இன்னிக்கு
ஒரு பெரிய ப்ராஜெக்ட் முடிவுக்கு
வருது. மாஸ்டர் ரெக்ஸ் அருள்
இசைத் துண்டுகளைக் கொடுத்து இளையராஜா பாடல்களைக் கண்டுபிடிக்கும் க்விஸ் நிகழ்ச்சி. இணையத்தில்
இது பத்தித் தெரியாதவங்க கம்மிதான். பார்த்ததில்லைன்னா இங்க போய் பாருங்க - 365rajaquiz
ஒரு
நாள் ரெண்டு நாள் இல்லை,
விடாம தொடர்ந்து ஒரு வருஷமா நடத்திக்கிட்டு இருக்காரு.
இந்த ஒரு வருஷத்துல நீ
எத்தனை நாள் சரியான பதிலைச்
சொல்லி இருக்கன்னு கேட்டா, சரி தப்பு
விடுங்க, ஒரு நாள் கூட
விடையைச் சொன்னது இல்லை. அப்புறம்
என்ன டேஷுக்குடா பதிவுன்னு யாரும் கேட்டுடாதீங்க. நான்
சொல்லப் போறது எல்லாம் நடத்திய
ஆளைப் பத்திதானே தவிர அவர் தந்த
பாட்டுகளைப் பத்தி இல்லை.
பல
முறை இணையத்தில் க்விஸ் நிகழ்ச்சிகள் நடத்தியவன்
என்ற முறையில் சொல்லறேன். இந்த மாதிரி க்விஸ்
நடத்தறது சாதாரண விஷயம் இல்லை.
பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அதில் எந்தப் பகுதியை
துணுக்காகத் தர வேண்டும் என
முடிவு பண்ணி, அதைப் பதிவாப்
போட்டு, அதுல ஒரு விமர்சனம்
எழுதி, ஒரு க்ளூ குடுத்து,
வர விடைகளைச் சரி தப்புன்னு சொல்லி,
அதுல கேள்விகளுக்குப் பதில் சொல்லி..... இப்ப
படிக்கும் போதே மூச்சு முட்டுதே
இதை அவரு தொடர்ந்து ஒரு
வருஷம் செஞ்சு இருக்காரு. இதுக்காக
எவ்வளவு நேரம் செலவழியும். மத்த
விஷயங்கள் எவ்வளவு இதுக்காக இழக்கணும்
என்பது எல்லாம் எனக்குத் தெரியும்.
இதுக்கு ஒரு முதல் வணக்கம்.
என்னால
முடியுது பண்ணறேன்னு போன பேராவில் எழுதின
அத்தனையும் ஒருத்தர் செஞ்சுடலாம். ஆனா அதை நூத்துக்கணக்கான
பேர் ரசிக்கும்படி செய்யறது சுலபமான விஷயமா என்ன?
நானும் தமிழ்ப்பேப்பரில் இலக்கணத்தொடர் எழுதினேன். முதல் ரெண்டு மூணு
வாரம் ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ் ஆனா போகப் போக
படிச்சுட்டுப் போற ஆள் எண்ணிக்கை
ஓரளவு இருந்தாலும் அதைப் பத்தி அங்க
பேசறவங்க எண்ணிக்கை குறைஞ்சுதான் போச்சு. இங்க பார்த்தீங்கன்னா
கிட்டத்தட்ட 130,000 பார்வையிடல்கள், 15,000 பின்னூட்டங்கள். சாதாரண விஷயமாய்யா இது?
அது
மட்டுமில்லை, இந்த க்விஸ் தங்களை எப்படி எல்லாம் பாதிச்சுது அப்படின்னு பலரும் எழுதினதை
எல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கும். இதை எல்லாம் பார்க்கும்
பொழுது நாம இதில் கலந்துக்காம விட்டது பெரிய தப்போன்னு தோணும். சரி, இந்தக் கழுதைக்குத்
தெரியுமா கற்பூர வாசனைன்னு வழக்கம் போல வேடிக்கை பார்த்துக்கிட்டே இருந்திடுவேன். இப்படித்
தொடர்ந்து ஒரு கூட்டத்தையே தன்
பின்னாடி வர வெச்ச திறமைக்கு
என் இரண்டாவது வணக்கம்.
