Sunday, July 28, 2013

நீ கேட்ட கேள்விக்கொரு நன்றி, நமைச் சேர்த்த குவிஸ்ஸுக்கொரு நன்றி!

இன்னிக்கு ஒரு பெரிய ப்ராஜெக்ட் முடிவுக்கு வருது. மாஸ்டர் ரெக்ஸ் அருள் இசைத் துண்டுகளைக் கொடுத்து இளையராஜா பாடல்களைக் கண்டுபிடிக்கும் க்விஸ் நிகழ்ச்சி. இணையத்தில் இது பத்தித் தெரியாதவங்க கம்மிதான். பார்த்ததில்லைன்னா இங்க போய் பாருங்க - 365rajaquiz 

ஒரு நாள் ரெண்டு நாள் இல்லை, விடாம தொடர்ந்து ஒரு வருஷமா நடத்திக்கிட்டு இருக்காரு. இந்த ஒரு வருஷத்துல நீ எத்தனை நாள் சரியான பதிலைச் சொல்லி இருக்கன்னு கேட்டா, சரி தப்பு விடுங்க, ஒரு நாள் கூட விடையைச் சொன்னது இல்லை. அப்புறம் என்ன டேஷுக்குடா பதிவுன்னு யாரும் கேட்டுடாதீங்க. நான் சொல்லப் போறது எல்லாம் நடத்திய ஆளைப் பத்திதானே தவிர அவர் தந்த பாட்டுகளைப் பத்தி இல்லை.


பல முறை இணையத்தில் க்விஸ் நிகழ்ச்சிகள் நடத்தியவன் என்ற முறையில் சொல்லறேன். இந்த மாதிரி க்விஸ் நடத்தறது சாதாரண விஷயம் இல்லை. பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அதில் எந்தப் பகுதியை துணுக்காகத் தர வேண்டும் என முடிவு பண்ணி, அதைப் பதிவாப் போட்டு, அதுல ஒரு விமர்சனம் எழுதி, ஒரு க்ளூ குடுத்து, வர விடைகளைச் சரி தப்புன்னு சொல்லி, அதுல கேள்விகளுக்குப் பதில் சொல்லி..... இப்ப படிக்கும் போதே மூச்சு முட்டுதே இதை அவரு தொடர்ந்து ஒரு வருஷம் செஞ்சு இருக்காரு. இதுக்காக எவ்வளவு நேரம் செலவழியும். மத்த விஷயங்கள் எவ்வளவு இதுக்காக இழக்கணும் என்பது எல்லாம் எனக்குத் தெரியும். இதுக்கு ஒரு முதல் வணக்கம்.

என்னால முடியுது பண்ணறேன்னு போன பேராவில் எழுதின அத்தனையும் ஒருத்தர் செஞ்சுடலாம். ஆனா அதை நூத்துக்கணக்கான பேர் ரசிக்கும்படி செய்யறது சுலபமான விஷயமா என்ன? நானும் தமிழ்ப்பேப்பரில் இலக்கணத்தொடர் எழுதினேன். முதல் ரெண்டு மூணு வாரம் ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ் ஆனா போகப் போக படிச்சுட்டுப் போற ஆள் எண்ணிக்கை ஓரளவு இருந்தாலும் அதைப் பத்தி அங்க பேசறவங்க எண்ணிக்கை குறைஞ்சுதான் போச்சு. இங்க பார்த்தீங்கன்னா கிட்டத்தட்ட 130,000 பார்வையிடல்கள், 15,000 பின்னூட்டங்கள். சாதாரண விஷயமாய்யா இது?

அது மட்டுமில்லை, இந்த க்விஸ் தங்களை எப்படி எல்லாம் பாதிச்சுது அப்படின்னு பலரும் எழுதினதை எல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கும். இதை எல்லாம் பார்க்கும் பொழுது நாம இதில் கலந்துக்காம விட்டது பெரிய தப்போன்னு தோணும். சரி, இந்தக் கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனைன்னு வழக்கம் போல வேடிக்கை பார்த்துக்கிட்டே இருந்திடுவேன். இப்படித் தொடர்ந்து ஒரு கூட்டத்தையே தன் பின்னாடி வர வெச்ச திறமைக்கு என் இரண்டாவது வணக்கம்.

