Friday, January 04, 2013

நிறுத்தணும்! எல்லாத்தையும் நிறுத்தணும் - 1!


வழக்கம் போல இந்தப் பதிவுக்கும் காரணம் அண்ணன் @nchokkanதான். எங்கேயோ வெளியாகியிருந்த ஒரு ஆங்கிலக் கட்டுரையை அனுப்பி இது மாதிரி தமிழிலும் செஞ்சா என்னன்னு கேட்டு இருந்தாரு. இது மாதிரி அவர் நிறைய கேப்பார். ஆனாலும் நமக்கு வசதி எதுவோ அதைத்தான் எடுத்துக்கறது. அடிக்கடி கண்ணில் படும் இலக்கண / எழுத்துப்பிழைகள் என்பதே அந்தக் கட்டுரையின் சாராம்சம். 
தமிழில் நம்ம கண்ணில் படறது ஒண்ணா ரெண்டாய்யா இப்படி எல்லாம் தொகுத்துப் பட்டியல் போட என்று தட்டிக் கழித்தாலும் இது மாதிரி செஞ்சா என்ன அப்படின்னு உறுத்திக்கிட்டே இருந்தது. இது போல மேட்டரை அடிக்கடி ட்விட்டர்லே செய்யறதாலேயே நிறையபேர் என்னை அன்ஃபாலோ பண்ணிட்டாங்க. அன்பாலே சொன்னதற்கு அன்பாலோ நியாயமா? இருந்தாலும் என் பணி கடன் செய்து கிடப்பதே!
நினைத்த மாத்திரத்தில் அடிக்கடி பார்த்ததாய் தோன்றும் பத்து தவறுகளின் பட்டியல் இது. பொதுவாக, நம்ம மக்கள் ஃபேஸ்புக் ட்விட்டர்லே எழுதற வார்த்தைகளை மட்டும்தான் எடுத்துகிட்டிருக்கேன். ஆசையோடதான் எல்லாரும் தமிழ் எழுதறாங்க, சரி, அதுக்காக படிக்கறவங்க கண்ணை ஏன் குத்தணும்? அதைக் கொஞ்சம் சரியா எழுதப் பார்க்கலாமே.  

கண்ணில் படுவது: அதற்க்கு / முயற்ச்சி
எழுத வேண்டியது: அதற்கு / முயற்சி

ரொம்ப சிம்பிளான மேட்டர்ப்பா. ற் வந்தா அதுக்குப் பின்னாடி வேற புள்ளி வெச்ச எழுத்து வரக்கூடாது. அதற்கு, இதற்கு, முயற்சின்னு எழுதணும். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் முயற்சி முயற்ச்சி ஆகாது. இது க்,ச்,ட்,த்,ப் - எல்லா வல்லின மெய்களுக்குமே பொருந்தும்.  

கண்ணில் படுவது: பின்ணணி / பிண்ணணி 
எழுத வேண்டியது: பின்னணி

இணையத்தில் நம்ம ஆட்கள் அதிகம் பேசுவது சினிமாவும் சினிமா இசையும்தான். அதிலும் புதுசா படம் வந்தாலோ, தம் ஆதர்ச இசையமைப்பாளர் பத்தியோ பேச ஆரம்பிச்சா முதலில் வருவது இந்தப் பின்னணி இசைதான். ஆனா அதை பிண்ணணி, பின்ணணின்னு எழுதி நாராசமாக்கிடறாங்க. அணின்னா அலங்காரம். முன்னாடி நடிகர்கள் காட்சிகள் இருந்தாலும் பின்னாடியே இருந்து அழகு செய்யும் இசை என்பதால் அது பின்+அணி = பின்னணி இசை. அதை சின்ணாப்பிண்ணமா, ச்சே சின்னாப்பின்னமா ஆக்கிடாதீங்கப்பா. 

கண்ணில் படுவது: விமர்சணம்
எழுத வேண்டியது: விமர்சனம் 

நம்ம ஊரில் ஒரு கலாச்சாரம் உண்டு. சுவரில் ஒட்டி இருக்கும் போஸ்டர் பிடிக்கலைன்னா அது மேல சாணி அடிப்பாங்க. பெரும்பாலான விமர்சனங்கள் குறைகளையே சொல்லி வருதா, ஒரு வேளை அதனாலதான் அதை விமர்சாணம், ச்சே, விமர்சணம்ன்னு எழுதிடறாங்களோன்னு ஒரு சந்தேகம். விமர்சனத்தின் கனம் எவ்வளவு கூடினால்கூட விமர்சணம் ஆகாது! நோ விமர்சணம். 

