வழக்கம் போல ட்விட்டர் புராணம்தான். வழக்கம் போல ஆரம்பிச்சு வெச்சுது நம்ம @nchokkanதான்.
நான் எதையோ எழுதும் பொழுது சந்திப்பிழை செய்ய, நீர் செய்வது ஆயாசம் அளிக்கிறது. பதிலுக்குப் பாயாசம் அளியும் என்ற ரேஞ்சில் ஒரு ட்விட்டைப் போட்டுட்டு பாயாசமா, பாயசமா என்ற கேள்வியையும் இலவச இணைப்பாகக் கேட்டுட்டுப் போயிட்டார்.
பாயசம்தான் சரி, ஆனால் ஏன் அந்தப் பெயர் வந்தது என்று எனக்குத் தெரியாது என்று நான் விவகாரம் சின்னதாக இருக்கும் பொழுதே அமுக்கிவிட நினைத்தாலும் நடக்கிறதா? விதி @anoosrini @krangana @kekkepikkuni ரூபத்தில் வந்து விளையாட்டை ஆரம்பித்தது.பாயசம் கொஞ்சம் நிறம் மாறி திருக்கண்ணமுது, அக்காரவடிசல் என்று சுவையேறத் தொடங்கியது.
அக்காரம் என்றால் வெல்லம். அடிசில் என்றால் சோறு. இதை அக்காரவடிசில் என்றுதான் சொல்ல வேண்டும் என @ragavang ஜீப்பில் ஏறிக் கொண்டார். இதை இன்னும் அழகாகக் கன்னலமுது எனச் சொல்லாமே, கன்னல் என்றால் சர்க்கரை என்று நினைக்கிறேன் என அனுராதாவும் அக்காரவடிசிலில் வெல்லம்தானே அதில் எங்கே சர்க்கரை வந்தது என்று கிருஷ்ஷும் விவாதத்தை பாயசத்தில் இருந்து வெல்லம், சர்க்கரை பக்கம் திருப்பினர். இந்த பேச்சு நடந்து கொண்டு இருக்கும் பொழுது @sathishvasan @akaasi @Jsrigovind @4sn எனப் பலரையும் இணைத்துக் கொண்டு ஒரு சின்ன பொதுக்கூட்டமே போட்டோம்.
கன்னல் என்றால் கரும்பு. அந்தக் கரும்பில் இருந்து எடுக்கப்படும் சர்க்கரையையும் கன்னல் என்று சொல்லுவார்கள். கோதை நாச்சியார் தாலாட்டு என்ற தொகுதியில் செந்நெல் விளைய செகமுழுதும் தான்செழிக்க, கன்னல் விளைய கமுக மரம்தான் பழுக்க என்று வரும். இங்கு கரும்பு என்ற பொருளில்தான் கன்னல் என்ற சொல் வந்திருக்கின்றது. அதே தொகுதியில் வேறு ஒரு இடத்தில் கன்னல் மொழி என இனிமையான சுவைகூடிய என்ற பொருளிலும் வருகின்றது. நண்பர் ஒருவர் தம் மகளுக்குக் கன்னல் என்றே பெயர் சூட்டி இருக்கின்றார். சுவையான பெயர் என்பதில் சந்தேகமே இல்லை.
கன்னலாகட்டும், வெல்லம் ஆகட்டும். சர்க்கரை ஆகட்டும், கரும்பினில் இருந்து எடுக்கப்படும் தித்திப்பினைத் தரும் பண்டம்தானே. இவற்றிடையே வேறுபாடு உண்டா என்றால் கிடையாது. ஆனால் தற்காலத்தில் Refined Sugar என ஆங்கிலத்தில் வழங்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை சர்க்கரை என்றும் அப்படி வெள்ளையாக இல்லாத சர்க்கரையை நாட்டு சர்க்கரை என்றும் வெல்லம் என்றும் குறிப்பிடத் தொடங்கிவிட்டோம். (Refined என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்? சுத்திகரிக்கப்பட்ட என்பது எனக்கு சரியாகப்படவில்லை.)