கேள்வியை நானே கேட்கிறேன், கேள்வி கேட்கறது ஈசி என்பது எல்லாம் நகைச்சுவை வசனங்களாக நல்லா இருந்தாலும் எந்த விஷயமாகட்டும் அதில் இவ்வளவு கேள்விகள் கேட்கணுமுன்னா அதுக்கு அவ்வளவு விஷயம் தெரிஞ்சிருக்கணும். திரையிசைப் பாடல்கள், அதிலும் ஒரே ஒரு இசையமைப்பாளரின் பாடல்களில் இந்த அளவு ஆராய்ச்சி செஞ்சு மாஸ்டர் பட்டம் வாங்கி இருக்க எவ்வளவு முனைப்பு இருந்திருக்கணும். அப்படி முனைவதற்கு எவ்வளவு ஆர்வம் இருந்திருக்கணும். எந்த விஷயமானாலும் நுனிப்புல் மட்டுமே மேயும் என் போன்றவர்களுக்கு இந்த முனைப்பும் ஆர்வமும் கூட ரொம்பப் பெரிய விஷயம். அதுக்கும் என் வணக்கம்.

இது அத்தனையும் விடுங்க. நேர்ல ஒரு முறை இவரைச் சந்திச்சேன். நமக்கு இந்த மேட்டர் எல்லாம் தெரியாது என்பது அவருக்கு முன்னமே தெரியுமோ என்னமோ சந்தித்த அந்த மாலை நேரம் முழுவதும் ராஜா இசை பற்றி ஒரு வார்த்தை கூட வரலை. இந்த நிகழ்ச்சியை நடத்தறது இந்த ஆள்தானான்னே எனக்குச் சந்தேகம் வரும் அளவு ஆயிருச்சு, அது நீங்கதானே நானே கேட்டு உறுதி படுத்திக்கிட்டேன். தான் இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட் செஞ்சுக்கிட்டு இருக்கும் போது அடுத்தவன் கிட்ட பெருமை அடிச்சுக்காம இருக்கும் அடக்கத்துக்கும் என் வணக்கம்.

அதுக்காக மனுசன் சும்மா இருந்தாருன்னா நினைக்கறீங்க? வாயை மூடலை!! அவருக்குத்தான் எவ்வளவு விஷயங்களில் ஆர்வம் இருக்குங்கறீங்க? தமிழக அரசியலாகட்டும், இந்த ஊரில் அவர் செய்யும் தன்னார்வ வேலைகள் ஆகட்டும். அந்த ஒரு மாலையில் மட்டும் நான் அவர் கிட்ட கத்துக்கிட்ட விஷயங்கள் அநேகம். நாம எல்லாம் சும்மா நேரத்தை வீணடிக்கிறோமோ என நினைக்கும் அளவிற்கு வேலை செய்யறார். அத்தனை வேலைகளும் செய்து கொண்டு அதுக்கு நடுவே இதையும் முடிச்சதுக்கும் என் வணக்கங்கள்.

அத்தனை வணக்கங்களுக்கு அப்புறமா இந்த ப்ராஜெக்டை எடுத்து நடத்தி முடிச்சதுக்கு என் வாழ்த்துகள். கடைசியா ஒரு கோரிக்கை. இதோட நிறுத்திடாம, ஒரு இடைவெளி விட்டு ஆசுவாசப்படுத்திக்கிட்டு அடுத்த ப்ராஜெக்டோட களமிறங்கணும். இந்த முறையாவது நானும் கலந்துக்கிற மாதிரி ஒரு தலைப்பா இருக்கணும். செய்வீங்களா மாஸ்டர்?!

Tuesday, July 23, 2013

மெல்லத் தமிழினிச் சாகும்!?

தவறான மேற்கோள் என்பது, சொல்லக்கூடாத ஒன்றைச் சொல்லிவிட்டு அதிலிருந்து தப்பிக்க நம் அரசியல்வாதிகள் சொல்லும் காரணம். உண்மையில் தவறான மேற்கோளுக்காகக் கோபம் கொள்ள வேண்டிய ஒருவர் நம் மகாகவி பாரதிதான்.  


மெல்லத் தமிழினிச் சாகும் அந்த

மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை யுரைத்தான் - !
இந்த வசை எனக்கெய்திடலாமோ?” 

