Tuesday, December 13, 2016

பேச்சுரிமை பற்றிய புரிதலும் பெருமாள் முருகனும்!

“உன் எண்ணங்களோடு எனக்கு உடன்பாடில்லை, ஆனால் உனக்கு அதனை வெளிப்படுத்தும் உரிமை உண்டு என என் கடைசி மூச்சு வரை போராடுவேன்” என்ற புகழ்பெற்ற வசனத்துடன் தொடங்குகிறது சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு ஒன்று. பேச்சுரிமையை மையக் கருத்தாக கொண்ட வழக்கு அது.
பேச்சுரிமை என்றால் என்ன? ஒருவன் அவனது எண்ணங்களை எந்த விதமான கட்டுப்பாடுமின்றி வெளியிடும் உரிமை அவனுக்கு உண்டு. இந்த உரிமை பல நாடுகளில், அந்நாடுகளின் அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமே அம்மக்களுக்குத் தரப்பட்டிருகின்றது. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் முதலாம் திருத்தத்தின் மூலம் இந்நாட்டு மக்களுக்கு பேச்சுரிமை உண்டு என அங்கீகாரம் வழங்கப்பட்டு இருக்கின்றது. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டங்களில் இது முக்கியமானதாக கருதப்படுகின்றது. உதாரணத்திற்கு போரில் மடிந்த வீரர்களின் இறுதிச்சடங்கு நடக்கும் இடங்களுக்கு அருகே, போரை எதிர்ப்போர் அவரது போராட்டத்தை நடத்த அவர்களுக்கு உரிமை உண்டு என்பது அமெரிக்க சட்டம்.
பேச்சுரிமை உண்டு என்ற பொழுதிலும் அது கட்டுக்கடங்காத ஒன்றல்ல. அதற்கான எல்லைகளும் வகுக்கப்பட்டே இருக்கின்றன. தனிநபர் மீது அவதூறோ, அரச அல்லது வணிக ரகசியங்களை வெளியிடுவதோ, அமைதிக்குப் பங்கம் விளைவிக்குமாறு வெளியிடப்படும் கருத்துகளோ தவறானவையே.எவை இந்த எல்லைக்குள் வருகின்றன, எவை எல்லையைத் தாண்டுகின்றன என்பது தொடர்ந்து சர்ச்சை செய்யப்படும் ஒன்றாகவே இருந்து வருகிறது. பெருமாள் முருகன்** வழக்கும் இதைத்தான் விவாதிக்கிறது.
2010ஆம் ஆண்டு பெருமாள் முருகன் எழுதிய நாவல் ‘மாதொருபாகன்’. நல்ல வரவேற்பைப் பெற்ற நாவல். திருச்செங்கோடு பகுதியில் வாழ்ந்து வரும், குழந்தையில்லாத கணவன் மனைவியைப் பற்றிய கதையை முன்வைத்து அந்நிலத்தைப் பற்றிய சித்திரத்தை நமக்குத் தருவதுதான் இந்நாவல். நாவலின் காலம் சரியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், மற்ற குறிப்புகளை வைத்து சுமார் 100 வருடங்களுக்கு முன் நடந்தது என்று ஊகிக்கலாம். இந்நாவலின் ஆங்கில வடிவம் ‘One Part Woman’ என்ற பெயர் கொண்டு 2013ல் வெளிவந்தது.
அதன் பிறகே இந்த நாவலில் பெருமாள் முருகன், திருச்செங்கோட்டு பகுதி மக்களை அவதூறு செய்திருப்பதாகவும், அங்குள்ள கோயிலின் புனிதத்தன்மையை கெடுத்திருப்பதாகவும் குற்றம் சாட்டத் தொடங்கினர் ஒரு பிரிவினர். அக்கோயிலின் தேர்த்திருவிழாவின் பொழுது குழந்தை இல்லாத பெண்கள், தமக்குப் பிடித்த ஆண்களுடன் உறவுகொண்டு கருத்தரிப்பதை ஒரு சடங்கு போலவும், சமூகம் அதை ஏற்றுக் கொள்வதாகவும் நாவலில் வரும் சம்பவங்கள், இக்குற்றத்திற்கு அடிப்படையாக முன்வைக்கப்பட்டன.
அந்நாவலுக்கான எதிர்ப்பு விரைவிலேயே பெரிதாகி அப்பகுதியில் அமைதி குலையத்தொடங்கி, எழுத்தாளர் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் நிலையும் வந்த உடன் அங்கிருந்த அரசு அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். தான் எழுதி இருப்பது ஒரு புனைவுதான், அதனை வரலாற்று ஆவணமாகப் பார்க்கக் கூடாது என்றும், இந்த நாவலின் நீட்சியாக எழுதப்பட்ட ஆலவாயன், அர்த்தநாரி ஆகிய நாவல்களில் திருச்செங்கோடு என்பதை கரட்டூர் என்ற கற்பனை நகரமாக மாற்றிவிட்டதாகவும் பெருமாள் முருகன் சொன்னதை எதிர்த்தரப்பு ஒத்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளின் பொழுது அவர் ஊர் மக்களை வருத்தமடையச் செய்ததற்காக மன்னிப்புக் கோரியும் புத்தகத்தில் சில பகுதிகளைத் திருத்துவதாகச் சொன்னதும் கூடப் போதுமானதாக இல்லை.