சர்க்கரை என்பது இந்தியாவில்தான் முதன்முதலாகத் தயாரிக்கப்பட்டது என்றே அறிஞர்கள் கூறுகின்றனர். மற்ற நாடுகளில் தேன் மட்டும்தான் பயன்பாட்டில் இருந்தது. இங்கு இருந்தே சர்க்கரை பற்றிய மற்றவர்கள் தெரிந்து கொண்டார்கள். இந்தியாவில் பெரும்பாலான மொழிகளில் சர்க்கரை என்பதே இதற்கான சொல்லாக இருக்கின்றது. ஆங்கிலத்தில் வழங்கும் Sugar என்பதற்கும் சர்க்கரை என்பதுதான் வேர்ச்சொல். அரேபிய, பெர்ஷியன், ஜெர்மன், போலிஷ், ரஷ்யன், பழைய ப்ரெஞ்ச், ஸ்பானிஷ், போர்த்துகீஸ் என பல மொழிகளிலும் சர்க்கரைக்கான சொல்லிற்கு மூலம் நம் சர்க்கரையே. (இங்கு நம் என நான் குறிப்பிடுவது இந்தியாவை. வடமொழியில் இருந்து தமிழிக்கு சர்க்கரை வந்ததா அல்லது இங்கு இருந்து அங்கு சென்றதா என்பது பற்றி எனக்குத் தெரியாது.)
தொடர்ந்து பேசும் பொழுது ஜீனி பற்றியும் பேசினோம். நெல்லைப்பக்கம் சீனி என்போம். சீனியவரைக்காய், சீனிக்கிழங்கு என்று காய்கறிகளுக்குக் கூட சீனி என்ற இனிஷியலைச் சேர்த்துவிட்டோம். இதன் மூலம் தெரியவில்லை, தேடிப்பார்க்க வேண்டும். தமிழில் சீனி என்றால் மரத்தாலான சேணம் என்கிறது என் அகராதி. அது எப்படி சர்க்கரைக்கு மாற்றாக வந்ததோ தெரியவில்லை. இதற்கு ஏதேனும் வடமொழி மூலம் உண்டா என்று தெரிந்து கொள்ள வேண்டும். சைனாவில் இருந்து வந்த வெள்ளைச் சர்க்கரைக்கே (Refined Sugar) சீனி என்ற பெயர் என்கிறார்கள் சிலர்.
சர்க்கரை, சீனி, வெல்லம், அக்காரம் என்றெல்லாம் பேசிய பொழுது ஆட்டத்திற்கு வராமல் இருந்த ஒன்று கருப்பட்டி. இன்று கருப்பட்டி என்று வழங்கப்பட்டாலும் அதைச் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் கருப்புக்கட்டி என்றுதான் சொல்ல வேண்டும். வெள்ளையாக இல்லாமல் கரிய நிறம் கொண்ட கட்டி கருப்புக்கட்டி. எளிமையான பெயர் என்றால் இதுதான். பனங்கருப்பட்டி, தென்னங்கருப்பட்டி என்று பல விதங்கள் உண்டு. இதைப் பற்றிப் பேசவே இல்லை. அதில் எனக்கு வருத்தம்தான். அதனால்தான் இங்கு நுழைத்துவிட்டேன்.
ஆனால் அஸ்கா பற்றிப் பேசினோம். நான் பணி நிமித்தம் கோவைக்கு மாற்றலாகிப் போன பொழுதுதான் இந்த வார்த்தையை முதன்முதலாகக் கேள்விப்பட்டேன். அது என்ன அஸ்கா என்று நண்பனிடம் தந்தையிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
அஸ்கா என்பது ஒடிஷா மாநிலத்தில் இருக்கும் ஒரு சிறிய நகரத்தின் பெயர். இந்தியாவில் தொடங்கப்பட்ட சர்க்கரை ஆலைகளில் மிகப்பழைய ஆலை ஒன்று இங்குள்ளதுதான். இன்றும் அஸ்கா கூட்டுறவு சர்க்கரை ஆலை என்ற பெயரில் இந்த ஆலை இயங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த ஆலைக்கு தமிழகத்தில் இருந்து, அதுவும் குறிப்பாக மேற்கு தமிழகத்தில் இருந்து கரும்பு செல்வது வழக்கம்.
நாட்டுச் சர்க்கரையை மட்டுமே அறிந்த மக்கள், இந்த ஆலையில் இருந்து வரும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை நாட்டுச் சர்க்கரையில் இருந்து வித்தியாசப்படுத்துக் காண்பிப்பதற்காக அதைக் கொண்டு வந்த இடத்தை / தயாரிக்கப்பட்ட ஆலையை சேர்த்து அஸ்கா சர்க்கரை என வழங்கினர். நாளடைவில் சர்க்கரை என்ற வார்த்தையை விடுத்து அஸ்கா என்றாலே சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை என்றாகிவிட்டது. இந்த அஸ்கா கதை பலருக்கும் தெரியாமல் இருப்பது எனக்கு ஆச்சரியமே.
நிற்க.
உலகத்திலேயே இந்தியாவில்தான் நீரிழிவு நோயால் தாக்கப்பட்டவர்கள் அதிகமாம். ஒரு சந்திப்பிழைக்கு இந்த ரேஞ்சில் சர்க்கரை பத்திப் பேசினா ஏன் இருக்காதுங்கறேன்.