Friday, September 13, 2019

பயணப்படியும் பரலோகப் பயணமும் பின்னே பஸ் ஆல்டரினும்

எனக்கு ஒரு மேலாளர் இருந்தார். தொழில் சம்பந்தப்பட்ட நுணுக்கங்களை எனக்குச் சொல்லித் தந்தவர். அதோடு கூடவே விதிகளை நமக்கேற்ற மாதிரி எப்படி வளைத்துக் கொள்வது என்பதையும் சொல்லித் தருவார். கை நிறைய சம்பளம் வாங்கினாலும் இப்படிச் செய்கிறாரே என நாம் யோசிக்கும் அளவு இது போல விதிகளை வளைப்பதில் வல்லவர்.
அலுவல் காரணமாக மேற்கொள்ளப்படும் பயணங்களில் ஏற்படும் செலவினை சமாளிக்கப் பயணப்படி தருவது வழக்கம். பொதுவாக ஒரு நாளைக்கு இவ்வளவு என்பதுதான் கணக்கு. அந்தத் தொகையை விட அதிகமாகச் செலவழித்தோமானால் அதை நம் கையிலிருந்து தர வேண்டும். அதை விடக் குறைவாகச் செலவு செய்தால் மீதி இருப்பது நமக்கு. இதுதான் கணக்கு. நம்ம மேலாளர், அவர் பெயரை ராஜன் என்று வைத்துக் கொள்வோமே, எப்படிக் குறைவாகச்  செலவு செய்வது என்பதை ஒரு கலையாக மாற்றி இருந்தார். டாலர், பௌண்ட் என்பதைப் போல தினப்படி என்பதை ஒரு நாணய முறையாக கொண்டிருப்பார். அந்த பெட்டி இவ்வளவு டாலர் விலை, அந்த சட்டை இவ்வளவு டாலர் என்பதைக் கூட மூன்று நாள் தினப்படி, நாலு நாள் தினப்படி என்று சொல்லும் அளவுக்கு அவருக்குத் தினப்படி மோகம்.
வெளியூர் செல்லும் பொழுது சாப்பாடிற்கு என்று ஒரு பெட்டியைக் கொண்டு வந்துவிடுவார். அதில் சிறிய குக்கர், பருப்பு, அரிசி, ரசப்பொடி என சமைக்கத் தேவையான அத்தனை உபகரணங்களும் இருக்கும். கூடவே மேகி நூடில்ஸ், உடனடி பொங்கல், உடனடி பிசிபேளாபாத் போன்ற ஆயத்த உணவுப் பொட்டலங்களையும் வைத்திருப்பார். நம்ம ஊர் உணவு உண்பதற்கான வழியும் ஆச்சு, கூடவே வெளியில் சென்று அதிக விலை கொடுத்து உண்ண வேண்டிய கட்டாயத்தையும் தடுத்தாற்போல் ஆச்சு. நம்மையும் சாப்பாட்டுக்கு அழைப்பார் ஆனால் வெறும் கையுடன் போய் விட முடியாது. நாம் கொண்டு வந்திருக்கும் ஆயத்த உணவு பொட்டலங்களைத் தந்துவிட வேண்டும். அத்தனை கறாராக இருப்பார்.
முதன் முறை அவருடன் வெளிநாடு செல்ல நேர்ந்த பொழுது விமானம் புறப்பட வேண்டிய நேரம் காலை மூன்று மணி. ஆனால் முந்திய இரவு பத்து மணிக்கெல்லாம் விமான நிலையம் வரச்சொல்லி விட்டார். சீக்கிரம் குடிவரவுச் (Immigration) சோதனைகளை முடிக்க வேண்டும் கிளம்பு கிளம்பு என்று அவசரப்படுத்தினார். ஏன் என்று தெரியாவிட்டாலும்  மேலாளர் சொல்கிறார் என்று சீக்கிரமே அத்தனை சோதனைகளையும் செய்து உள்ளே சென்று விமானம் ஏறும் நேரம் வரை தேவுடு காத்தோம். ஆனால் திரும்ப வரும் பொழுது மெதுவாகப் போகலாம் என்ன அவசரம் என்று ரொம்பவும் நிதானமாக இருந்தார். எங்கள் விமானத்தில் இருந்தவர்களிலேயே நாங்கள்தான் கடைசியாக குடிவரவு சோதனைகளை முடித்துக் கொண்டு இந்தியாவிற்குள் நுழைந்தோம்.
