Thursday, November 10, 2022

கொத்ஸு பரோட்டா கொசுவர்த்தி

இன்றைக்குத்தான் நான் அமெரிக்கப் பிரஜை. அடிப்படையில் என்றுமே தமிழன் என்பதில் எனக்கு ஐயம் ஏதும் இல்லை. நீ தமிழனா எனக் கேட்பவர்கள் என்றைக்குமே உண்டு. அந்த அரசியல் வேறு. அது போகட்டும். நான் தமிழன்தான் என்பதற்கு ஒரு முக்கிய ஆதாரம் எனக்கும் புரோட்டா சால்னாவுக்குமான உறவு. 

"எல என்னத்தலே புரோட்டா மயிறுன்னு வெளியூர்க்காரன் மாதிரி பேசுத. நம்ம ஆட்கள் மாதிரி ரொட்டி சால்னான்னு சொல்லுல" என அன்பாய் ஏசுவார்கள் என் ஊர்க்காரத் தோழர்கள். 

எப்பொழுது ரொட்டி சால்னா அறிமுகம் ஆனது என ஞாபகமே இல்லை. ஆனால் சிறுவயதிலேயே அதன் சுவைக்கு மயங்கி விட்டேன் என்பதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லை. ரொட்டி சால்னா கடைக்கு எல்லாம் செல்ல அனுமதி கிடைக்காது. ஆனாலும் அதன் சுவை இழுக்கும். எப்படியாவது வீட்டுக்குத் தெரியாமல் போய் சாப்பிட்டு விடுவது ஒரு வழக்கமானது. எல்கேஜியில் தொடங்கி இன்று வரை நண்பனாகத் தொடரும் கைலாஷ் இதில் என் கூட்டாளி.  


கல்லிடைக்குறிச்சி மெயின் ரோட்டில் இருக்கும் மீரானியா புரோட்டா ஸ்டால் என்ற கடைதான் நமக்கு வாடிக்கை. கடை முகப்பில் மட்டும்தான் புரோட்டா ஆனால் புழக்கத்தில் எல்லாமே ரொட்டிதான். அங்கு ஒரு கூடுதல் வசதி என்னவென்றால் கடையின் ஒரு பாதியில் ஒரு தடுப்புப் போடப்பட்டு இருக்கும் அதன் பின் அமர்ந்தால் சாலையில் போய் வருபவர் கண்ணில் படமாட்டோம். அதனால் மாட்டிக் கொள்வோமோ என்ற கவலை கிஞ்சித்தும் இல்லாமல் உண்ணலாம். கடை வாயிலில் புரோட்டா மாஸ்டர் தன் நோஞ்சான் உடலில் இருக்கும் சக்தி எல்லாம் சேர்த்து மாவு பிசைவதும் ரொட்டி இடுவதும் அதை கல்லில் போட்டு லாகவமாய் எடுப்பதுமாக இரு கை போதாமல் இருப்பார். 

வாழை இலையைப் போட்டு அதில் ரொட்டியை அடுக்கி, இரு கைகளாலும் அவற்றை தட்டி பின் சிறு துண்டுகளாகப் பிய்த்துப் போட்டு அவற்றின் மேல் கொதிக்கக் கொதிக்க சால்னாவை ஊற்றும் பொழுது எழும் வாசம் இல்லாத பசியை எல்லாம் தூண்டி விடும். ரொட்டி சால்னாவுடன் தரப்படும், கொஞ்சம் தயிரில் ஏராளமாக தண்ணீர் விட்டுச் செய்த வெங்காயப் பச்சடி தேவாமிர்தமாய் இருக்கும். எதோ திரைப்படத்தில் வரும் காட்சியைப் போல எண்ணிக்கை எல்லாம் வைத்துக் கொள்ளாமல் போதும் என்ற அளவு போட்டுக் கொண்டே இருப்பார்கள். காசே இல்லை என்றாலும் கணக்கில் எழுதிக் கொள்ளச் சொல்லிவிட்டு வந்துவிடலாம். கையில் பணம் வரும் பொழுது பாயிடம் தந்து பைசல் செய்து கொள்வோம். 

கொஞ்சம் வயதாக அம்பை, விகேபுரம், திருநெல்வேலி, தென்காசி என நல்ல ரொட்டிக்கான தேடுதல் விரிவடைந்து கொண்டே போனது. குற்றாலத்தில் கண்கள் இரண்டும் சிவக்கும் வரை அருவியில் ஆட்டம் போட்டுவிட்டு அடங்காத பசியோடு பார்டர் கடைக்குச் சென்று காணாதது கண்டாற்போல் உண்ட ரொட்டி சால்னாவுக்கு ஈடான சுவை இதுவரை கண்டதில்லை. 

சென்னை வந்தபின் நல்ல ரொட்டி சால்னா என்பது ஊர்பக்கம் போனால்தான் என்றானது. திருமணம் முடிந்து மனைவியோடு ஊருக்குப் போன பொழுது அல்வா, காராச்சேவு எல்லாம் வாங்கித் தராமல் நான் வாங்கித் தந்தது எங்கள் ஊரின் ரொட்டி சால்னாதான். அப்பொழுதும் தங்கியிருந்த பெரியம்மா வீட்டில் யாருக்கும் தெரியாமல்தான் சாப்பிட்டோம். 

அமெரிக்கா வந்த பின் தென்னிந்திய உணவகங்கள் சென்றால் முதலில் சொல்வது புரோட்டாதான். சால்னா பற்றிய அறிமுகமே இல்லாத உணவகங்கள் தொட்டுக்கொள்ள குருமா தருவார்கள். சமயத்தில் அதையும் வேண்டாம் எனச் சொல்லி வெங்காயப் பச்சடி, சாரி, ஆனியன் ரெய்த்தாவுடன் புரோட்டாவை உள்ளே தள்ளிய நாட்களும் உண்டு. நியூயார்க் அஞ்சப்பர் செட்டிநாடு உணவகத்தில் சுமாரான புரோட்டா கிடைத்துக் கொண்டிருந்தது. இப்பொழுதும் கிடைக்கிறதா தெரியவில்லை. 

ஆஸ்டின் வந்த பின்பு நிலவரம் கொஞ்சம் மாறியது. மதுரை குமார் மெஸ் இங்கே கிளை ஒன்று திறந்தார்கள். அதில்தான் சரியான ரொட்டி சால்னா கிடைத்து வந்தது. சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் அங்கு செல்வது வாடிக்கையானது. பெருந்தொற்றுக்குப் பின் முன்பிருந்தது போல் இல்லை என்பது வருத்தமே. 

சமையல் செய்ய மிகுந்த ஆர்வம் உண்டு என்றாலும் ஏனோ இந்த புரோட்டாவை மட்டும் செய்து பார்க்க கொஞ்சம் தயக்கம்தான். கூடிய சீக்கிரத்தில் செய்து பார்க்க வேண்டும். பதிவுலகின் ஆதி காலத்தில் நான் எழுதிய கொத்ஸு பரோட்டா பதிவிலும் கடையில் வாங்கிய புரோட்டாதான். இன்று இரவுணவுக்கும் கடையில் வாங்கிய புரோட்டாதான். 

ஆனால் சால்னா நான் செய்தது. அன்று சாப்பிட்ட மீரானியா சால்னாவுக்கு எந்த வித குறைச்சலும் இல்லாத வகையில் நல்லபடியாகவே இருந்தது. வீட்டில் என்னைப் போன்றே ரொட்டிக்கு ரசிகர் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த என் பெண். இன்றிரவு புரோட்டாவை சூடு பண்ணி தட்டில் வைத்துத் தரும் பொழுது அவள் சொன்னது. "பிச்சுப் போடுப்பா!" 


மனைவி ஊரில் இல்லை. இருந்தால், ”அப்படியே அப்பனைக் கொண்டு வந்திருக்கா” எனக் குற்றச்சாட்டாகத்தான் சொல்லியிருப்பாள். நான் என்னவோ பெருமையாகத்தான் எடுத்துக்கொண்டிருப்பேன். 

Tuesday, November 08, 2022

இங்கிவளை யான் பெறவே...

தோழர் நசீமாவின் இந்தப் பதிவைப் பார்த்த உடன், ஒரு சிறுகதைக்கான களனாக இருக்கிறதே, இதை இப்படி ஒரு சாதாரணப் பதிவாக போட்டுவிட்டார்களே என்று தோன்றியது. பொதுவாகப் புனைவே எழுதாத நாம் இதனை ஒரு சிறுகதையாக எழுதிப் பார்த்தால் என்ன என்றும் ஓர் எண்ணம். பாராவின் எழுதுகலைப் பயிலரங்கத்தில் ஓர் உண்மைச் சம்பவத்தை எடுத்துக் கொண்டு அதில் இல்லாத ஆனா அனைவரும் உணரக் கூடிய உணர்ச்சிகளை சேர்த்தால் அது பொதுவாக ரசிக்கப்படக்கூடிய கதை ஆகிவிடும் எனச் சொன்னதும் ஞாபகத்தில் இருந்தது. சரி எழுதித்தான் பார்ப்போமே என எழுதிய கதை இது.  


