Wednesday, February 22, 2012

சுகர் அதி’காரம்’!

நண்பர் @4sn அவர்களுக்கு நீரிழிவு நோய் என்று இன்று தெரியவந்தது. கல்யாணமே வேண்டாம் என்னும் கட்சியை சார்ந்தவர் என்பதால் 

 

பிகரை மணக்கப் பிடிக்காது என்பீர்

சுகருக்கும் அக்கதியோ சொல்

 

அப்படின்னு அவருக்கு ஒரு வெண்பா போட்டேன். ஆரம்பிச்சா ஒண்ணோட நிறுத்த முடியுமா? உபிச @penathal அவனோட கஷ்டத்தைச் சொல்ல, அவனைத் தடுத்தாட்கொண்டு நல்ல புத்தி சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். விளைவு - இதோ எங்கள் சுகரதிகாரம். 

 

 

Suresh:

சுகருள்ளோன் கஷ்டங்கள் சொல்லில் அடங்கா

பகர்தல் முடியாத பாடு

 

Me:

வாழ்க்கையில் மாற்றமும் வந்துதான் ஆகணும்

கூழைக் குடித்தே தொடங்கு 

 

Suresh:

பாடாய் படுத்துமே பாழும்நோய் நீரிழிவு

ஓடாகத் தேயும் உடம்பு

 

Me:

இன்சுலின் என்றொரு இஞ்செக்‌ஷன் போடவே

பென்சில் இருக்குதே பார்

 

Suresh:

அரிசி இனிப்பு அனைத்தும் விலக்கி

எரியுதே எந்தன் வயிறு

 

Me:

நீரிழிவு வந்தால் நிறுத்திடல் வேண்டுமாம்

பீர்விட்டுப் பாலைக் குடி

 

Suresh:

எத்தைத்தான் தின்னாலும் ஏறும் சுகரளவு

வித்தை பலவிருந்தும் வீண்

 

Me:

உடலுக்கு வேலைதா ஊர்சுற்றி ஓடு

குடலுக்குக் கொஞ்சம்தா ஓய்வு.

 

Suresh:

ஆசை அறுத்து அடிவயிறு சத்தமிட

காசைக் கரியாக்கும் நோய்

 

Me:

வீசி எறிந்தால் வினையில்லை போகட்டும்

காசில்லை முக்கியம் காண்

 

Suresh:

ஏறலாம் என்றும் இறங்கலாம் என்றுமே

கூறுகெட்டு ஆடும் எடை.

 

Me:

நடையாய் நடந்து நிறைவாய் இருந்தால்

எடையைக் குறைத்தல் எளிது

Posted via email from elavasam's posterous

Tuesday, February 21, 2012

அனுமதி இலவசம்!

வேலை வேலைன்னு அலையறோம். வேலையை முடிச்சுட்டு வந்தா டீவி முன்னாடி அடைக்கலம் ஆகறோம். கொஞ்சம் வித்தியாசமா எதாவது செய்ய நினைச்சா ஒரு சினிமாப் போகறோம். இதைத் தவிர வேற ஒண்ணுமே செய்யறது இல்லை. கொஞ்சம் வித்தியாசமா எதாவது செஞ்சா நல்லா இருக்குமேன்னு நினைக்கறீங்களா?

நான் சொல்லறதைக் கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க. காலையில் மங்களகரமான நாகஸ்வர இசை. அதைத் தொடர்ந்து ஹரி கதாகாலட்சேபம். அது முடிஞ்ச பின்னாடி தெருக்கூத்து. இதை எல்லாம் முடிச்சுட்டு மதிய சாப்பாடு. அதை செரிக்க ஓரு சின்ன இடைவெளி. பின்னாடி குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொள்ளும்படியான ஒரு கச்சேரி. கடைசியா ஒரு தாளவாத்தியக் கச்சேரி. இது முதல் நாள்.

அடுத்த நாள் காலையிலேயே ஒரு பாட்டுக் கச்சேரி. அதைத் தொடர்ந்து கரகாட்டம். மதிய சாப்பாடுக்கு முன்னாடி ஓதுவார்கள் பாடும் தேவார நிகழ்ச்சி. மாலையில் ஒரு பரதநாட்டியம். அதுக்குப் பின்னாடி எல்லா வயதினரும் சிரிச்சு மகிழ ஒரு நாடகம்.

இப்படி ரெண்டு நாள் நமக்கு பரிச்சயம் இருக்கிற, அந்த அளவு பரிச்சயம் இல்லாத பல விதமான கலைகளை கண்டு கேட்டு ரசிக்க ஒரு சான்ஸ் கிடைச்சா எப்படி இருக்கும்? நல்லாதானே இருக்கும்ன்னு நினைக்கறவங்க உடனடியா திருச்சிக்கு ஒரு டிக்கெட் போடலாம்.

