Thursday, August 08, 2013

படம் பிடித்துப் பாவெழுது!

வழக்கமாக பேஸ்புக்கில் உருப்படியா எதுவுமே வராது. எப்பொழுதாவது அத்தி பூத்த மாதிரி ஒரு நல்ல விஷயம் கண்ணில் படும். நேத்து அப்படி ஒரு படம் கண்ணில் பட்டது.  ரொம்பவே அருமையான படம். முதலில் பதிந்தவர் யாரோ அறியேன். ஆனால் பலராலும் பகிரப்பட்டு @jsrigovind மூலம் என் பார்வைக்கு வந்தது இந்தப் படம்.


அந்த சிறுவனின் முகத்தில் இருக்கும் உணர்ச்சியும் அச்சிலையின் அழகும் என்னை மிகவும் வசீகரித்துவிட்டன. பார்த்த உடனே வெண்பா எழுத வேண்டும் எனக் கை பரபரத்தது. ஒன்று எழுதினேன், இரண்டு எழுதினேன், படத்தின் அழகாலே என்னமோ வெண்பா வந்துக்கிட்டே இருந்தது.

பொதுவா ரெண்டு மூணு பேரு ஜமா சேர்ந்து மாறி மாறி போடும் பொழுதுதான் இப்படி தொடர்ந்து போடத் தோணும். ஆனா நேத்து திரும்பத் திரும்ப இந்தப் படத்தை பார்த்து பார்த்து நான் மட்டுமே எழுதிக்கிட்டு இருந்தேன். எழுதினதை இங்க போட்டு வைக்கலாமேன்னுதான் இந்தப் பதிவு.

அன்று மலையை அவனுமே தூக்கினான்
இன்று அதுபயன் ஈன்றதோ? - நன்றே
சிறுவனும் செய்ததைச் சிந்தனையில் வைப்போம்
கருமத்தின் பேறினையே காண்

சிலையிதுவே ஆனாலும் சின்னவன் கண்ணில்
அலைமகளின் அன்பனவன் தானோ - தலைமேலே
தண்ணீர் விழாது தடுத்திடவே நிற்கின்றான்
கண்ணன்மேல் காதலால் காண்

கல்தான் எனினும் கரைவாயோ என்றஞ்சி 
பொல்லா மழையுமே போகப் பிடித்தேனே
சல்லாத் துணிதனைச் சார்த்திய இக்குடையை
மல்லா மனதிலிதை வை!

இடுப்பிலே கைவைத்து இங்கிதமே யின்றி
கடுப்பினைக் காட்டாதே கண்ணா - தடுப்பேன்
தலைமேல் பொழிந்திடும் தாரையை உன்போல் 
மலைக்குக் குடையிங்கே மாற்று 

பூவாலே உன்னைத்தான் பூசையும் செய்திடுவார்
நாவாலே உன்னருளை நல்லபடிப் பாடிடுவார்
பாவாலே சொல்வேன் பரம்பொருளே நின்கருணை
காவாவா கண்ணா கனிந்து

தங்க நகையும் தரமாகச் செய்திட்டார்
அங்கத்தில் பட்டால் அலங்காரம் செய்திட்டார்
புங்கவனைப் பூவினால் பூசையும் செய்திட்டார்
தொங்கினைத் தந்தேன் தொழுது!

(புங்கவன் - கடவுள்
தொங்கு - வெண்கொற்றக்குடை)

மலைதூக்கி வந்தாய் மனைகாக்க உந்தன்
சிலைகாத்த சீரும் சிறப்பு!

உபிச பெனாத்தல் ஊரில் இல்லை, அதனால அவன் பங்கு வெண்பா வந்து சேரலை. இந்தப் பதிவைப் பார்த்தா போடாம இருக்க மாட்டான். காத்திருப்போம்.

காத்திருந்ததிற்குக் குறைவு இல்லை. எல்லாரும் ஆன்மிக வெண்பாவா எழுதினதுனால அண்ணன் நாத்திக வெண்பா எழுதினாராம்.

வண்ணக் குடையேந்தி வாமனனைக் காத்திடவே 
சின்னக் குழந்தையின் சிந்தனை - தன்னையே 
காக்காதான் என்னையா காப்பானென உள்ளமுணர 
டேக்காதான் கொடுப்பான் பார்

சொக்கன் அவர் பங்குக்குப் போட்டது

மழைவண்ணன் தன்னை மழைதாக்கக் கண்டு
அழையாமல் வந்த அழகே, பிழையில்லை
ஆஞ்சனேயன் தூக்கிவந்த அம்மலையை வாங்கிநீ
வாஞ்சைக் குடையாய் வழங்கு

வாத்தி ஜீவ்ஸ் எழுதினது

கத்தும் கடலோசை காதில்தான் கேட்குமோ?
சித்தம் சிலிர்த்திட ஸ்ரீதேவி -மொத்தமாய்
அள்ளி அணைத்திடுவாள் அம்மகவை அன்போடு
கள்ளம் மனதிலானைக் கண்டு

சொக்கன் பதிவில் இன்னும் சில நண்பர்கள் வெண்பா எழுதி இருந்தார்கள் அவை எல்லாவற்றையும் இங்கு பதிந்து வைத்துக் கொள்கிறேன்.

