Thursday, January 30, 2014

ஏசி அறையென ஏளனம் வேண்டாம்!

இந்த சொக்கன் இருக்காரே. அவரு சும்மா இல்லாம உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணற மாதிரி ஐடியில் இருந்துக்கிட்டே வெயிலில் வேர்வை சிந்தி உழைச்சாத்தான் உழைப்பு மத்தது எல்லாம் சும்மா, இதுவாடா பொழப்புங்கிற ரேஞ்சில் ஒரு வெண்பாவை எழுதிப் போட்டார்.


வெய்யிலில் சுற்றி வியர்வையில் நீராடிச்
செய்கிற வேலை சிறப்பாமோ? உய்ந்திடவே
மானிடரே நீவிர் மதிமயங்கிக் கம்ப்யூட்டர்
மானிட்டர் பார்த்தா மவுசு

போட்டதுமில்லாமல் அதுக்கு எசப்பாட்டு நான் எழுதப் போறேன்னு ஒரு போஸ்டரை வேற ஒட்டிப்புட்டார். ஆனா நான் வரதுக்கு முன்னாடியே உபிச பெனாத்தல் ஒண்ணுக்கு ரெண்டா ரெண்டு வெண்பா எழுதிட்டான். அதுவும் ரெண்டாவதா எழுதின வெண்பா வெகுஜோர்.


வெயிலைக் குறைசொல்வார் வேலை பார்க்கார்
மெயிலை நோண்டிடும் மேதைகாள் - ஸ்டைலாய்
ஆணிபுடுங்கும் வேலை அவமானப் படுத்திடுவார்
மானிட்டர் பார்த்தே மகிழ்ந்து.
டாக்டர் ஸ்கான்மேனுக்குப் பதிலா இந்த வெண்பா.


வானிலுளோன் வந்தே உயிர்தந்தான் என்றிடுவார்
தேனில் குழைத்துத் திருவாழ்த்தும் சொல்லிடுவார்
மானியமாய்ச் செய்தால் மனமும் குளிர்ந்திடுவார்
சீனிக்குணம் போகும் சீக்கிரமே கோபம்வரும்
வாணிபமாய் ஆகும் வசவாய்ப் பொழிந்திடும்
ஏனிவன் மாறினான் - எல்லாமோர் பில்லாலே!
பாநிறமே மாறிவிடும் - பார்த்தது தான்மறக்கும் -
தானியங்கி எந்திரங்கள் தானாகக் காட்டிடுமே
வீணிவன் செய்வதெல்லாம் வித்தை காட்டுகிறான்.
மானிடர்க்கு உள்ளே மலஞ்சோற்றுக் குப்பைகளை
மானிட்டரில் கண்டு மருந்து!

அதுக்காக இதுக்கு மேல பாட என்ன இருக்குன்னு கச்சேரியை முடிச்சுக்கிட்ட கிருஷ்ணா மாதிரி நாமளும் எழுந்து போயிட முடியுமா? அதான் பார்மேட்டை மாத்தி விருத்தமா எழுதலாம்ன்னு ஆரம்பிச்சேன். ஒரே பார்முலா பயன்படுத்தினாக் கொஞ்சம் சரியா வரலைன்னு ஆசிரியப்பாவா மாத்திட்டேன்.


கண்கள் மூடிக் கஷ்ட மான
… கணக்குப் போட்ட ராமா நுசனும்
பெண்கள் உரிமை பெறவே கவிதை
… பெரிதாய்த் தந்த பாரதி யாரும்
விண்ணில் இருக்கும் விந்தைகள் பற்றி
… விளக்கிச் சொன்ன வாத்தி யாரும்
வெண்மை புரட்சி வெண்ணெய் போல
… வெளிவரச் செய்த குரியன் சாரும்


பாகம் பற்றிப் படிக்கப் புத்தகம்
… பாங்காய்த் தந்த மீனாள் அவளும்*
ராகம் பலவும் ரசித்திடத் தந்த
… ராஜா ரகுமான் அவர்தம் குலமும்
தாகம் தீர்க்கும் தண்ணீர் பெருக
… தானம் செய்த சான்றோர் பலரும்
வேக மாக வேறிடம் செல்ல
… வேலை பார்க்கும் விஞ்ஞா னிகளும்


ஊசிகள் கொண்டு உயிரைக் காத்து
… ஊன்வலி தீர்க்கும் உயர்மருத் துவரும்
காசினி நலம்பெறக் கடுந்தவம் செய்திடும்
…கர்ம வீரரும் கடுமுழைப் பாளிகள்
யோசி அனைவரும் யோதைகள்** தானே
… யோக்கிய மானவர் யோகிகள் தானே
ஏசி அறையென ஏளனம் வேண்டாம்
… ஏகாந்த மாய்நீர் எடுத்து ரைப்பீரே! 

*பாகம் - சமையல். சமைத்துப்பார் என்ற பிரபல புத்தகம் எழுதிய மீனாட்சி அம்மாள்
** யோதைகள் - அறிஞர்

வழக்கமா தேவைப்படும் மோனை ஒன்றாம் ஐந்தாம் சீர்கள் மட்டுமே. ஆனால் மூன்றாவது மட்டும் முடிந்த வரையில் ஏழாவது சீரிலும் மோனை வரும்படி அமைத்ததால் ஓசை நயம் நன்றாக வந்திருக்கின்றது என்று நினைக்கிறேன். உங்க கருத்தை, எதிர் பாட்டை, எசப்பாட்டை சொல்லுங்க!

5 comments:

said...

//அதுக்காக இதுக்கு மேல பாட என்ன இருக்குன்னு கச்சேரியை முடிச்சுக்கிட்ட கிருஷ்ணா மாதிரி நாமளும் எழுந்து போயிட முடியுமா? //

அதானே, போகிற போக்கில் டி.எம்.க்கு ஒரு குத்து! :))))

said...

கீதாம்மா, மத்தது எல்லாம் போய் அது மட்டும் உங்க கண்ணில் பட்டுது பாருங்க!! :)))

said...

சாமி மேட்டர் நான் என்ன சொல்ல என்று என்னிடம் சொல்லிவிட்டு இங்கே விருத்தம் ஆரம்பிப்பதே ராமானுசருடன்! நடாத்துங்கள் :-))

amas32

said...

அவ்வ்வ்!! இது கணக்குப் போட்ட ராமானுசர்!!

said...

உழுதுண்டு வாழ்வதுவே உய்வெனச் சொல்லிப்
பழுதின்றி பக்குவமாய் பண்பட்ட மண்ணில்
கருத்தெல்லாம் செல்வம் கொழிக்கும் நினைவில்
விருப்பம் இல்லாமல் வெற்றுக் கூலிக்காய்
தட்டச்சு செய்தால் மவுசு


தளை தட்டவில்லை என்று நினைக்கிறேன். பெரிதாக ஆராயவில்லை. தட்டினால் சுட்டிக்காட்டுங்கள். பிறகு வந்து திருத்தம் செய்கிறேன் :) [உங்களுடைய நாயகன், நாயகி, வில்லன் விதிமுறைகளை ஒரு படமாக வெளியிட்டால் (http://en.wikipedia.org/wiki/Cheat_sheet) வசதியாக இருக்கும்]