என்று சொன்னாலும் சொன்னான், பலரும் தமிழ் சாகும் என்று பாரதி சொன்னதாக ஒரு மேடை விடாமல் சொல்கிறார்கள். ஆனால் இன்றைய ஊடகங்களில் தமிழ் படும் பாட்டைப் பார்த்தால் அது உண்மைதானோ என்று தோன்றுகிறது.

பேசும் பொழுதும் சரி எழுதும் பொழுதும் சரி. தமிழ்க் கொலை என்பது எங்கும் வியாபித்து இருப்பதைத்தான் நாம் காண்கிறோம். காளான்கள் போல் முளைத்து வரும் தொலைக்காட்சி நிறுவனங்களிலும், பண்பலை வானொலி நிலையங்களிலும், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவர்கள் பேசும் தமிழைக் கேட்டால், நம் கண்களில் கண்ணீர் வருவது நிச்சயம். வேறு சில மொழிகளில் இருந்தாலும் கூட தமிழின் சிறப்பு என்று நாம் பெருமைப்படும் ழகரம் இவர்களிடம் படும் பாட்டைப் பார்த்தால் ரத்தக் கண்ணீர்தான் வரும்.

சமையல் குறித்த நிகழ்ச்சி ஒன்றை பிரபலத் தொலைக்காட்சி ஒன்றில் பார்த்துக் கொண்டிருந்தேன். புதிய வகை தோசை செய்வதைப் பற்றி ஒருவர் விவரித்துக் கொண்டிருந்தார். ”இந்த தோசை ப்ரிபேர் பண்ணும் போது கொஞ்சம் கீ(ghee)அப்ளை பண்ணிட்டு வெஜிடெபிள்ஸ் ஸ்டப் பண்ணி போல்ட்(fold)பண்ணினா கஸ்டமர்ஸ் லைக் பண்ணுவாங்க!” என்று ஆங்கிலத்தில் கொஞ்சமே தமிழைத் தூவி பேசிக்கொண்டிருந்தார். இன்று பலரும் இப்படித்தான் பேசுகின்றனர். இந்நிகழ்ச்சியில் இடையே வரும் திரைப்படப் பாடல்களும் இதே லட்சணம்தான். ‘கணவுகலில் மூல்கினேன்’ என்று பாடகர் ஒருவர் பாடுவதைக் கேட்ட பொழுது தாங்க முடியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டேன்.

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களிலும் தமிழ் படும் பாடு இதுதான். வானொலி, தொலைக்காட்சிகளில் உச்சரிப்புப்பிழைகள் என்றால் இங்கு எழுத்துப்பிழைகள். ஆனால் அவற்றைச் சரி செய்ய முயன்றால், அதைச் சரியான முறையில் எடுத்துக் கொள்பவர்கள் சிலரே. ‘இந்த அளவாவது தமிழில் பேசுகிறோமே எழுதுகிறோமே என்று சந்தோஷப்படுங்கள், எப்பொழுதும் தவறுகளைத் திருத்துவதையே வேலையாகக் கொண்டிருப்பதை விடுங்கள்’ என்பதே அவர்களின் வாதமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் யாரேனும் தவறாகப் பேசும் பொழுது இவர்களே அவர்களைக் கேலி செய்வதுதான் முரண். ஆங்கிலத்தில் சரியாகப் பேச வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தமிழில் பேசும் பொழுது அது போல் தவறின்றிப் பேச வேண்டும் என ஏன் நினைப்பதில்லை என்பது எனக்குப் புரிவதே இல்லை.

இன்று புகழ் பெற்ற எழுத்தாளர்/அறிஞர்கள் பலரின் எழுத்துகளில் கூட ஏகப்பட்ட எழுத்துப்பிழைகளும் இலக்கணப்பிழைகளும் காண முடிகிறது. சில சமயங்களில் இவர்கள் எழுதும் வரிகளின் வடிவங்களும், சில வேற்று மொழி சொற்றொடர்களின் மொழிபெயர்ப்புகளையும் படித்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. இவற்றை எல்லாம் சுட்டிக் காட்டினால் ‘இதனைச் சொல்ல நீ யார்?’ என்பதுதான் எதிர்வினையாகக் கிடைக்கிறது. பிழையாக எழுதுவதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்வோரும் உண்டு.

“ஏற்கனவே ‘நல்லதோர் வீணை செய்தே’ என்றுதானே பாரதி எழுதி இருக்கின்றான். இதையே பாமரரான நாம் ‘ஓர் கனவு’ என்று எழுதக் கூடாதா?” என்ற கேள்வி எழுகிறது. கத்தியைத் தொடாதே என்று குழந்தைகளிடத்தில்தான் சொல்வோம், கத்தியை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரிந்த மருத்துவருக்குச் சொல்வோமா? இலக்கணம் அறிந்து சந்தம், தளை காரணமாக கவிதையில் அதனை மீறுவதும், அது பற்றி ஒன்றும் அறியாமல் தவறாக எழுதுவதும் ஒன்றே அன்று. இலக்கணத்தை அறிவதை, தமிழார்வலர்கள் தம் கடமையாகவே நினைக்க வேண்டும்..

இன்றைக்குச் சிலர், தமிழில் புதிய இலக்கணம் எழுதப்பட வேண்டும். இப்பொழுது உள்ள இலக்கணம் கவிதை வடிவில் எழுதுவதற்காகச் செய்யப்பட்டது. உரைநடைக்கென இலக்கணம் வேண்டும். பல துறைகளில் உள்ள தமிழ்நடைகள் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் எனச் சொல்லத் தொடங்கி உள்ளனர். இதற்கும் தேவையே இல்லை. புதிய இலக்கணம் ஒன்றும் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லைநம் இலக்கணம் பரந்துபட்ட ஒன்றுதான். இன்றைய தேவைகளில் பெரும்பான்மையானவற்றை இருக்கும் இலக்கணம் கொண்டே சீர் செய்ய முடியும்.

ஆனால் முடிவதில்லையே, பிரச்சினை எங்கிருக்கிறது என்று பார்த்தோமானால் இலக்கணத்தை, மொழியைக் கொண்டு சேர்ப்பதில்தான்! பள்ளிகளில் கணக்கு, அறிவியல் போன்ற பாடங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மொழிகளுக்குத் தரப்படுவதில்லை. அதனால் இப்பாடங்களை ஏதோ கடமையே என்றுதான் மாணவர்கள் படிக்கின்றார்கள். அதிலும் தமிழைப் பாடமாக எடுத்தால் மதிப்பெண்கள் குறைந்துவிடுகிறது என்று , சமஸ்கிருதம், ஹிந்தி, ப்ரெஞ்ச் என்று வேறு மொழிப்பக்கம் செல்வதும் அதிகமாகிவிட்டது.

இப்படி இருக்கும் பொழுது இந்தப்பாடங்களை சுவையாகத் தர வேண்டியது ஆசிரியர்களின் கடமை. ஆனால் அப்படிச் செய்பவர்கள் வெகுசிலரே. அவர்களை மட்டுமே காரணமாகச் சொல்வதும் தவறு. இன்று இருக்கும் பாடத்திட்டங்களும் சரி, பாடப்புத்தகங்களும் சரி, மொழியை மாணவர்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் செய்யப்பட்டவைகளாகவே இருக்கின்றன. இணையத்தில் நம் பாடப்புத்தகங்கள் கிடைக்கின்றன. ஒரு நாள் தமிழ்ப்பாடப்புத்தகம் ஒன்றை புரட்டிப் பார்த்தேன்.

வெண்பா இலக்கணம் பற்றிய பாடம். அதில் நேரிசை வெண்பா என்பதற்கான விளக்கம் எப்படி இருக்கின்றது தெரியுமா?

நான்கடிகளையுடையது. இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெறும். அத்தனிச்சொல் முன்னிரண்டடிகளின் எதுகையை உடையதாய் இருக்கும். முன்னிரண்டடிகளில் ஓரெதுகையும், பின்னிரண்டடிகளில் ஓரெதுகையும் வருதல் பெரும்பான்மையாகும். இரண்டிற்கு மேற்பட்ட எதுகைகளும் வரலாம். எதுகையை விகற்பம்’ எனச் சுட்டுவது உண்டு.” 

இதுதான் விளக்கம். இதற்கு உதாரணமாக நன்னெறியில் இருந்து ஒரு பாடல். அதற்கு உரையும் கிடையாது. நட்பு பற்றிய அருமையான பாடல் இது. ஆனால் வெண்பா பற்றி ஒன்றும் தெரியாத ஒரு மாணவனிடம் இதுதான் வெண்பா அதற்கு இதுதான் உதாரணம் என்றால் பின்னங்கால் பிடரியில் படும்படி ஓடத்தானே செய்வான்.

இங்குதானே சீர்த்திருத்தம் வேண்டும். இந்த இலக்கணத்தை எளிமையாக அந்த மாணவர்கள் மனத்தில் இருத்த முடியாதா? எளிமையான உதாரணங்களில் தொடங்கிப் படிப்படியாக சொல்லிக் கொடுக்க முடியாதா? அப்படிச் செய்தால் பள்ளி தவிர்த்த இடங்களிலும் தானாக இலக்கண சுத்தமான மொழியில் எழுதவும் பேசவும் செய்வார்கள்?

எனவே புதிய இலக்கணம் வேண்டாம், ஆனால் இலக்கணத்தைப் பயிற்றுவிக்க சரியான ஒரு திட்டம் அவசியம். இது மேலோட்டமாக சில மாற்றங்களைச் செய்யாமல் நன்றாகத் திட்டமிட்ட புதிய புத்தகங்கள், புதிய எளிய, படிப்பதை மகிழ்வான நிகழ்வாக்கும் பயிற்றுவிக்கும் முறைகள், ஆசிரியர்களுக்கு தொடர்ந்து பயிற்சி என்று ஒரு மாற்றம் வர வேண்டும்.

ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் பல நாடுகளுக்குச் சென்று வந்தவர். சில இடங்களில் பல வருடங்கள் இருந்ததால் அங்குள்ள மொழியைப் படித்துத் தேர்ச்சி பெற்றவர். பேசிக்கொண்டு இருக்கும் பொழுது ஒரு சுவையான கேள்வியை எழுப்பினார். நான் எங்கு சென்றாலும், அங்கு என்னைப் போன்றவர்கள் அங்குள்ள மொழியைப் படிக்க, பள்ளியல்லாத ஒரு கட்டமைப்பு இருக்கிறது. அது போன்று ஏன் தமிழுக்கு இல்லை? உதாரணமாக ப்ரெஞ்ச் படிக்க Alliance Française போலத் தமிழ் படிக்க ஏன் ஒரு கட்டமைப்பு இல்லை என்று வினவினார். ஏன் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளிலும் கூட ஹிந்தி பிரச்சார் சபா இருக்கிறதே, பள்ளிசாராக் கட்டமைப்புதானே அதுவும்?

யோசித்துப் பார்க்கும் பொழுது நம் நாட்டில் பிற மொழிகளைப் படிக்க இவ்வளவு வசதி இருக்கும் பொழுது, நம் மொழியை மற்றவர்கள் படிக்க வசதி இல்லை என்பதும் அது குறித்து நாம் யாரும் கொஞ்சமும் கவலை கொள்ளவும் இல்லை என்பதும் உரைத்தது. இலவசங்களை அள்ளித் தெளிக்கும் அரசாங்கங்கள் அவற்றினை விடுத்து இது போன்ற பயனுள்ள சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதுதான் நம் மொழியின் முன்னேற்றத்திற்கு முக்கியம்.

அரசாங்கத்தை மட்டுமே எதிர்பார்க்காமல் மற்றவர்களும் தம் பங்கைச் செய்ய வேண்டும். எழுதும் திறன் கொண்டவர்கள் தமிழை எளிதாகக் கற்க வகை செய்யும் புத்தகங்களை எழுத வேண்டும். இணையத்தில் விக்கிபீடியா போன்ற தளங்களில் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டு தமிழ் இலக்கணத்திற்கான உள்ளடகத்தை அதிகரிக்க வேண்டும்.

இன்னும் ஒரு கவலையும் கூட எனக்கு உண்டு. தமிழில் படிப்பது என்பது அறவே ஒழிந்துவிட்ட ஒன்றாகிவிட்டதுஆனந்தவிகடன், குமுதம் போன்ற இதழ்கள், அதனை விட்டால் போன தலைமுறை கல்கியின் நாவல்களையும் இந்தத் தலைமுறை சுஜாதாவின் எழுத்துகளையும் படிப்பதோடு நின்றுபோய்விட்டது. வரும் தலைமுறைகள் தமிழில் படிப்பதாகவே தெரியவில்லை. அதற்கான வழிகளும் இல்லைபாடப்புத்தகம் தவிர்த்து பூந்தளிர், அம்புலிமாமா எனத் தொடங்கி தமிழில் படிப்பதற்கு எனக்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தன. ஆனால் இன்று? நான் பார்க்கும் குழந்தைகள் யாருமே, இன்று வருகின்ற சிறுவர் இதழ்கள் எதையும் படிப்பது இல்லை.

நம் இலக்கியங்கள் எல்லாத் தமிழ்க் குழந்தைகளையும் சேர, அவற்றின் எளிமையான வடிவங்களை புத்தகங்களாகக் கொண்டு வர வேண்டும். படப்புத்தகங்களாக வந்தாலும் கூட நல்லதுதான்இதைச் செய்யாத வரை அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு சேர்ப்பது என்பது நடக்காத காரியம்.

எழுத்துக்கு இப்படி என்றால் பேச்சுத்தமிழுக்கு நாம் செய்ய வேண்டியது என்ன? தமிழில் பேச வேண்டும். இன்று நம்மால் கலப்பின்றி தமிழில் பேச முடிகிறதா? எத்தனை பேரால் ‘பண்ணு தமிழ்’ பேசப்படுகிறது? ‘ஓப்பன் பண்ணு, கால் பண்ணு, நாளைக்கு மீட் பண்ணுவோமா? தியேட்டர் வாசலில் பார்க் பண்ணுவோமா?’ என்று எல்லாவற்றையும் பண்ணத்தானே செய்கிறோம். அதை விடுத்து ‘திற, கூப்பிடு, சந்திப்போமா? நிறுத்துவோமா’ என்று பேசுவது கடினமான ஒன்றா என்ன? பண் என்றால் பாடல். ஆனா இந்த ‘பண்ணு தமிழ்’ ஒரு படுத்தல். அதனை விட்டொழிப்போம்.

இது கட்டாயம் மாற வேண்டும். குழந்தைகள் தமிழில் படிக்காத வரை அவர்களுக்கு நம் மொழியோடு ஒரு அன்னியோனியம் வரப்போவது இல்லை. புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ் படிக்கும் மாணவர்ளைக் கேளுங்கள் - தமிழ் மொழியைப் பற்றி பெருமையாகப் பேசுகிறார்கள். புலம் பெயர்ந்த நாடுகளில் கற்கும் உள்ளூர் மொழியோடு தமிழ், தமிழ் இலக்கணம் கற்பதால் மொழியியல் மொழி வரலாறு மட்டும் கற்பதில்லை! அமெரிக்கா / கனடாவில் நடக்கும் தமிழ்ப் பள்ளிகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்கள் இலக்கணத்தோடு தம் மொழிப் பழமை குறித்த பெருமையும் அல்லவா கற்கிறார்கள்?

தமிழ் பேசப்படும் நிலங்களில் எல்லாம் - தமிழ்நாடு முதல் ஜப்பான் வரை, ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா, கனடா வரை எல்லாரும் விரும்பி, பெருமையோடு தமிழும் இலக்கணமும் கற்க வேண்டும். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன் தொல்காப்பியர் எழுதிய இலக்கண நூல் இன்றும் தமிழ் இலக்கணத்துக்கு அடிப்படையாய் இருப்பதைப் பற்றி நாம் எல்லாரும் பெருமை கொள்ள வேண்டும். இதை எல்லாம் செய்ய காலம் கடந்து போய் விடவில்லை. தமிழார்வலர்கள், தங்கள் முயற்சியாலும், அரசாங்கத்துடன் இணைந்தும் தமிழைக் காத்திட, அடுத்தத் தலைமுறைக்கு சேர்த்திடச் சரியான திட்டங்களைத் தொடங்கினால், இந்த சீரழிவை நம்மால் நிறுத்த முடியும். இதற்கு நாம் அனைவரும் தோள் கொடுக்க வேண்டும். கொடுப்போம்.


FeTNA அமைப்பினரால் இவ்வருடம் ஜூலை 5 முதல் 7 வரை டொராண்டோ நகரில் நடத்தப்பட்ட தமிழ் விழா நிகழ்ச்சியில் வெளியிடப்படவிருக்கும் ஆண்டு மலருக்காக எழுதிய கட்டுரை. விழா மலரை இங்கு காணலாம் - http://issuu.com/fetna2013/docs/fetna_2013_malar_web