Tuesday, October 28, 2008

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - அக்டோபர் 2008

வழக்கமான உற்சாகத்தோட நிறையா பேரு இந்த முறையும் புதிரை விடுவிக்க முயற்சி செஞ்சாங்க. இந்த முறை கொஞ்சம் எளிதாக இருக்கிறதோ என நான் நினைத்தது சரியே என்பதை நிரூபிப்பது போல் இந்த முறை பதினாறு பேர் சரியான விடைகளைத் தந்துள்ளார்கள்.

  1. பெனாத்தல் சுரேஷ்
  2. யோசிப்பவர்
  3. சின்னவன்
  4. ஸ்ரீதர் வெங்கட்
  5. அரசு
  6. சங்கர்
  7. திவா
  8. எஸ் பி சுரேஷ்
  9. தமிழ்ப்பிரியன்
  10. வடகரை வேலன்
  11. மஞ்சுளா ராஜாராமன்
  12. வசுப்ரதா சுப்ரமணியன்
  13. நிஜமா நல்லவன்
  14. ஹரிஹரன்ஸ்
  15. கௌசிகன்
  16. வி.ஆர். பாலகிருஷ்ணன்
அனைவருக்கும் வாழ்த்துகள்! ஒன்றோ இரண்டோ போடமல் விட்டவர்கள் அனேகம். அனைவரின் மதிப்பெண்களை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.இப்படி தொடர்ந்து வந்து ஆர்வமாய் முயற்சிப்பதுதான் நம்மை மேலும் மேலும் புதிர் போட ஊக்கம் அளிக்கிறது. கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

இனி விடைகளைப் பார்க்கலாமா?



இடமிருந்து வலம்

5 வள்ளுவர் நிற்கச் சொன்ன விதம், இரு முறை வந்தால் ஜொலிக்கும் (2)
தக. வள்ளுவர் நிற்க அதற்குத் தகன்னு சொன்னாரு. தகதகன்னு ஜொலிக்கும் எனச் சொல்வது வழக்கம்தானே. கலந்து கொண்ட அனைவரும் போட்ட விடை இதுதான். வள்ளுவரின் வீச்சு!

6 முடியாத திமிரும் தொடங்காத மொழியும் பாலூட்டியானதே! (6)
திமிங்கிலம். முடியாத திமிர் என்றால் திமி. தொடங்காத மொழி எனும் பொழுது ஆங்கிலம் என்பதில் இருந்து ங்கிலம் என்பது வந்து திமிங்கிலம் என்ற பாலூட்டியாகிறது. திமிங்கலம் என்றும் தெரியப்பட்டாலும் திமிங்கிலம் என்பதும் சரியான சொல்லே. மற்ற விடைகளை பாதிக்காததால் திமிங்கலம் எனச் சொன்னவர்களுக்கும் மதிப்பெண் தந்திருக்கிறேன்.

7 பழமொழிக் கழுதைக்கு இப்படித்தான் விளங்குமா? (4)
தெரியுமா. பழமொழிக் கழுதை எனச் சொல்லும் பொழுது கழுதை பற்றிய பழமொழிகளை யோசிக்க வேண்டும். அதில் அதிகம் நினைவுக்கு வருவது கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பதுதானே. விளங்குமா எனத் தந்தது தெரியுமா என விடை இருக்க வேண்டும் என்பதிற்காகத்தான்.

8 நேசத்தின் இடைமாறி வருவதை நோகலாமா? (3)
அம்பு. அன்பு என்றால் நேசம். அதன் இடையெழுத்து மாறி வரும் சொல்தான் விடை. எய்தவன் இங்கிருக்க அம்பை நோகலாமா என்ற பழமொழியை நினைவில் வைத்துதான் நோகலாமா என்ற குறிப்பைத் தந்தேன்.

9 வெடிப்பதைப் பார்க்க கலையின் தொடக்கத்தைத் திருப்பிக் குடு (3)
கடுகு. கலையின் தொடக்கம் க. திருப்பிக் குடு என்றால் டுகு. இவை இணைந்தால் வருவது கடுகு. அது அன்றாடம் வெடிப்பதுதானே!

11 பங்கின் தலை மாற ஏற்றது ஆனதே(3)
தகுதி. பங்கு என்றால் பகுதி. அதன் முதலெழுத்து மாற வரும் விடை தகுதி. தகுதி என்றால் ஏற்றது என்பதுதானே பொருள்.

13 இந்த மாதம் வாரந்தோறும் வந்திடுமே (4)
திங்கள். ரொம்பவே எளிதான விடை. திங்கள் என்றால் மாதம். அதுவே திங்கட்கிழமை எனப் பொருள் கொண்டால் வாரமொருமுறை வந்திடும்.

16 ஐயர் வீட்டுப் பையன் காதறுந்து அழுந்தக் காவியத் தலைவனானானே! (6)
அம்பிகாபதி. ஐயர் வீட்டுப் பையனை அம்பி என்று சொல்லுவார்கள். காது அறுந்து கா என்னும் எழுத்து கிடைக்கிறது. அழுந்த என்றால் பதி, பதித்தல் என்ற பொருள். அதுவே இவை அனைத்தும் ஒன்று சேர என்ற பொருளும் தருகிறது. அப்படி ஒன்று சேர்ந்தால் வருவது அம்பிகாபதி என்னும் காவியத்தலைவனின் பெயர்.

17 கன்னத்தில் வரும் கட்டியினால் குண்டு ஆகு (2)
பரு. மீண்டும் எளிமையான குறிப்புதான். பரு என்றால் கன்னத்தில் வரும் கட்டி. அதுவே பருத்தல் என்ற வகையில் எடுத்துக் கொண்டோமானால் குண்டு ஆகு என்ற பொருளையும் தருகிறது.

மேலிருந்து கீழ்

1 வயதானால் தெரியும் தன் விலாசம் (4)
முகவரி. எனக்குப் பிடித்த குறிப்பு இதுதான். விலாசம் என்றால் முகவரி. வயதானால் முகத்தில் வரும் சுருக்கங்களை முக வரி என்று சொல்லலாமே.

2 எருவாகப் போனதில் திரும்பவும் தொடங்க ரத்தமாகக் கொட்டுகிறதே (5)
உதிரமாக. எருவாக என்பதை உரமாக என்று சொல்லலாம். அதில் திரும்பவும் என்ற சொல்லின் முதல் எழுத்தை இட உதிரமாக என்ற விடை கிடைக்கிறது. ரத்தமாக என்றால் உதிரமாக . மேலிருந்து கீழ் என்பதால் கொட்டுகிறது என்பது இயல்பாகப் பொருந்தி வருகிறது.

3 அசங்குவதில் காணலாம் அரங்கன் தரித்ததை (3)
சங்கு. அசங்குவதில் என்ற சொல்லில் சங்கு என்னும் விடையைக் காணலாம். சங்கு சக்ரதாரி என வழங்கப்படும் திருமால் தரிப்பது சங்குதானே. அரங்கன் சங்கு தரிப்பதில்லை என கேஆர்எஸ் என்ற நக்கீரர் நெற்றிக்கண்ணைத் திறந்தார். இங்கு அரங்கன் என்பது வெறும் அரங்கனைக் குறிக்காமல் திருமாலைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப் பட்ட குறியீடுதான் என்று அவர் வாயை அடைத்து விட்டேன்.

4 அமளி அகல கம்பை நம்பு (4)
கலகம். அகல கம்பை என்ற சொற்களின் ஊடே கலகம் இருக்கிறது. அமளி என்ற சொல் இதற்கு தேவையான குறிப்பைத் தருகிறது.

10 துள்ளி விழுந்திட முடியாத குடத்தில் இனித்திடு (5)
குதித்திட. முடியாத குடம் என எடுத்துக் கொண்டால் குட. குடத்தில் எனச் சொல்வதால் அதனுள், இனித்திடு என்பதற்கு ஒரு சொல்லை புகுத்தினால் விடை கிடைக்கும். மூன்றெழுத்தில் இனித்திடு எனப் பார்த்தால் தித்தி எனச் சொல்லலாம். குட என்ற எழுத்துக்கள் இடையே தித்தி என போட்டால் குதித்திட என விடை கிடைக்கும். துள்ளி விழுந்திட என சொல்லும் பொழுது குதித்திட என்ற பொருள் வருகிறது.