இங்கிவளை யான் பெறவே... 

இருப்பே கொள்ளவில்லை. காலையில் அப்படிக் கத்தி இருக்கக்கூடாதுதான். 

பாவம் குழந்தை. ஊர் மாறி வந்ததில் இருந்தே ஒரு மாதிரிதான் இருக்கிறாள். பழைய நண்பர்கள் யாரும் இல்லை. புது பள்ளி. பதின்ம வயதின் ஆரம்பம். அதோடு வரும் உடல் மன உபாதைகள் என ஏகப்பட்ட மாற்றங்கள். புதிதாக நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு இப்பொழுதுதான் ஒரு நிலைக்கு  வருகிறாள். அவர்களோடு போகப் போகும் முதல் சுற்றுலா என்பதால் கொஞ்சம் அதிகமாகவே ஆர்வக்கோளாறு. கொண்டு போக வேண்டிய சாமான்களை எடுத்து வைத்துக் கொள்வதும், போட்டு கொள்ள வேண்டிய உடையைத் தேர்ந்தெடுத்து, அதனை மாற்றி வேறொன்றை எடுத்துக் கொள்வதுமாக ஏக கலாட்டா. 

எனக்கும்தான் புதிய இடம். அவர் அலுவலகம் தந்திருக்கும் இந்த வாடகை வீடு கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. வெளிச்சமே வராத சின்ன அடுப்பறை.  திரும்பக்கூட இடம் இல்லாத அளவுதான். அதில் நுழையும் பொழுதே எரிச்சலும் ஆத்திரமும்தான் வருகிறது, பேசக்கூட யாரும் இல்லை. போதாகுறைக்கு மொழிப்பிரச்னை வேற. தனியாக வெளியில் கூடப் போக முடியாத ஊர். இருந்தாலும் அந்தக் கோபத்தை எல்லாம் குழந்தையிடம் காட்டி இருக்க வேண்டாம்தான். 

என்ன செய்ய. எழுந்ததில் இருந்து தலைவலி. அவருக்கு நேரத்தில் சாப்பாடு  தயாராக இருக்க வேண்டும். இரண்டு நிமிடம் தாமதமானாலும் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். அதைச் செய்துவிட்டு இவள் பள்ளிக்குப் போவதற்காக சாப்பாடு கட்ட வேண்டும். நிம்மதியாக ஒரு காப்பி குடிக்கக் கூட நேரமில்லை. காப்பிப் பொடி டப்பாவை எடுக்கும் பொழுதே கை வழுக்கி கீழே போட்டாகிவிட்டது. சிந்திய பொடியை துடைத்து கையெல்லாம் ஒரே காப்பிப்பொடி வாசனை. வீட்டில் இருக்கும் இரண்டு பேரால் ஒரு பிரயோஜனமில்லை. ஒற்றை ஆளாய் எல்லாவற்றையும் செய்யும் பொழுது முகம் துடைக்கக் கூட நேரமில்லை.

சுற்றுலாவுக்காகத் தேர்ந்தெடுத்த ஆடையைப் போட்டுக் கொண்டு வந்தவளைப் பார்த்தால் தேவதை வந்த மாதிரி இருந்தது, குழந்தை முகத்தில்தான் அப்படி ஒரு சிரிப்பைப் பார்த்து எத்தனை நாளாகிவிட்டது. சாப்பிடப் போனவளை அப்படியே கட்டிப் பிடித்து ஒரு முத்தம் தர வேண்டும் போல இருந்தது, தந்தேன். 

"அம்மா" என்று ஒரு அலறல். அவள் ஆசையாய் தேடி எடுத்துப் போட்டுக் கொண்ட சட்டை மேல் ஒரு நீளக் கோடாகக் காப்பிப் பொடிக் கறை. முழங்கையில் சிந்தி இருந்ததைப் பார்க்கவில்லை.  ஒரு அலசு அலசிக் காயப் போட்டால் அவள் கிளம்புவதற்குள் காய்ந்திருக்கும். அந்தச் சட்டையையே போட்டுக் கொண்டு போயிருக்கலாம். ஆனால் "நீ எப்பவுமே இப்படித்தான். நான் என்ன செஞ்சாலும் அதைக் கெடுக்கறதே உன் வேலை." அழுகையும் ஆத்திரமும் பீறிட்டுச் சத்தம் போடத் தொடங்கினாள். நானாவது விட்டுத் தந்திருக்கலாம். தரவில்லை. அவளும் பேச நானும் பேச வீடு போர்க்களமானது. 

கையில் கிடைத்த சட்டையைப் போட்டுக்கொண்டு, மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டுதான் போனாள். கட்டிய சாப்பாட்டைக் கூட எடுத்துக் கொள்ளவில்லை. நல்ல வேளை, செலவழிக்க என அப்பாவிடம் நேற்றே இருபது திர்ஹாம் வாங்கி வைத்துக் கொண்டிருந்தாள். பாவம் குழந்தை. சாப்பிட்டாளோ இல்லையோ. அதையே நினைத்து எனக்குச் சாப்பாட்டில் கை வைக்ககூட முடியவில்லை. நண்பர்களைப் பார்த்த உடனே கோபம் எல்லாம் போய் சுற்றுலாவை  நல்லபடியாக அனுபவித்து இருக்க வேண்டுமே என்றுதான் நாள் முழுவதும் என் நினைப்பு. 

மாலை நாலு மணி. வாசல் மணி அடித்தது. 'அம்மா' என உற்சாகமாகக் கத்திக் கொண்டே நுழைந்தவளைப் பார்க்கும் பொழுதே ஒரு நிம்மதி. நல்ல வேளை சுற்றுலா நன்றாகத்தான் இருந்தது போல. "சாப்பிட்டயாடி?" என்றேன். "ஒரு ஷவர்மா கடைக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. நல்லா இருந்ததும்மா. அதுக்கு அப்புறம் நாங்க ஒரு ஒட்டகப் பண்ணை போனோம்மா. அதில் ஒட்டகப் பாலில் டீ போட்டுக் குடுத்தாங்க. அதையும் வாங்கிக் குடிச்சேன். அப்போ அங்க ஒண்ணு பார்த்தேன்மா." 

காலையில் வீசிய புயலின் சுவடே இல்லாமல் அடைமழை பெய்வது போல நடந்ததை எல்லாம் சொல்ல தொடங்கினாள். 

"கண்ணை மூடு. உனக்கு ஒண்ணு வாங்கிக்கிட்டு வந்திருக்கேன்." 

கண்ணை மூடினேன். முகத்திற்குப் பக்கத்தில் எதையோ கொண்டு வந்தாள். வெனிலாவும் பாலும் கலந்த ஒரு ஐஸ்க்ரீம் வாசனை. "கண்ணைத் திறந்து பாரும்மா" என்ற அவள் உத்தரவு கிடைத்தது. திறந்தேன், பார்த்தேன். 

"ஒட்டகப் பாலில் பண்ணின சோப்பும்மா. அதை அழகா இப்படி ஒரு கயிற்றில் கட்டி இருங்காங்க பாரு. இதை அப்படியே பாத்திரம் கழுவுற இடத்துக்கு மேல கட்டினால் கை கழுவ வசதியா இருக்கும். இடத்தையும் அடைச்சுக்காது. எப்போ பாரு எதையாவது கொட்டிக்கிட்டே இருக்கியே உனக்கு சரியா இருக்கும்ன்னு வாங்கிக்கிட்டு வந்தேன்." 

அழுக்காகுமோ எனக் கவலை எல்லாம் நான் படவில்லை. அவள் பட்டாலும் பரவாயில்லை என்று வாரி அணைத்துக் கொண்டேன். 

Saturday, October 29, 2022

கையிரண்டு போதாது காண்!

இன்று ஒரு சமயச் சொற்பொழிவு கேட்டேன். பேச்சாளர் திருச்செந்தூர் முருகனின் பெருமைகளைப் பேசினார். அந்த உரையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பற்றியும் சொன்னார். கவிமணி எக்ஸிமா என்ற தோல்வியாதியினால் அவதிப்பட்டார் எனவும், அந்த நோயின் காரணமாக அவரது உடம்பில் சிரங்குக் கட்டிகள் வந்ததால் அவற்றை அளித்த முருகனுக்கு சிரங்கப்பராயன் எனச் சிறப்புப் பட்டமளித்து வெண்பா எழுதினார் என்றும் குறிப்பிட்டார். 

