Monday, October 01, 2012

ட்விட்டரில் இன்றைய கட்டளை - கலித்துறை

தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனைப் பார்த்து வேதாளம் கேட்பது போல @nchokkan இன்று ட்விட்டரில் ஆரம்பித்து வைத்த விளையாட்டு கட்டளைக் கலித்துறை. 

சும்மா இருக்காம மனுசர் ஒரு போஸ்ட்டே போட்டுட்டார் - https://nchokkan.wordpress.com/2012/10/01/twtr/ . பதினாறு, பதினேழு என எண்ணி எழுத வேண்டிய மேட்டர், தனக்கு ஒன்றரை வரிகூட தாண்ட முடியவில்லைன்னு எல்லாம் வேற எழுதிட்டார்.

எண்ணி எழுதிட இங்குமே தேவை இருப்பதில்லை
தண்ணியும் பட்டது போல்தான் இதுவும் உனக்கினியே
கண்ணி தொடர்ந்திடும் கண்ணியாய்ச் சொற்களைக் கொண்டுநீயும்
கண்ணா எழுதிக் குவிப்பாய் கலித்துறை கட்டளையே!

அப்படி எல்லாம் கஷ்டப்படாமல் எழுத வேண்டிய மேட்டராச்சே. இதுக்குப் போயி அலட்டிக்கலாமா? என்னய்யா இதுன்னு ரெண்டு கேள்வி கேட்கவும்

கலித்துறைப் பாஅது கஷ்டமே இல்லை எளிதெனவே
சலிப்பது இன்றிச் சகலமும் சொல்லி விளக்குகிறீர்
மலிவறு பாக்கள் மழையெனப் பெய்து இணையமெங்கும்
ஜொலித்திடச் செய்கிறேன், ஜோராய் விஷயம் புரிந்ததுவே!

அப்படின்னு சடார்ன்னு ஒரு பாட்டை எடுத்து விட்டாரு. அப்போதான் அப்பாடான்னு கொஞ்சம் நிம்மதி ஆச்சு. 

சரி, அது என்ன கட்டளைக் கலித்துறை கொஞ்சம் வெவரமாத்தான் சொல்லேன்னு கேட்கறவங்களுக்காக இந்தப் பதிவு. இது பத்திப் படிக்கிறதுக்கு முன்னாடி தெரிஞ்சுக்க வேண்டிய மேட்டர் கொஞ்சம் இருக்கு. இந்த மாதிரி மரபுக் கவிதை எதுவானாலும் இது எல்லாம் கொஞ்சம் அடிப்படை மேட்டர். 

அதுல முதலாவது தளை. ஒரு சொல் எந்த மாதிரியான சொல், அதை எப்படிப் பிரிக்க முடியும். எந்த சொல்லுக்குப் பின்னாடி எந்த சொல் வரலாம் அப்படின்னு கொஞ்சம் பொதுப்படையான விதிகள். அதே மாதிரி இந்த மரபுக் கவிதைகள் எல்லாத்துக்குமே ஒரு நல்ல சந்தம் இருக்கும், அதாவது சத்தம் போட்டுப் படிச்சா அது ஒரு தாளத்தில் வர மாதிரி. இது சரியா வரணும்ன்னா எதுகை மோனை பத்திக் கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டா நல்லது. 

தளை பத்தி நான் முன்னாடியே ரெண்டு பதிவு எழுதி இருக்கேன். அதை ஒரு பார்வை பார்த்துக்குங்க -

http://wikipasanga.blogspot.com/2007/01/1.html 

http://wikipasanga.blogspot.com/2007/01/2.html

இதையும் விட இன்னும் புரிய மாதிரி விவரமா வேணுமானா நீங்கள் போக வேண்டிய இடம் - https://www.nhm.in/shop/978-81-8493-484-7.html ஹிஹி! 

சரி விளம்பர இடைவேளைக்குப் பின்னாடி திரும்ப இன்னிக்குள்ள கட்டளைக்கு வரலாம். தளை, எதுகை, மோனை எல்லாம் ஒரு அளவுக்குத் தெரிஞ்சாச்சு. எனக்கு இப்போ கட்டளைக் கலித்துறை டைப் பா ஒண்ணு எழுதணும்பா. அதுக்கு என்ன ரூல்ஸ்? 