குறுக்கெழுத்தில் ஒரு முக்கியமான விதி, விடை குறிப்பினைப் போன்றே இருக்க வேண்டும். துள்ளி விழுந்திட எனச் சொல்லும் பொழுது குதித்திடு எனச் சொல்லக் கூடாது. உதிரமாக என விடை எதிர்பார்க்கும் பொழுது உதிரமாகி எனத் தரக் கூடாது. குதித்திடு எனச் சொன்னால் முடியாத குடம் என்பதும் சரியாக வரவில்லை அல்லவா. அனேகம் பேருக்கு கடைசி எழுத்தைச் சரி பார்க்கவும் எனச் சொல்ல வேண்டியதாகி விட்டது.

12 பாதிக் காசு வாங்கி குழம்பிப் புகும் சேட்டை (4)
குசும்பு. பாதி காசுன்னு சொன்னா கா அல்லது சு. இதோட குழம்பிப் புகும் எனச் சொன்னால் புகும் என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களை கலைத்து சேர்பது. ஆக பு கு ம் என்ற எழுத்தோடு கா அல்லது சு சேர்ந்தால் சேட்டை என்ற பொருள் வரும் சொல் ஒன்று வரும். சு என்ற எழுத்தை சேர்த்தால் குசும்பு கிடைக்கும்.

14 தடியைத் தா வயிரியம் கிட்டும் (4)
கம்பளி. வயிரியம் என்றால் கம்பளி. நம்ம அகராதி என்ன சொல்லுதுன்னா

வயிரியம் (p. 847) [ vayiriyam ] , s. a woollen cloth, a cloth made of hair.
தடியைத் தா என்பதை கம்பு அளி எனச் சொல்லமே. அதை சேர்த்துச் சொன்னால் கம்பளி. சரியாப் போச்சா!

15 பசுவின் உடற்பாகம் ஒருவருக்கும் ஒவ்வாது (3)
ஆகாது. ஆ என்றால் பசு. காது என்ற உடற்பாகத்துடன் சேர்த்தால் வருவது ஆகாது. ஒவ்வாது என்ற பொருளும் உண்டல்லவா!

புதிர் நல்லா இருந்திருக்கும் என நினைக்கிறேன். இந்த குறுக்கெழுத்து விளையாட்டு நல்லா இருக்குன்னு நினைக்கிறவங்க இங்க போய் பார்த்தீங்கன்னா வாஞ்சிநாதன் தென்றல் என்ற பத்திரிகையில் தரும் குறுக்கெழுத்துப் புதிர்களைக் காணலாம். அது மட்டும் இல்லாமல் அவர் நடத்தும் ஒரு கூகிள் குழுமத்தில் இணைய kurukkumnedukkum@googlegroups.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.

மீண்டும் என் நன்றிகள். மீண்டும் அடுத்த மாதம் ஒரு புதிய புதிருடன் சந்திக்கும் முன் வரும் மற்ற பதிவுகளையும் மறக்காமல் படியுங்கள்!

16 comments:

said...

அடுத்த மாதம் இன்னும் கொஞ்சம் கடினமாகச் செய்யப் பார்க்கிறேன்.

said...

வழக்கம்போல் மிகவும் சிறப்பான போட்டி. கேள்விகளை அமைக்கவும், விடைகளை கவனித்து 'சரி / தவறு' என்பதை பின்னூட்டத்தில் வெளியிட்டு, அதை பரப்புதாளில் (spreadsheet-தாங்க) பதிந்து தொடர்ந்து எல்லாரையும் ஊக்குவித்து... மிகவும் அருமையாக நடத்தினீர்கள். அடுத்த முறை இன்னமும் கடினமாகவா? ம்ம்ம்... பார்ப்போம்! எப்படி இருக்கிறது என்று :-)

துள்ளி விழ முடியாத குடத்தில் தித்தித்திடு - மிகவும் அருமையான குறிப்பு. பலரைப் போல நானும் இறுதிச் எழுத்தில் தடுமாறித்தான் போனேன். குறிப்பும் விடையும் கச்சிதமாக பொருந்தி வருகிறது. வாழ்த்துகள் :)

said...

புதிர் கடினமாக இருக்கலாம். ஆனால் விடைக்கான வார்த்தைகள் சாதாரணமாக புலங்குப்வையாக இருத்தல் நலம்.

said...

இந்த முறை சற்று இலகுவானதுதான் .நானே முடித்து விட்டேனே ( இலவசம் கொடுத்த 2 குறிப்பு உதவிகளுடன் :))


கடினமாக உழைத்து இந்தப் புதிர் உருவாக்கம் மற்றும் follow up செய்கிறீர்கள் .நன்றி மற்றும் பாராட்டுக்கள்

said...