அந்த வெண்பாவைத் தேடிப் படித்தேன். தனக்கு வந்த சிரங்கு பற்றி நகைச்சுவை மேலிட நான்கு பாடல்களை எழுதி இருக்கிறார் கவிமணி. 
உண்ட மருந்தாலும் உடமுழு தும்பூசிக்
கொண்ட மருந்தாலும் குணமிலையே - மண்டு
சிரங்கப்ப ராயா சினம்மாறிக் கொஞ்சம்
இரங்கப்பா ஏழை எனக்கு 

வாரம் முடங்காமல் வைப்பெண்ணெய் தேய்த்திட்டேன்
சார மருந்தெல்லாம் சாப்பிட்டேன் - வீரம்
குறைந்திடக் காணேன்; குமரா! சிரங்கு
மறைந்திடத் தாநீ வரம்
அவர் உடலில் வந்த சிரங்குக் கட்டிகள் வெள்ளை, சிவப்பு, இளஞ்சிவப்பு என பல நிறங்களில் இருந்ததாம். அதை அவர் முருகன் தந்த செல்வமாகக் கருதி எழுதிய வெண்பா 
முத்து பவழம் முழுவயிரம் மாணிக்கம்
பத்தியொளி வீசு பதக்கமெலாம் - சித்தன்
சிரங்கப்ப ராயன் சிறியேன் எனக்குத்
தரங்கண்டு தந்த தனம் 
அரிப்பு தாங்காமல் அவதிப்பட்ட அவர், சொரிந்து கொள்ள இரண்டு கைகள் போதவில்லையே என பன்னிருகையனைப் பார்த்து எழுதிய வெண்பா 
செந்தில் குமரா திருமால் மருகாஎன்
சிந்தை குடிகொண்ட தேசிகா - நொந்தஎன்
மெய்யிற் சிரங்கை விடியுமட் டும்சொரியக்
கையிரண்டு போதாது காண்

உடல்நிலை வருத்தும் பொழுதும் அந்த வேதனையை வெண்பாவாக எழுதினார் என்றால் அவருக்குத் தமிழ் மேல் எவ்வளவு ஆர்வம் இருந்திருக்க வேண்டும். அதிலும் எத்தனை அழகான ஓசை. இப்படி எல்லாம் வெண்பா எழுத எவ்வளவு தமிழ்ப்புலமை வேண்டும். 

போகட்டும். சொல்ல வந்ததைச் சொல்கிறேன். 

இந்த கடைசி வெண்பாவைப் படித்த பொழுது எனக்கு என் அம்மா ஞாபகம் வந்துவிட்டது. அவள் இல்லை, இருப்பவை இந்த ஞாபகங்கள்தானே. 

    
அம்மாவிற்குப் பிடிக்காத வேலைகளை நான் செய்யும் பொழுது, குறிப்பாக இளவயதுக் குறும்புகளையும் அசட்டுத்தனங்களையும் பார்த்து, "பெத்தேனே உன்னை. பெத்த வயித்தில் அடிச்சுக்க ரெண்டு கை போறாது' என்பாள். இந்த கையிரண்டு போதாது காண் ஈற்றடி எனக்கு அவள் சொல்லும் அடிச்சுக்க ரெண்டு கை போறாது என்பதைத்தான் ஞாபகப்படுத்தியது. 

சரி, அதையே வெண்பாவாகவே எழுதி வைப்போமே என்று இதை எழுதினேன். 
பண்ணும் படுத்தலால், பெத்தேனே போதுமென,
மண்ணில் எனைப்பெற்ற மாதரசி தான்சொல்வாள்
மெய்யில் அடித்துன்னை மெச்சியே கொண்டாடக்
கையிரண்டு போதாது காண்!
இருந்து இதைப் படித்திருந்தால், இதுக்கெல்லாமா வெண்பா எழுதுவாங்க, பெத்தேனே உன்னை என்றிருப்பாளே என்னவோ.

Thursday, October 13, 2022

When a fanboy got his fill!

T.M. Krishna is touring the US and is accompanied by Akkarai Subhalakshmi on the violin and Praveen Sparsh on the Mrudangam, in his concerts. Austin based ICMCA had organized a concert of his in the Bates Recital hall in University of Texas campus, on Oct 08, 2022. Bates Hall is one of the best places for a concert in Austin because of its fine acoustics and for the grand backdrop their organ provides.

One thing you know is that you do not expect anything 'normal' in any concert of T.M. Krishna. The stage was set for his style of a concert with Praveen taking the center stage and TMK and Akkarai sitting either side of him. 


When the concert started with Praveen kicking it off and Akkarai joining him playing Kharaharapriya, before Krishna even made an entry, you knew it was going to be something different. The first song was a leisurely rendition of Janakipathe. It was a pleasure to see how the trio worked together as a team, encouraging each other and giving a nudge when needed to make the canvas bigger. Their experience playing together showed in the way each one anticipated the other and responded. It was a grand start. 

Krishna started the next song with a raga alapanai of Mohanam. Given that the first piece was a popular song and the way he handled that song, I was expecting him to sing the song, 'Sarveshwara' by Vedanayagam Sasthriar. But to my great surprise and to my wife's even greater satisfaction, he sang the evergreen 'Kapali'! That was two classic hits one after the other and made me wonder if there would be a hat trick or if he would go the other way. 

A short and sweet Khamboji raga alapana, that had the audience in raptures, set the mood for a magnificient 'Ma Janaki'. His singing was resplendent with intricate embellishments. When TMK started singing the swarams like a burst of firecrackers, I was reminded of the great Madurai Mani Iyer rendering this magnum opus in his own inimitable way. The brisk pace in which this song was rendered was very unlike TMK of recent times. 

The next song set that record right. It was a very mellifluous Hamir Kalyani. If the previous song was a fast and furious river that tumbled down a mountain, this was a serene, majestic river flowing through the plains. The song he chose was 'Venkata Shaila Vihara'. I had listened to this song in another recent concert of his where he had actually started the concert this song and was amazed how sublime it was. This time around it was even better. 

Even he must have felt good because after he finished the song, he continued to sing Hamir Kalyani as some phrase seem to have caught his fancy. After a few minutes, Akkarai just leaned over and told him to sing something else and her recommendation was 'Jambupathe' in Yamuna Kalyani. That helped retain the mood he was in and this was the best I have ever listened to him sing this song. When he sang 'Ambudhi Ganga Kaveri Yamuna', something just broke inside me. It made me so emotional that I was unabashedly shedding tears. I remained that way till the end of the concert and much much later. (That is one reason, this post was not written right after the concert.) 


TMK asked Akkarai to play a Bhairavi alapanai and she responded with an evocative rendering. The song that he chose to sing was 'Nara Malam Allalama'. This is a song penned by author and poet Perumal Murugan about the manual scavenging which is still a practice in India. I have found this song to be a stark and powerful admonishment to a society that still accepts this as a way of life. TMK must have felt the same way as he has tuned this song in one of the grandest ragams in Karnatic music. The way he sang this left the audience mesmerized. 

'Pranatharthiharam' in Chenjurutti, is a beautiful song composed by Mysore Vasudevacharya and somehow I feel that it is not sung enough today. I had requested TMK to sing this song in this concert and he obliged. He preceded the song with the shlokam from Thiruvachakam. 'Pullagi Poodagi'. He brought out the beauty and surprised me by singing elaborate swarams too. My special thanks to him for singing this song. Praveen played a pleasing thani to make this song memorable. 

To inject some variety, TMK sang the song 'Saaware Aee Jaiyo', popularized by Pandit Kumar Gandharva. A brief Thanam in Ragam Bilahari with the Javali 'Paripolavera' followed it. The next song was Baaro Krishnaiah in Maand rendered with usual aplomb. Once again he was enjoying himself so much that he continued with another song in the same raga - 'Suthanthiram Vendum' by Perumal Murugan. The appropriateness of the song brought a smile to the team performing and the audience alike. 

It was almost three hours and late in the evening but the crowd listening did not budge from their seats. That even elderly people remained seated showed how much they enjoyed the concert. The team was in a zone and kept asking the organizers if they can sing more and more. TMK sang a shlokam 'Hemantha Kaale' on Jesus Christ and 'Allavai Naam Thozhudhal' in Behaag as his final piece. On conclusion, the audience gave him a standing applause. 


But our man was not done yet. He requested permission to sing one more song and sang the Rabindranath Tagore song 'Mamo Chitte' to end the evening. But for the lateness of the evening, he would have sung a lot more and the audience would have sat and listened to him as well. 

I should praise both Akkarai Subhalakshmi and Praveen for their wonderful support. They were very sensitive to how TMK was singing and provided the right amount of support with Praveen even pausing many times letting the other two weave their magical spells. Thanmayee and Madhav, both students of TMK, provided support on the Tanpura. Another special mention is for the audio team in the auditorium that got the perfect balance and ensured it remained that way throughout the concert. 


If I have one grouse, it is that there should have been an additional percussion accompaniment, be it a Ghatam or Kanjira. It would have added another dimension that went missing. And of course, that the wait for the next concert would be a couple of years. I shall reminisce this concert till then.

Thank you Krishna and the team!

Sunday, October 02, 2022

ராஜா இல்லாத ராஜாராணிக் கதை!