நிரஞ்சன் பாரதி

அஞ்சன வண்ணனுக் காங்கே குடையில்லை,
மஞ்சனம் செய்யும் மழையெலாம் - நெஞ்சில்
நினைத்தாலே வட்டமிடும் நேயோனைக் கையால்
நனையாமல் காத்தேனே நான்

கண்ணன் ராஜகோபாலன்

பழகக் குடைபிடித்துப் பக்குவமாய்க் கண்ணில்
அழகாகப் பேசும் அழகே – வழக்கமாய்
கண்ணன் தருவான் கலகலப்பாய் நூறாக
வண்ணமாய் வாழ்க்கை வரம்.

துடுக்குடன் நின்றாலும் தூறலதை நானும்
தடுப்பேனே கண்ணனுக்குத் தான்

கணைபோல்ப் பாய்ந்துதான் கண்ணனுடன் நின்றே
நனையாமல் காக்கும் நண்பனே நானும்
புருவம் விரித்ததைப் பகர்ந்திடுவாய் என்றே
உருகிக் குமுறும் குடை

ஹரன் பிரசன்னா

கற்சிலை என்றார் கருமேனி கைத்தொழும்
பொற்சிலை என்றார் புனல்நனையும் கண்ணன்
கலையென்று கண்டே குடையொடு வந்தான்
சிலையங்கே பெற்ற(து) உயிர்

முற்பகல் செய்யவே பிற்பகல் நேருமாம்
நற்புகழ் பெற்றவனே நீலமணி வண்ணனே
அன்றுநீ அந்நாளில் அம்மழை காத்ததுபோல்
இன்றுனைக் காக்க இவன்.

கண்ணனே கைவிடு கோபம் மழைவிட்டு
வெண்ணெய் அருந்தவீடு வா

பேஸ் புக்கில் இரா.முருகன் பக்கத்தில் இதைப் பகிர்ந்த பொழுது அவர் எழுதிய வெண்பா

அப்பின வர்ணம் அலேக்குன் நகைநட்டும்
தப்புமோ கிச்சாமி தண்ணியில் பப்பிஷேம்
ஒய்லாக நின்னாக்கப் போதுமா நைனா’தோ
நைலான் குடையிருக்கு வா

இவர் இந்தப் பதிவை க்ரேசி மோகன் கண்பார்வைக்கு அனுப்ப, அவரும் எதிர்பாராத விதமா ஒரு வெண்பாவை அனுப்பினார். ரொம்பவே சந்தோஷமா இருந்தது!

ஆப்பிளா ஊட்டிக்கே! அல்வாவா நெல்லைக்கே!
தீர்ப்புக்கே தண்டனையா! தேவேந்த்ர -ராப்பகல் 
கொட்டலில் காத்தவன், கோவர்த் தனதாரி 
விட்டலுக்கே UMBRELLA வா!

படம் பிடித்துப் பகிர்ந்து கொண்ட அன்பருக்கு நன்றி.
படம் பிடித்துக் கவி எழுதிய நண்பர்களுக்கும் நன்றி.  

30 comments:

said...

எல்லோர் எழுதினப் பாடல்களும் அருமை.
//கல்தான் எனினும் கரைவாயோ என்றஞ்சி
பொல்லா மழையுமே போகப் பிடித்தேனே
சல்லாத் துணிதனைச் சார்த்திய இக்குடையை
மல்லா மனதிலிதை வை!//

எனக்கு இது குறிப்பாக ரொம்பப் பிடித்தது.
நீங்கள் எல்லோரும் வரப்ராசிதிகள்!

amas32

said...

எவஞ் சொன்னான்....... மெல்லத் தமிழ் இனி சாகுமென்று...!!

இதோ இப்படி மலையளாவி விண்ணளாவி ஓங்கி வளருந் தமிழ் இனி...!

said...

உங்களோட கல்தான் எனினும் பாட்டும் ஹபியோட இரண்டாவது பாட்டும் அபாரம்!!.

said...எல்லாம் ஒரே ஆன்மிகக் கவிதைகளாய் இருப்பதால் - ஒரு சேஞ்சுக்கு நாஸ்திகக் கவிதை :


வண்ணக் குடையேந்தி வாமனனைக் காத்திடவே
சின்னக் குழந்தையின் சிந்தனை - தன்னையே
காக்காதான் என்னையா காப்பானென உள்ளமுணர
டேக்காதான் கொடுப்பான் பார்.

said...

Where is the like button? :)

said...

Photographer Name: Arvind Ramteke
Place Taken: Pandharpur, Maharashtra.

Photo Link: https://www.facebook.com/photo.php?fbid=574944342544030&set=a.568567296515068.1073741834.204376102934191&type=1&theater

FB Photography Page: https://www.facebook.com/pages/Arvind-Ramteke-Photography/204376102934191

said...

டேய் லூசு,

நாத்திகம்ன்னு எழுதாம நாஸ்திகம் என்று எழுதும் போதே உன் சாயம் வெளுத்துப் போச்சுடா!!

said...

