Thursday, December 27, 2012

தத்தும் தத்துவம் தத்தித்தித்தோம்....


தத்தோம் தளாங்கு தத்தோம் எனத் தொடங்கும் பாடல் பற்றிய விவாதம் ஒன்று இன்று ட்விட்டரில் நடைபெற்றது. தொடங்கி வைத்தவர் வழக்கம் போல நண்பர் @nchokkan அவர்கள்தான். இந்தப் பாடலைப் பற்றி அவர் பேசப் போக @kavi_rt இவ்வரிக்கு பொருள் தெரியுமா என்றார்.
சொக்கன் கில்மாச் சத்தமா என்று கேட்க, மனதொடிந்த கவிராஜன் ஒரு படத்தினைப் ( https://twitter.com/kavi_rt/status/284343589809569793/photo/1 ) போட்டு இதற்கு ’Magic of the tinkling anklet' என்ற ஒரு அரிய பொருளைக் கொடுத்து சிரித்து வைத்தார். ஆனால் பாடலை எழுதியவர் வாலி. அவர் இப்படி வெற்று வார்த்தைகளைப் போட்டு எழுதி இருப்பாரா என்று இருவரும் சிறிதும் எண்ணியும் பார்க்கவே இல்லை.
வைணவ வாலி என்றுமே சைவத்தின் பால் பெரும் பற்று கொண்டவர். ஒரு மான் மழுவும் சிறுகூன் பிறையும் என்றஅருமையான வரிகளைத் தந்தவர். அவர் வெற்று வார்த்தைகளைப் போட்டு எழுதி இருப்பாரா? இல்லவே இல்லை, இந்த வரியில் ஒரு பெரும் தத்துவத்தை அல்லவா அடக்கி இருக்கிறார். அப்படி என்ன பொருள்? பார்க்கலாம்.
தத்தோம் தளாங்கு தத்தோம் - தோம் என்றால் குற்றம். தத்தோம் என்றால் தம் குற்றங்களை என்று எடுத்துக் கொள்ள வேண்டும். தளாங்கு என்பது மெட்டுக்காக சற்றே திரித்து எழுதப்பட்ட வார்த்தை. தாளங்கு என்பதைத்தான் தளாங்கு என்று எழுதி இருக்கிறார். தாள் என்றால் பாதம் என்பது நாம் அறிந்ததே. அது இங்கு இறைவனின் மலரடிகளைக் குறிப்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி. கடைசியாக வரும் தத்தோம் என்பதை தத்து + ஓம் எனப் பிரிக்க வேண்டும். தத்து கொடுப்பது என்பது முற்றாகத் தந்துவிடுவது. அதாவது தம் குற்றங்களை இறைவனின் அடிகளிலே சமர்ப்பிக்க வழி ஓம் என்ற பிரணவ மந்திரம்.
இந்த பெரும் தத்துவத்தினையே தத்தோம் தளாங்கு தத்தோம் என்று தந்திருக்கிறார் காப்பியக் கவிஞர் வாலி. இந்தப் பாடலில் தொடர்ந்து பட்டும் படாமல் பட்டோம், இமயத்தின் முடி மட்டும் என்றெல்லாம் சொல்வது இக்கருத்தினை மேலும் பலப்படுத்துவதாகவே அமைகிறது.
இரவில் உன்னோடு நர்த்தனம்தான் இடையில் உண்டாகும் சத்தம் என்ற வரியை எடுத்துக் கொண்டால் இரவில் - பிச்சையில், நர்த்தனம் - ஊழித்தாண்டவம் என்று பதம் பிரிக்கத் தொடங்கினால் கட்டுரை இன்னும் நீளமாகப் போகும் அபாயம் இருப்பதால் இந்தப் பாடல் வெறும் கில்மா பாடல் அல்ல, சைவ சமய சித்தாந்தத்தைப் பிழிந்து தரும் ஒரு தத்துவ பாடல் என்று மீண்டும் வலியுறுத்தி முடித்துக் கொள்கிறேன்.
நன்றி.

2 comments:

said...

ஏங்க ஏன் இப்படியெல்லாம் ....?
ஸ்ஸ்பா, முடியல ...

said...

y this kolaveri?

Happy new year to you and your family.

-Arasu