Friday, September 10, 2021

எளிமையாய் எழுதுவது எப்படி? - பாராவின் மாஸ்டர்கிளாஸ்!

'நோபல் பரிசு பெறும் நூல்களே ஒரு வருடத்தில் மறக்கப்படுகின்றன. இவ்வாறு குறுகிய நூல் ஆயுளுக்குக் காரணம், நவீன வாழ்க்கையில் உள்ள அவசரமும் அவலமும்தான்' என்று சுஜாதா ஒரு கட்டுரையில் எழுதி இருப்பார். இதை அவர் எழுதியது 25 வருடங்களுக்கு முன்னால். இன்று உலகம் இன்னும் வேகமாகத்தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது. நாம் எழுதுவது சுவாரசியமாக, முதல் வரியில் இருந்து சுண்டி இழுக்கக் கூடிய மொழி கொண்டு இருந்தால்தான் படிப்பவர்கள் கவனத்தைப் பெற முடியும். 


ஒரு உதாரணத்திற்கு இந்த இரண்டு வரிகளை எடுத்துக் கொள்ளுங்கள். 

சிவாஜி நல்லவர், வல்லவர். பாரா அவரது கதையை எழுத உள்ளார். 
சிவாஜி நல்லவர், வல்லவர். அவரது கதையை பாரா எழுத உள்ளார். 

முதலில் எழுதியதைப் படித்தால் சிவாஜி நல்லவராகவே இருக்கட்டும் ஆனால் பாரா தன் கதையை எழுதுவதற்கும் சிவாஜிக்கும் என்ன தொடர்பு என ஒரு குழப்பம் வருகிறது இல்லையா? ஆனால் இரண்டாவதாக எழுதி இருப்பதில் பாரா எழுத இருப்பது சிவாஜியின்  கதையை என்ற தெளிவு இருக்கிறது. இந்தத் தெளிவு இல்லை என்றால் 'போடா, என்னவோ எழுதறான் ஒரு மண்ணும் புரியலை' என்று படிப்பவர்கள் கடந்து செல்லக் கூடிய வாய்ப்பு அதிகம். சுவாரசியம் குறையாமல் எழுத மொழியின் சாத்தியங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள், சொல்ல வருவதை சுருக்கமாகச் சொல்லத் தெரியாமல் வளவளவென்று எழுதுதல், வரிக்கு வரி தொடர்பில்லாமல் எழுதுதல், பொருத்தமாகப் பத்தி பிரித்த வடிவம் இல்லாமல் எழுதுதல், தகவற்பிழைகள் என்று சறுக்கக் கூடிய இடங்கள் ஏராளம். இலக்கியம் படைப்பவர்களும் தொழில் முறை எழுத்தாளர்களும் இந்தப் பிரச்னைகளோடு மாரடிக்கட்டும். நான் சும்மா இணையத்தில் எழுதப் போகிறேன் எப்படி எழுதினாலும் என்ன என்று இருக்க முடியாது. முதல் இரண்டு வரிகளில் படிப்பவர்களின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை என்றால் அவர்கள் தாண்டிச் செல்வது மட்டுமில்லாமல் எழுதத் தெரியாது என்ற முத்திரையையும் குத்தி இனி எழுதுவது எதையுமே படிக்க மாட்டார்கள். நான் எழுத வேண்டும், நான் எழுதுவதைப் பலரும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் சரியாக எழுதுவது எப்படி என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

இணையத்திலும் அச்சிலும் வெளியாகும் எழுத்துகளைத் தொடர்ந்து படிக்கிறேன். சொல்ல கருத்துகளிருந்தும் அவற்றைச் சரியாகச் சொல்லத் தெரிந்தவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அவர்களின் எழுத்துகளைப் பண்படுத்த வேண்டிய எடிட்டர் என்பவர் இருப்பதே இல்லை. ஆகையால் எழுதுபவர்களுக்கு தங்களை மேம்படுத்திக் கொள்வது எப்படி என்று சொல்ல ஆளில்லை. முட்டி மோதி சுயமாகக் கற்றுக்கொள்வது என்பது எல்லாருக்கும் கைவருவதில்லை. அதனால் ஒரு தேக்கம் ஏற்பட்டு விடுகிறது. 

எல்லாராலும் எழுத முடியுமா? அது ஒரு கலை அல்லவா? அதற்குக் கடவுளின் அருள் இருக்க வேண்டாமா? என்ற கேள்விகள் எழலாம். மொழி ஒரு கருவிதான். அதனைச் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்து கொண்டால் பரிசு பெறும் எழுத்தாளராக இல்லை என்றாலும் படிக்கக் கூடிய எழுத்தாளர் ஆகி விடலாம் என்கிறார் எழுத்தாளர் பாரா. 

இவ்வளவு நேரம் நீங்கள் இந்தக் கட்டுரையை படித்தீர்கள் என்றால் அவர் சொல்வது உண்மைதான். அவரின் சில பாலபாடங்களைக் கற்றுக் கொண்டதினால் மட்டுமே என்னாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. இதைச் சொல்ல ஒரு சிறு கூட்டமே இருக்கிறது. தனிப்பட்ட முறையில் சிலருக்கு அவர் சொல்லித் தந்ததை முறையான எழுத்துப் பயிற்சி வகுப்புகளாக செய்யவிருக்கும் அறிவிப்பினை இன்று வெளியிட்டிருக்கிறார். 

இது வரை தமிழில் இப்படிக் கற்றுக் கொள்ள வழியே இல்லாமல் இருந்தது. இன்று பாராவின் முயற்சியால் சாத்தியமாகி இருக்கிறது. மிக அவசியமான இதனை முன்னெடுத்ததற்கு பாராவிற்கு என் நன்றி.எழுத ஆர்வம் கொண்ட அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்த்துகள்! 

https://writeroom.bukpet.com/ என்ற இணைய தளத்தில் இவ்வகுப்புகள் குறித்த விபரங்களைப் பார்க்கலாம். 

0 comments: