Tuesday, June 15, 2021

மூக்குப்பொடி மகாத்மியம்


பாரா மூக்குப்பொடி போடுபவர்கள் பற்றி எழுதப் போக, அது என்னையும் தும்ம வைத்துவிட்டது. பாராவின் பதிவு இங்கே.

மூக்குப்பொடி போடுபவர்களுக்கு ஒரு அனுபவம் என்றால் பொடி போடுபவர்களுக்கு வாங்கிக் கொண்டு வருவதும் ஒரு அனுபவம்தான். என் தாத்தாவிற்கு முதல் முறை மாரடைப்பு வரும் வரை மூக்குப் பொடி போடும் வழக்கமிருந்தது. வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டும் சீட்டாடிக்கொண்டும் இருக்கும் பொழுது தாத்தாவிற்கு பொடி வேண்டும். அவர் பொடிக்காகவே சில நண்பர்கள் அவருடன் இருந்தார்கள். நான்தான் கடைக்குப் போய் அவருக்கு மூக்குப்பொடி வாங்கிக் கொண்டு வருவேன்.

அந்த பொடிக் கடை உண்மையிலேயே ஒரு பொடிக்கடைதான். கடைக்காரர் ஒருவர் மட்டும் உள்ளே இருக்கலாம். வெற்றிலை, கொட்டைப்பாக்கு, சீவல், பன்னீர்ப்புகையிலை, சுருட்டு என புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்கள் எல்லாம் அவரைச் சுற்றி இருந்தாலும் மூக்குப்பொடிதான் பிரதானம். மற்ற இடங்களில் பரவலாகக் கிடைப்பதால் அந்தக் கடையில் ஏனோ பீடி சிகரெட் பார்த்த ஞாபகமில்லை. பெரிய கண்ணாடி குடுவைகளும் பீங்கான் குடுவைகளும் இருக்கும். பல தரங்களில் பல விலைகளில் பொடி விற்பனைக்கு இருக்கும். டி ஏ எஸ் ரத்தினம் பொடி ரொம்ப பிரபலமானது. பட்டணம் பொடி என்று ஒன்றும் உண்டு. நயம் நெய்ப்பொடி என்ற பலகை ஒன்று கடைக்குள் ஆடிக்கொண்டு இருக்கும் என ஞாபகம்.
வாங்க வரும் நாம் கடைக்கு உள்ளே எல்லாம் செல்ல முடியாது. வெளியில் இருந்து அப்படியே வாங்கிக்கொண்டு வர வேண்டியதுதான். ஆனால் எப்பொழுதும் கடை வாசலில் பொடியை வாங்கி அங்கேயே மூக்கில் ஏற்றிக் கொண்டும் தும்மிக்கொண்டும் நாலு பேர் எதேனும் பேசிக்கொண்டே இருப்பார்கள். அங்கு நின்றாலே நாசியில் இந்தப் பொடியும் தும்மலும், ஒழுகும் மூக்கைத் துடைத்துக் கொள்ளும் கைக்குட்டைகளும் வேட்டி நுனிகளும் எல்லாம் கலந்து ஒரு வாசனை நாசியில் ஏறும். வாங்கும் நமக்கு அதுவே ஒரு கிறுகிறுப்பைத் தரும். இந்தக் கைக்குட்டைகளையும் வேட்டிகளையும் பார்த்தாலே தாய்மார்களுக்குக் கோவம் வரும்.
கடைக்குப் போய் வெறுமெனப் பொடி வேண்டும் என்றெல்லாம் கேட்க முடியாது. யாருக்குப் பொடி எனச் சொல்ல வேண்டும். கடைக்காரர்களுக்கும் பொடி போடுபவர்களுக்கும் ஒரு அந்நியோன்யமான உறவு உண்டு. போடுபவர்களுக்கு எந்த விதமான பொடி வேண்டும் என்பது கடைக்காரர்களுக்கு நன்றாகத் தெரியும். அதற்கேற்றபடி எந்தப் பொடியோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பொடிகளையோ கலந்து தருவார்கள். அதனால் பொடி போடுபவர்கள் மற்ற இடங்களில் எல்லாம் அவ்வளவு எளிதாக போய் வாங்கிவிட மாட்டார்கள். வெளியூர் செல்ல வேண்டுமானால் கூட வேண்டும் அளவு வாங்கிச் செல்வோரும் உண்டு.
