Saturday, January 26, 2013

விஸ்வரூபம் - தானே உலகாகி தனக்குள்ளே தானடங்கி


நுணலும் தன் வாயால் கெடும்ன்னு சொல்லுவாங்க. ஆனா ட்விட்டரில் எதையாவது உளறி வைக்க அது சுவாரசியமான கருத்துப் பரிமாற்றமா மாறுது. அதான் ட்விட்டரில் எனக்குப் பிடிச்சது.
இப்படித்தான் பாருங்க, ரெண்டு நாள் முன்னாடி இந்த விஸ்வரூபம் படம் பத்திப் பேச்சு. அப்போ ஒரு நண்பர் விளையாட்டா மகாபாரதத்தில்தானே ஒரிஜினல் விஸ்வரூபம் அதைத் தடை செய்யச் சொல்லி யாரும் போராடலையான்னு சொன்னாங்க. நான் பாரதத்தில் மட்டும்தானா விஸ்வரூபம்? ராமாயணத்தில் கூட இருக்கேன்னு சொல்லி வெச்சேன். எங்கேயோ வாமன ரூபம். இராகவ ரூபம், யாதவ ரூபம்ன்னு மூணு விஸ்வரூபங்கள் பத்திப் படிச்ச ஞாபகம்.
@kekkepikkuni @padmaa @ragavang @nchokkan என நண்பர்கள் அனைவரும் களத்தில் குதிக்க அன்றைய பொழுது (வேறொரு) விஸ்வரூபம் பற்றிப் பேசிக் கழிந்தது. அனுமனும் கூட விஸ்வரூபம் எடுத்ததுண்டு ஆனால் விஷ்ணுவின் விஸ்வரூபமே விசேஷமாகப் பேசப்படுகிறது. ராமருக்கு தான் அவதாரம் என்பது தெரியாதே. பின் எப்படி அவரால் விஸ்வரூபம் எடுக்க முடியும்? விஸ்வரூபம் என்றால் என்ன தெளிவான விளக்கம் வேண்டும் என்றெல்லாம் மிகச் சுவாரசியமாக சென்ற கலந்துரையாடல் அது. அப்பொழுது ராகவன், கண்ணதாசன் விஸ்வரூபம் பற்றிய எழுதியதாகத் தந்த வரிகள்தான் தலைப்பு - தானே உலகாகி தனக்குள்ளே தானடங்கி! எவ்வளவு எளிமையாகச் சொல்லிட்டார் பார்த்தீங்களா?
சரி, விஷயத்திற்கு திரும்ப வருவோம். சமீபத்தில்தானே படிச்சோம் அந்த மூன்று ரூபங்கள் பத்தின்னு தேடிக்கிட்டே இருந்தேன். அப்போதான் நான் செஞ்ச தப்பு தெரிஞ்சது. நான் படிச்சது மூன்று விஸ்வரூபங்கள் இல்லை. மூன்று சிம்மரூபங்கள் பற்றி.
நம்ம எல்லாருக்கும் பிரகலாதன் கதையில் வரும் நரசிம்மர் பத்தி நம்ம எல்லாருக்குமே தெரியும். ஆனா ராமாயணத்தில் யுத்தம் நடக்கும் பொழுது அனுமன் மேல அம்புகளை மழை மாதிரி பொழியும் பொழுது தன் பக்தனுக்குப் பிரச்சினையா என சிம்மமா மாறினாராம் ராமர். அதுக்கு இராகவசிம்மம் அப்படின்னு பேராம். கம்பன் இதைச் சொல்லி இருக்காரான்னு பார்க்கணும்.
மூணாவதா பாரதத்திலும் பீஷ்மர் அர்ஜுனனைக் கடுமையாத் தாக்கும் பொழுது கோபம் வந்த கிருஷ்ணர் சிம்ம அவதாரம் எடுத்து பீஷ்மரைக் கொல்லப் போயிட்டாராம். கிருஷ்ணர்தான் நான் ஆயுதம் ஏந்த மாட்டேன் சண்டை போட மாட்டேன்னு சொன்னாரே. ஆனா இப்படிச் செஞ்சாரா? இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. படிச்சுப் பார்க்கணும்.
இப்படி தன்னோட பக்தனுக்கு எல்லாம் பிரச்சினை வரும் பொழுது சிம்ம அவதாரம் எடுத்ததா நண்பர் ஆர்விஎஸ் எழுதின இந்தப் பதிவுல படிச்சேன். அதைத்தான் விஸ்வரூபம்ன்னு குழப்பிக்கிட்டேன். என் குழப்பத்தினால் நல்லாப் பொழுது போச்சு.
சரி, சிம்மத்தை விட்டுட்டு இன்னமும் விஸ்வரூபத்தையே புடிச்சுக்கிட்டுப் போகலாம். இந்த முறை திரைப்படம். திரைப்படம்தானே, இதுக்கு எதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்? என அதில் அதிக ஆர்வம் இல்லாத எனக்கும் கூட ஆர்வம் வர வைச்சதுதான் இந்த போராட்டம் பண்ணினவங்க செஞ்ச காரியம். உபிச @dynobuoy முதல் நாள் முதல் காட்சிக்கே போகலாம் வான்னு கூப்பிட, கடைசியா முநாமுகா போன படம் எதுன்னு கூட தெரியாத நானும் படம் பார்க்கக் கிளம்பிட்டேன். படம் நல்லாத்தான் இருந்தது. முடிஞ்சதும் இதுக்காடா இம்புட்டு ஆர்ப்பாட்டம்ன்னு ஒரு பக்கம். இரண்டாம் பாகம் வேற இருக்கே அதுக்கு என்னென்ன செய்யப் போறாங்களோன்னு கடுப்பு இன்னொரு பக்கமா திரையரங்கை விட்டு வெளிய வந்தேன்.
படத்தைப் பற்றிய விமர்சனத்தை எழுதித் தந்தே ஆகணும்ன்னு @njganesh கத்தியைக் காட்டி மிரட்டி வாங்கிட்டுப் போயிட்டாரு. தமிழோவியத்தில் வந்திருக்கும் விமர்சனத்தை ஒரு நடை போய் படிச்சுப் பார்த்துக்குங்க -
விஸ்வரூபம் விமர்சனம்
இந்த விமர்சனம் இருக்கே, இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விமர்சனம். உபிச @penathal பார்க்கறதுக்கு முன்னாடி, விமர்சனம் எழுதறதுக்கு முன்னாடி, என்னைப் பாருடான்னு சொல்லி என்னைப் பார்க்க வைக்கறதுக்கு முன்னாடி, பார்த்துட்டு இதெல்லாம் படமாடான்னு நான் திட்டறதுக்கு முன்னாடி, திரை உலக வரலாற்றில் நான் அவனுக்கு முன்னாடி பார்த்த முதல் படம், அதற்கான விமர்சனம் என்பதை வரலாற்றில் பதிவு செய்து கொள்வதில் பெருமை அடைகிறேன்.
விமர்சனத்தைப் பார்த்துட்டு @eramurukan விமர்சனம் எல்லாம் சரி, படத்தைப் பத்தின வெண்பா எங்கன்னு கேட்டாரு. விமர்சனமா எழுதினா கொஞ்சம் பேராவது படிப்பாங்க வெண்பாவா எழுதினா நீங்களும் நானும்தான் படிக்கணும்ன்னு ஒரு பாட்டம் அலுத்துக்கிட்டு கையோட ஒரு வெண்பாவும் எழுதினேன்.
கள்ளமும் இல்லை கபடமும் இல்லையே
நல்ல படமிது நாடிடு – தொல்லையும்
கூடாது தோற்கவும் கூடாது ஆனால்
பாடாப் படுவதவன் பாடு
இதோட (இப்போதைக்குன்னும் சொல்லலாம்) விஸ்வரூபப் படலம் ஓவர். நல்லா இருங்க மக்கா.