பொன்னியின் செல்வன் முதல் பாகம் பார்த்தாகிவிட்டது. 

படம் பார்ப்பதற்கு முன் சில விஷயங்களில் உறுதியாக இருந்தேன். 
  • முன்னோட்டங்கள், பாடல் காட்சிகள் என எதையும் பார்க்கப் போவதில்லை. 
  • எனக்கு முன் பார்த்தவர்கள் எழுதிய விமரிசனங்கள் எதையும் படிக்கப் போவதில்லை. 
  • பல முறை படித்திருந்தாலும் நாளாகி விட்டதால் அத்தனை காட்சிகளும் விபரங்களும் ஞாபகத்தில் இல்லை. ஆனாலும் கையில் புத்தகம் இருந்த பொழுதும் படிக்கப் போவதில்லை. 
  • புத்தகமும் திரைப்படமும் வேறு வேறு விதமான ஊடகங்கள் அதனால் புத்தகத்தில் இருக்கும் அனைத்தும் படத்தில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப் போவதில்லை.
  • படக்குழுவினரின் பழைய படைப்புகளால் சில கவலைகள் இருந்தாலும் எந்த வித முன்முடிவோடும் படம் பார்க்கப் போவதில்லை.
படம் பார்க்கும் வரையில் இவற்றை பெருமளவில் கடைப்பிடிக்கவே செய்தேன். இன்று படமும் பார்த்தாகிவிட்டது. 

இவ்வளவு பெரிய கதைக்களன். அதுவும் பலரிடம் போய்ச் சேர்ந்திருக்கும் கதை. ஐந்து பாகங்களில், ஏகப்பட்ட விவரணைகளோடு எழுதப்பட்ட கதை. இதில் பாதியை திரைப்படத்தின் முதல் பாகத்தில் சுருக்கித் தருவதில் வெற்றி பெற்றுதான் இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். 


மூலக்கதையில் இருந்து விலகவில்லை. அதை திரைப்படமாக வழங்க எவ்வளவு சுருக்க வேண்டுமோ அவ்வளவு சுருக்கி இருக்கிறார். ஆசான் ஜெயமோகனின் துணை இதற்குப் பெரும்பலமாக இருந்திருக்கும். பாந்தமான நடிகர் தேர்வு. அழகாக படம் பிடித்திருக்கும் ரவிவர்மனின் திறமை. நம் மனத்தில் விரிந்திருக்கும் பிரம்மாண்டத்தைத் திரையில் கொண்டு வர உதவி இருக்கும் கலை இயக்குநர் தோட்டாதரணி என சிறப்பாக அமைந்திருக்கும் கூட்டணி. பாதிக் கதையை இப்படிக் கொண்டு சென்றிருக்கிறார்களே, அடுத்த பாகம் எப்படி இருக்குமோ எனப் பெரிய எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறார்கள். 

நான் அதிகம் திரைப்படம் பார்ப்பவனல்ல. அதுவும் திரையரங்கு சென்று பார்ப்பது என்பது வெகுவாக குறைந்து போய்விட்ட நேரத்தில், இந்தப் படம் ஒரு நல்ல மாற்றாகத்தான் அமைந்திருக்கிறது. சுருக்க வேண்டிய கட்டாயம் என்றாலும் ரொம்பவே சுருக்கி விட்டாற் போல் எனக்குத் தோன்றியது. அழுத்தமான காட்சிகள் போதுமான அளவிற்கு இல்லை. அருள்மொழி வர்மனுக்கு (அருண்மொழி ஆனது ஏனோ) யானைகளுடனான உறவு, பூங்குழலியுடன் பொன்னியின் செல்வன் படகில் சென்றதை எல்லாம் போகிற போக்கில் ஒரு வசனத்தில் சொல்லி இருப்பது ஒரு வித ஒட்டுதல் இல்லாமல் செய்து விட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது. 

படத்தில் எல்லாரும் செந்தமிழில்தான் பேசுகிறார்கள் ஆனால் அது உறுத்தலாகவே இல்லை. பார்ப்பவர்களுக்குப் புரியாது என பேச்சுத்தமிழில் வசனத்தை அமைத்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாதது கல்கிக்குச் செய்த மரியாதையாகத்தான் நினைக்கிறேன். அதனால் பெரிய பிரச்னை ஒன்றுமில்லை. கொஞ்சம் நீளம் அதிகமென்றாலும் தொய்வில்லாமல் கொண்டு சென்றிருப்பதால் சலிப்பின்றி பார்க்க முடிந்தது. 

File:Ponniyin Selvan I.jpg

நடிகர்களில் ஜெயராம், ஜெயம் ரவி, த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகிய நால்வரின் நடிப்பு குறிப்பிட்டுச் சொல்லும்படி இருந்தது. அந்தக்காலப் பேரழகி ஐஸ்வர்யா இன்னும் நினைவில் இருப்பதால் இப்படிப் பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது. சரத்குமார் எதோ வந்து போவது போல் இருந்தார். எனக்கென்னவோ அவரிடத்தில் நாசர் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்றே தோன்றியது. என்ன காரணத்தினாலோ இத்தனை நட்சத்திரங்கள் இருக்கும் படத்தில் அவருக்கு ஒரு கௌரவ வேடம்தான் அமைந்தது. விக்ரமின் நடிப்பு இயல்பாக இருந்தாலும் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமில்லை. செந்தமிழில் பேசும் பொழுது உச்சரிப்பு சரியாக இல்லை என்றால் கடுப்பினைத்தான் கிளப்புகிறது. அதில் மேலும் கவனமெடுத்திருக்கலாம். அதே மாதிரி எழுத்துரு. என்னமோ பாதி மலையாள எழுத்துகளை வைத்து எழுதின மாதிரி ஏன் அப்படி எனத் தெரியவில்லை. அதையும் இன்னும் நன்றாகச் செய்திருக்கலாம். 

சில காட்சிகளில் அதிலும் முக்கியமாக சண்டைக்காட்சிகளில் மேற்கத்திய நெடுந்தொடர்கள் Vikings, Game of Thrones போன்றவற்றின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அது படத்தின் தமிழ்த்தன்மையை கெடுத்துவிட்டாற்போல் இருந்தது. ஒரு வேளை அது போன்ற தொடர்களை நான் அதிகம் பார்த்ததால் எனக்கு மட்டும்தான் அப்படித் தோன்றியதோ என்னவோ. தெரியவில்லை. 

கதை தெரியாதவர்களுக்கு யார் யாரோடு சண்டை போடுகிறார்கள், ஏன் சண்டை போடுகிறார்கள், யார் நல்லவர், யார் கெட்டவர், பொன்னியின் செல்வன் என்பது திரைப்படத்தின் பெயராக இருந்தாலும் யார் கதாநாயகன் என்பதெல்லாம் கொஞ்சம் குழப்பமாகத்தான் இருந்திருக்கும். ஆனால் வில்லன் யாரென்பதில் எனக்குக் குழப்பமே இல்லை. அது ஏ ஆர் ரஹ்மான் தான்! 

கதறலான இசை, சூழ்நிலைக்குச் சற்றும் பொருத்தமில்லாத இசைக்கோவை, இந்துஸ்தானி இசைத்துணுக்குகள், கதை போக்குக்கும் கதைக்களனுக்கும் சம்பந்தமில்லாத பாடல்கள், அதிலும் அவரின் பழைய பாடல்களையே நினைவுபடுத்தும் இசை என படத்தின் கரும்புள்ளியாக இருப்பது பாடல்களும் பின்னணி இசையும்தான். அடிக்கடி பாடல்கள் வந்து கொண்டே இருந்தது போல் ஒரு மயக்கம். சில பாடல்களையாவது தவிர்த்திருந்தால் மேலும் சில காட்சிகளுக்கு நேரம் கிடைத்திருக்குமோ என்ற எண்ணம் வந்து கொண்டே இருந்தது. ஒரு வேளை இளையராஜா மட்டும் இசையமைத்திருந்தால் என்ற ஏக்கமும் வரத்தான் செய்தது. 

இந்த ஒரு விஷயத்தை மட்டும் சரியாகச் செய்திருந்தால் மற்ற சிறுகுறைகள் மறைந்து மிகப்பெரும் வெற்றிப் படமாகி இருந்திருக்கும். ஆனாலும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய படம் அதற்கு ஓரளவு ஈடுசெய்யக் கூடிய விதத்தில்தான் மணிரத்னம் தந்திருக்கிறார். இரண்டாம் பாகம் எப்படி இருக்குமோ என்ற ஆர்வத்தை தூண்டி இருப்பதில் வெற்றி பெற்று இருக்கிறார். கட்டாயம் திரையரங்கில் சென்று பார்க்க வேண்டிய படம். பாருங்கள். அப்படியே மூலக் கதையைப் படித்ததில்லை என்றால் படித்தும் பாருங்கள். 

பிகு: PS1 அப்படின்னு சொல்லாதீங்கப்பா, எதோ விடியோ கேம் பேரு மாதிரி இருக்கு. அழகா பொன்னியின் சொல்வன் என்றே சொல்லுங்க. 

Thursday, September 01, 2022

கேதாரமும் கரும்பும் பின்னே கந்தசாமியும்!

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது சொலவடை. இதையே கிராமத்தில் இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இருக்காதும்பாங்க. அதாவது வாள் எடுத்துச் சண்டை போடறவனும், சிரங்கு வந்து அரிப்பினால் சொறிஞ்சிக்கிறவனும் சுலபத்தில் நிறுத்த மாட்டாங்களாம். இவங்களோட இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவங்க இந்த வெண்பா எழுதும் கோஷ்டி. சும்மாவே இருக்க மாட்டாங்க. 

ஒண்ணு, 'ஈற்றடி என்றும் இனிப்பு', 'பட்டொளி வீசிப் பற', இப்படி கடைசி வரியை (இதைத்தான் ஈற்றடிம்பாங்க) தந்து இதுக்கு வெண்பா எழுதும்பாங்க. இல்லை, யாருக்காவது பொறந்த நாளு, நினைவு நாளுன்னு வந்துட்டா அவங்களைப் பத்தி வெண்பா சமை அப்படிம்பாங்க (வெண்பா எழுதறதுக்குப் பேரு சமைக்கிறதாம்). இப்படி எதுனா ஒரு சாக்கு கண்டுபிடிச்சு, தான் எழுதறோமோ இல்லையோ, அடுத்தவனை எழுத வெச்சுடணும்ன்னு கங்கணம் கட்டிக்கிட்டு அலைவாங்க. நம்ம ஐயப்பன், சின்னக்கண்ணன், ஆசாத் பாய், சொக்கன், பெனாத்தல்ன்னு ஒரு பெரிய கூட்டமே இருக்கு. இதுல உச்சக்கட்ட வன்முறை என்னான்னா சம்பந்தமே இல்லாத எதாவது ரெண்டு ஐட்டத்தை எடுத்துக்கிட்டு இது ரெண்டுக்கும் ஒத்து வர மாதிரி சிலேடையா வெண்பா எழுதும்பாங்க. 

அப்படித்தான் இந்த ஐயப்பன் எப்பவோ சொன்னதை, இன்னிக்குச் சின்னக்கண்ணன் எடுத்துக்கிட்டு வந்தாரு. மயிலுக்கும் கரும்புக்கும் சிலேடையில் எழுதணுமாம். கரும்புக்கும் மயிலுக்கும் என்னடா சம்பந்தம்ன்னு ஒருத்தர் கூட கேட்கலை. எல்லாரும் உடனே இதுக்கும் தோகை இருக்கு, அதுக்கும் தோகை இருக்குன்னு எழுத ஆரம்பிச்சுட்டாங்க. 


எழுதாம இருந்தா நம்மளைத் தள்ளி வெச்சுடுவாங்களேன்னு நானும் ஒண்ணு எழுதினேன். எல்லாரும் தோகையைப் பத்தியே பேசறாங்களே, நாம வேற எதுனா செய்வோம்ன்னு கண்களில் ஆரம்பிச்சேன். 
கண்கள் பலவுண்டு கண்கவரும் தோகையுண்டு
கண்ணன் நிறத்தில் கழுத்துண்டு - விண்ணவர்கோன்
கந்தபிரான் கோயிலிலே காண்பதற்குத் தானுண்டு
கன்னலுடன் கேதாரம் காண்
சரிடா, எதோ நாலு வரி எழுதிட்டானேன்னு சும்மா இருக்காங்களா! கரும்புக்குக் கண் உண்டா? கேதாரம்ன்னா என்ன? கரும்புக்கும் கந்தனுக்கும் என்னய்யா தொடர்புன்னு கேள்வி மேல கேள்வி. நம்ம வெண்பாவுக்கு எல்லாம் நாமதான் பொருளும் சொல்லணும் போல. 

மயிலுக்குக் கண்கள் உண்டு. முகத்தில் இருக்கும் கண்கள் மட்டுமல்ல. ஒவ்வொரு சிறகிலும் இருக்கும் வடிவத்தையும் கண் என்றே சொல்வார்கள். ஆனா கரும்புக்கு? கரும்பு துண்டு துண்டா ஒட்ட வெச்சது மாதிரிதானே இருக்கும். அப்படி ஒட்ட வெச்ச மாதிரி இருக்கிற பகுதிக்குக் கணு எனப் பெயர். கடிக்க முடியாதபடி ரொம்ப கடினமா இருக்கும் பகுதி. அதுக்கு இன்னொரு பேரு கண். ஆக, கரும்புக்கும் கண் உண்டு. 

தோகையில் தொடங்கலைனாலும் கரும்பையும் மயிலையும் பத்திப் பேசும் போது தோகையைச் சொல்லாம இருக்க முடியுமா? அதனால அது ரெண்டாவது. 

கண்ணன் நிறத்தில் கழுத்துண்டு. முதலிலேயே சொல்லிடறேன். இது கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போட்ட வரிதான். பொயட்டிக் லைசன்ஸ்! கண்ணன் கருநிறத்தான். கருநீலம்ன்னு சொல்லுவாங்க. கருப்புதான்னும் சொல்லுவாங்க. மயிலோட கழுத்து அப்படி கருநீலமா இருக்கும். கரும்புக்கு தோகையும் தண்டும் சேரும் இடம் பேரு கழுத்து. அதுக்கு மேல பச்சையாகவோ, காய்ந்த சருகாகவோ தோகை இருக்கும் ஆனா அங்கிருந்து கருஞ்சிவப்பா இருக்கும். ஆக கரும்போட கழுத்தும் மயிலோட கழுத்தும் கருமை நிறம் கொண்டவைதாம். அம்புட்டுதான். ரொம்ப அடிக்காதீங்கடே, அடுத்த வரிக்குப் போயிடுவோம். 

மாமனைச் சொன்னால் மருமகனைச் சொல்ல வேண்டாமா. அதனால கண்ணனுக்குப் பின்னாடி கந்தனைப் போட்டுட்டேன். முருகனுக்கு மயில் உண்டு, சரி. ஆனா கந்தனுக்கும் கரும்புக்கும் என்ன தொடர்பு? முருகன் கையில் வேல்தானே இருக்கும் கரும்புக்கு எங்க போக? விடை ரொம்ப சுலபம். ரெண்டு கைகள் மட்டுமே இருந்தா ஒரு கையில் வேலை வெச்சுக்கிட்டு மறு கையால் அருள் பாலிக்கலாம். ஆனா எங்காளுக்குத்தான் பன்னிருகைகள் உண்டே. அப்படி இருக்கும் போது வேல் மட்டுமில்லாமல் கொடி, வில், அம்பு, சங்கு, சக்கரம், சூலம் என எல்லாம் அவர் கையில் இருக்கும். அப்படி இருப்பவற்றில் ஒன்று கரும்பு. கரும்பு வில் என்று சொல்வார்கள். சங்கு, சக்கரம், சூலம், கரும்பு வில் என மற்றவர்கள் கையில் இருப்பதை எல்லாம் இவரே எடுத்துக்கிடுவார் போல. கடவுளை பல வடிவங்களில் பார்த்தாலும் அனைவரும் ஒண்ணுதான்னு சொல்ல இப்படி செஞ்சிருப்பாங்கன்னு நினைக்கறேன். நான்கு கைகள் கொண்ட வடிவத்திலும் கரும்புவில், மலரம்பு ஏந்திய வடிவமும் உண்டாம். 

சரிடா, இது எதாவது கோயிலில் இருக்கான்னு கேட்டா, இருக்கே!. திருச்சி - பெரம்பலூர் இடையே இருக்கும் செட்டிகுளம் என்ற கோயிலில் கரும்பு ஏந்திய முருகர் இருக்காரு. அவர் இப்படி இருக்கிறதுக் கதையும் இருக்கு. இந்தச் சுட்டியில் போய் படிச்சுக்குங்க. 


கடைசியா கன்னல் என்றால் கரும்பு. கரும்பிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரைக்கும் கன்னல் என்ற பெயர் உண்டு. இது பழந்தமிழ் இலக்கியங்களிலும் நவீன இலக்கியங்களின் பயன்படுத்தப்பட்ட சொல்லே. ஈற்றடியில் கன்னல், காண் அப்படின்னு எழுதினதுனால மயிலுக்கும் ககரத்தில் ஆரம்பிக்கும் பெயர் இருந்தால் நல்லா இருக்குமேன்னு நினைச்சேன். அதுக்குத் தேடப் போய் கிடைச்சது கேதாரம். 

ஆனாலும் ஒரு நாலு வரியில் வெண்பா எழுதுனதுக்கு இப்படி நானூறு வார்த்தை விளக்கம் தர வெச்சுட்டீங்களேடே! 