ஏன்னா, ஸ்வானுபவா என்ற இயக்கத்தினர் இப்படிப் பலதரப்பட்ட கலை நிகழ்ச்சிகளை மக்களுக்குக் கொண்டு போய் சேர்க்கணும், அதுவும் முக்கியமாக மாணவர் சமுதாயத்திற்கு இந்த மாதிரி அறிமுகம் அவசியம்ன்னு நாட்டின் பல பகுதிகளில் நான் மேல சொன்ன மாதிரி இரண்டு நாட்கள் நடைபெறும் விழாவா செய்யறாங்க. சென்னை, டெல்லி அப்படின்னு பல இடங்களில் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை நடத்திட்டு இந்த வாரம் திருச்சியில் இந்த விழா நடைபெற ஏற்பாடு பண்ணி இருக்காங்க.

திருமதி இந்திரா காந்தி கல்லூரி வளாகத்தில் பெப்ரவரி 24-25, அதாவது வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 9:30 மணி முதல் இந்த விழா நடைபெற இருக்கிறது. திருச்சியில் இருப்பவர்கள் கலந்து கொள்ள இந்த சுட்டியில் பதிவு செய்து கொள்ளலாம். அனுமதி இலவசம்.

திருச்சியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு அமெரிக்காவில் இருக்கும் நீ ஏண்டா போஸ்டர் ஒட்டறன்னு கேட்கறவங்களுக்கு ஒரு ஸ்பெஷல் அறிவிப்பு. இந்த நிகழ்ச்சியை இணையத்தில் நேரலையாக கண்டு ரசிக்கலாம். நேரலைக்கான சுட்டி இது. இதுக்கும் அனுமதி இலவசம்தான்!

விசாகா ஹரியின் கதாகாலட்சேபம், சஷாங்கின் புல்லாங்குழல், விஜய் சிவாவின் பாட்டு, ப்ரியதர்ஷனி கோவிந்தின் பரத நாட்டியம், க்ரேசி மோகன் நாடகம் எனப் பிரபலங்களின் அணிவகுப்பு நமக்காக காத்திருக்கிறது. முழு நிகழ்ச்சி நிரலையும் இங்கே பார்க்கலாம்.

வித்தியாசமான இந்த தொகுப்பினைக் கண்டு களிக்க அனைவரும் வருக ஆதரவு தருக என்ற அரசியல் கோஷத்தோட உங்களை வரவேற்கிறேன். நேரில் பார்க்க முடிந்த பாக்கியசாலிகள், இணையத்தில் ரசித்த இதர புண்ணியவான்கள் அனுபவத்தை பதிவாப் போட்டா நல்லா இருக்கும். செய்யுங்களேன்.

Thursday, February 09, 2012

மடோனா அதிகாரம்!

சூப்பர் பௌல் இடைவேளையில் நடந்த இசை நிகழ்ச்சி பற்றி @penathal கூடப் பேசும் பொழுது மியா நடுவிரல் காண்பித்த சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு விசாரித்தார்.

சும்மா கேட்காமல் வெண்பாவாக எழுதிக் கேட்க, அந்த நிகழ்ச்சியைப் பற்றி ஆளுக்கு ஐந்து வெண்பா எழுதினோம். இதில் விசேஷம் என்னவென்றால் பெனாத்தல் இந்த நிகழ்ச்சியை பார்க்கவே இல்லை என்பதுதான்! 

எதையும் வெண்பாவில் எழுத முடியும் என எப்போதும் நான் சொல்வதை மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன்!

மடோனா அதிகாரம்!

Suresh:

குரலால் வசீகரித்த கூட்டத்தைத் தான்தன்
விரலால் துரத்தியது ஏன்?

Me:

மேட்டரைச் சொல்லிட மீட்டரில் பாட்டில்லை
பீட்டராய் போட்டாளே பிட்டு

Suresh:

உடையும் அவிழ உணர்ச்சியும் பொங்கா
விடலைக்கு இம்முறை வீண்?

Me:

அம்மா வயசாச்சு ஆனாலும் அம்மிணி
கும்மாளம் பார்க்கக் குஷி

Suresh:

தடாகத்தில் நீந்திவரும் தத்தையோ வித்தையோ
மடோனா நடனத்தில் மான்

Me:

கால்மணி நேரம் கலக்கினாள் கூட்டத்தை
வேல்விழி தன்னை விரித்து

Suresh:

யூட்யூபில் பார்த்திட்டு உள்ளம் குளிர்ந்தேனே
வாட்டும் வனிதை அவள்

Me:

அழகி மடோனா அழைத்தாள் அன்பாய்
பழகியே பார்க்கலாம் வா

Suresh:

வரைகலையும் சேர்ந்து வனப்பைக் கூட்ட
நிறைவாய் இருந்த நிகழ்வு

Me:

புட்பாலும் பார்க்காது புல்லரித்துப் போனவர்கள்
குட்ஜாபிது என்றார் குளிர்ந்து

Posted via email from elavasam's posterous

Wednesday, February 01, 2012

புதைபுதிர் விடைகள் - பண்புடன் சிறப்பிதழுக்காக செய்தது

வெகு நாட்கள் கழித்துப் போடப்பட்ட புதிர் என்பதாலோ என்னவோ பல பழைய நண்பர்களைக் காணோம். ஆனால் புதியவர்கள் நிறைய பேர் முயற்சி செய்தது மகிழ்ச்சியாக இருந்தது.

ஒவ்வொருவரும் எவ்வளவு விடைகள் போட்டார்கள் என கணக்கு வைக்கவில்லை. எல்லா விடைகளையும் சொல்லி இருந்தவர் பலர். அனைவருக்கும் வாழ்த்துகள்.

விடைகள் நிரப்பப்பட்ட கட்டம் இதுதான்.



இனி குறிப்புகளோடு விடைகளை இணைத்துப் பார்க்கலாம்.

குறுக்காக:

5.கணவர்களே இணையத்தில் எழுதுவதால் இப்பெயரோ (6)

பதிவுலகம் - பதி என்றால் கணவர். பதிகளின் உலகம் பதிவுலகம் எனச் சொல்லலாம். இணையத்தில் எழுதப்படுவது பெரும்பாலும் பதிவுகள் என்பதால் Blogdom என்ற சொல்லைப் பதிவுலகம் என மொழிபெயர்த்திருக்கின்றனர். பலரும் இதில் சிரமப்பட்டது எனக்கு ஆச்சரியமே.

6.தையலா பெரும்பாலும் இப்பெட்டியை வைத்திருப்பது (2)

தைலா - தையலா என்ற சொல்லின் பெரும்பான்மையாக எழுத்துகளை எடுத்துக் கொண்டால் தைலா என்ற விடை வரும். தைலா என்றால் மரப்பெட்டி எனப் பொருள். தைலாப்பெட்டி என்று கொச்சையாகச் சொல்லுவார்கள். தெரியாத சொல் என்பதால் சிலரே போடுவார்கள் என நினைத்தேன். ஆனால் அகராதியின் துணை கொண்டு பலரும் சரியாகச் சொன்னது வியப்பே!

7.அழுத்தி வசம்பினைத் தடவிய பாட்டியை இன்று நினை (4)

திவசம் - முன்னோர்களை நினைவில் கொள்ளும் தினம். அழுத்தி வசம்பினை என்ற இரு சொற்களுக்களின் உள்ளே திவசம் என்ற சொல் ஒளிந்து கொண்டிருக்கிறது.

9.கரங்களில் மீதியின் பாதியை எடுக்க 15க்கு சென்றவர் (4)

கைதிகள் - 15நெ என்ற குறிப்பின் விடை சிறை. அங்கு சென்றவர் கைதிகள். கரங்கள் என்றால் கைகள் அதை நடுவே மீதியின் பாதி அதாவது தி சேர கை’தி’கள் என்ற விடை வரும். சென்றவர் என்பது பன்மை. கரங்கள் என்பதும் பன்மை. எனவே விடை பன்மையாகத்தானே இருக்க வேண்டும். ஆனால் சிலர் இதற்குக் குழம்பினர். சென்றவர்கள் எனச் சொல்லி இருந்தால் இன்னும் எளிமையாக இருந்திருக்கும். ஆனால் வேண்டுமென்றே சென்றவர் என்பதோடு நிறுத்தினேன்.

10.ரமாவும் கோபுவும் சேர்ந்து வல்லிப்புத்தூர் போய் பார்த்தது இதையா (4)

கோபுரமா - கோபு,ரமா என்ற இரு பெயர்களின் எழுத்துகளைச் சேர்த்தால் கோபுரமா என்ற விடை வரும். வல்லிப்புதூரின் சிறப்புகளில் ஒன்று கோபுரம். இதையா என குறிப்பை முடித்ததால் விடை கோபுரமா என வர வேண்டும்.