பொடியை வாங்குவதற்குப் பிரத்யேகமான முறை ஒன்று உண்டு. சிறுவன் ஒருவன் வந்து இன்னாருக்குப் பொடி வேண்டும் எனச் சொன்ன உடன் கடைக்காரர் ஒரு பாக்கு மட்டையை எடுத்து அதை நீவி நேராக்கிக் கொள்வார். பிறகு வெகு நீளமான ஒரு உலோகக் கரண்டியை எடுத்துக் கொள்வார். கரண்டி என்ற உடன் தடவைக்கு ஐம்பது கிராம் எடுத்துப் போடக்கூடிய கரண்டு என எண்ணக்கூடாது. மிகவும் மெலிதான நீளமான கரண்டி அது. முனையில் சின்னதாக ஒரு டீஸ்பூன் போல சின்னதாக இருக்கும். அதை அந்தக் கண்ணாடி ஜாரினுள் விட்டு லேசாகக் கலக்கி தேவையான அளவு வரும் வரை அந்த கரண்டியினால் பலமுறை எடுத்து அந்த மட்டையில் போடுவார். அது ஒரு நடனத்தின் நெளிவுடன், ஒரு யோகியின் சிதறா கவனத்துடன் வெகு லாகவமாகச் செய்யக்கூடிய வேலையாகத் தெரியும். தேவை என்றால் பொடிகளை பல கண்ணாடிக் குடுவைகளில் இருந்து எடுத்து ஒரு சின்ன உரல் போன்ற ஒன்றில் கலக்கி அதன்பின் அதை பாக்கு மட்டையில் நிரப்புவதும் உண்டு. அந்த மட்டையின் ஒரு முனை மற்றொரு முனைக்குள் நுழைந்து பொடி சிந்தாமல் அழகான ஒரு செல்ப் சீலிங் மெக்கானிஸம் கொண்டதாக இருக்கும்.
இப்படி பொடியை வாங்கிக் கொண்டு வந்து தாத்தா கையில் தந்த உடன் அதை அவர் அந்த மட்டையை லேசாக உள்ளங்கையில் தட்டிக்கொண்டு, மெதுவாகப் பிரித்து ஒரு சிட்டிகை பொடியை விரல் நுனிகளில் எடுத்துக் கொண்டு, அந்த மட்டையை மீண்டும் கவனமாக மூடிவிட்டு, மூக்கின் ஒரு துவாரத்தில் கொஞ்சம் மறுதுவாரத்தில் மீதி என உறிஞ்சிக்கொண்ட சமயத்திற்கும் அதையடுத்துத் தும்மல் வரும் சமயத்திற்கும் இடையே ஆன கணப்பொழுதில் அவர் கண்டுகொள்ளும் சொர்க்கம், வாங்கி வரும் பொழுது கிடைக்கும் ஐந்து பைசா பத்து பைசா சில்லறையில் வாங்கிக் கொள்ளும் ஆரஞ்சு மிட்டாயை என் வாயில் போட்டுக் கொள்ளும் கணத்தில் எனக்கும் சித்தியாகும்.

பிகு: என்னைப் போலவே பாராவின் பதிவு லலிதாராமையும் தும்ம வைத்துவிட்டது. அவரின் பதிவு இதோ.

Friday, June 11, 2021

அமுதே தமிழே அழகிய மொழியே..

பொதுவா பெனாத்தல் ஒரு போஸ்ட் எழுதினா நான் அதைத் திரும்ப எழுத வேண்டிய அவசியம் இருக்காது. ஆனா இந்த தடவை தொடர்புடைய ஆனால் தனித்தனியாகப் பேச வேண்டிய மூணு விஷயங்களைச் சேர்த்து எழுதி கொஞ்சம் குழப்பிட்டான்னு தோணுது. அதனால என் கருத்துதகளை கொஞ்சம் விரிவாகவே எழுதிடறேன்.