  1. மொத்தம் நாலு அடிகள், அதாங்க வரிகள் எழுதணும் 
  2. ஒவ்வொரு வரியிலும் அஞ்சு வார்த்தை, சரியாச் சொல்லணும்ன்னா சீர்கள், இருக்கணும்
  3. முதல் நாலு வார்த்தை இரண்டு அசைகள் கொண்டதாய் இருக்கணும் 
  4. அஞ்சாவது வார்த்தை விளங்காய் அப்படிங்கிற பார்முலாப் படி இருக்கணும்
  5. கடைசி அடியோட கடைசி வார்த்தை தலைவரே, தோழரே ரேஞ்சில் ஏகாரத்தில் முடியணும்
  6. ஒரு வரிக்குள்ள தளை தட்டாம இருக்கணும் 
  7. நாலு அடிகளிலும் முதல் வார்த்தை எதுகையா வரணும்
  8. ஓவ்வொரு வரிக்குள்ளவும் 1,5 அல்லது 1,3,5 வார்த்தைகள் மோனையோட வந்தா நல்லது

அம்புட்டுதான். அதிகமான ரூல் எல்லாம் கிடையாது. ஈசியாப் புரியணுமேன்னு நான் சும்மாப் பிரிச்சுப் பிரிச்சுப் போட்டு இருக்கேன். உதாரணத்துக்கு நம்ம சொக்கன் எழுதினதையே எடுத்துக்கலாம். 

  1. மொத்தம் நாலு அடி, ஒவ்வொரு அடியிலும் அஞ்சு சீர் எல்லாம் ஓக்கேவா இருக்கு
  2. முதல் நாலு சீர் ஈரசைச் சீர்களாவே இருக்கு, கடைசி சீர்கள் நாலுமே கருவிளங்காய்ன்னு சரியா வந்திருக்கு
  3. கலித்துறை, சலிப்பது, மலிவறு, ஜொலித்திட - நாலு முதல் வார்த்தையும் எதுகையோட வந்திருக்கு
  4. புரிந்ததுவே - கடைசி சீர் ஏகாரத்தில் முடியுது
  5. தளை தட்டல் எதுவுமில்லை

அம்புட்டுதானே. கட்டளைக் கலித்துறை வடிவ பா ரெடி. 

அவ்வளவுதானா? அது என்னமோ 16 வருதான்னு எண்ணிப் பாரு, 17 வருதான்னு எண்ணிப் பாருன்னு எல்லாம் சொன்னாங்களே. அது எல்லாம் வேண்டாமான்னு கேட்டா, வேண்டாம்தான். 

முதல் சீர் நேரசையா இருந்து தளை எல்லாம் தட்டாம எழுதினா தானா வரிக்குப் பதினாறு எழுத்து வரும். அதே நிரை அசையில் தொடங்கினாப் பதினேழு எழுத்து வரும். சொக்கன் எழுதினது நிரை அசையில் தொடங்குது. முதல் வரி - கலித்துறைப் பாஅது கஷ்டமே இல்லை எளிதெனவே - இதுல பதினேழு எழுத்து இருக்கான்னு பார்க்கலாமா? க லி து றை பா அ து க ட மே இ லை எ ளி தெ ன வே - 17 இருக்கா? அதான் மேட்டர். ஆமாம். இது எண்ணும் போது மெய்யெழுத்துகளைக் கணக்கில் சேர்த்துக்கக் கூடாது. 

ட்விட்டரில் இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருந்த பொழுதே அண்ணன் @dagalti அருமையான ஒரு ஐட்டத்தோட களத்தில் இறங்கினார். 

வெண்பா விரைவினில் நன்றாய் எழுதிட நன்குருவாய்
என்போல் இளையரும் அன்றே விளங்கிட நூல்படைத்தார்
எண்ணித் துணிகிற செய்யுள் வகையிதை நான்படைக்க
அண்ணன் இலவச கொத்தன் அருளதை வேண்டுவனே

இங்க பாருங்க எல்லா ரூலும் சரியா வந்திருக்கு. இங்க வெண்பா அப்படின்னு நேரசையில் தொடங்கி வரதுனால ஒவ்வொரு அடியிலும் 16 எழுத்துகள்தான் இருக்கும். 

ஏண்டா எப்பவும் சீரியசாவேதான் பேசிக்கிட்டு இருப்பீங்களா? கொஞ்சம் நிகழ்காலத்துக்கு வாங்கடான்னு பெரியண்ணன் @penthal அவர் பாணியில்

பாக்கை மடக்கிப் பகட்டை உணர்ந்திடும் இந்தியாவே
யாக்கை நிலையிலை யார்க்கர் நிலையாய் இருப்பதனால்
சாக்கீர் போட்டால் சரியாய், கவனமாய் ஆளமைத்து
போக்கைத் திருப்பிப் புதுக்களம் கண்டிடு வென்றிடவே

அப்படின்னு கிரிக்கெட் கட்டளைக் கலித்துறை கவிதை ஒண்ணு போட்டார். அது கூடவே என்னமோ பகார்டி ம்யூசிக் சிடியாமே அதுக்கும் ஒண்ணு போட்டார்.

இசைக்காய் விளம்பரம் எத்தனை எத்தனை காட்டுகிறார்
பசையாய் அழகாய் அளவாய் உடுத்திப் படுத்துகின்றார்  
வசையாய் வருகுது வாயில் வெறுப்பொடு வெஞ்சினமாய்
அசையா மதியோ எமக்கு அறிவோம் சரக்கெனவே!

அண்ணன் எவ்வழியோ தம்பி அவ்வழியே என நானும் கவிதைன்னு வந்தாச்சு காதல் இல்லாம எப்படின்னு ஒரு காதல் கவிதை எழுதினேன். 

சிந்திடும் வெண்மணி சிப்பியில் ஆகுமே முத்துகளாய்
அந்தியில் சந்திரன் அற்புதம் செய்யுமே நித்திலமாய்
சந்தினில் வந்து சடுதியில் சென்றிடும் உன்முகமோ
எந்தன் மனத்தினை எப்படி வாட்டுது கண்மணியே

வெண்பாவை ஒரு வழி பண்ணியே தீருவேன் என ஒத்தைக் காலில் நிற்கும் அன்பர் @psankar அவர் பங்குக்கு 

வானுறை தேவரை வெட்கிடச் செய்திடும் வில்லவனே தேனுறை வீணையில் துள்ளிசை பாடிடும் வல்லவனே மானிழைக் கண்ணியை மாசறு பொன்னென காப்பவனே  ஊணினை வாட்டிடும் உன்னதக் காதலன் ராவணனே

அப்படின்னு எழுதி ராவணனை எல்லாம் சபைக்குக் கூப்பிட்டு அமர்க்களம் செய்தார். ஆன்மிகச் செம்மல் @graghavan அவர் பாணியில் 

தாளென் பதும்அமை தோளென் பதுங்கையில் போர்பழகு
வாளென் பதும்வர வாலென் அயர்வினைப் போக்கிடுது
சூர்மா தடிசூலச் சீரின் குளிரொடு பார்விழியின்
தார்மா லைபுணையுந் தேருறை அருள்நிறை பார்கவியே!

இதுல பார்த்தா ‘லைபுணையுந்’ என்ற மூவசை சீர் நடுவில் வந்திருக்கு. இது பெரும்பாலும் தவிர்க்க வேண்டிய ஒன்று. அப்படியே வந்தாலும் தேமாங்காய் அல்லது புளிமாங்காய் பார்முலாவுக்குள்ள இருக்கணும். அப்புறம் இந்த மாதிரி வார்த்தகளை வெட்டாமல் இருப்பதும் நல்லது. கட்டளைக் கலித்துறை மேட்டர் இவ்வளவுதான். கொஞ்சம் முயற்சி செஞ்சா ஈசியாவே எழுதிடலாம்.

ஆனா ஒண்ணு சொல்லிடறேன். வெண்பா எழுதும் போது வர ஒரு spontaneity ஆகடும், அதோட சந்த அழகும் ஆகட்டும் வேற எந்த பாவகையிலும் இல்லை.

என்ன இருந்தும் எழுதிநான் தந்திடுவேன்

வெண்பா அழகே அழகு  

 

Posted via email from elavasam's posterous

1 comments:

said...

யோவ் கொத்ஸ்,
உமது வெண்பா புத்தகம் பற்றியும், நீரும் கணக்கர் என்பதையும் இன்றுதான் அறிய நேர்ந்தது..

முன்னதற்கு வாழ்த்துகளும் பின்னதற்கு நன்றியும்..

ஏன் நீ(ர்)ரும் எழுத்துப் பிழைகள் பற்றி ஓயாது எல்லாப் பதிவுகளிலும் சுட்டுகிறீர் என்பதற்கான ஒரு காரணத் தெளிவு ஏற்பட்டது.

மகிழ்ச்சி. :))