எழுத்தாளரின் படத்தை செருப்பால் அடிப்பதும், அந்நாவலை எரிப்பதும் பந்த் நடத்துவதும் என எதிர்ப்பு மென்மேலும் வலுக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் பெருமாள் முருகன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வேறு சில நிபந்தனைகளையும் அரசு அதிகாரிகளே முன்வைக்க, மனம் உடைந்த பெருமாள் முருகன், தான் எழுதிய அனைத்துப் புத்தகங்களையும் திரும்பப் பெறுவதாகவும் இனி எழுதவே போவதில்லை என்றும் அறிக்கை விடுத்தார். “பெருமாள் முருகன் என்ற எழுத்தாளன் இறந்துவிட்டான். அவன் கடவுளில்லை என்பதால் மீண்டும் உயிர்ததத்தெழப் போவதில்லை.” என்ற அவரின் அறிக்கை இலக்கிய வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பெருமாள் முருகனுக்கு ஆதரவாக சில எழுத்தாளர்கள் பேசியிருந்தாலும், இந்த முடிவு எழுத்தாளர் சமூகத்தை ஒன்றாக திரட்டி இவரின் பின் நிற்க வைத்தது. தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்திய, உலக அளவில் இப்பிரச்னை பேசப்படத் தொடங்கியது. இவரின் அறிக்கையை ‘இலக்கியத் தற்கொலை’ என்று விளித்து பேச்சுரிமை பற்றி பல கட்டுரைகள் வரத் தொடங்கின. ஜனவரி 2016ல் இவ்வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது. வழக்கினை விசாரித்த நீதிமன்றம், ஜூலை மாதம் அளித்த தீர்ப்பின் முதல் வரிகளைத்தான் இந்தக்கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்தீர்கள்.
புகாரில் சொல்லியபடி இந்நாவல் தரக்குறைவான மொழியில் எழுதப்படவில்லை, குழந்தையில்லாத தம்பதியினரின் வலியினை அழகாகச் சொல்லி இருக்கின்றார் எழுத்தாளர், தொடங்கிய பின் முடிக்காமல் கீழே வைக்க முடியவில்லை என நாவலுக்குப் பாராட்டுகள், தமிழில் வந்து நான்கு வருடங்கள் எந்த விதமான எதிர்ப்பும் இல்லாமல், பல விருதுகளையும் இந்நாவல் பெற்று இருக்கிறது. திடீரென முளைத்திருக்கும் எதிர்ப்புக்கு நாவல் மட்டுமே காரணமில்லை. இது புனைவுதான், இதனைப் படிப்பதால் மனம் வருந்தினால் புத்தகத்தை மூடி வைத்து விட வேண்டியதுதானே. ஏன் படிக்க வேண்டும் ஏன் மனம் வருந்த வேண்டும் என சாட்டையடிக் கேள்விகள், அரசு அதிகாரிகள் பதற்றத்தைத் தணித்து அமைதியை காக்க முயற்சி செய்ய வேண்டுமே தவிர பஞ்சாயத்து செய்யக்கூடாது என்று அறிவுரைகள் என தீர்ப்பே ஒரு நாவலுக்குண்டான சுவாரசியங்களோடு எழுதப்பட்டிருக்கிறது. அந்த எழுத்தாளன் உயிர்ப்பிக்கப்படட்டும், அவன் மீண்டும் எழுதத் தொடங்கட்டும் என்ற முத்தாய்ப்போடு முடிகிறது இந்தத் தீர்ப்பு.
ஓர் எழுத்தாளர் இப்படி அச்சுறுத்தப்படுவது இது முதல் முறையல்ல. துரை குணா, புலியூர் முருகேசன் எனத் தமிழகத்திலேயே பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. இந்தத் தீர்ப்புக்குப் பிறகேனும் பேச்சுரிமை நிலைநாட்டப்படவேண்டும், எழுத்தாளர்கள் பயமின்றி படைப்புகளை வெளிக்கொண்டு வரவேண்டும், மாற்றுக்கருத்துகள் ஆரோக்கியமான முறையில் விவாதிக்கப்படவேண்டும் என்பதே நம் அவா.
_______________________________________________
**முனைவர் பெருமாள் முருகன் ஓர் எழுத்தாளர், சிந்தனையாளர், கவிஞர். நாமக்கல் அரசு கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் இவர் பல நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் எழுதியவர். அரசு விருதுகள் உட்பட பல விருதுகளும் பரிசுகளும் பெற்றவர். தீர்ப்பினைத் தொடர்ந்து மீண்டும் எழுதவிருக்கிறார்.
  1. Judgement — http://www.thehindu.com/multimedia/archive/02921/Perumal_Murugan_ca_2921087a.pdf
  2. International Coverage Sample — https://pen.org/essay/perumal-murugan-literary-suicide
  3. Perumal Murugan gives up writing — http://www.thehindu.com/news/national/tamil-nadu/perumal-murugan-gives-up-writing/article6784745.ece
  4. பெருமாள் முருகனின் விருத்தம் டிஎம்கிருஷ்ணாவின் குரலில் — https://medium.com/@elavasam/have-mercy-on-me-lord-for-i-am-faint-psalm-6-2-bbb614eaadbc#.1gkzeqbag
  5. நண்பர் ஒருவரின் மாதொருபாகன் விமரிசனம் — http://omnibus.sasariri.com/2014/02/blog-post_26.html
ஆஸ்டின் தமிழ்ச்சங்க 2016 தீபாவளிச் சிறப்பிதழுக்காக எழுதியது. சிறப்பிதழை முழுவதும் வாசிக்க  — http://www.austintamilsangam.com/ats-deepavali-newsletter-2016/