(படங்கள் எல்லாம் எப்பொழுதும் போல் இணையத்தில் திருடப்பட்டவையே!)

Wednesday, August 31, 2022

விநாயகர் தந்த வீட்டுப் பாடம்

இன்றைக்கு விநாயக சதுர்த்தி. விளையாட்டாய் விநாயகன், வின் நாயகன் என வார்த்தை விளையாட்டு ஒன்றினை விளையாடினேன். 

அதனாலோ என்னவோ, ஒரு நண்பன் வடிவில் அவரே வந்து வீட்டுப் பாடமொன்றைத் தந்துவிட்டார். கைத்தல நிறைகனி பாட்டுக்குப் பொருள் ஓரளவு தெரிந்தாலும் வரிக்கு வரி பொருள் சொல் என்பதே அந்த நண்பன் கேட்டது. எத்தனையோ பெரியவர்கள் இதற்கு முன் எழுதியதுதான் என்றாலும் பிள்ளையார் சதுர்த்தி அன்று என்னைக் கேட்டதால் நான் கற்றதை எழுத முனைகிறேன். 

இப்பாடல் அருணகிரிநாதர் அளித்த திருப்புகழில் வரும் விநாயகத் துதி. எந்த வேலையைத் தொடங்கும் பொழுதும் விநாயகனைத் துதித்துப் பின் தொடங்க வேண்டும் என்ற மரபினை ஒட்டி திருப்புகழையும் விநாயகனைத் துதித்தே தொடங்குகிறர் அருணகிரிநாதர். இந்தப் பாடலில் மெய்யெழுத்துகளை விட்டு எண்ணிப் பார்த்தால் இருநூறு எழுத்துகள் வரும். நூறு என்பதைப் பிள்ளையார் எனச் சொல்லும் வழக்கமுண்டு. எனவே இப்பாடலை இரட்டைப் பிள்ளையார் என்பர். வண்ண விருத்தம் என்ற எழுதக் கடினமான விருத்தவகையில் எழுதப்பட்டது திருப்புகழ். விருத்த இலக்கணத்திற்குள் போனோமானால் அதுவே பல பதிவுகளுக்கு இழுத்துவிடும். அதனை மற்றொரு சமயத்திற்கு வைத்துக் கொள்வோம். 

முதலில் பாடலைப் பார்க்கலாம். பாடலைப் படிக்கும் பொழுது வாரியார் சுவாமிகள் குரலில் கேட்கவும் செய்வோம். 



கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
     கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
     கற்பக மெனவினை ...... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
     மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
     மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
     அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
     அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
     அக்கண மணமருள் ...... பெருமாளே.
அப்பம் தெரியும் அரிசிப்பொரி தெரியும். முட்டைப்பொரி கூடத் தெரிஞ்சிருக்கலாம். ஆனா அது என்னடா டவல் பொரி, துண்டுல பார்சல் பண்ணித் தருவாங்களான்னு எல்லாம் மிரள வேண்டாம். பாடலைப் பதம் பிரிச்சுப் படிச்சா, எவ்வளவு எளிமையான மொழியில் எழுதி இருக்காருன்னு தெரியும். 

1) கைத்தலம் நிறை கனி, அப்பமொடு, அவல் பொரி
கப்பிய கரிமுகன் அடி பேணி
2) கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் என வினை கடிது ஏகும் 
3) மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன்
மல் பொரு திரள் புய மதயானை
4) மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டு அவிழ் மலர் கொடு பணிவேனே
5) முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
6) முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்
அச்சு அது பொடி செய்த அதி தீரா
7) அத்துயர் அது கொடு சுப்பிரமணி படும்
அப்புனம் அதன் இடை இபமாகி
8) அக்குறமகள் உடன் அச்சிறு முருகனை 
அக்கணம் மணம் அருள் பெருமாளே! 

ஒரு சில சொற்களைத் தவிர நேரடியாகப் பொருள் புரிந்துவிடும் என்றாலும் வரிக்கு வரி பொருள் சொல் என நண்பன் பணித்ததால் அப்படியே பார்ப்போம். 

1) கைத்தலம் நிறை கனி, அப்பமொடு, அவல் பொரி கப்பிய கரிமுகன் அடிப் பேணி - கைகளிலே கனி அப்பம் அவல் பொரி ஆகியவற்றை எடுத்து உண்ணும் யானை முகத்தானின் திருப்பாதங்களை வணங்கி

கைத்தலம் நிறை - தலம் என்ற சொல்லுக்கு உடலின் ஒரு பகுதி என்ற பொருளும் உண்டு. எனவே கைத்தலம் நிறை என்றால் கையாகி பகுதியில் நிறைந்து இருக்கும் 

கனி, அப்பமொடு, அவல் பொரி - பிள்ளையார் கையில் கனி வந்த கதை நமக்கு எல்லாம் தெரியும். விரிவாகச் சொன்னால் முருகன் கோச்சுப்பான். அப்படி கனி, அப்பம், அவல் பொரி எல்லாம் எடுத்துக் கொண்டு 

கப்பிய - கப்பு என்பதற்கு விரைவாக உண்ணுதல் எனப் பொருள். அகராதி ஆங்கிலத்தில் Eat voraciously எனப் பொருள் சொல்கிறது. எங்கம்மா வார்த்தைகளில் சொல்லணும்ன்னா காணாததைக் கண்டா மாதிரி அடைச்சுக்கிறது. பிள்ளையார் கனி, அப்பம், அவல் பொரி எல்லாத்தையும் கையிலே எடுத்து வாயில் அடைச்சுக்கிட்டுச் சாப்பிடுவாராம். 

கரிமுகன் - கரி என்றால் யானை. கரிமுகன் என்றால் யானை முகம் கொண்டவன். 

அடி பேணி - பேணுதல் என்றால் மதித்தல். 

2) கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் என வினை கடிது ஏகும் - நல்ல நூல்களைக் கற்றுத் தெளியும் பக்தர்களின் மனத்தில் இருப்பவனே. கற்பக மரம் போல வேண்டும் அனைத்தையும் தருபவனே எனத் துதிக்க, தீயவை விட்டு விலகி ஓடும் 

உறைபவ - உறைபவனே என்று கூப்பிடும் சொல். 

கடிது - விரைவாக 

ஏகும் - போகும் 

தமிழகத்திலேயே பழைமையான பிள்ளையார் கோயில் எனக் கருதப்படும் பிள்ளையார்பட்டி கோயிலில் பிள்ளையார் கற்பக விநாயகர் என்றே அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

3) மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன் மல் பொரு திரள் புய மதயானை - ஊமத்தம் பூவையும் பிறை நிலவையும் வைத்துக் கொண்டு இருக்கும் சிவனின் மகனே, மல்யுத்தம் செய்ய உகந்த திரண்ட தோள்களைக் கொண்டவனே, மத யானை போன்றவனே 

மத்தம் - ஊமத்தம் பூ. சிவனைப் பற்றிச் சொல்லும் பொழுது மற்றவர்களுக்கு வேண்டாததை விரும்பி ஏற்றுக் கொள்ளும் கடவுள் என்பார்கள். பட்டாடை கிடையாது, புலித்தோல்தான். ஊருக்குள்ளே இடம் கிடையாது சுடுகாடுதான். தங்கத்தட்டு கிடையாது கபாலம்தான். அது போல எதற்கும் பயனில்லாத ஊமத்தம் பூவை விரும்பி ஏற்றுக்கொள்பவன் சிவன். 

மதியம் - நிலவு. மாசில் வீணையும் மாலை மதியமும் என்ற பாடலில் வருவது போல. அப்படி ஊமத்தம் பூவையும் நிலவையும் கொண்ட சிவன் என வர்ணிக்கிறார். 

மல்பொரு திரள் புய - மல்யுத்தம் செய்ய உகந்த திரண்ட தோள்களைக் கொண்ட, புஜம் என்ற சொல் தமிழில் புயம் என்று ஆகும். 

4) மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர் கொடு பணிவேனே - மத்தளம் போன்ற தொந்தியைக் கொண்ட கண்பதி, உத்தமியாம் பார்வதியின் புதல்வன். 

அப்பாவைச் சொன்ன பின் அம்மாவைச் சொல்லாமல் இருக்க முடியுமா? போன வரியில் சிவன் மகனே என்றதும் இந்த வரியில் சிவகாமி என்ற உத்தமியின் மகனே என அழைக்கிறார். கூடவே தவிர்க்கவே முடியாத அவரோட தொந்தியையும் சொல்லிடறார். 

மட்டு - மட்டு என்றால் கள். இதழ்களை விரித்தால் கள் சொட்டக் கூடிய மலர்களைத் தந்து கும்பிடுவேன் என்பதை மட்டு அவிழ் மலர் கொடு பணிவேனே என்கிறார். 

5) முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே - முத்தமிழுக்கான இலக்கணத்தை மேரு மலையில் முதன்முதலாக எழுதித் தந்த மூத்தவனே 

அடைவு - அடைவு என்றால் விதம். Form என்கிறது அகராதி. நாட்டியங்களில் அடவு எனப்படும் இலக்கணம் இந்த அடைவே. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கான இலக்கணத்தை வேறு யாரு தருவதற்கு முன் தந்தவர் பிள்ளையார். அவர் மேரு மலையில் இதனை எழுதியதாக ஐதிகம்.

6) முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அது பொடி செய்த அதி தீரா - திரிபுரங்களை எரித்த சிவனின் தேர் அச்சினைப் பொடிப் பொடியாக உடைத்த தீரத்தைச் செய்தவனே. 

திரிபுரம் என்ற மூன்று கோட்டைகளை எரித்து அழித்தவர் சிவன். அவர் அப்போருக்குச் செல்லும் பொழுது விநாயகனை வணங்கிச் செல்ல மறந்துவிட்டார். அப்பா என்றாலும் ஒரு செயலைத் தொடங்கும் பொழுது முழுமுதற்கடவுளை வணங்கி இருக்க வேண்டுமல்லவா. அப்படி வணங்காது சென்றதால் சிவன் ஏறிய தேரின் அச்சினை முறித்துவிட்டாராம் பிள்ளையார். தன் தவற்றினை உணர்ந்து பிள்ளையாரை வணங்கி மீண்டும் தேரில் ஏறி திரிபுரத்தை சிவன் எரித்தார் எனக் கதை போகும். அதைத்தான் இங்கே சுட்டிக் காட்டுகிறார். 

இந்நிகழ்ச்சி நடந்த இடம், சென்னைக்கு அருகே, செங்கல்பட்டுக்கு மிக அருகே, மதுராந்தகத்தைத் தொட்டடுத்த அச்சிறுப்பாக்கம். அச்சு இறு பாக்கம் என்பதே அச்சிறுபாக்கம் என்றானது என்பார்கள்.

7) அத்துயர் அது கொடு சுப்பிரமணி படும் அப்புனம் அதன் இடை இபமாகி - காதல் பிணி கொண்ட தம்பி சுப்பாமணிக்காக, அவன் பிணியைத் தீர்க்கும் பொருட்டு வயற்காட்டில் யானையாகி வந்தவரே 

புனம் - காடு. Land suitable for dry grain, commonly on hills என்கிறது அகராதி. வயற்காடு, தினைக்காடு என்பதைத்தான் புனம் என்கிறார். 

இபம் - யானை. தமிழில் யானைக்குத்தான் அத்தனை சொற்கள். அத்தி, ஆனை, கரி, குஞ்சரம், தந்தி, திண்டி, நாகம், பிடி, வேழம் என யானையைக் குறிக்க நூற்றுக்கும் மேலான சொற்கள் உண்டு. தமிழர்தம் வாழ்வோடு அத்தனை இயைந்தது யானை. 

8) அக்குறமகள் உடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம் அருள் பெருமாளே! - வள்ளியுடன் முருகன் திருமணம் நடக்க அருள் புரிந்தவனே!

பெருமாளே - பொதுவாகத் திருமாலைப் பெருமாள் என்றாலும் கூட பெருமாள் என்பது கடவுளுக்கான பொதுப்பெயர்தான். திருப்புகழில் முருகனைப் பெருமாளே என்றழைத்துப் பாடும் அருணகிரிநாதர், இப்பாடலில் விநாயகரைப் பெருமாளே என்றே துதித்து வணங்கி இருக்கிறார்.  

விநாயக சதுர்த்தியான இன்று, நானும் அவரை வணங்கிக் கொள்கிறேன். இந்தப் பதிவு எழுத காரணமாக இருந்த நண்பனுக்கு என் நன்றி.  அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்! 

என் தமிழுக்கு வழிகாட்டியாக, என் ஆசானாக இருக்கும் ஹரியண்ணா அவர்களுக்கு, அவர்தம் மகன் திருமண நிகழ்வையொட்டி, ஒரு சிறு பரிசாக இந்தப் பதிவினை சமர்ப்பணம் செய்கிறேன். எதேனும் பிழை இருந்தால் பொறுத்தருளும்படி கேட்டுக் கொள்கிறேன். 

Friday, July 29, 2022

Amma

My mother was born in a different era. Daughters had to be married off early, the sooner the better. My maternal grandfather was a man of his times, and my mom was married to her own cousin when she was just eleven. (Marriages between cousins, subject to certain conditions, were an accepted norm then.) 

Her marital life was troubled, to put it mildly. She had her first son when she was just fifteen. And a couple of years into motherhood, her son turned out to be an invalid, who needed full time support. Two other sons followed and each one had their own health scares, thanks to marrying within the family. Financially too, they were not well off as my dad was not one to hold a stable job. An accident left him disabled and he had limited mobility. All of this is hearsay to me as I was not born then. 

I was born to my mom when she was thirty-six, a full twenty-one years after her first born. My eldest brother was stuck to his chair. My second brother was off to college and my third brother was completing high school when I was born. I was raised in Kallidaikurichi, a village near the southern end of India. Despite the passage of time, things were not much different at home. But my mother provided a stable household for us to grow. We may not have had luxury, but we were never left wanting. 


She was tenacious, she was street smart and she was positive. She might have had her bitterness on what life dealt her, but she never let it contaminate how she lived. She instilled the values we stand by, and she led by example. She was a survivor. She survived the loss of her first born after taking care of him full time for thirty-seven years. She survived the near loss of her third son twice over. She survived being uprooted and made to start laying roots in different places time and again. She had lived in the quaint village in a large household first and then be on her own, she managed in a single room when one of her sons was recuperating in a hospital after an accident. She had moved from one rental place to another before she had a place, she could call her own. She survived the loss of her husband. She survived cancer. And she never let any of these get to her. 


Having gotten married at such an early age, her formal education was not past elementary school. But she was a woman of many talents. She was a wonderful cook and even today there are people who talk of one meal they were served many decades ago. She never let anyone who visited us go with an empty stomach. We shared what we had. She would make appalams, vadaams and pickles and send them out to the extended family. She could sew and stitch, she could knit, she could string a garland with flowers from the backyard and loved swimming in the nearby river. Her kolam skills were legendary and she was sought after during weddings and other occasions. 

Despite the lack of formal education, she read a lot and was ready to learn new things. She was an avid listener of carnatic music and was a regular in attending concerts. Till late in her life, would complain that her parents stopped her from learning the music. She knew tomes and tomes of shlokas by heart and was an active participant in temple activities. She moved with the times and mastered use of smart phones and tablets too. Despite language barriers, she was enterprising enough to fly back to India from the US on her own when she was in her seventies. 


She, through her actions, instilled strong values in us. The three remaining sons of her, have our own interests and lifestyles. But we all have common traits of compassion, righteousness, hospitality, etc. that we have ingrained from her. I do not consider myself as the ideal son by any measure. I have been silly, I have quarreled, I have been immature and in retrospect should have done many things that I did not and not have done many that i did do. But she loved us the same, nevertheless. 

All three of us were fortunate to have her and our dad with us as we climbed the ladder of financial independence and were able to take care of her to the best of our abilities. We tried to provide her, at least during her later life, what she did not have at her prime. She saw her sons get married, her grandsons and granddaughter growing up and the birth of her great grandson. She lived a full life. She was no saint. She was a regular woman with her own minuses, her grey areas, her misgivings. Let us keep them aside just today. 

But time left its effect on her. Cancer ravaged her body and weakened her mind. She fought and survived cancer but it did take its toll. It was difficult to see the brave woman reduced to a shadow of herself. Someone who started forgetting everything, someone who slowly lost the will to fight. I am halfway across the globe and was helpless, but I know my brothers and my sisters in law gave her their best during her sunset years. 


At 86, she breathed her last this morning. Her end, in a way is a relief, as she need not suffer any more. She may have left her mortal coils, but she has left behind her indelible stamp on us and a truck load of memories. 

Thank you, Mom, for everything. Take rest now.

Thursday, May 19, 2022

ஆசானோடு ஓர் அருமையான மாலை!

ஆற்றொழுக்கு என்பது ஆற்றின் நீரோட்டத்தைக் குறிப்பது. மலையில் தொடங்கி கடலில் சேரும் ஆறு, சிறு ஓடையாகத் தொடங்கும், அங்கிருந்து அதிவேகமாகப் பொங்கி வரும், அருவியாகக் கொட்டும், பரந்தும் விரிந்துமானப் பெருநதியாக மாறும், சலனமின்றி நிற்பது போலத் தோன்றினாலும் வேகமாக ஓடும், பாறைகளில் மோதி கலைந்து சுழலும் நுரையுமாகப் பாயும், சில இடங்களில் தன் ஆர்ப்பரிப்பை எல்லாம் குறைத்துக் கொண்டு மனிதனும் மற்ற உயிர்களும் தன்னுடன் உறவாட வகை செய்யும். 