12.முன் பாதி பயிறு முழுவதும் படித்துப் பார் (4)

பயின்று - முன் என்ற சொல்லின் பாதி ன். பயிறு என்ற சொல்லோடு இணைத்தால் பயின்று என விடை வரும். படித்துப் பார் என்ற பொருள்.

13.போதும் என்றபின் வேறென்ன வேலை, இடைவெட்டிச் சென்றிடுவீர் (2)

போம் - செல்லும், சென்றிடுவீர் என்பதற்கு இணையான சொல். போதும் என்ற சொல்லின் இடையை வெட்ட போம் வரும்.

14.சகோதரி தலை முடிந்து மைதாஸின் பெண் ஆனாள் (6)

தங்கச்சிலை - சகோதரி என்ற சொல்லிற்கு இணையாக தங்கச்சி என்ற சொல். தலை முடிந்து என்பதால் லை என்ற எழுத்து சேர தங்கச்சிலை என்றாகும். மைதாஸ் தான் எதைத் தொட்டாலும் தங்கமாக வேண்டும் என்ற வரம் வாங்கிய பின் தன் பெண்ணைத் தொட அவள் தங்கச்சிலை ஆனது கதை.

நெடுக்காக:

1.அறிவுக்கு மரியாதை கொடு (2)

மதி - அறிவு, மரியாதை என்ற இரு வித அர்த்தங்களும் கொண்ட சொல் மதி.

2.படகினுள்ளே கந்தன் தலையெடுத்து வீசியதால் வந்த குழப்பம் (4)

கலகம் - படகு என்ற பொருள் வரும் மற்றொரு சொல் கலம். கந்தன் என்ற சொல்லின் முதல் எழுத்து, அதாவது தலை க. கலத்தின் உள்ளே க என்ற எழுத்தை வீசினால் குழப்பம் என்ற பொருள் தரும் கலகம் வரும்.

3.ஐயராத்துப் பையன் கரத்தில் அம்மனைப் பார் (4)

அம்பிகை - பிராமணக் குடும்பங்களில் பொதுவாக பையனை அம்பி என அழைப்பார்கள். கை என்பதை குறிக்க கரம் குறிப்பில் வந்ததுள்ளது. அம்பிகை என சேர்த்தால் அம்மன் என்ற சொல்லைப் பார்க்கலாம்.

4.பீமனின் ஆயுதம் விளையும் இடமா புனைவு நடந்த இடம்(6)

கதைக்களன் - பீமனின் ஆயுதம் கதை. விளையும் இடம் களன். கதைக்களன் என்பது ஒரு புனைவின் தளத்தினைக் குறிக்கும். விளையும் இடம் என்பதற்குப் பலரும் களம் என்று சொல்லி இருந்தனர். அதனால் 12கு போட கஷ்டப்பட்டனர். களன் என்பது களம் என்பதைக் குறிக்கும் மற்றொரு சொல் ஆகும்.

8.வந்து முதற்கடையில் அம்புகள் தலைஇழந்து சலசலப்பு (3,3)

வம்பு தும்பு - வந்து என்ற சொல்லின் முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் வ மற்றும் து. அம்புகள் தலை இழந்தால் ம்பு எனக் கிடைக்கும். வ-ம்பு, து -ம்பு என இரு முறை ம்பு என்ற எழுத்துகள் இணைப்பட வேண்டி இருந்ததால் அம்புகள் என பன்மையில் குறிப்பிட்டேன். வம்பு தும்பு என்ற சொல்லுக்கு நேர் குறிப்பாக வருவது சலசலப்பு.

11.ஏமாந்தவர் அனேகமாய், ஏன் மொத்தமே, இவர்தாம் (4)

மாந்தர் - ஏமாந்தவர் என்ற சொல்லில் பெரும்பாலான எழுத்துகளைக் கொண்டே மாந்தர் என்ற விடை வருகிறது. அதனால் அனேகமாய் என்று குறிப்பில் சொன்னேன். ஏமாறுபவர் அனைவரும் மனிதர்தானே.

12.பொன் தலை மாறக் கேடு (4)

பங்கம் - தங்கம் என்பது பொன்னைச் சொல்ல மற்றுமொரு சொல். இதை தலை எழுத்து மாறி, கேடு எனப் பொருள் கொண்ட பங்கம் என்ற சொல் வரும்.

15.சில்லறைத் திருட்டை ஆதியோடந்தமாய்ப் பிடித்ததால் போக வேண்டிய இடம் (2)

சிறை - சில்லறை என்ற சொல்லின் முதல் மற்றும் கடைசி எழுத்துகளை எடுத்துக் கொண்டால் சிறை என்ற விடை கிடைக்கும். திருடியவர்கள் மாட்டிக் கொண்டால் போக வேண்டிய இடம் தானே!