1 comments:

said...

//கோபம் வந்த கிருஷ்ணர் சிம்ம அவதாரம் எடுத்து பீஷ்மரைக் கொல்லப் போயிட்டாராம். கிருஷ்ணர்தான் நான் ஆயுதம் ஏந்த மாட்டேன் சண்டை போட மாட்டேன்னு சொன்னாரே. ஆனா இப்படிச் செஞ்சாரா? இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. படிச்சுப் பார்க்கணும்.//

சிம்ம அவதாரம் எடுத்ததாய்ப் படிக்கலை. ஆனால் தேர்க்காலின் சக்கரத்தைத் தூக்கிக் கொண்டு பீஷ்மர் மேல் பாயக் கோபமாய்க் கிருஷ்ணர் கிளம்புவார். அப்படி அந்தக் காட்சியை வரைந்த படங்கள் கூட நிறைய உண்டு. ஆசைப்பட்டுக் கொண்டு ஒன்றை வாங்கி வந்து 500ரூபாய்க்கு மேல் செலவு செய்து பிரேம் போட்டு வீட்டில் வைத்த அன்று வீட்டில் மஹாபாரதம் ஆரம்பிக்க, ஹரேகிருஷ்ணா கோயிலில் கொண்டு போய்க் கொடுத்துட்டோம். சண்டைக்காட்சிகளுடன் கூடிய ஓவியம் இருக்கக் கூடாது என்றும் கீதோபதேசம் மட்டுமே வைக்கலாம் என்றும் எங்களுக்கு உபதேசம் செய்யப்பட்டது. இது நடந்து 20 வருடங்கள் ஆகின்றன.:))