3 comments:

said...

பெருமாள் முருகன் எழுதியது கருத்துரிமை என்ற வகையில் சரி ஒத்துக் கொள்ளலாம் அதில் சாதி பெயர்களை வெளிப்படையாக குறிப்பிடுவது ஏன் ? புனைவு என்றும் பிதற்றியிருக்கிறார் புனைவு என்றால் அவர் குடும்பத்தை வைத்தே எழுதி இருக்கலாம் அல்லவா ? அடுத்தவர்களை பற்றி எழுதுவதை விட தன்னைப் பற்றி எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கலாம் அல்லவா ? நீதிமன்றங்களின் தீர்ப்பு அதன் தன்மைகள் எல்லாம் ஊர் அறிந்த ரகசியம் தானே. சல்மான்கானுக்கு தானே முன்வந்து பிணை வழங்குவதும் ஊழல் அரசியல்வாதிகள் தப்பிக்க வழிவகுப்பதும் நீதி மன்றங்கள் தான். இதில் நீதிமன்றம் சட்டம் என்பதையெல்லாம் தாண்டி அறம் என்ற ஒன்றுதான் முதன்மையானது. சாதியில் நம்பிக்கை அற்ற பெருமாள் முருகன் சாதியை குறிப்பிட்டு எழுதி இருக்கக் கூடாது அது அறப்படி தவறு

said...

முகநூலில் பாலக்காட்டு அய்யர் சாதி குழுமத்தில் செயல்படும் நீங்கள் சாதி மறுப்பு பேசுவது கேலிக்கூத்து.உங்களுக்கு இருக்கும் உணர்வு தானே மற்றவர்களுக்கும்? இல்லை மற்றவர்களுக்கு வருவது �� சட்னியா?

said...

Why didn't you allow my comment on your caste association? You're one world's most hypocrites in the world