கலைச்சொற்கள்: எல்லா மொழிகளிலும் கலைச்சொற்கள் உண்டாக வேண்டியது அவசியம்தான். இன்றைக்கு பேருந்து, கணினி என்பது பேச்சுத் தமிழில் இல்லை என்றாலும் பேசினால் என்ன என்று கேட்க வேண்டிய அவசியம் இல்லாது இருக்கிறது. எழுதும் பொழுது கண்டிப்பாக இத்தகைய தமிழ்ச் சொற்களைக் கொண்டு எழுதுவது அவசியம். ஆனால் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கலைச்சொற்களை உண்டாக்கலாம் என்பது போலில்லாமல் அரசின் தமிழ்மொழி வளர்ச்சிக்கான துறை மூலமாகவே இச்சொற்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இச்சொற்களை ஆர்வலர்கள் பரிந்துரைக்க வேண்டுமானால் ஒரு வழி ஏற்படுத்தித்தரலாம். இத்தகைய கலைச்சொற்கள் எளிமையாக இருக்க வேண்டியது அவசியம். கொட்டை வடி நீர் போன்ற அபத்தங்களைக் காலம் பார்த்துக் கொள்ளும். அந்த விதத்தில் பெனாத்தலின் முதல் வரியில் அபார்ட்மெண்ட் என்பதை அடுக்ககம் எனச் சொன்னால் எளிமையாக, புரியும்படியாக இருந்திருக்கும். அதைச் செய்ய வேண்டும்தான். கலைச் சொற்களை முன்னெடுத்தல் அவசியமே.
வர்த்தகப் பெயர்கள்: இவற்றை மொழிபெயர்த்தல் தேவையற்ற வேலை. ஆப்பிள் என்ற பழத்தை என்பதை அரத்திப்பழம் (?) என்று சொல்வது வேறு ஆனால் ஆப்பிள் நிறுவனத்தை அரத்திப்பழம் எனச் சொல்வது வேறு. இரண்டாவது தேவையே இல்லாதது. சீனாக்காரன் செய்கிறான் என்பதால் நாமும் செய்ய வேண்டும் என்ற அபத்த வாதத்தை ஒதுக்கி விடுவோம். அவன் இவ்வளவு நாள் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ளலாம் என்றும்தான் சொன்னான். அதைக் கேட்போமா? கூகிள் எந்த மொழியிலும் இல்லாத புதிதாகச் செய்யப்பட்ட சொல். அதை என்னவென்று மொழிபெயர்க்க முடியும்?
தமிழ் கற்பித்தல்: பெனாத்தலின் பதிவில் மிகவும் முக்கியமான கருத்து இதுதான். ஆனால் இது பேசப்படாமல் போய்விடும் என்பதே உண்மை. இன்று தமிழ் தமிழ் எனப் பேசும் எத்தனை பேருக்குத் தமிழில் தவறின்றி எழுத வருகிறது? அல்லது தவறில்லாமல் எழுத வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது? திருத்தம் சொன்னால் கூட நீ யார் சொல்ல என்றுதானே கேட்கத் தோன்றுகிறதே தவிர தவறுதான் திருத்திக் கொள்வோம் என்ற எண்ணம்தான் இருக்கிறதா?
தமிழைக் கற்றுத் தருவதில் என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது? இன்னமும் புரியாத வகையில் இலக்கணமும் மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டியததாகவும்தானே பாடங்கள் இருக்கின்றன? மற்ற மொழிகளைப் பள்ளிசாரா முறைகளில் கற்றுக்கொள்ள இருக்கும் வசதிதான் தமிழுக்கு இருக்கிறதா? கற்பிக்கும் முறையை சீரமைப்பது பற்றி பரவலாகப் பேச வேண்டும் ஆனால் வெட்டிச் சண்டைகளில் மண்டையை உடைத்துக் கொள்வதில் இருக்கும் ஆர்வம் இதில் இருப்பதில்லையே.
தமிழ் ஆர்வலர்கள், தமிழாசிரியர்கள் பலரின் உச்சரிப்பைக் கேட்கக் கவலையாகத்தான் இருக்கிறது. தமிழ் உச்சரிப்பு சார்ந்த மொழி. அதைக் கோட்டை விட்டால் எழுதும் பொழுது தவறுகள் வருவது தவிர்க்க முடியாமல் ஆகும். இதைக் குறித்து யாரேனும் பேசுகிறோமா?
ஊடகங்கள் மூலமாகவே நல்லதும் கெட்டதும் பரவும். இன்று தமிழ் ஊடகங்களின் மொழியறிவு அவ்வளவு மோசமாக இருக்கிறது. இதை முதலில் சரி செய்ய வழி அமைத்தால் தேவலாம்.
தமிழ்நாடு அரசுக்குத்தான் இந்தப் பொறுப்பு இருக்கிறது திரைப்படப் பெயர்கள் தமிழில் இருந்தால் வரிவிலக்கு போன்ற அபத்தங்களை விடுத்து அரசு தமிழ் வளர்ச்சிக்கு உண்மையாகவே நல்ல திட்டங்களைக் கொண்டு வர வேண்டும். தமிழ் வாழ்க என்று விளக்குகள் அமைப்பது மட்டும் போதாது. பள்ளிகளிலும் ஊடகங்களிலும் சீர்திருத்தம் கொண்டு வர முயற்சிகள் தேவை. நடக்குமென நம்புவோம்.