அமாஸ் அம்மா / சத்தியா

எனக்குப் பிடிச்சது இடுப்பிலே கைவைத்துதான். அதைத்தான் பாராவும் ஜெயஸ்ரீயும் பாராட்டினாங்க.

said...

ஆனந்தம்

தகவலுக்கு நன்றி.

said...

ஆனந்தராஜ்

நன்றி!

said...

குமரன்

அது வேற இடம். முதலில் அங்க இருந்து வெளிய வாங்க. இங்க உங்களைப் பார்த்து நாளாச்சு!! :)

said...

1000kastappattu tamil valarkkum naana loosu?

said...

அனைத்தும் அருமை :-) இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் :)))

said...

அனைத்தும் அருமை :-) இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்

said...

அற்புதம். அமாஸ் ரொம்ப அழகாcஜ் சொன்னதை வழிமொழிகிறென்.

said...

மூணு நாளாய் இந்தப் படத்தைப் பார்த்துப் பிரமிப்பு. அனைத்து வெண்பாக்களும் அருமை. ஆசான் குழுமத்திலே பகிர்ந்திருந்தார். அங்கேயும் பார்த்தேன். மகரநெடுங்குழைக்காதனாக விட்டலனும் தோன்றி இருப்பது ஆச்சரியம். தென் திருப்பேரை மகரநெடுங்குழைக்காதரும், டோண்டு சாரும் நினைவில் வந்தார்கள். அந்தப் பையன் எவ்வளவு கவனமாகக் கருத்துடன் விட்டலன் நனையக் கூடாதேனு ஆதுரத்துடன் குடை பிடிக்கிறான். அவன் முகத்தில் தெரியும் பாவங்களில் ஒரு காவியமே எழுதலாம். வெண்பாக்கள் எல்லாம் பத்தாது! :)))

said...

சேது, நாலு வெண்பா எழுது ஜோதியில் ஐக்கியம் ஆகுங்க.

பிவிஆர் அண்ணா, நன்றி!

said...

கீதாம்மா,

எனக்கும் டோண்டு ஞாபகம் வந்தது நிஜம்.

எந்தக் குழுமத்தில் பகிர்ந்திருக்காங்க? எனக்கு கொஞ்சம் சுட்டி குடுங்க. அங்க போய் என்ன சொல்லறாங்கன்னு பார்த்துட்டு வரேன்.

கல்யாணக் காவியம் எழுதும் நீங்களே கண்ணன் காவியத்தையும் எடுத்துக்குங்க! :)

said...

//கல்யாணக் காவியம் எழுதும் நீங்களே கண்ணன் காவியத்தையும் எடுத்துக்குங்க! :)//

ஒழுங்காப் படிக்கிறதில்லையா?? கண்ணன் காவியம் ஏற்கெனவே இரண்டு பாகம் முடிச்சு 3 ஆவது பாகம் பாதிக்கு மேல் போயாச்சே! நல்லாத் தூங்கறீங்க போங்க!~ இதிலே 24 மணி நேரம் இணையத்திலே இருக்கிறதிலே குறைச்சல் இல்லை!:P:P:P:P

said...

மின் தமிழ், தமிழ்வாசல் இந்தக் குழுமத்திலே பாருங்க. செல்வன் கோவை, ஆசான் ஜீவ்ஸ் ரெண்டு பேரும் பகிர்ந்திருக்காங்க. :))) அதோட ஜி+இல் மூன்று நான்கு நாட்களாக உலா வரார். :)))))

said...

o-]C==

said...

எல்லாம் அருமை -

said...

மலைதூக்கி மக்கள்காத்த கண்ணனுக்கு இங்கு
குடைதூக்கி கண்ணன்காத்த மழலை

said...

Americavil ippadi tamilil ezhuvathai kandu viyapaka irukkuthu

said...

Like it

said...

Sir,

I share this with my friends. One of my friend Mr. Gurunathan
wrote this:

காக்கும் கடவுற்குப் பரிந்தன் புக்குடை
தூக்கும் சிறுவன் படத்தோடு - தேக்கும்
வெண்பா பலவுமே சுட்டிக் காட்டியநற்
பெண்பா வையேநீ வாழ்க!

Nalina

said...

வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.http://blogintamil.blogspot.com/2015/01/3_22.html?showComment=1421884364302#c3407256640317110087
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

said...

திருமதி மனோ சாமிநாதன் அவர்கள் தங்களது வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு வாழ்த்துக்கள்.
http://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/

said...

வணக்கம்!
இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
வாழ்த்துக்கள்!
ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
படைப்புகள் யாவும்.
நட்புடன்,
புதுவை வேலு,
www.kuzhalinnisai.blogspot.com
(குழலின்னிசையினை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)

said...

வணக்கம் !
சரளமாக ஓடும் வெண்பா நதி கண்டுள்ளம் மகிழத் தொடர்கின்றேன் நானும் இனிய இத் தளத்தினை வாழ்த்துக்கள் நட்பு உறவே !