Thursday, November 10, 2022

கொத்ஸு பரோட்டா கொசுவர்த்தி

இன்றைக்குத்தான் நான் அமெரிக்கப் பிரஜை. அடிப்படையில் என்றுமே தமிழன் என்பதில் எனக்கு ஐயம் ஏதும் இல்லை. நீ தமிழனா எனக் கேட்பவர்கள் என்றைக்குமே உண்டு. அந்த அரசியல் வேறு. அது போகட்டும். நான் தமிழன்தான் என்பதற்கு ஒரு முக்கிய ஆதாரம் எனக்கும் புரோட்டா சால்னாவுக்குமான உறவு. 

"எல என்னத்தலே புரோட்டா மயிறுன்னு வெளியூர்க்காரன் மாதிரி பேசுத. நம்ம ஆட்கள் மாதிரி ரொட்டி சால்னான்னு சொல்லுல" என அன்பாய் ஏசுவார்கள் என் ஊர்க்காரத் தோழர்கள். 

எப்பொழுது ரொட்டி சால்னா அறிமுகம் ஆனது என ஞாபகமே இல்லை. ஆனால் சிறுவயதிலேயே அதன் சுவைக்கு மயங்கி விட்டேன் என்பதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லை. ரொட்டி சால்னா கடைக்கு எல்லாம் செல்ல அனுமதி கிடைக்காது. ஆனாலும் அதன் சுவை இழுக்கும். எப்படியாவது வீட்டுக்குத் தெரியாமல் போய் சாப்பிட்டு விடுவது ஒரு வழக்கமானது. எல்கேஜியில் தொடங்கி இன்று வரை நண்பனாகத் தொடரும் கைலாஷ் இதில் என் கூட்டாளி.  


கல்லிடைக்குறிச்சி மெயின் ரோட்டில் இருக்கும் மீரானியா புரோட்டா ஸ்டால் என்ற கடைதான் நமக்கு வாடிக்கை. கடை முகப்பில் மட்டும்தான் புரோட்டா ஆனால் புழக்கத்தில் எல்லாமே ரொட்டிதான். அங்கு ஒரு கூடுதல் வசதி என்னவென்றால் கடையின் ஒரு பாதியில் ஒரு தடுப்புப் போடப்பட்டு இருக்கும் அதன் பின் அமர்ந்தால் சாலையில் போய் வருபவர் கண்ணில் படமாட்டோம். அதனால் மாட்டிக் கொள்வோமோ என்ற கவலை கிஞ்சித்தும் இல்லாமல் உண்ணலாம். கடை வாயிலில் புரோட்டா மாஸ்டர் தன் நோஞ்சான் உடலில் இருக்கும் சக்தி எல்லாம் சேர்த்து மாவு பிசைவதும் ரொட்டி இடுவதும் அதை கல்லில் போட்டு லாகவமாய் எடுப்பதுமாக இரு கை போதாமல் இருப்பார். 

வாழை இலையைப் போட்டு அதில் ரொட்டியை அடுக்கி, இரு கைகளாலும் அவற்றை தட்டி பின் சிறு துண்டுகளாகப் பிய்த்துப் போட்டு அவற்றின் மேல் கொதிக்கக் கொதிக்க சால்னாவை ஊற்றும் பொழுது எழும் வாசம் இல்லாத பசியை எல்லாம் தூண்டி விடும். ரொட்டி சால்னாவுடன் தரப்படும், கொஞ்சம் தயிரில் ஏராளமாக தண்ணீர் விட்டுச் செய்த வெங்காயப் பச்சடி தேவாமிர்தமாய் இருக்கும். எதோ திரைப்படத்தில் வரும் காட்சியைப் போல எண்ணிக்கை எல்லாம் வைத்துக் கொள்ளாமல் போதும் என்ற அளவு போட்டுக் கொண்டே இருப்பார்கள். காசே இல்லை என்றாலும் கணக்கில் எழுதிக் கொள்ளச் சொல்லிவிட்டு வந்துவிடலாம். கையில் பணம் வரும் பொழுது பாயிடம் தந்து பைசல் செய்து கொள்வோம். 

