Tuesday, September 13, 2016

மையப்புள்ளி, மெரீடியன் பின்னே மாலன்!

வெளியூருக்கோ வெளிநாட்டுக்கோ போனோமா, அங்க எடுத்த படத்தைப் போட்டோமா, போன இடத்தைப் பத்தி நாலு வரி எழுதினோமான்னு இருக்கிறது நாம எல்லாருமே பண்ணறதுதான். எங்க துளசி ரீச்சர் மாதிரி ஆட்கள் போன இடத்தைப் பத்தின தகவல்கள், வரலாறு கொஞ்சம் மெனக்கெட்டு எழுதுவாங்க. இப்படி எழுதும் போது கொஞ்சம் முன்னப்பின்ன ஒரு தகவல்பிழை இருந்தா, அதைச் சுட்டிக் காட்டின உடனே அப்படியா, அடடேன்னு சரி பண்ணிக்கலாம்.
ஆனா இதுவே ஒரு பத்திரிகையாளர், அதுவும் மூத்த பத்திரிகையாளரா இருந்தா மேலெழுந்தவாரியாக இல்லாம கொஞ்சம் முனைந்து வாசகனுக்கு தன்னுடைய அனுபவங்கள், அதன் பின் இருக்கும் தகவல்கள் என எழுதி படிச்ச ஒருத்தனுக்கு படிக்கிறது முன்னாடி இருப்பதை விட படித்த பின் அந்த இடத்தைப் பற்றிய அறிவு கொஞ்சம் அதிகமாகி இருக்கணும். அது அவர்களோட கடமை. எல்லாரும் இப்படிப் பண்ணறாங்களான்னா இல்லை. எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அமெரிக்கா வந்துட்டுப் போன பின்னாடி எழுதினதை எல்லாம் படிச்சு கொஞ்சம் கிண்டலும் பண்ணி நிறைய வருத்தப்பட்ட காலமெல்லாம் உண்டு.
ஆனா அவரை எல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு பண்ணிட்டாரு பத்திரிகையாளர் மாலன். மாலன் சமீபத்தில் லண்டன் போயிருக்கார். அது குறித்து லண்டன் குறிப்புகள்ன்னு ஒரு தொடர் எழுதிக்கிட்டு வரார் போல. இன்னிக்கு அதோட பத்தாவது பாகம் படிக்கக் கிடைச்சுது. நீங்களும் படிச்சுடுங்க - https://www.facebook.com/maalannarayanan/posts/10153695285991744
பதிவு காணாமப் போயிருச்சுன்னா, இந்தப் படத்தைப் பார்த்துக்குங்க.


படிச்ச உடனே மிகுந்த அருவருப்பு, ஒவ்வாமைதான் வந்தது. பெரிய எழுத்தாளர், பத்திரிகையாளர். இப்படி ஒரு அபத்தக் களஞ்சியமான கட்டுரை ஒண்ணை எழுதி இருக்காரே. ஒரு தப்பா ரெண்டு தப்பா எடுத்துச் சொல்ல? போன இடத்தில் படிக்கத் தரும் தகவல் குறிப்புகளைப் படித்து இருந்தால் இப்படி எல்லாம் எழுதி இருப்பாரா? அல்லது அறிவியல் பற்றி எழுதறோமே, ஒரு முறை விக்கிப்பீடியாவையாவது படிச்சுட்டு எழுதுவோம்ன்னு படிச்சிருந்தா இப்படித் தப்பும் தவறுமா எழுதி இருப்பாரா?