கேள்வியை
நானே கேட்கிறேன், கேள்வி கேட்கறது ஈசி
என்பது எல்லாம் நகைச்சுவை வசனங்களாக நல்லா இருந்தாலும் எந்த
விஷயமாகட்டும் அதில் இவ்வளவு கேள்விகள்
கேட்கணுமுன்னா அதுக்கு அவ்வளவு விஷயம்
தெரிஞ்சிருக்கணும். திரையிசைப் பாடல்கள், அதிலும் ஒரே ஒரு
இசையமைப்பாளரின் பாடல்களில் இந்த அளவு ஆராய்ச்சி
செஞ்சு மாஸ்டர் பட்டம் வாங்கி
இருக்க எவ்வளவு முனைப்பு இருந்திருக்கணும்.
அப்படி முனைவதற்கு எவ்வளவு ஆர்வம் இருந்திருக்கணும்.
எந்த விஷயமானாலும் நுனிப்புல் மட்டுமே மேயும் என்
போன்றவர்களுக்கு இந்த முனைப்பும் ஆர்வமும்
கூட ரொம்பப் பெரிய விஷயம்.
அதுக்கும் என் வணக்கம்.
இது
அத்தனையும் விடுங்க. நேர்ல ஒரு முறை இவரைச் சந்திச்சேன். நமக்கு இந்த மேட்டர் எல்லாம்
தெரியாது என்பது அவருக்கு முன்னமே தெரியுமோ என்னமோ சந்தித்த அந்த மாலை நேரம் முழுவதும்
ராஜா இசை பற்றி ஒரு வார்த்தை கூட வரலை. இந்த நிகழ்ச்சியை நடத்தறது இந்த ஆள்தானான்னே
எனக்குச் சந்தேகம் வரும் அளவு ஆயிருச்சு, அது நீங்கதானே நானே கேட்டு உறுதி படுத்திக்கிட்டேன்.
தான் இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட் செஞ்சுக்கிட்டு இருக்கும் போது அடுத்தவன் கிட்ட பெருமை
அடிச்சுக்காம இருக்கும் அடக்கத்துக்கும் என் வணக்கம்.
அதுக்காக
மனுசன் சும்மா இருந்தாருன்னா நினைக்கறீங்க? வாயை மூடலை!! அவருக்குத்தான் எவ்வளவு விஷயங்களில்
ஆர்வம் இருக்குங்கறீங்க? தமிழக அரசியலாகட்டும், இந்த ஊரில் அவர் செய்யும் தன்னார்வ
வேலைகள் ஆகட்டும். அந்த ஒரு மாலையில் மட்டும் நான் அவர் கிட்ட கத்துக்கிட்ட விஷயங்கள்
அநேகம். நாம எல்லாம் சும்மா நேரத்தை வீணடிக்கிறோமோ என நினைக்கும் அளவிற்கு வேலை செய்யறார்.
அத்தனை வேலைகளும் செய்து கொண்டு அதுக்கு நடுவே இதையும் முடிச்சதுக்கும் என் வணக்கங்கள்.
அத்தனை வணக்கங்களுக்கு அப்புறமா இந்த ப்ராஜெக்டை எடுத்து நடத்தி முடிச்சதுக்கு என் வாழ்த்துகள். கடைசியா ஒரு கோரிக்கை. இதோட நிறுத்திடாம, ஒரு இடைவெளி விட்டு ஆசுவாசப்படுத்திக்கிட்டு அடுத்த
ப்ராஜெக்டோட களமிறங்கணும். இந்த முறையாவது நானும் கலந்துக்கிற மாதிரி ஒரு தலைப்பா இருக்கணும்.
செய்வீங்களா மாஸ்டர்?!
