Wednesday, February 01, 2012

புதைபுதிர் விடைகள் - பண்புடன் சிறப்பிதழுக்காக செய்தது

வெகு நாட்கள் கழித்துப் போடப்பட்ட புதிர் என்பதாலோ என்னவோ பல பழைய நண்பர்களைக் காணோம். ஆனால் புதியவர்கள் நிறைய பேர் முயற்சி செய்தது மகிழ்ச்சியாக இருந்தது.

ஒவ்வொருவரும் எவ்வளவு விடைகள் போட்டார்கள் என கணக்கு வைக்கவில்லை. எல்லா விடைகளையும் சொல்லி இருந்தவர் பலர். அனைவருக்கும் வாழ்த்துகள்.

விடைகள் நிரப்பப்பட்ட கட்டம் இதுதான்.



இனி குறிப்புகளோடு விடைகளை இணைத்துப் பார்க்கலாம்.

குறுக்காக:

5.கணவர்களே இணையத்தில் எழுதுவதால் இப்பெயரோ (6)

பதிவுலகம் - பதி என்றால் கணவர். பதிகளின் உலகம் பதிவுலகம் எனச் சொல்லலாம். இணையத்தில் எழுதப்படுவது பெரும்பாலும் பதிவுகள் என்பதால் Blogdom என்ற சொல்லைப் பதிவுலகம் என மொழிபெயர்த்திருக்கின்றனர். பலரும் இதில் சிரமப்பட்டது எனக்கு ஆச்சரியமே.

6.தையலா பெரும்பாலும் இப்பெட்டியை வைத்திருப்பது (2)

தைலா - தையலா என்ற சொல்லின் பெரும்பான்மையாக எழுத்துகளை எடுத்துக் கொண்டால் தைலா என்ற விடை வரும். தைலா என்றால் மரப்பெட்டி எனப் பொருள். தைலாப்பெட்டி என்று கொச்சையாகச் சொல்லுவார்கள். தெரியாத சொல் என்பதால் சிலரே போடுவார்கள் என நினைத்தேன். ஆனால் அகராதியின் துணை கொண்டு பலரும் சரியாகச் சொன்னது வியப்பே!

7.அழுத்தி வசம்பினைத் தடவிய பாட்டியை இன்று நினை (4)

திவசம் - முன்னோர்களை நினைவில் கொள்ளும் தினம். அழுத்தி வசம்பினை என்ற இரு சொற்களுக்களின் உள்ளே திவசம் என்ற சொல் ஒளிந்து கொண்டிருக்கிறது.

9.கரங்களில் மீதியின் பாதியை எடுக்க 15க்கு சென்றவர் (4)

கைதிகள் - 15நெ என்ற குறிப்பின் விடை சிறை. அங்கு சென்றவர் கைதிகள். கரங்கள் என்றால் கைகள் அதை நடுவே மீதியின் பாதி அதாவது தி சேர கை’தி’கள் என்ற விடை வரும். சென்றவர் என்பது பன்மை. கரங்கள் என்பதும் பன்மை. எனவே விடை பன்மையாகத்தானே இருக்க வேண்டும். ஆனால் சிலர் இதற்குக் குழம்பினர். சென்றவர்கள் எனச் சொல்லி இருந்தால் இன்னும் எளிமையாக இருந்திருக்கும். ஆனால் வேண்டுமென்றே சென்றவர் என்பதோடு நிறுத்தினேன்.

10.ரமாவும் கோபுவும் சேர்ந்து வல்லிப்புத்தூர் போய் பார்த்தது இதையா (4)

கோபுரமா - கோபு,ரமா என்ற இரு பெயர்களின் எழுத்துகளைச் சேர்த்தால் கோபுரமா என்ற விடை வரும். வல்லிப்புதூரின் சிறப்புகளில் ஒன்று கோபுரம். இதையா என குறிப்பை முடித்ததால் விடை கோபுரமா என வர வேண்டும்.

12.முன் பாதி பயிறு முழுவதும் படித்துப் பார் (4)

பயின்று - முன் என்ற சொல்லின் பாதி ன். பயிறு என்ற சொல்லோடு இணைத்தால் பயின்று என விடை வரும். படித்துப் பார் என்ற பொருள்.

13.போதும் என்றபின் வேறென்ன வேலை, இடைவெட்டிச் சென்றிடுவீர் (2)

போம் - செல்லும், சென்றிடுவீர் என்பதற்கு இணையான சொல். போதும் என்ற சொல்லின் இடையை வெட்ட போம் வரும்.

14.சகோதரி தலை முடிந்து மைதாஸின் பெண் ஆனாள் (6)

தங்கச்சிலை - சகோதரி என்ற சொல்லிற்கு இணையாக தங்கச்சி என்ற சொல். தலை முடிந்து என்பதால் லை என்ற எழுத்து சேர தங்கச்சிலை என்றாகும். மைதாஸ் தான் எதைத் தொட்டாலும் தங்கமாக வேண்டும் என்ற வரம் வாங்கிய பின் தன் பெண்ணைத் தொட அவள் தங்கச்சிலை ஆனது கதை.