முதல் வரி

/உலகப் பந்தில் மேலிருந்து கீழாக, அதாவது வட துருவத்திலிருந்து தென் துருவத்திற்கு ஒரு கோடு போடுங்கள். அந்தக் கோடு பூமியின் மத்தியில் ஓடும் பூமத்திய ரேகையை ஓரிடத்தில் + போல ஊடறுக்கும் இல்லையா, அதுதான் உலகத்தின் மையப் புள்ளி இல்லையா? /
வட துருவத்தில் இருந்து தென் துருவத்திற்கு கோடு போட்டால் அதுதான் உலகத்தின் மையப் புள்ளியா? இதை இல்லையா இல்லையான்னு வேற கேட்கணுமா? இல்லைய்யா இல்லை. உலகம் ஒரு உருண்டை. இந்த உருண்டையின் மேலிருந்து கீழ் வரை கோடு போட்டால் அது உருண்டையின் எந்தப் பகுதியில் போடப்படும் கோடு என்பதை பொறுத்துதானே அது மத்தியில் இருக்கும் கோட்டை அறுக்கும்?
இந்தப் படத்தைப் பாருங்க.


வட துருவத்தில் இருந்து தென் துருவத்திற்கு எத்தனை கோடுகள் வரையப்பட்டிருக்கு? இந்தக் கோடுகள் அத்தனையும்தான் பூமத்திய ரேகையை அறுக்குது. அப்போ அறுக்கும் அத்தனை இடங்களும்தானேய்யா மையப்புள்ளி? ஒரு புள்ளி மட்டும்தான் மையப்புள்ளின்னு எப்படிச் சொல்லறது? அது மட்டுமில்லை. உருண்டையின் மேலிருக்கும் புள்ளி எப்படிய்யா மையப்புள்ளி ஆக முடியும்? அது உருண்டையின் உள்ளேதானே இருக்கணும்? இந்தப் படம் மாதிரி.


மொதல் வரியில் இவ்வளவு பிரச்னை. சரி அடுத்த வரிக்குப் போகலாம்.

இரண்டாவது வரி

/அந்த மையப்புள்ளி லண்டனுக்கு அருகில் கிரீன்விச்சில் இருக்கிறது. /
அடப்பாவி. பூமத்திய ரேகை எங்க இருக்கு, லண்டன் எங்க இருக்கு? நீங்களே பார்த்துக்கிடுங்க.


இந்தப் படத்தில் Equator என்ற பெயர் கொண்ட கோடுதான் பூமத்திய ரேகை. லண்டன் எங்க இருக்கு தெரியுமா? மேஏஏஏல United Kingdom அப்படின்னு எழுதி இருக்கு பாருங்க. அந்த நாட்டின் தலைநகரம்தான் லண்டன். குடுத்த குறிப்பைப் படிக்க வேண்டாம், விக்கிப்பீடியாவைப் பார்க்க வேண்டாம் ஆனா பூமத்திய ரேகைக்கும் லண்டனுக்கும் என்ன சம்பந்தம்ன்னாவது இவ்வளவு படிச்ச மனுசனுக்குத் தெரிய வேண்டாம்? எழுதும் பொழுதே என்னமோ தப்பா இருக்கேன்னு தோண வேண்டாம்?
தமிழில் உச்சரிப்புக்கேற்ற மாதிரி எழுதணும்ன்னா அவர் சொல்லும் இடத்துக்குப் பேரு க்ரெனிச். அதை க்ரீன்விச், சேண்ட்விச்ன்னு எல்லாம் சொன்னா அந்த ஊர்க்காரனே முழிப்பான். இங்க அப்படித்தான் சொல்லறாங்க கேட்டுக்கிடுங்க — https://www.youtube.com/watch?v=X-FdjOUH5h4 . போகட்டும்.