8 comments:
நீங்கள் எழுதியிருக்கும் அனைத்தும் உண்மை. He is a perfect gentleman and I am honoured to have him as my friend. His dedication and brilliance reflects in his work. May God bless him by fulfilling all his wishes.
amas32
நானும் நானும்ன்னு போட்டியாளர்கள் நொம்பி வழியும் அளவுக்கு அடுத்த #365quiz இருக்க வாழ்த்துகள் :)
சரியாகச் சொன்னிங்க அண்ணாச்சி. இது எளிமையான வேலையே அல்ல. பதிவுகள நானும் எழுதிக்கிட்டுதானே இருக்கேன். ஒட்டு மொத்த கூட்டத்தையும் கூட்டிக்கிட்டு வந்து கையாள்றதுன்னா லேசு இல்லையே.
அனேகமா இந்த ரெக்ஸ் ஆகப்பட்டவர் மாபெரும் தில்லாலங்கடியாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
இந்தப் பயணத்தை நானும் ரசித்தேன். மார்க்கெல்லாம் கொறைச்சலாத்தான் வாங்கியிருக்கேன். ஆனா மார்க்குக்காகவா இந்தப் போட்டியில் கலந்துக்கிட்டோம்.
இயலை விட இசைக்கு மதிப்பு அதிகம்னு நிருபித்த ரெக்சுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
#365RajaQuiz ல் ஒரு புதிருக்கும் பதில் போடவில்லை என்றாலும், இத்துணை விசயங்களை, தினமும் கவனித்து இருக்கின்றீர்கள் என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.
விளையாட்டாக இந்த #365RajaQuizல் இழுத்துவிடப்பட்டாலும், எடுத்த விசயத்தை நல்லபடியாக முடித்துவிட்டு வெளியேற வேண்டும் என்ற ஒரு குறிக்கோள் மட்டும் ஆரம்பத்தில் இருந்தே இருந்தது.
இசைப் பற்றிய புதிர் என்பதாலும், இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் பாடல்களை மட்டும் மையமாக வைத்து நடத்தப் பெறும் புதிர் என்பதாலும் கருத்து மோதல்கள் இணையத்தில் பலமாக இருக்கும் என்று என்னை நிறைய பேர் எச்சரித்தார்கள். அதே போல, இதற்கு முன் இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் அல்லது பின்னணி இசையை மையமாக வைத்து நடத்தப் பெற்ற புதிர்கள் நெடுங்காலமாக நடத்தப்பட முடியவில்லை, இதில் எப்படி ஒரு வருடம் தாக்குபிடிக்க முடியும் என்றும் கேள்விகள் என் முன்னால் வைக்கப்பட்டது.
இதை எதற்கு சொல்கின்றேன் என்றால்:
எண்ணித் துணிக கருமம், துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
என்பது தான் இங்கு உண்மை.
க்விஸ் மாஸ்டருக்கு எது இருக்க வேண்டுமோ இல்லையோ, அவரின் க்விஸை எதிர்கொள்ளும் மக்களின் உணர்வுகளை மதிக்கவும், அவர்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்து மென்மையாக நடத்திச் செல்லும் அளவுக்கு பொறுமையும், புதிரில் புதுமையைப் புகுத்தி ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு ஆச்சரியத்தைக் கூட்டும் சங்கதியை புதைத்தும் வைப்பது இன்றியமையாதது ஆகிறது.
அவற்றில் கவனம் செலுத்தினேன். குறிப்பாக, “ நான்”, “என்”, “எனது” வார்த்தைகளை ஒரு நாளும் உபயோகிக்காமல், “ நமது புதிர்”, “Our #365RajaQuiz” என்றே ஆரம்பத்தில் இருந்தே உபயோகித்து வந்தேன். கவனித்துப் பாருங்கள் -- இப்படித் தான் பல பேர் தொடர்ந்து உபயோகிக்க ஆரம்பித்தார்கள். I can't recollect anybody saying, "your quiz". Rather, they too will write comments like, "I expected this in OUR quiz".
பாருங்கள் :) Attitudes are contagious. இங்கு #365RajaQuizன் வெற்றி, அதில் பங்கேற்ற அனைவரின் வெற்றி. I was just a Captain of the ship.
ஒரு இசையமப்பாளரின் இசைக்கு, பல ரசிக பெருமக்கள் இத்துணை ஈடுபாட்டுடனும், மரியாதையோடும் ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் அல்ல, ஒரு வருடம் பயணம் செய்ய முடியுமா? எந்த வித விருது, பணம் என்ற விசயங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லாமல், honor systemஆக எப்படி இப்படி நேரத்தை செலவு செய்து ஒவ்வொரு நாளும் பயணம் செய்ய முடியும்? இப்படி பற்பல கேள்விகள் எழுந்தால், கண்டிப்பாக #365RajaQuizஐ ஒரு case-studyஆகவே எடுத்துப் பார்க்கலாம்.
Who knows? This may well be one of the strong role-models for internet etiquette and civil discourse for projects, that can have a high room for controversial comments and intemperate language :)
இசைஞானியின் இசை என்ற ஆதாரத்தினால் இதை செய்ய முடியும் என்று இறங்கினேன். ஆனால், ஒவ்வொரு நாளும் இது மட்டும் அல்லாமல் இசைக்கோப்புகளை மாசு நீக்கி பதிவேற்றம் செய்யும் பெரும் வேலை எல்லாம் செய்ய எனக்கு என்று ஒரு killer-instinctஆக இருந்தது என் மகள் தான்.
இதைப் பற்றி எல்லாம் மேலோட்டமாக http://365rajaquiz.wordpress.com/2013/07/26/track363/ பதிவில் சொல்லி இருந்தேன்.
இது மாதிரி Projectsக்கு வெளியில் இருந்தும் ஆதரவு அளிக்கும் உங்களைப் போன்ற நல்லோர்களால், இது மாதிரி மேலும் பல projectsஐ எடுத்து நடத்தவேண்டும் என்று பலர் புறப்படலாம்.
மிக்க நன்றி :)
அத்தனைக்கும் ஆமென்!
(இலவசம் எழுதினதை வரிக்கு வரி ஆமோதிக்க வெச்சதுக்காக ரெக்சை ரெண்டு போடோணும், ஆமா;)
இணையத்தில் இது பத்தித் தெரியாதவங்க கம்மிதான். பார்த்ததில்லைன்னா இங்க போய் பாருங்க - 365rajaquiz //
இப்படி ஒண்ணு நடக்குதுன்னே இன்னிக்குத் தான் தெரியும். :))))
// எந்த விஷயமானாலும் நுனிப்புல் மட்டுமே மேயும் என் போன்றவர்களுக்கு இந்த முனைப்பும் ஆர்வமும் கூட ரொம்பப் பெரிய விஷயம். அதுக்கும் என் வணக்கம்.//
நீங்களே இப்படின்னா, நானெல்லாம் எந்த மூலைக்கு! :( ஒரு தரம் அங்கே போய்ப் பார்த்துட்டு வந்துடறேன்.
சினிமாப் பாட்டுதானேன்னு ரசிப்பதை விட அதன் வரிகளுக்காகவே ரசித்திருக்கிறேன் இடையூடாக ஓடும் இசைக்கருவிகளின் கோர்வையை தேமேன்னு கடந்து விடுவது வழக்கம்.
ஆனா இப்படி அதையும் அக்குவேறா ஆணிவேரா பிச்சி புடுங்கி இப்படியும் ரசிக்கலாம்னு சொல்ல இப்படி ஒரு மனுஷன் தேவைப்பட்டிருக்காரு.
அதுவும் வெளிநாட்டிலிருந்துகொண்டு
நேரப் பாகுபாடுகளை களைந்து கொண்டு.
அதுக்கு பேரு என்ன இன்டெர்லூட்... ஆமா இனி என்னென்ன இசைக்கருவியின் இசை என கேட்க காதை கூர்மைப்படுத்த சொல்லும் மனம் .
அனைத்துக்கும் வந்தனங்கள்... வாழ்த்துக்கள்.
இதை அறிமுகப் படுதததிய இலவசம் அவர்களுக்கு நன்றி.
-அரசு
Post a Comment