விநாயக சதுர்த்தி!
அப்பமும் கொழுக்கட்டையுமாக அமோகமாக கொண்டாட வேண்டிய நாள். சின்னக் குழந்தைகளுக்கு எல்லார் வீடுகளிலும் கைத்தல நிறைகனி அப்பமொடவல் பொரி என சொல்லித் தந்து அதைப் பாடச்சொல்லி படுத்தும் நாள். அதையே வாரியார் பாடக் கேட்டால் அந்தக் குழந்தைக்கும் பாட ஆசை வந்துவிடும். ஆனால் எனக்கு அதைவிட பாலும் தெளிதேனும்தான் பிடிக்கும். காரணம் அது வெண்பா வடிவத்தில் அமைந்தது என்பதைச் சொல்லவும் வேணுமா? (அப்பாடா, சொல்லியாச்சு. எப்படி எல்லாம் செய்ய வேண்டியதா இருக்கு!)
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.
இந்தியாவில் விடுமுறை, விடிந்தது முதல் ட்விட்டர் டைம்லைனில் பிள்ளையாருக்குப் பிறந்த நாள் வாழ்த்து விழுந்து கொண்டே இருக்கிறது. சும்மா இருக்க முடியுமா சோதியில் ஐக்கியம் ஆக வேண்டியதுதான் என நினைத்து ஒரு வெண்பா எழுதினேன்.
அந்தப் பழமோ அவனுக்கே போகட்டும்
வந்த பொரியைநீ வாங்கியே போட்டுக்கோ
மந்தமென் புத்திதான் மன்னித்து நீயருள்
தொந்தி கணபதியே கா!
நல்ல நாளும் அதுவுமா அண்ணன் தம்பி சண்டையைத் தீர்த்து வைக்கலாமே என்ற நல்லெண்ணத்தில் கொஞ்சம் சமரசம் பேசிப் பார்த்தேன். ரெண்டு பேரும் ராசியானா அப்பா அம்மா அண்ணன் தம்பின்னு எல்லாரும் சேர்ந்து ஆசீர்வாதம் பண்ணுவாங்களே!
எழுதினதைப் படிச்சவங்க யாரும் ஏண்டா கணபதியோட கா விடறன்னு கேட்டுடக் கூடாதேன்னு கொஞ்சம் டென்ஷன்தான். இன்னிக்குத்தான் கான்னு சொன்னா சண்டை போட்டுட்டு பேச மாட்டேன்னு போறதுதான் அர்த்தம்ன்னு ஆகிப்போச்சு. தமிழில் கான்னு சொன்னா காப்பாற்று, காவல் செய்ன்னுதான் அர்த்தம். கொஞ்சம் அப்படி இப்படிப் பார்த்தோம்னா எதிர்பார்த்து இருன்னு கூடச் சொல்லலாம்.
நான் மந்தம்ன்னு சொல்லிட்டதுனால என்னைக் காப்பாற்றுன்னு கேட்கறதாவும் வெச்சுக்கலாம். இல்லை, நான் மந்தம்ப்பா, மெதுவாத்தான் வருவேன். என்னை எதிர்ப்பார்த்து கொஞ்சம் வெயிட் பண்ணு. போயிடாதேன்னும் சொல்லலாம். ’வெயிட்’ பண்ண பிள்ளையாரை விட்டா யாரு இருக்கா!
சச்சின், மடோனாவுக்கு எல்லாம் பத்து வெண்பா எழுதினேன். பெருவுருவம் பிள்ளையார். அவருக்கு ஒரே ஒரு வெண்பா தந்தால் போதுமா? அது ’யானை’ப் பசிக்கு சோளப்பொரி மாதிரி ஆயிடுமேன்னு நினைச்சு, போட்ட வெண்பாவுக்குத் துணையா இன்னும் பத்து வெண்பா எழுதினேன்.
சிநேகக் கடவுள்தான் சிம்பிளான ஆளு
கணேசன் புகழினைக் காண்
அநேகர் மனதில் அவனே வாசம்
கணேசன் புகழினைக் காண்
கார்மண் பிடித்துக் கரிமுகம் பெற்றவன்
பார்வதி பிள்ளையைப் பார்
தேர்வுகள் எல்லாம் திருத்தமாய்ச் செய்யவே
பார்வதி பிள்ளையைப் பார்
பனிபோலக் கஷ்டம் பறந்துமே போக
இனிநீயும் இங்கே இரு
துணிந்திங்கே நான்பல தூரங்கள் தாண்ட
இனிநீயும் இங்கே இரு
நொடித்துமே யாருமிங்கு நோகா திருக்கப்
பிடித்துவைத்த பிள்ளையைப் பார்
இடித்துவைத்த மாவினால் இன்றிங்கு நானும்
பிடித்துவைத்த பிள்ளையைப் பார்
சிலையாக உன்னை சிறைவைத்தேன் நானும்
பிழைபொறு பிள்ளை யாரே
மழையாக எண்ணம் மறந்தேன் பலதை
பிழைபொறு பிள்ளை யாரே
கடைசி ரெண்டு வெண்பாவிலும் கடைசி அசை வெண்பா இலக்கணத்தை மீறி இருக்கு. ஆனா அந்த சந்த சுகம் வேற என்ன போட்டாலும் வரலை. அதனால நம்ம பிள்ளையார்தானேன்னு அப்படியே போட்டுட்டேன். பிழை பொறுப்பான் பிள்ளையாரவன்.
ஹேப்பி பர்த்டே பிள்ளையாரே!
2 comments:
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...
சிநேகக் கடவுள்தான் சிம்பிளான ஆளு
கணேசன் புகழினைக் காண்//
நம்ம ஆருயிர் நண்பரோடு நான் சிநேகிதமா இருக்கிறதைப் பார்த்து எத்தனை பேருக்குப் புகை வருதுப்பா! :P:P:P:P இது வரைக்கும் பதிவு போடாதவங்கல்லாம் பதிவு போடறாங்க! :P:P:P:P
Post a Comment