Tuesday, June 15, 2021

மூக்குப்பொடி மகாத்மியம்


பாரா மூக்குப்பொடி போடுபவர்கள் பற்றி எழுதப் போக, அது என்னையும் தும்ம வைத்துவிட்டது. பாராவின் பதிவு இங்கே.

மூக்குப்பொடி போடுபவர்களுக்கு ஒரு அனுபவம் என்றால் பொடி போடுபவர்களுக்கு வாங்கிக் கொண்டு வருவதும் ஒரு அனுபவம்தான். என் தாத்தாவிற்கு முதல் முறை மாரடைப்பு வரும் வரை மூக்குப் பொடி போடும் வழக்கமிருந்தது. வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டும் சீட்டாடிக்கொண்டும் இருக்கும் பொழுது தாத்தாவிற்கு பொடி வேண்டும். அவர் பொடிக்காகவே சில நண்பர்கள் அவருடன் இருந்தார்கள். நான்தான் கடைக்குப் போய் அவருக்கு மூக்குப்பொடி வாங்கிக் கொண்டு வருவேன்.

அந்த பொடிக் கடை உண்மையிலேயே ஒரு பொடிக்கடைதான். கடைக்காரர் ஒருவர் மட்டும் உள்ளே இருக்கலாம். வெற்றிலை, கொட்டைப்பாக்கு, சீவல், பன்னீர்ப்புகையிலை, சுருட்டு என புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்கள் எல்லாம் அவரைச் சுற்றி இருந்தாலும் மூக்குப்பொடிதான் பிரதானம். மற்ற இடங்களில் பரவலாகக் கிடைப்பதால் அந்தக் கடையில் ஏனோ பீடி சிகரெட் பார்த்த ஞாபகமில்லை. பெரிய கண்ணாடி குடுவைகளும் பீங்கான் குடுவைகளும் இருக்கும். பல தரங்களில் பல விலைகளில் பொடி விற்பனைக்கு இருக்கும். டி ஏ எஸ் ரத்தினம் பொடி ரொம்ப பிரபலமானது. பட்டணம் பொடி என்று ஒன்றும் உண்டு. நயம் நெய்ப்பொடி என்ற பலகை ஒன்று கடைக்குள் ஆடிக்கொண்டு இருக்கும் என ஞாபகம்.
வாங்க வரும் நாம் கடைக்கு உள்ளே எல்லாம் செல்ல முடியாது. வெளியில் இருந்து அப்படியே வாங்கிக்கொண்டு வர வேண்டியதுதான். ஆனால் எப்பொழுதும் கடை வாசலில் பொடியை வாங்கி அங்கேயே மூக்கில் ஏற்றிக் கொண்டும் தும்மிக்கொண்டும் நாலு பேர் எதேனும் பேசிக்கொண்டே இருப்பார்கள். அங்கு நின்றாலே நாசியில் இந்தப் பொடியும் தும்மலும், ஒழுகும் மூக்கைத் துடைத்துக் கொள்ளும் கைக்குட்டைகளும் வேட்டி நுனிகளும் எல்லாம் கலந்து ஒரு வாசனை நாசியில் ஏறும். வாங்கும் நமக்கு அதுவே ஒரு கிறுகிறுப்பைத் தரும். இந்தக் கைக்குட்டைகளையும் வேட்டிகளையும் பார்த்தாலே தாய்மார்களுக்குக் கோவம் வரும்.
கடைக்குப் போய் வெறுமெனப் பொடி வேண்டும் என்றெல்லாம் கேட்க முடியாது. யாருக்குப் பொடி எனச் சொல்ல வேண்டும். கடைக்காரர்களுக்கும் பொடி போடுபவர்களுக்கும் ஒரு அந்நியோன்யமான உறவு உண்டு. போடுபவர்களுக்கு எந்த விதமான பொடி வேண்டும் என்பது கடைக்காரர்களுக்கு நன்றாகத் தெரியும். அதற்கேற்றபடி எந்தப் பொடியோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பொடிகளையோ கலந்து தருவார்கள். அதனால் பொடி போடுபவர்கள் மற்ற இடங்களில் எல்லாம் அவ்வளவு எளிதாக போய் வாங்கிவிட மாட்டார்கள். வெளியூர் செல்ல வேண்டுமானால் கூட வேண்டும் அளவு வாங்கிச் செல்வோரும் உண்டு.
பொடியை வாங்குவதற்குப் பிரத்யேகமான முறை ஒன்று உண்டு. சிறுவன் ஒருவன் வந்து இன்னாருக்குப் பொடி வேண்டும் எனச் சொன்ன உடன் கடைக்காரர் ஒரு பாக்கு மட்டையை எடுத்து அதை நீவி நேராக்கிக் கொள்வார். பிறகு வெகு நீளமான ஒரு உலோகக் கரண்டியை எடுத்துக் கொள்வார். கரண்டி என்ற உடன் தடவைக்கு ஐம்பது கிராம் எடுத்துப் போடக்கூடிய கரண்டு என எண்ணக்கூடாது. மிகவும் மெலிதான நீளமான கரண்டி அது. முனையில் சின்னதாக ஒரு டீஸ்பூன் போல சின்னதாக இருக்கும். அதை அந்தக் கண்ணாடி ஜாரினுள் விட்டு லேசாகக் கலக்கி தேவையான அளவு வரும் வரை அந்த கரண்டியினால் பலமுறை எடுத்து அந்த மட்டையில் போடுவார். அது ஒரு நடனத்தின் நெளிவுடன், ஒரு யோகியின் சிதறா கவனத்துடன் வெகு லாகவமாகச் செய்யக்கூடிய வேலையாகத் தெரியும். தேவை என்றால் பொடிகளை பல கண்ணாடிக் குடுவைகளில் இருந்து எடுத்து ஒரு சின்ன உரல் போன்ற ஒன்றில் கலக்கி அதன்பின் அதை பாக்கு மட்டையில் நிரப்புவதும் உண்டு. அந்த மட்டையின் ஒரு முனை மற்றொரு முனைக்குள் நுழைந்து பொடி சிந்தாமல் அழகான ஒரு செல்ப் சீலிங் மெக்கானிஸம் கொண்டதாக இருக்கும்.
இப்படி பொடியை வாங்கிக் கொண்டு வந்து தாத்தா கையில் தந்த உடன் அதை அவர் அந்த மட்டையை லேசாக உள்ளங்கையில் தட்டிக்கொண்டு, மெதுவாகப் பிரித்து ஒரு சிட்டிகை பொடியை விரல் நுனிகளில் எடுத்துக் கொண்டு, அந்த மட்டையை மீண்டும் கவனமாக மூடிவிட்டு, மூக்கின் ஒரு துவாரத்தில் கொஞ்சம் மறுதுவாரத்தில் மீதி என உறிஞ்சிக்கொண்ட சமயத்திற்கும் அதையடுத்துத் தும்மல் வரும் சமயத்திற்கும் இடையே ஆன கணப்பொழுதில் அவர் கண்டுகொள்ளும் சொர்க்கம், வாங்கி வரும் பொழுது கிடைக்கும் ஐந்து பைசா பத்து பைசா சில்லறையில் வாங்கிக் கொள்ளும் ஆரஞ்சு மிட்டாயை என் வாயில் போட்டுக் கொள்ளும் கணத்தில் எனக்கும் சித்தியாகும்.

பிகு: என்னைப் போலவே பாராவின் பதிவு லலிதாராமையும் தும்ம வைத்துவிட்டது. அவரின் பதிவு இதோ.

1 comments:

said...

> முதல் முறை மாரடைப்பு வரும் மூக்குப் பொடி போடும் வழக்கமிருந்தது

அதென்ன, "முதல் முறை மாரடைப்பு வரும் மூக்குப்பொடி" ? "வரை" முறை இல்லாமல் எழுதி விட்டீர்கள். போன பதிவில் ஒரு எழுத்துப்பிழை சுட்டிக் காட்டினேன். அதையும் திருத்தவில்லை ;-)