எழுத்திலும் பேச்சிலும் இப்படி பிரவாகமாக எழுதுவதையும் பேசுவதையும் ஆற்றொழுக்கான நடை என்போம். அப்படி அமைய வேண்டும் என்பதால்தான் என்னவோ கம்பராமாயாணம் ஆகட்டும், கந்தபுராணமாகட்டும், கடவுள் வாழ்த்தைத் தொடர்ந்து ஆற்றுப்படலம் என ஆறுகளின் பெருமையைச் சொல்லியே ஆரம்பிக்கின்றன. அதிலும் கம்பன், 'கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்' என்றது என்னைத்தானோ என எனக்கு ஒரு மயக்கம். கல்லிடையில் பிறந்ததும், போந்ததும் நிகழ்ந்து விட்டது. கடைசி காலத்தில் ஏதேனும் தீவு ஒன்றில் வசிக்கும் ஊழும் இருக்கிறதோ என்னவோ. போகட்டும். மீண்டும் ஆற்றொழுக்குக்கே வருவோம். 

ஆற்றொழுக்காகப் பேசுவது என்பது சிலருக்கே அமைவது. ஒரு தலைப்பில் தயார் செய்து கொண்ட உரையை மேடையில் பேசுவதை விட மிகக் கடினமானது பரந்துபட்ட பல தலைப்புகளில் தடைகளில்லாமல், கேட்பவர் கவனம் கெடாமல், சுவாரசியமாக , தொடர்ந்து பேசுவது. அப்படி மணிக்கணக்காகப் பேசக்கூடிய திறமை கொண்டவர் எழுத்தாளர் ஜெயமோகன். நேற்று மாலை அவருடன் சுமார் ஐந்து மணி நேரம் இருக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. 

ஜெயமோகனோடு உரையாடப் போகிறேன் எனச் சொன்னதற்கு, நண்பரொருவர் அவர் பேசிக் கேட்கப் போகிறேன் எனச் சொல் என்று வேடிக்கையாகத் திருத்தினார். ஆனால் நடந்ததென்னவோ அதுதான். மறுநாள் விடிகாலை எழுந்து பயணத்தைத் தொடர வேண்டிய கட்டாயம் இல்லை என்றால் இரவு முழுவதும் கூடப் பேசி இருப்பார் போல. பேசிய அவருக்கும் சரி, கேட்டுக்கொண்டிருந்த எங்களுக்கும் சரி, கொஞ்சமும் அயர்ச்சியே இல்லை. 



தன் எழுத்து குறித்த விமர்சனம், சக எழுத்தாளர்களுடன் கொண்ட நட்பு, இந்திய வரலாறு, தெருப் பெயர்களை மாற்றுவது, இந்தியாவின் முன்னேற்றத்தில் ஆங்கிலேயர் பங்களிப்பு, அவர்கள் வரலாற்றினை ஆவணப்படுத்துவதிலும் வரைபடங்களாக நிலத்தினை வரைந்து கொள்வதிலும் காண்பித்த ஆர்வம், கர்நாடக சங்கீதம், தமிழ்ப்பாடல்கள், குணங்குடி மஸ்தான் சாகிப், பெரியசாமி தூரன், கோபாலகிருஷ்ண பாரதி, பாபநாசம் சிவன், தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், விருத்தங்கள் பாடுவது, கம்ப ராமாயணம், டிகேசி, கம்பன் கழகம், நாஞ்சில் நாடன், அலங்காரப் பேச்சு அலங்கோலங்கள், மேடைப் பேச்சு அனுபவங்கள், மொழிபெயர்ப்பு, தமிழ் இலக்கணம், எழுவாய் பயனிலை சார்ந்த சங்கடங்கள், மலையாளம், அதற்கு முன்பான மலையாண்மை என்ற மொழிவடிவம், தத்துவம் சார்ந்த எழுத்துகளைத் தமிழிலும் மலையாளத்திலும் கொண்டு வருவதற்கான மொழி சார்ந்த சிக்கல்கள், அமெரிக்க அனுபவங்கள், ஆஸ்டினில் பார்க்க முடிந்த இடங்கள், நேரமின்மையால் பார்க்க முடியாமல் போன ஓ. ஹென்றி நினைவில்லம், அதிபர் ஜான்சன் நூலகம், ஆஸ்டின் பொது நூலகம், அமெரிக்க நூலகங்களில் நாம் படித்த ஆங்கில எழுத்தாளர்கள், சிறுகதை நாவல் போன்ற வடிவங்களுக்கான இலக்கணம், 1990ஆம் ஆண்டு தான் எழுதிய 'ரப்பர்' நாவலுக்குப் பரிசு கிடைத்த மேடையில் பேசியது, அதில் கிடைத்த ஊக்கத்தில் நாவல் கோட்பாடு எழுதியது, பா. ராகவன் நாவல்கள், அவர் முன்னெடுத்திருக்கும் எழுத்தாளர்களுக்கான வகுப்பு, புத்தகங்களை வாசிப்பதற்கும் கேட்பதற்கும் உண்டான வித்தியாசங்கள், புத்தகங்கள் திரைப்படங்களாகுதல், திரைப்பிரபலங்களுடான நட்பு, திரைப்பட அனுபவங்கள், சென்னை ரவுடிகள், திரைப்பட நடிகர்கள் மேல் வரும் அசூயை, கட்டப்படும் கதைகள், கவிஞர் கண்ணதாசன் குறித்த கதைகள், என் எஸ் கிருஷ்ணன் பட்ட சிரமங்கள், எம் கே தியாகராஜ பாகவதரின் இறுதிக் காலம் குறித்த கட்டுக்கதைகள், அவர் குற்றம் சாற்றப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்த முறை, இந்தியாவில் இருந்த - அமெரிக்காவில் இருக்கும் ஜூரி சிஸ்டம், ஐஏஎஸ் அதிகாரிகள், அவர்கள் துறை விட்டுத் துறை மாற்றப்படுவது, நம் வரலாறு குறித்த ஆவணங்கள் வெளிநாடுகளில் இருப்பது, அவற்றைப் பார்க்க லிஸ்பன் போர்த்துகல் செல்ல ஆசை இருப்பது, தமிழ் விக்கி என மாலை நீண்டு கொண்டே இருந்தது. 

நான் மறந்து போய் சொல்லாமல் விட்ட விஷயங்கள் இன்னும் பல. இடையிடையே வந்திருப்பவர்களின் கேள்விகள், அதற்கான பதில்கள், அவர்களது பார்வை என்று கச்சேரி களைகட்டியே இருந்தது. பிரபல எழுத்தாளர் குறித்த அவர் புதிர் ஒன்றிற்குப் பதில் அளிக்க முடியாமல் விழித்தேன். விழித்தது நான் மட்டுமல்ல என்பது மட்டுமே ஆறுதல். 

பார்த்துப் பத்து வருடங்களுக்கு மேலாகி இருந்தாலும் என்னை நினைவில் வைத்திருந்து இது இலவசக்கொத்தனார் என மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தியது எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சிதான். அங்குள்ள பலரும் 'நீதானா அது?' எனப் பார்த்த பார்வையால் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. புதிய நட்புகள் சில கிடைத்ததால் மிகவும் மகிழ்ச்சி. கூடுதல் பரிசாக எனக்காகக் கையெழுத்திட்ட புத்தகம் ஒன்றினையும் வழங்கினார். 


ஜெயமோகனின் அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் நண்பரொருவர், ஜெயமோகனின் புத்தகம் போன்ற கேக் ஒன்றைச் செய்து கொண்டு வந்திருந்தார். அளவிலும் ஜெயமோகன் எழுதும் புத்தகங்களை ஒத்து இருந்தது. அருமையான சாக்லேட் கேக். அதனை வெட்டி, உடன் வந்திருக்கும் அருண்மொழிக்கு ஊட்டி விட்டபின், இயேசுவின் உடல் அப்பமாக வழங்கப்படுவது போல் எங்கள் அனைவருக்கும் ஆளுக்கொரு ஒரு துண்டு ஊட்டி விடப்பட்டது. ஜெயமோகன் இலக்கிய சந்திப்புகளின் விதிமுறைகள் அறிந்ததால் அப்பத்தோடு வைன் கிடைக்குமா என்ற நப்பாசை கிஞ்சித்தும் இல்லை. 


வந்தவர்களை வரவேற்றுக் கவனிப்பது, இடையிடையே தேநீர், பின் இரவுணவு, கேக் என அருமையாகக் கவனித்துக் கொண்ட நண்பர் சௌந்தர் அவர்களுக்கு என் நன்றி. நான் ஒன்றிரண்டு புகைப்படங்களுக்கு மேல் எடுக்கவில்லை. எடுத்தவர்கள் பகிர்ந்தால் அதனை இந்தப் பதிவில் சேர்க்கிறேன். 

நல்லதொரு மாலைப்பொழுது அமையச் செய்த ஜெயமோகனுக்கு நன்றி.