பெனாத்தலின் பதிவு - https://www.facebook.com/suresh.babu.94/posts/10224441618444340

"ஐயா வந்துட்டேனய்யா, உங்க வீடு எங்கே இருக்கு?"
"அங்கே ஒரு வீடு, ஓர் இல்லம், ஓர் அகம் ஆகியவை தெரிகின்றன அல்லவா?"
"வீடுன்னா ஓட்டுவீடு, இல்லம்னா வில்லா, அகம்னா அபார்ட்மெண்ட்தானே?, தெரியுதய்யா"
"அவற்றுள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு மகளிர் அழகுச்சாதனக்கடை இருக்கும் பாருங்கள்"
"ப்யூட்டி பார்லரா, ஃபேன்ஸி மார்ட்டாய்யா? ரெண்டும் இருக்கு."
"முதலில் சொன்னது. அதற்கருகில் ஒரு கொட்டைவடிநீர்த் தினக்கடை இருக்கும்"
"காபி டேவா? சரி. பார்த்துட்டேன். "
"அங்கே ஒரு தானியங்கிமுச்சக்கரவண்டிக்கூடம் இருக்கிறதல்லவா?"
"ஆட்டோ ஸ்டாண்டா?"
"அங்கேயே நில்லுங்கள், புலனத்தில் இருப்பிடப்புள்ளிகளை அனுப்புகிறேன்"
"வாட்சப் லொகேஷனாய்யா? இதை முதல்லேயே செஞ்சிருக்கலாமில்ல.. இதுக்கு ஒரு முழு பத்தி, என்னை யோசிக்க வச்சி, குழப்பி.."
தமிழை வளர்ப்பது என்பது இருக்கும் வார்த்தைகளை ஒழுங்காகப் புழங்குவதில் ஆரம்பிப்போம். தமிழ் கடினமான மொழி, வாத்தியார்கள் கொடூரமானவர்கள் போன்ற கற்பிதங்களை அழிப்பதில் தொடங்குவோம்.
புதிது புதிதாக யாருக்கும் எளிதில் புரிந்துவிடாத வார்த்தைகளை உருவாக்குவது அவ்வளவு கடினமில்லை, அந்த வார்த்தைகள் தமிழ்ப்பக்கம் இருந்து சிலரை "அது ஒண்ணும் அவ்ளோ ஈஸி இல்லைடா.."என்று துரத்துவதைத்தான் சாதிக்கும்.