கொஞ்சம் வயதாக அம்பை, விகேபுரம், திருநெல்வேலி, தென்காசி என நல்ல ரொட்டிக்கான தேடுதல் விரிவடைந்து கொண்டே போனது. குற்றாலத்தில் கண்கள் இரண்டும் சிவக்கும் வரை அருவியில் ஆட்டம் போட்டுவிட்டு அடங்காத பசியோடு பார்டர் கடைக்குச் சென்று காணாதது கண்டாற்போல் உண்ட ரொட்டி சால்னாவுக்கு ஈடான சுவை இதுவரை கண்டதில்லை. 

சென்னை வந்தபின் நல்ல ரொட்டி சால்னா என்பது ஊர்பக்கம் போனால்தான் என்றானது. திருமணம் முடிந்து மனைவியோடு ஊருக்குப் போன பொழுது அல்வா, காராச்சேவு எல்லாம் வாங்கித் தராமல் நான் வாங்கித் தந்தது எங்கள் ஊரின் ரொட்டி சால்னாதான். அப்பொழுதும் தங்கியிருந்த பெரியம்மா வீட்டில் யாருக்கும் தெரியாமல்தான் சாப்பிட்டோம். 

அமெரிக்கா வந்த பின் தென்னிந்திய உணவகங்கள் சென்றால் முதலில் சொல்வது புரோட்டாதான். சால்னா பற்றிய அறிமுகமே இல்லாத உணவகங்கள் தொட்டுக்கொள்ள குருமா தருவார்கள். சமயத்தில் அதையும் வேண்டாம் எனச் சொல்லி வெங்காயப் பச்சடி, சாரி, ஆனியன் ரெய்த்தாவுடன் புரோட்டாவை உள்ளே தள்ளிய நாட்களும் உண்டு. நியூயார்க் அஞ்சப்பர் செட்டிநாடு உணவகத்தில் சுமாரான புரோட்டா கிடைத்துக் கொண்டிருந்தது. இப்பொழுதும் கிடைக்கிறதா தெரியவில்லை. 

ஆஸ்டின் வந்த பின்பு நிலவரம் கொஞ்சம் மாறியது. மதுரை குமார் மெஸ் இங்கே கிளை ஒன்று திறந்தார்கள். அதில்தான் சரியான ரொட்டி சால்னா கிடைத்து வந்தது. சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் அங்கு செல்வது வாடிக்கையானது. பெருந்தொற்றுக்குப் பின் முன்பிருந்தது போல் இல்லை என்பது வருத்தமே. 

சமையல் செய்ய மிகுந்த ஆர்வம் உண்டு என்றாலும் ஏனோ இந்த புரோட்டாவை மட்டும் செய்து பார்க்க கொஞ்சம் தயக்கம்தான். கூடிய சீக்கிரத்தில் செய்து பார்க்க வேண்டும். பதிவுலகின் ஆதி காலத்தில் நான் எழுதிய கொத்ஸு பரோட்டா பதிவிலும் கடையில் வாங்கிய புரோட்டாதான். இன்று இரவுணவுக்கும் கடையில் வாங்கிய புரோட்டாதான். 

ஆனால் சால்னா நான் செய்தது. அன்று சாப்பிட்ட மீரானியா சால்னாவுக்கு எந்த வித குறைச்சலும் இல்லாத வகையில் நல்லபடியாகவே இருந்தது. வீட்டில் என்னைப் போன்றே ரொட்டிக்கு ரசிகர் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த என் பெண். இன்றிரவு புரோட்டாவை சூடு பண்ணி தட்டில் வைத்துத் தரும் பொழுது அவள் சொன்னது. "பிச்சுப் போடுப்பா!" 


மனைவி ஊரில் இல்லை. இருந்தால், ”அப்படியே அப்பனைக் கொண்டு வந்திருக்கா” எனக் குற்றச்சாட்டாகத்தான் சொல்லியிருப்பாள். நான் என்னவோ பெருமையாகத்தான் எடுத்துக்கொண்டிருப்பேன். 

1 comments:

said...

அந்தப் பழைய கொத்ஸு பரோட்டாப் பதிவு - https://elavasam.blogspot.com/2006/05/blog-post.html