என்னால் சும்மா இருக்க முடியாமல், “ஏன் போகும் போது அவ்வளவு அவசரப்படுத்தினீர்கள் ஆனால் இறங்கிய பின் இத்தனை நிதானம்? எனக்கேட்டேன். ராஜன் உடனே “போகும் பொழுது நடு இரவுக்கு முன் குடிவரவுச் சோதனை செய்தோமானால் அன்றைய தேதியில் முத்திரை குத்தி விடுவான். பன்னிரெண்டு மணிக்குப் பின் அடுத்த நாள் முத்திரை வந்துவிடும். ஆகவே முன்னரே சென்றுவிட்டோமானால் ஒரு நாள் தினப்படி அதிகம்  கிடைக்கும். திரும்ப வரும் பொழுது நிதானமாக நடுநிசிக்குப் பின் குடிவரவுச் சோதனையை செய்தோமானால் அதே போல் அடுத்த நாள் முத்திரை விழும். இன்னுமொரு நாள் வெளிநாட்டில் இருந்த கணக்கில் ஒருநாள் தினப்படி அதிகம் கிடைக்கும். எனவேதான் போகும் பொழுது அவசரமும் இறங்கிய பின் நிதானமும். புரிந்ததா என்றார்!” 
இதற்காகவே அதிக செலவுகள் ஏற்படும் ஐரோப்பியப் பயணங்களைத் தவிர்த்து ஆப்பிரிக்கா ஆசிய பயணங்களைத் தேர்ந்தெடுப்பார். எந்த நேரமும் பயணம் செய்யத் தயாராக இருப்பார்.  இப்படிச் சேர்த்த பணத்தை வைத்தே மூன்று நான்கு வீடுகளை வாங்கிய சமர்த்தர் ராஜன். இவர் அளவு இல்லை என்றாலும் தானே சமைத்துச் சாப்பிட்டு அதிகம் செலவு செய்யாமல் தினப்படியை சேர்த்து முதலீடு செய்தவர்கள் இந்தத் தொழிலில் அநேகர் உண்டு. இவர்கள் செய்யாத செலவுக்கு ரசீது தருவது, அல்லது முன்பதிவு செய்த ரசீதை வைத்துக் கொண்டு பயணப்படி வாங்கி விட்டு பயணம் செய்யாமல் முன்பதிவை ரத்து செய்வது போன்ற தகிடுதத்தங்கள் செய்யமாட்டார்கள். விதிகளை மீறாமல் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதுதான் இவர்கள் குறிக்கோள்.
ஆனால் எத்தனுக்கும் எத்தன் இவ்வுலகில் உண்டு என்பதற்கு உதாரணமாக கணக்குவழக்குப் பிரிவில் குமார் என்று ஒருவர் இருந்தார். எவ்வளவு கவனமாக கணக்கு வழக்குகளை எழுதித் தந்தாலும் அதில் எதாவது குற்றம் கண்டுபிடித்து கேள்விகள் கேட்பதில் சமர்த்தர். இந்த ஹோட்டலில் காலையுணவு தருவார்களே, அந்த வாடிக்கையாளரின் அலுவலகத்தில் அனைவருக்கும் மதிய உணவு உண்டே அப்பொழுது நாம் ஏன் முழு தினப்படி தரவேண்டும் என்றெல்லாம் கேள்வி கேட்பார். ராஜனின் திட்டத்தை முறியடிக்க இவர் குடிவரவு முத்திரையில் தேதியை மட்டும் பார்க்காமல் நேரத்தையும் பார்த்து கேள்வி கேட்பார். வெளியூர் செல்லவே ஆளைத் தேடும் நிலைமையில் இருக்கும் மேலாளர்கள் இவரைக் கட்டுப்படுத்தி வைப்பதில் மிகவும் சிரமப்படுவார்கள்.