அடுத்த வரி

/(அப்படித்தான் நினைத்தார்கள். ஆனால் பின்னாளில் செயற்கைக்கோள் மூலம் பார்த்தபோது உண்மையான மையப்புள்ளி இப்போது மையப் புள்ளி எனக் கருதப்படும் இடத்திலிருந்து 306அடி கிழக்கே தள்ளி (கிரீன்விச்சில்தான்) இருக்கிறது எனக் கண்டுபிடித்தார்கள். ஆனால் தொழில்நுட்பம் இந்த அளவு வளர்ச்சி பெறாத நாட்களில் இவ்வளவு நெருக்கமாக கண்டுபிடித்த்தே பெரிய விஷயமில்லையா?)/
306 அடி கிழக்கே. இதை எங்க இருந்து பிடிச்சாரோ தெரியலை. ஆனா நான் படிச்ச இடத்தில் எல்லாம் இது 334 அடி கிழக்கேன்னுதான் இருக்கு.
இதைக் கண்டுபிடிச்சது பெரிய விஷயமா? பெரிய விஷயம்தான். ஆனா இதுதான் ஆதியில் இருந்தே Prime Meridian எனப்படும் முதனெடுங்கோடா என்றால் இல்லை. இதற்கு முன்பே பல கோடுகள் இதைப் போல கிழக்கும் மேற்கும் சந்திக்கும் இடமாகக் கருதப்பட்டன.
வடதுருவத்தில் இருந்து தென் துருவத்தின் வரையான தொலைவை எடுத்துக் கொண்டு அதில் சரி பாதி தூரத்தில் பூமியின் மீது குறுக்குவாட்டில் ஒரு கோடு போட்டால் அதுதான் பூமத்திய ரேகை. அந்த கோட்டின் எந்த புள்ளியை எடுத்துக் கொண்டாலும் அதிலிருந்து வட துருவமும் தென் துருவமும் சமமான தூரத்தில்தான் இருக்கும். ஆனால் நெடுவாட்டில் இப்படி ஒரு கோடுதான் சரி என நிர்ணயம் செய்ய முடியாது. அதனால் எதாவது ஒரு கோடுதான் ஆரம்பம் என எடுத்துக்கொண்டாக வேண்டிய கட்டாயம். பல கோடுகளை பயன்படுத்திப் பார்த்து 1884ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருக்கு வாஷிங்டன் நகரில் விஞ்ஞானிகள் கூடி முடிவு செய்ததுதான் இந்த க்ரெனிச் அருகே வரும் கோட்டினை 0 பாகைக்கோடாகக் கொள்ளலாம் என்பது.
இதை வைத்துக் கொண்டு இதுதான் மையப்புள்ளி, இதுதான் உலகின் மத்தி என்று எழுதுவதெல்லாம் ஜல்லி அல்லாது வேறெதுவும் இல்லை. இதைத் தாண்டி என்னால் இந்தக் கட்டுரையைப் படிக்க முடியவில்லை. என்னென்ன குண்டுகளை எல்லாம் புதைத்து வைத்திருக்கிறாரோ. இதில் ஒரு நண்பர் 2020ஆம் ஆண்டு மாலன் எழுதியதால் இந்தக் கட்டுரை பள்ளிப் பாட திட்டத்தில் சேர்க்கப்படலாம் என பயமுறுத்துகிறார். பாவம் குழந்தைகள்!
மாலன், நீங்க உலகம் பூரா சுத்தி வாங்க, படம் போடுங்க, குறிப்பெழுதுங்க. ஆனா தகவல்கள் தரும் பொழுது வரலாறாகட்டும், அறிவியலாகட்டும் இப்படி பொறுப்பில்லாம எழுதறதுக்குப் பதிலா எழுதாமலேயே இருங்க. உங்க மரியாதையும் கெடாம இருக்கும் உங்களைப் படிக்கிற ஜனமும் தப்பான தகவல்களைத் தெரிஞ்சுக்காம இருக்கும். நன்றி.
ஆனால் இப்பொழுதுதான் ஒன்று புரிகிறது. தமிழில் சில அரைகுறைகள் எல்லாம் ஏன் இப்படிப் பொறுப்பில்லாமல் எழுதுகிறார்கள் என எண்ணி இருக்கிறேன். அவர்கள் எல்லாம் இவரிடம் தொழில் கற்றுக் கொண்டவர்கள்தான். முன்னேர் எவ்வழியோ பின்னேர் அவ்வழி! தமிழ் வாழ்க!!

பி.கு: பதிவில் சொன்னபடி எங்க ரீச்சர் பாடம் எடுத்திருக்காங்க. அதையும் பார்த்துக்கிடுங்க. இவரை போடுங்கப்பா சாகித்ய அகாதமி கமிட்டியில் - https://www.facebook.com/gopal.tulsi/posts/10207432414551101

0 comments: