் படுவது : நாகரீகம்
எழுத வேண்டியது : நாகரிகம்
விளக்கம் எனத் தொடங்கினால் பெரிதாகப் போகும் அபாயம். சுருங்கச் சொல்லப் பார்க்கிறேன். நகரத்தன்மை என்பதே நாகரிகம் என வழங்கப்படுகிறது. இகம் என்றால் இருப்பது, இந்த உலகம் என்று பொருள். அதாவத் நகரத்தன்மை இருப்பது நாகரிகம். அது என்ன நகரத்தன்மை என்று தொடங்கினோமானால், நாகரிகம் என்றால் என்ன என்று பல பக்கங்களுக்குச் சொல்ல வேண்டியது வரும். அது இப்பொழுது வேண்டாம். நகர் + இகம் என்பது புணர்ந்து வரும் பொழுது நாகரிகம் என்றாகிறது.
அதே மாதிரிதான் தேசியம், காந்தியம், மார்கசியம் என்றுதான் சொல்ல வேண்டும். தேசீயம், காந்தீயம் என்று ஈயத்தைக் காய்ச்சி ஊற்றாமல் இருப்போம். இந்த இகம் இயம் எல்லாம் அளவா வச்சுக்கணும். இழுத்தா அறுந்துடும்
கண்ணில் படுவது : கறுப்பு
எழுத வேண்டியது : கருப்பு
ரொம்பவே சண்டை வரக்கூடிய விஷயம். மீண்டும் விளக்கம் சொல்லத் தொடங்கினால் பக்கம் பக்கமாகப் போய்விடக்கூடிய அபாயம். எனவே எது சரி என்பதோடு நிறுத்தி விடுகிறேன். நிறத்தைப் பற்றிச் சொல்லும் பொழுது கருப்பு என்று சொல்ல வேண்டும். கருமை, கருங்குரங்கு என்று எல்லா இடங்களிலும் இடையின ரகரம் வருவதை நினைவில் கொண்டால் கருப்பு என்றே எழுதுவோம். அப்போ கறுப்பு என்றால்? எனக் கேள்வி கேட்பவர்களுக்கு. கறுப்பு என்றால் சினம். இப்போதைக்கு இது போதும். கருப்பு கலர் கறுப்பு சினம்.
கண்ணில் படுவது : அய்யா
எழுத வேண்டியது : ஐயா
ஐ என்றால் கடவுள், தலைவன் எனப் பல பொருட்கள் உண்டு. அந்த ஆண்டவனையோ, தலைவனையோ மரியாதையாக அழைக்கும் பொழுது ஐயா என்று அழைக்கிறோம். அய் என்றால் ஒரு பொருளும் கிடையாது எனவே அய்யா என்று அழைத்தால் மரியாதை என்றாகப் போவதில்லை. ஐ என்பதற்கு அய் போலி என்று சிலர் சொல்லக்கூடும். ஐயோ என்பதை அய்யோன்னு சொல்லலாமோ? சரியாகச் சொல்ல முடிகிற பொழுது போலி எதற்கு? ஐயோ பாவம் ஐயா என்றே சொல்லுவோம் அய்யோப் பாவம் அய்யா வேண்டாம்.
கண்ணில் படுவது: ஞாயம்
எழுத வேண்டியது : நியாயம்
அய்யா இந்த ஞாயத்தைக் கேட்க மாட்டீங்களா? இப்படி ஒரு வரியை பார்த்தா என் அடிவயிற்றில் அமிலம்தான் சுரக்கிறது. அய்யாவைப் பார்த்தாச்சு. அடுத்தது இந்த ஞாயம். பேசும் பொழுது ஞாயம் என்றே உச்சரிப்பதினால் வரும் தவறு. நியாயம் என்பதே சரி. ஞாயம் என்று தமிழில் ஒரு வார்த்தையே கிடையாது. ஞாபகத்தில் இருக்கட்டும் நியாயம்தான் சரி.
கண்ணில் படுவது: தோழி மார்
எழுத வேண்டியது : தோழிமார்
சரியான எழுத்துகளைக் கொண்டு எழுதினால் எழுத்துப்பிழை இல்லாமல் இருக்குமா? இருக்காது. தேவை இல்லாத இடங்களில் கொஞ்சம் இடம் விடாமல் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு வைரமுத்து தோழிமார் கதை எழுதி இருக்கார். ஆனா அதை விமர்சனம் பண்ணறேன் பேர்வழின்னு நாம வைரமுத்துவின் தோழி மார் கதை பிரமாதம்ன்னு நாம எழுதினா அர்த்தம் எப்படி மாறிப் போயிடுது பார்த்தீங்களா? ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் போதிய இடைவெளி தரவேண்டும். ஆனால் தேவையில்லாத எழுத்துகளுக்கு நடுவே இல்லை.
அடுத்த முறை இன்னும் பல பிழைகளோட வரேன். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் அன்பு…...
10 comments:
test
@கொத்ஸ் : கறுப்பு/கருப்பு - எப்பவும் சந்தேகம் வரும் வார்த்தை
நாகரீகம் - இது தவறு செய்வேன்னு நினைக்கிறேன். உங்க பதிவு படிச்சிதான் நாகரிகம்-தான் சரின்னு தெரியுது. :)
நன்றி
கடைசி இரண்டு ....அடிச்சுக்கவே முடியாது. :-))
அருமை ஐயா... அமுல்படுத்துவது, பன்னிரெண்டு ஆகியவை தவறானவை என்பதை நானும் பலருக்குச் சுட்டியிருக்கிறேன். நாகரிகம், ஐயா ஆகியவை தெரிந்து கொண்டேன். கறுப்பு - கருப்பு குறித்து சொல்லியதும் அபாரம்!
கொத்து வேலை நல்லாத்தான் இருக்கு.அதுலேயும் "அமலா பாலில்லை,உறியில் இருப்பதை உறிஞ்சு " என ஞாபகத்தில் இருக்குமாறு செய்த வேலை அபாரம்.அப்புறமா கொத்தநார்-கொத்தனார்,அன்னியன் - அந்நியன் போல இருக்கத மராமத்து செய்ய எவ்ளோ வேணும்னு ஒப்பந்த புள்ளி அனுப்பி வையுங்க.
ஐயா...!
மனதில் பொறிக்கப்பட வேண்டிய பதிவு . இனி நிச்சயமாக இதை அமல்படுத்திவிடுவேன்.
Sir
Can you. Write about "sagavasam" which is used in tamil serials as "sagavasam"
Sir
Can you. Write about "sagavasam" which is used in tamil serials as "sagavasam"
"ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் போதிய இடைவெளி தரவேண்டும்"
யோவ் வாத்தியாரே..ஒண்ணே போதும்னு இந்திய அரசாங்கம் சொல்ல ஆரம்பித்து ரொம்ப நாள் ஆகி விட்டது.
ச.சங்கர்
//அனைத்து மக்களையும் அணைத்து வாழவேண்டும். அணைத்து பெண்களை மதிக்க வேண்டும் என்றால் எவனாச்சும் அதைப் பண்ணப் போய் - எதுக்கு வம்பு?
// விஜய் டிவி ஸ்டார் சமையல் நிகழ்சியில அதத்தான செய்யறாங்க.
Post a Comment