இந்த பயணப்படி கதைகள் இன்று நினைவுக்கு வரக் காரணம் மற்றுமொரு பயணப்படி கதையை படித்ததினால்தான். மனிதன் நிலவில் காலடி வைத்தது 1969 ஆம் ஆண்டு. இவ்வருடம் அந்நிகழ்வு நடந்து ஐம்பது வருடங்கள் ஆனதால் அது குறித்து ஏராளமான கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நிலவுக்கே போய் வந்தாலும் நம் அரசு அலுவலங்களின் சிகப்பு நாடாவில் இருந்து தப்ப முடியாது என்ற ஒரு கட்டுரை மிக சுவாரசியமானது. நிலவில் இருந்து திரும்பிய பின்னர், ஹவாய் தீவுகளில் கரையேறிய விண்வெளி வீரர்கள் அங்கு சுங்கப் படிவத்தை நிரப்பி அவர்கள் அனுமதி பெற்ற பின்னரே அமெரிக்காவில் நுழைய முடிந்தது. ப்ளோரிடா மாநிலத்தின் கேப் கென்னடியில் இருந்து கிளம்பி நிலவின் வழியாக ஹானலூலூ வந்தடைந்ததாகவும் தங்களுடன் நிலவில் இருந்து கொண்டு வந்திருக்கும் கற்களும் துகள்களும் இருப்பதாக படிவத்தில் எழுதி விண்வெளிக்கு சென்ற நீல் ஆர்ம்ஸ்டிராங், பஸ் ஆல்டரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் கையொப்பமிட்ட சுங்கப் படிவம் இவர்கள் நிலவில் இறங்கியதன் 40ஆவது வருடக்கொண்டாட்டங்களின் பொழுது வெளியிடப்பட்டது. 

மேலும் தேடும் பொழுது, விண்வெளிக்கு சென்று வந்த பின் பஸ் ஆல்டரின் பயணப்படி கேட்டு எழுதிய படிவமும் கிடைத்தது.  
20 நாள் பயணமாக ஹ்யூஸ்டனில் இருந்து கிளம்பி கேப் கென்னடி வழியாக நிலவுக்குச் சென்று பசிபிக் பெருங்கடலில் வந்து விழுந்து ஹவாய் வழியாகத் திரும்ப ஹ்யூஸ்டன் வந்ததற்கு வெறும் 33 டாலர்தான் பயணப்படியா என்று நினைத்தேன். பயணம் செய்ய ராக்கெட், தங்கிட விண்கலம், உண்ண உணவு எல்லாம் அரசு தரும் பொழுது என்ன செலவாகிவிடும், எதற்குப் பயணப்படி என்று கேட்கும் நாஸாவின் குமார் சார் குரல் மனத்தினுள் அசரீரியாய் ஒலித்தது. கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டு கட்டுரையை எழுதிவிட்டேன். 
  1. Buzz Aldrin’s Travel Voucher Courtesy – https://www.quora.com/How-much-was-Neil-Armstrong-paid-to-land-on-the-moon/answer/Andy-Burns-22?ch=99&share=c89b3a53&srid=RcoL
  2. Apollo 11 Customs Form Courtesy – https://www.thevintagenews.com/2019/03/25/apollo-11-customs/ 
சொல்வனம் மின்னிதழுக்காக எழுதியது - https://solvanam.com/2019/08/28/பயணப்படியும்-பரலோகப்-பயண/