வாவ்! இந்த முறை வெளியில் இருந்து ஆதரவு :)

அடுத்த முறையாவது போராட்டக்களத்தில் குதிக்க முயற்சிக்கிறேன்

said...

இகோ, தொப்பியை கழட்டறேன்பா!

said...

புதிர் மிகவும் நன்றாக இருந்தது. மிகச் சிறப்பாகச் செய்தமைக்கு பாராட்டுக்கள்.

said...

//வழக்கம்போல் மிகவும் சிறப்பான போட்டி. கேள்விகளை அமைக்கவும், விடைகளை கவனித்து 'சரி / தவறு' என்பதை பின்னூட்டத்தில் வெளியிட்டு, அதை பரப்புதாளில் (spreadsheet-தாங்க) பதிந்து தொடர்ந்து எல்லாரையும் ஊக்குவித்து... மிகவும் அருமையாக நடத்தினீர்கள்.//

வேலைக்கு நடுவே கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. ஆனாலும் செய்ய ஆரம்பிச்ச பின்னாடி முடிஞ்ச அளவு சரியாச் செய்யப் பார்க்கணும் இல்லையா! :)

//அடுத்த முறை இன்னமும் கடினமாகவா? ம்ம்ம்... பார்ப்போம்! எப்படி இருக்கிறது என்று :-)//

எனக்குப் புதிர் போடுவதே கஷ்டமாக இருக்கிறது!! எப்படி வருதுன்னு பார்க்கலாம்..

//துள்ளி விழ முடியாத குடத்தில் தித்தித்திடு - மிகவும் அருமையான குறிப்பு. பலரைப் போல நானும் இறுதிச் எழுத்தில் தடுமாறித்தான் போனேன். குறிப்பும் விடையும் கச்சிதமாக பொருந்தி வருகிறது. வாழ்த்துகள் :)//

என்ன சொல்லுவீங்களோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன். சரியா இருக்குன்னு சொன்னதுக்கு நன்னி! :))

said...

//புதிர் கடினமாக இருக்கலாம். ஆனால் விடைக்கான வார்த்தைகள் சாதாரணமாக புலங்குப்வையாக இருத்தல் நலம்.//

செய்யலாம் தமிழ்ப்பிரியன். முடிஞ்ச அளவு அந்த மாதிரி சொற்களே வரும் படி பார்த்துக்கறேன்.

said...

//இந்த முறை சற்று இலகுவானதுதான் .நானே முடித்து விட்டேனே ( இலவசம் கொடுத்த 2 குறிப்பு உதவிகளுடன் :))//

நீங்க மனசு வெச்சா என்னென்னவோ செய்வீங்க. இந்த புதிர் எல்லாம் எந்த மூலைக்கு! :P

//கடினமாக உழைத்து இந்தப் புதிர் உருவாக்கம் மற்றும் follow up செய்கிறீர்கள் .நன்றி மற்றும் பாராட்டுக்கள்//

நன்னி.

said...

//வாவ்! இந்த முறை வெளியில் இருந்து ஆதரவு :)//

பாபா, இந்த வெ.இ.ஆ வேலைக்கு ஆகாது!!

//அடுத்த முறையாவது போராட்டக்களத்தில் குதிக்க முயற்சிக்கிறேன்//

குதிங்க குதிங்க. :)

said...

//இகோ, தொப்பியை கழட்டறேன்பா!//

கிடைச்ச சான்ஸில் எல்லாம் அடுத்தவனுக்கு தொப்பி போடறவங்க நடுவில் உங்க தொப்பியையே கழட்டும் திவா!! :))

said...

//புதிர் மிகவும் நன்றாக இருந்தது. மிகச் சிறப்பாகச் செய்தமைக்கு பாராட்டுக்கள்.//

நன்றி மஞ்சுளா! :)

said...

உங்க அடுத்த புதிருக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

குசும்பு, ஆகாது இந்த இரண்டும் நீங்க விடை சொல்ற வரைக்கும் சுத்தமா தொனலை.

said...

:))))

said...

மகேஷ்

முதல் முறை முயன்றதால் சில சொற்கள் பிடிபடாமல் போய் இருக்கும். அடுத்த முறை மேலும் நன்றாகச் செய்வீர்கள் என நினைக்கிறேன்.