கண்ணில் படுவது: சுவற்றில் / கிணறில் 
எழுத வேண்டியது: சுவரில் / கிணற்றில் 

போஸ்டர்ன்னு சொன்ன உடனேதான் ஞாபகத்திற்கு வருது. சுவரில்ன்னு எழுத வேண்டிய இடங்களில் சுவற்றில்ன்னு எழுதினா இலக்கியத்தரமா இருக்குன்னு சில பேர் செய்யறாங்க. அதுல ஒரு தரமும் இல்லை தப்புதான் இருக்கு. கிணறு உ-ன்னு முடியுது. அதனால கிணறு+இல் என்பது கிணற்றில்ன்னு ஆகுது. ஆனா சுவரு இல்லை. அது சுவர்தான். சுவர்+இல் என்பது சுவரில்ன்னுதான் வரணுமே தவிர சுவற்றில்ன்னு வரக்கூடாது. 

கண்ணில் படுவது: பொருப்பு
எழுத வேண்டியது: பொறுப்பு

ரகர றகர கன்ப்யூஷந்தான். பொறுப்போட எழுதணும், பொறுப்பில்லாம இருக்காதேன்னு சொல்லணும். புரியற மாதிரி சொல்லணும்ன்னா சின்ன பொறுப்பு, பெரிய பொறுப்புன்னு வித்தியாசம் எல்லாம் கிடையாது. பொறுப்புன்னு வந்துட்டாலே அது பெரிய விஷயம்தான். அதனால றகரம்தான் போடணும். பொருப்புன்னா மலை.

”செருப்புக்குத் தோல் வாங்கி வந்தாயே, என் பொருப்புக்கு என்ன வாங்கிவந்தாய்” - இது யாரோ தமிழ்லே விளையாடின காதலி, வீரன் கிட்ட கேட்ட கேள்வியாம். மீனிங்: செரு - போர். போருக்குப்போய் தோல் (யானையைக்) கொன்றாயே, என் கழுத்துக்கு (இடக்கரடக்கல்பா) என்ன வாங்கி வந்தாய்ன்னு அர்த்தம். எந்நேரமும் பொருப்பைப் பத்திப் பேசறது பொறுப்பில்லை :-)

கண்ணில் படுவது: சில்லரை
எழுத வேண்டியது: சில்லறை

வாங்கறதைப் பத்திப் பேசினா உடனே அடுத்து நம்ம ஞாபகத்துக்கு சில்லறைதான் வருது. ஒரு முழு நோட்டை மாத்தினா வருவது சில்லறை. அறைன்னா துண்டுன்னு ஒரு அர்த்தம் உண்டு. சில அறைகள் என்பதையே சில்லறைன்னு சொல்லறோம். அரைன்னா பாதி. நோட்டைக் கிழிச்சா ரெண்டு பாதிதான் கிடைக்கும். சில என்பது ரெண்டுக்கும் மேல இல்லையா, அதனால சில்லரைன்னு சொன்னா சில அரைகள், அதாவது, எதோ ஆயிரம் குடு பத்தாயிரம் தரேன் ரேஞ்சு மோசடியா ஆயிரும். அது நமக்கு வேண்டாம். சில்லறைன்னே சொல்லுவோம். சில பிரபல எழுத்தாளர்கள் கூட சில்லரைன்னு எழுதறாங்க. அதான் சோகம். 

கண்ணில் படுவது: அருகாமையில் 
எழுத வேண்டியது: அருகில் 

பிரபல எழுத்தாளர்கள்ன்னு சொன்ன உடனே அடுத்த கடுப்பு இந்த அருகாமையில்தான். அருகில்ன்னு எழுதினா சாதாரணமா இருக்குன்னு நினைச்சு அருகாமைன்னு எழுதிடறாங்க. ஆனா அர்த்தம் அநர்த்தம் ஆயிடுது. அறியாமைன்னா தெரியாம இருக்கறது. போதாமைன்னா போறாம இருக்கிறது. அப்போ அருகாமைன்னா அருகாம இருக்கிறதுதானே. அருகுன்னா சமீபம். அப்போ அருகாமைன்னா அருகில் இல்லாமல் தள்ளி இருக்கிறது, அதை அருகில் என்ற பொருளில் சொல்லலாமோ? சொல்லறாங்க. நாம சொல்லாம இருப்போம். 

கண்ணில் படுவது: கோர்த்து
எழுத வேண்டியது: கோத்து

அதே இலக்கிய வாசம் மேட்டர்தான் இதுவும். கோ - இந்த ஒத்த எழுத்துக்கு தமிழில் ஏகப்பட்ட அர்த்தம் இருக்கு,.பசு, அரசன், ஆண்டவன், இந்திரன், சுவர்க்கம், ஆகாயம், பூமி, தரி, தவிர்ன்னு சொல்லிக்கிட்டே போகலாம். ஏன் இப்படி ஒரு முக்கியம் இந்த எழுத்துக்குன்னு தெரியலை. ஆனா தொடுக்கிறது என்ற பொருளும் உண்டு. கோவை என்றால் தொடுத்தல் என்று பொருள். அதனால கோக்கவோன்னுதான் கேட்கணும். கோர்க்கவோன்னு சொல்லறது சரி இல்லை. துரியோதனனே சொன்னாலும் தப்பு தப்புத்தான் - http://www.youtube.com/watch?v=n4MyXUWNxv0#t=56m20s

கண்ணில் படுவது: முயற்சிக்கிறேன்
எழுத வேண்டியது: முயல்கிறேன் 

ஆகக் கடுப்பேத்தும் விஷயம் இது. முயல், முயலல், முயற்சி. இதைச் செய்யும் போது முயன்றேன், முயல்கிறேன், முயல்வேன்னு சொல்லணும். இல்லை முயற்சி செய்தேன் / செய்கிறேன் / செய்வேன். முயற்சிக்கிறேன்னு எல்லாம் சொல்லக் கூடாது. முயல் ஒண்ணு வந்து நானே சிக்கிக்கிறேன்னு சொன்னா வேணா முயற்சிக்கிறேன்னு சொல்லிட்டுப் போகட்டும். மனுசங்க நாம சரியாச் சொல்லுவோம். 

கண்ணில் படுவது: ஒரு அழகி
எழுத வேண்டியது: ஓர் அழகி

ஆங்கிலத்தில் யாராவது A, An தப்புப் பண்ணினா சிரிக்கும் மக்கள் தமிழில் ஓர் ஒரு தப்பு பண்ணும் போது கண்டுக்கறதே இல்லை. ஆங்கிலம் தமிழ் ரெண்டுலேயும் அதே லாஜிக்தான். உயிரெழுத்து வந்தா அதுக்கு முன்னாடி ஓர் வரணும். உயிர்மெய் எழுத்து வந்தா ஒரு போடணும். ஓர் அழகி, ஒரு முத்தம், ஒரு வாழ்க்கை, ஓர் ஆப்பு! இங்கிலீஷ்லே கேஜி முடிக்கும்போதே கரெக்டா சொல்ற மேட்டர். இங்க டன் கணக்குல படிச்சவங்களும் தப்பு பண்றோம்!

அப்பாடா அவ்வளவுதானான்னு ரொம்பவே ரிலாக்ஸ் ஆகாதீங்க. அப்பப்போ இந்த மாதிரி ஒரு லிஸ்ட் போடுவேன். இந்த எச்சரிக்கையோட இப்போ நிறுத்திக்கறேன். 

12 comments:

said...

// அதை சின்ணாப்பிண்ணமா, ச்சே சின்னாப்பின்னமா ஆக்கிடாதீங்கப்பா.//

ஹிஹிஹிஹி, மீ த எஞ்சாயிங்!

//முயல் ஒண்ணு வந்து நானே சிக்கிக்கிறேன்னு சொன்னா வேணா முயற்சிக்கிறேன்னு சொல்லிட்டுப் போகட்டும். மனுசங்க நாம சரியாச் சொல்லுவோம்.//

கற்பனை பண்ணிப் பார்த்தேன். விவிசி. தாங்க முடியலை! :)))))))

said...

Fine.

Also attempt the aaytha ezhuthu usage.

said...

எச்சரிக்கை திருத்தங்களுக்கு பாராட்டுக்கள்..

said...

நன்றி..கொத்ஸ்..

"ற்" வந்தால் அதற்கு பின்னாடி புள்ளி வைத்த எழுத்து வரக்கூடாதுன்னு பல வருஷம் முன்னாடி எனக்கு நீங்க சொல்லிக்கொடுத்தீங்க.

இப்பவும் அதை மறக்காமல் கவனமுடன் எழுதறேன்.

said...

Also, diff bet alla and anru.

Attempt.

Mostly abused.

Noticed hardly anyone using the two words correctly.

But the diff s distinct.

Attempt, cant u?

said...

ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி பாடத்தை படித்து/கேட்டு.
ஆமாம் இந்த நாளாச்சு தப்பா? அப்ப நாளாகிவிட்டது?

said...

//பின்னணி//
பின்னிட்டீங்க

//சில்லறை//
எனக்கும் இந்த சில்லறை குழப்பம் இத்தனை நாளா இருந்தது

//அருகாமைன்னா அருகாம இருக்கிறதுதானே//
அருகாமை!!! மன்னிக்கவும் அருமை!!!

//கோர்த்து - துரியோதனனே சொன்னாலும் தப்பு தப்புத்தான்//
அது சரி
இல்ல இல்ல, நீங்க தப்புன்னு சொன்னது சரி

//முயல் ஒண்ணு வந்து நானே சிக்கிக்கிறேன்னு//
மிகவும் ரசித்தேன்

//ஆங்கிலத்தில் யாராவது A, An தப்புப் பண்ணினா சிரிக்கும் மக்கள் தமிழில் ஓர் ஒரு தப்பு பண்ணும் போது கண்டுக்கறதே இல்லை. ஆங்கிலம் தமிழ் ரெண்டுலேயும் அதே லாஜிக்தான். உயிரெழுத்து வந்தா அதுக்கு முன்னாடி ஓர் வரணும். உயிர்மெய் எழுத்து வந்தா ஒரு போடணும்.//
இதற்கு காரணம் நாம் தமிழில் பேசும் முறைதான் என்று நினைக்கிறேன். தாய் மொழியை (இலக்கணம் பாராமல்) வேகமாக பேச முடிவதால் பல பிழைகளை ஊன்றி ஆராயாமல் அப்படியே (பேசுவது போல்) எழுத முனைகிறோம். பிற மொழிகளில் பேசும் போது எச்சரிக்கை உணர்வு மேலிடுவதால் பெரும்பாலும் இத்தகைய தவறுகள் தவிர்க்கபடுகின்றன. தாங்கள் சுட்டிய தவறுகள் சிலவற்றை நானும் செய்திருக்கிறேன். பயனுள்ள பதிவுக்கு நன்றி!

//நிறுத்தணும்! எல்லாத்தையும் நிறுத்தணும்//
கண்டிப்பா முயற்(ர்)சி செய்கிறேன்.

ஆமா, நிறுத்தணும் சரியா அல்லது நிறுத்தனும் சரியா. நிஜமாகவே சந்தேகம் வருது. நான் 'நிறுத்தனும்' ன்னுதான் இதுவரை நினைத்திருந்தேன்.

said...

அப்ப குதிரைக்கு குர்ரம் என்றால் யானைக்கு யற்றம் இல்லையா?????

சினிமான்னதும் நினைவுக்கு வருது சமீபத்தில் வெளிவந்த புதுப்படத்துக்கு திண்ண ஆசையான்னு கேட்டு......

அடப்போப்பா... முடியலை.

said...

பொருப்புன்னா கழுத்தா? புதுசா இருக்கே! மலை அப்படின்னு படிச்சிருக்கேன். விக்கியும் அதுதான் சொல்லுது.

(ச்சே... பொருப்பு-னு கூகிள்-ல தேடினா வர்றதெல்லாம் தப்பான பொறுப்பு)

said...

பொருப்புன்னா கழுத்தா? புதுசா இருக்கே! மலை அப்படின்னு படிச்சிருக்கேன். விக்கியும் அதுதான் சொல்லுது.

(ச்சே... பொருப்பு-னு கூகிள்-ல தேடினா வர்றதெல்லாம் தப்பான பொறுப்பு)

said...

/சின்னாப்பின்னமா ஆக்கிடாதீங்கப்பா/

ப் வருமா?

said...

|| கண்ணில் படுவது: சில்லரை
எழுத வேண்டியது: சில்லறை

வாங்கறதைப் பத்திப் பேசினா உடனே அடுத்து நம்ம ஞாபகத்துக்கு சில்லறைதான் வருது. ஒரு முழு நோட்டை மாத்தினா வருவது சில்லறை. அறைன்னா துண்டுன்னு ஒரு அர்த்தம் உண்டு. சில அறைகள் என்பதையே சில்லறைன்னு சொல்லறோம். அரைன்னா பாதி. நோட்டைக் கிழிச்சா ரெண்டு பாதிதான் கிடைக்கும். சில என்பது ரெண்டுக்கும் மேல இல்லையா, அதனால சில்லரைன்னு சொன்னா சில அரைகள், அதாவது, எதோ ஆயிரம் குடு பத்தாயிரம் தரேன் ரேஞ்சு மோசடியா ஆயிரும். அது நமக்கு வேண்டாம். சில்லறைன்னே சொல்லுவோம். சில பிரபல எழுத்தாளர்கள் கூட சில்லரைன்னு எழுதறாங்க. அதான் சோகம். ||

கொத்ஸ்,
தவறு செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

சில்லரி என்ற சொல்லுக்கு பரல்கள் என்ற பொருள் உண்டு. சில்லரை என்ற சொல் இதிலிருந்து திரிந்ததாகவே இருக்கலாம். சில்லறை என்று அறை'வதுதான் வலிக்கிறது.

சில்லறைதான் சரி என்றால் வேர்ச் சொல் எது சொல்லுங்களேன்.

முயற்சிக்கிறேன் என்பதும் ஏற்றுக் கொள்ளத் தக்கதே.பெயர்சொல்லிலிருந்து வினைச்சொற்களை உருவாக்கிய பல முயற்சிகளை நீங்கள் தடுத்தாக வேண்டும்.(புன்னகை-புன்னகைத்தான்-சுஜாதா!)