நெடுக்காக:

1.அறிவுக்கு மரியாதை கொடு (2)

மதி - அறிவு, மரியாதை என்ற இரு வித அர்த்தங்களும் கொண்ட சொல் மதி.

2.படகினுள்ளே கந்தன் தலையெடுத்து வீசியதால் வந்த குழப்பம் (4)

கலகம் - படகு என்ற பொருள் வரும் மற்றொரு சொல் கலம். கந்தன் என்ற சொல்லின் முதல் எழுத்து, அதாவது தலை க. கலத்தின் உள்ளே க என்ற எழுத்தை வீசினால் குழப்பம் என்ற பொருள் தரும் கலகம் வரும்.

3.ஐயராத்துப் பையன் கரத்தில் அம்மனைப் பார் (4)

அம்பிகை - பிராமணக் குடும்பங்களில் பொதுவாக பையனை அம்பி என அழைப்பார்கள். கை என்பதை குறிக்க கரம் குறிப்பில் வந்ததுள்ளது. அம்பிகை என சேர்த்தால் அம்மன் என்ற சொல்லைப் பார்க்கலாம்.

4.பீமனின் ஆயுதம் விளையும் இடமா புனைவு நடந்த இடம்(6)

கதைக்களன் - பீமனின் ஆயுதம் கதை. விளையும் இடம் களன். கதைக்களன் என்பது ஒரு புனைவின் தளத்தினைக் குறிக்கும். விளையும் இடம் என்பதற்குப் பலரும் களம் என்று சொல்லி இருந்தனர். அதனால் 12கு போட கஷ்டப்பட்டனர். களன் என்பது களம் என்பதைக் குறிக்கும் மற்றொரு சொல் ஆகும்.

8.வந்து முதற்கடையில் அம்புகள் தலைஇழந்து சலசலப்பு (3,3)

வம்பு தும்பு - வந்து என்ற சொல்லின் முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் வ மற்றும் து. அம்புகள் தலை இழந்தால் ம்பு எனக் கிடைக்கும். வ-ம்பு, து -ம்பு என இரு முறை ம்பு என்ற எழுத்துகள் இணைப்பட வேண்டி இருந்ததால் அம்புகள் என பன்மையில் குறிப்பிட்டேன். வம்பு தும்பு என்ற சொல்லுக்கு நேர் குறிப்பாக வருவது சலசலப்பு.

11.ஏமாந்தவர் அனேகமாய், ஏன் மொத்தமே, இவர்தாம் (4)

மாந்தர் - ஏமாந்தவர் என்ற சொல்லில் பெரும்பாலான எழுத்துகளைக் கொண்டே மாந்தர் என்ற விடை வருகிறது. அதனால் அனேகமாய் என்று குறிப்பில் சொன்னேன். ஏமாறுபவர் அனைவரும் மனிதர்தானே.

12.பொன் தலை மாறக் கேடு (4)

பங்கம் - தங்கம் என்பது பொன்னைச் சொல்ல மற்றுமொரு சொல். இதை தலை எழுத்து மாறி, கேடு எனப் பொருள் கொண்ட பங்கம் என்ற சொல் வரும்.

15.சில்லறைத் திருட்டை ஆதியோடந்தமாய்ப் பிடித்ததால் போக வேண்டிய இடம் (2)

சிறை - சில்லறை என்ற சொல்லின் முதல் மற்றும் கடைசி எழுத்துகளை எடுத்துக் கொண்டால் சிறை என்ற விடை கிடைக்கும். திருடியவர்கள் மாட்டிக் கொண்டால் போக வேண்டிய இடம் தானே!

2 comments:

said...

கிட்டத்தட்ட 60% முடித்தபோது, வேறுவேலையாக எழுந்துபோனேன். 'save'/ 'continue' வசதி காணப்படாதால் தொடரவில்லை. இப்போது ஒப்புநோக்குகையில், நான் எழுதியதும், நினைத்ததும் பெருமளவு சரியாக இருந்ததில் மகிழ்ச்சி.

அடுத்த வாய்ப்பில் பார்ப்போம். :)

said...

எப்போதும் நான் வியப்பதுதான். உங்கள் குறுக்கெழுத்து புதிர்கள் வெகு கச்சிதம். நானும் சில சமயம் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு ஏதாவது 'மிகுதி / குறைவு' இருக்கிறதா என்று பார்ப்பேன்.

நீங்கள் இப்பொழுது நிறைய எழுதுவதாக தெரிகிறது. இந்த மாதிரி புதிர்கள் வைத்து அருமையாக ஒரு கதை ஏன் எழுதக் கூடாது? பிரமாதமாக வரும்.