Saturday, August 01, 2020

அகரம் இகரம் உகரம் ஆச்சு...

இந்தத் திரைப்பட விளம்பரம் இன்று பரவலாகப் பகிரப்படுகிறது. ஞேயங் என்ற சொல்லே இல்லை என்னும் கருத்தோடு.

Image 

ஞேயம் என்பது நேயம் என்ற சொல்லின் திரிபு எனச் சொல்கிறது அகராதி. நேயம் காத்தல் என்பதை இணைத்தால் நேயங்காத்தல் எனப் புணரும். அதே போல ஞேயங்காத்தல் என எழுத நினைத்திருந்தால் அங்கே இடைவெளி வந்திருக்கக்கூடாது. ஞேயங்காத்தல் எனச் சேர்த்தே எழுதி இருக்க வேண்டும். 

இன்று பலரும் ஞாபகம் என்பதை நியாபகம் என்றும், நியாயம் என்பதை ஞாயம் என்றும் எழுதி வருகின்றனர். இதையும் திரிபு என ஏற்றுக் கொள்ள வேண்டும் எனச் சொல்வார் உண்டு. ஆனால் திரிக்கத்தான் வேண்டுமா என்ற கேள்விக்குப் பதில் இல்லை. 

இதே போல அய்யா, அவ்வை என்றெல்லாம் எழுதத் தொடங்கி இன்று அய்ந்து என்றெல்லாம் எழுதி ஐ ஔ என எழுதினாலே பாவம் என்ற அளவுக்குப் போய்விட்டது. கேட்டால் தொல்காப்பியரே சொல்லி இருக்கிறார். அகரம் இகரம் ஐகாரமாகும், அகரம் உகரம் ஔகாரமாகும், எனவே இப்படி எழுதுவது தவறில்லை. எழுத்துப் போலி எனத் தமிழில் உள்ளதே என்பர்.

ஆனால் ஐ என்றால் இரு மாத்திரை அது அய் எனும் பொழுது ஒன்றரை மாத்திரை ஆகிறதே ஐயா, அது எந்த விதத்தில் சரி எனக் கேட்டால் பதிலே இருக்காது. 

என்னளவில் இந்தத் திரிபுகளைத் தவிர்த்து ஐயா, ஔவை, ஞாபகம், நியாயம் எனச் சரியாக எழுதுவதே நலம். 

இந்தத் திரைப்படப் பெயர் நேயம் காத்தல் செய் என இருந்திருந்தால் இந்தப் பேச்சு வந்திருக்காது என்பதால் ஒரு பரபரப்புக்கு ஞேயங்காத்தல் செய் என வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த இடைவெளி இருப்பதால் அது தவறே. கா என்றாலே காத்தல் செய். காத்தல் செய் என நீட்டி முழக்க வேண்டுமா? 

முயல் என்பதை முயற்சி செய் என்பது போலத்தானே இதுவும்? முயல் எனத் தொடர்ந்து சொல்லி இருந்தால் முயற்சித்து என்ற கொடுமை வந்தே இருக்காது. இன்று விஷச்செடி போல மெத்தப் படித்தவர்களில் தொடங்கி அனைவரும் முயற்சித்து என எழுத முயல் எனப் புழங்காததும் காரணம். 

நல்ல தமிழில் எழுதுவோம். இந்த நலங்கெடல் தவிர்ப்போம்.

0 comments: