Saturday, September 27, 2025

பண்ணேன் உனக்கான பூசை!

ஒரு மூதாட்டி கடவுளைத் தொழும் இந்தப் படத்தினை நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்தார்.



இந்தப் படத்தைப் பார்த்த உடனே பாவெழுதத் தோன்றியது. எழுதினேன். 

வேதங்கள் போற்றிடும் வேள்வியின் நாயகியுன்
பாதங்கள் பற்றிடயிப் பாவிக்குப் பேறில்லை
நீயே கதியென நிற்கிறேன் கைதூக்கித்
தாயே அருளெனக்குத் தா!


இந்த வெண்பாவினைப் படித்த உறவினர் ஒருவர் ஏண்டா இப்படி எல்லாம் பாட்டு எழுதற ஆனா கோயிலுக்குப் போய் சாமி கும்பிட மட்டும் உனக்கு ஏன் வர மாட்டேங்குதுன்னு கேட்டுட்டார். 


இந்தக் கேள்விக்கு நான் யோசித்து எல்லாம் பதில் சொல்ல வேண்டுமா? அதான் தாயுமானவர் ஏற்கனவே பதில் சொல்லிவிட்டாரே. அந்தப் பாடலை எடுத்து பதம் பிரித்து அனுப்பினேன். 


பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே

பாவித்து இறைஞ்ச ஆங்கே 

பார்க்கின்ற மலர் ஊடு நீயே இருத்தி அப்

பனிமலர் எடுக்க மனமும் 

நண்ணேன் அலாமல் இருகைதான் குவிக்க எனின்

நாணும் என் உளம் நிற்றி நீ

நான் கும்பிடும் போது அரைக் கும்பிடு ஆதலால் 

நான் பூசை செய்யல் முறையோ? 

விண்ணே! விண் ஆதியாம் பூதமே! நாதமே! 

வேதமே! வேதாந்தமே! 

மேதக்க கேள்வியே! கேள்வியாம் பூமிக்குள் 

வித்தே! அவ்வித்தின் முளையே! 

கண்ணே! கருத்தே! என் எண்ணே! எழுத்தே! 

கதிக்கான மோன வடிவே! 

கருதரிய சித் சபையில் ஆனந்த நர்த்தமிடும்

கருணாகரக் கடவுளே! 


எளிமையான பாடலாக இருந்தாலும் பாடலை அனுப்பினால் விளக்கமும் சொல்ல வேண்டுமல்லவா. 


தாயுமானவர் சொல்கிறார், “நான் ஒரு வடிவமாக உன்னைக் கொண்டு அந்த வடிவத்திற்குப் பூஜை செய்யலாம் என நினைத்து அதிகாலை வேளையிலே பனி சொட்டிக் கொண்டு இருக்கும் மலரைப் பறிக்கச் சென்றேன். அப்படி அழகாகப் பூத்திருக்கும் மலர்களைப் பார்க்கும் பொழுது அப்பூக்களிலும் நீதானே இருக்கிறாய் என நினைத்தேன். அப்படி நீ இருக்கும் பூக்களை எப்படிப் பறிக்க நினைத்தேன் என எண்ணி வெட்கப்பட்டேன். அந்த மலர்களைப் பறிக்காமலேயே வந்துவிட்டேன். மலர்கள் இல்லாமல் எப்படிப் பூஜை செய்ய? உனக்குப் பூஜையே பண்ண மாட்டேன். 


சரி, பூஜை செய்யவில்லை. குறைந்தபட்சம் என்னோட இரண்டு கைகளையும் கூப்பிக் கும்பிடலாம்ன்னு பார்த்தேன். அப்படிக் கும்பிடும் பொழுது நீயும் நானும் வேறு வேறு என்பதாகி, வெளியில் இருக்கும் உன்னை நான் கும்பிடுவது போல ஒரு தோற்றம் வருகிறதே. அப்படிச் செய்யும் பொழுது என்னுள் இருக்கும் உன்னை நான் கும்பிடவில்லையே. அப்படி என்றால் என்னுடைய கும்பிடுதல் பாதி ஆகி விடுகிறதோ? அரைக்கும்பிடுதான் போடுகிறேனோ என்ற கேள்வி வருகிறதே. இப்படி எல்லாம் பூஜை செய்வதுதான் சரியான வழியோ என்று குழம்பி நிற்கிறேன்”. 


ஒரு விதத்தில் பார்த்தால் உருவ வழிபாடு, அதன் பின் அருவ வழிபாடு என வழிபாட்டு நிலைகளைச் சொல்லும் விதமாகவே இப்பாடல் இருக்கிறது. ஆனால் அதையும் தாண்டி எங்கும் நிறைந்திருக்கும் கடவுள் என்னும் மெய்ஞானத்தைத் தேடிச் சென்றால் நற்கதி கிட்டும் என்பதைத் தாயுமானவர் கடவுளை எப்படி எல்லாம், எங்கெல்லாம் பார்க்கிறேன் எனப் பட்டியல் இடுகிறார். 


ஆகாயம் முழுவது வியாபித்து இருப்பவனே, அந்த ஆகாயம் முதலான ஐம்பூதங்களாக இருப்பவனே, அந்த ஐம்பூதங்களோடு இருக்கும் ஒலியும்  ஒளியுமாக இருப்பவனே, வேதம் எனப்படும் உண்மையாக இருப்பவனே, அந்த வேதங்களின் சாரமாக இருப்பவனே, மேலானவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டிய கேள்வியாக இருப்பவனே, அந்தக் கேள்விகளே நிலமாகி அந்நிலத்தில் விதைக்கப்படும் விதையாக இருப்பவனே, கேள்வி என்னும் விதை முளைத்து வரும் விடையாக இருப்பவனே, அந்த விடையாக வரும் எண்ணாகவும் எழுத்தாகவும் இருப்பவனே, எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் என சொல்வதால் அந்த எண்ணும் எழுத்தும் தரும் கல்வியாக இருப்பவனே, அந்தக் கல்வி தரும் பொருளாக இருப்பவனே, அதை எல்லாம் தாண்டி நற்கதி வேண்டுமானால் சும்மா இருக்கச் சொல்லும் மோன வடிவாக இருப்பவனே, நினைப்பதற்கு அரிதாக இருக்கும் சித்சபையில் ஆனந்த நடனமாடும் கருணாகரக் கடவுளே என்று கடவுளை அடைய இருக்கும் பல நிலைகளையும் சொல்கிறார்.


அருணகிரி நாதரும் நாத பிந்து கலாதி நமோ நம என அண்டத்தின் ஒலியும் ஒளியுமாக முருகப் பெருமானைச் சொல்லியதையும் அவருக்கு சும்மா இரு சொல்லற என பேச்சினை விடுத்து மனத்தில் இருக்கும் மெய்ஞானத்தை உணரச் சொல்லும் அறிவுரை கிடைத்ததையும் இங்கே பொருத்திப் பார்க்கலாம். 


நான் தாயுமானவர் சொல்லும் நிலைகளை அடைந்துவிட்டதால் கோயில் செல்வதில்லை எனச் சொல்ல வரவில்லை, அப்படிச் சென்று பூஜை செய்யத்தான் வேண்டுமா என்ற கேள்வி எனக்கு இருக்கிறது என்பதைத்தான் சொல்ல நினைத்தேன். மேலான பொருளை மட்டுமே சொல்லி இருக்கிறேன். இப்பாடலில் இருக்கும் படிமங்களை எனக்குத் தெரிந்த வரைச் சொல்லத் தொடங்கினால் பதிவு நீண்டுவிடும் என்பதால் நேரடியான பொருளோடு நிறுத்திக் கொள்கிறேன். 


இந்தப் பாட்டு, கருணாகரப் பதிகம் என்ற பத்து பாட்டுகள் கொண்ட தொகுப்பில் உள்ளது. எல்லா பாட்டுமே கருதரிய சித்சபையில் ஆனந்த நர்த்தமிடும் கருணாகரக் கடவுளே என முடியும் படி எழுதி இருக்கிறார் தாயுமானவர். இப்பதிகம் பாடப் பெற்றதே ஒரு சுவாரசியமான சம்பவம். தாயுமானவர் திருச்சியில் விஜயரங்கச் சொக்கநாத நாயக்கர் என்ற அரசரிடம் பணிபுரிந்து வந்தார். அந்த அரசரின் மறைவுக்குப் பின் ஆட்சி அவரது துணைவி அரசமாதேவி மீனாட்சியின் கைகளுக்கு வந்தது. அவர் தாயுமானவரின் அழகில் மயங்கி அவரைத் தகாத உறவுக்கு அழைத்தார். அதனை மறுத்த தாயுமானவர் திருச்சியை விட்டு வெளியேறி தென் திசை சென்றார். நல்லூர் என்ற இடத்தை அடைந்த பொழுது இப்பதிகத்தைப் பாடினார். 


நேரடியாகப் பார்த்தால் சிவபெருமானைக் குறித்துப் பாடியதாகத் தோன்றினாலும், சிவனும் நீயே, விஷ்ணுவும் நீயே, பிரம்மனும் நீயே, தட்சிணாமூர்த்தியும் நீயே என்று எல்லாம் பாடும் பொழுது அவர் மோனநிலை அடைந்து பொதுவான கருணை மிகுந்த கடவுளைப் பற்றிப் பாடியதாகவே கொள்ளலாம். 


இப்பாடல் கர்நாடக இசையில் விருத்தம் என்ற பாணியில் கச்சேரிகளில் பலரும் பாடி வரும் ஒன்று. 


கானகலாதர  மதுரை மணி ஐயர் குரலில் இந்தப் பாடலைக் கேட்க - 

https://youtu.be/1idznq1ADxc?si=fZ1bDzYKwBbBVmDc 


இளம் பாடகர் நண்பர் பரத் சுந்தர் பாடியது - 

https://youtu.be/m054dq9gQoU?si=-L6EOivKBw8XLAoT&t=1114 


என் ஆதர்ச பாடகர் டிஎம் கிருஷ்ணா பாடியது - https://youtu.be/j6gRDrvZGWk?si=RjRPram1pRGS9LQw 


0 comments: