Sunday, September 08, 2013

நடபைரவியும் நட்டாற்று அனுபவமும்!

ஒரு சுற்றுலா செல்கிறோம். பெரும் நதி ஒன்று இருக்கிறது. அதில் பயணம் செய்து பொழுதைக் கழிப்பதாகத் திட்டம். எந்த மாதிரி எல்லாம் அந்த நதியில் செல்ல முடியும்? 

மலையில் இருந்து ஆக்ரோஷமாக கீழே இறங்கி வரும் நதியில் ஹெல்மெட், லைப் ஜாக்கெட் சகிதம் ஒரு படகில் ஏறி Whitewater Rafting செய்யலாம். தண்ணீரில் மூழ்கிக் கிடக்கும் பெரும் பாறைகள், மரங்கள் இவற்றினூடே ஓடும் தண்ணீரில் இருக்கும் சுழல்கள், சமயத்தில் எழும் பெரும் அலைகள் என்று பல கண்டங்கள் இருக்கும் நதியில் நம்மை அழைத்துக் கொண்டு போய் கரை சேர்ப்பார் படகோட்டி. சமயங்களில் நாம் நீரில் விழ வேண்டியது இருக்கும். நம் கையைப் பிடித்து தூக்கி படகில் மீண்டும் அமரச் செய்யும் வேலை வேறு உண்டு அவருக்கு. இது நாம் நீரில் செல்வதில் ஒரு வகை. இதில் நமக்குக் கிடைப்பது Thrill, Exhilaration, A rush of Adrenalin.

இல்லை, ஹொகேனகல்லில் இருப்பது போல பரிசலில் செல்லலாம். நிதானமாக ஓடுவதே தெரியாமல் ஓடும் அகண்ட நதி. அதில் பரிசலைச் செலுத்திக் கொண்டு நமக்கு சுற்றுப்புறத்தில் இருக்கும் காடு மலை அனைத்தையும் காட்டிக் கொண்டு செல்வார் படகோட்டி. நடுவே நமக்குக் கொஞ்சம் கலவரம் உண்டாகும் படி ஒரு சுழலில் சென்று கொஞ்சம் பரிசலில் சுற்றி விடுவார். கொஞ்சம் பயமாக இருக்கும். அங்கிருந்து மெல்ல ஓர் அருவியின் அருகே செலுத்தி அதிலிருந்து நீர்திவலைகள் நம் மீது பட்டு நாம் பரவசமடையும்படிச் செய்வார். பொதுவாகவே பெரும்பாலும் நிதானம் நடுநடுவே கொஞ்சம் வேகம் என இந்தப் பயணம் நடக்கும். இது வேறு ஒரு வகை. இதில் நமக்குக் கிடைப்பது Relaxation.

ஒன்றை விட மற்றொன்று உயர்ந்தது எனச் சொல்ல முடியுமா? முதல் படகோட்டியின் திறன் இரண்டாவது படகோட்டியை விட மேல் என்று சொல்ல முடியுமா? ஒவ்வொன்றும் ஒரு வகை. அவரவருக்கான திறன் அவர்களிடம் உண்டு. ஆனால் பயணிகளான நாம் இளமையில் இருக்கும் துணிச்சல், ஒரு முறையேனும் செய்து பார்த்துவிட வேண்டும் வேண்டிய ஆவல் ஆகிய காரணங்களினால் Rafting சென்றாலும் பெரும்பாலும் இரண்டாம் வகையிலேயே செல்ல விரும்புவோம். வெகு சிலரே தொடர்ந்து Rafting செய்வதில் விருப்பம் கொண்டு அதற்கான பயிற்சியை மேற்கொண்டு, அதற்குண்டான நுட்பங்கள், நுணுக்கங்களை அறிந்து கொண்டு அதில் நிபுணத்துவம் அடைய நினைப்பர். அவர்கள் தொடர்ந்து பல நதிகளில் Rafting செய்து கொண்டே இருப்பார்கள்.

இசையும் அப்படித்தான். அந்த நதியைப் போல, இசையிலும் பல வகைகளில் பயணம் செய்ய முடியும். இன்று நான் கேட்ட அபிஷேக் ரகுராமின் கச்சேரி முதல் வகை. ஆபோகி வர்ணமான எவ்வரி போதனவில் தொடங்கி எல்லா பாடல்களிலும் வேகம் வேகம் வேகம். கச்சேரியை விமர்சனம் செய்யும் அளவிற்கு எனக்கு சங்கீதம் தெரியாது. ஆனால் இன்றைய கச்சேரியைக் கேட்ட பின்னால் இதைச் சொல்ல வேண்டும் எனத் தோன்றியதால் எழுதுகிறேன். 





இளம் வயதிலேயே மிகவும் புகழ் பெற்றவர் அபிஷேக். பாரம்பரிய சங்கீதக் குடும்பம், இயல்பான திறமை, அபாரமான ஞானம், சொன்னால் கேட்கும் குரல் என்று எல்லாம் பெற்று குறைவில்லாத சங்கீதம் தரும் ஆற்றல் கொண்டவர். இன்று பாடிய சங்கராபரணம் அதற்குச் சான்று. ராகம் பாடியாதாகட்டும், கல்பனாஸ்வரங்கள் ஆகட்டும், கீர்த்தனையைப் பாடிய அழகாகட்டும் மிகப் பிரமாதம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியாது. ஸ்வரங்கள் பாடும் பொழுது ரிகபம என்ற ஸ்வரங்களை வைத்துக் கொண்டு இவர் பாடியது பட்டாசு. அடுத்த வந்த தோடி ஸ்வரஜதியும் மிக அபாரம். ஆஹிரி, சிந்துபைரவி எனத் தொடர்ந்த எல்லாப் பாடல்களுமே குறைவில்லாத சங்கீதம்தான். ஆனால் தண்ணீரில் விழுந்து மூழ்கிவிடுவோமோ, ஒழுங்காக கரை சேர்வோமோ என்று படகின் ஓரங்களைப் பிடித்துக் கொண்டே பயணம் செய்தது போலத்தான் இருந்தது இன்றைய அனுபவம். நன்றாகப் பொழுது போனாலும் இசையுடன் ஐக்கியமாகி நம்மை மறந்து நெகிழ்ந்து போகும் தருணங்கள் இல்லாமலே போனது கொஞ்சம் வருத்தம்தான்.

ஸ்ரீ வல்லி தேவசேனாபதே என நடபைரவியில் பாடும் பொழுது பாடகர் மயிலாக மாறி முருகனை தன்மேல் ஏற்றிக் கொண்டு ஆடாமல் அசங்காமல் அழகு கலையாமல் நம் முன் கொண்டு வர வேண்டாமோ? அப்படி ஒரு எதிர்பார்ப்பில் நாம் இருக்கும் பொழுது பார்முலா ஒன் ரேஸ் காரில் முருகனை அழைத்து வந்தால் மிரண்டு போய் விட மாட்டோமா? இன்று அப்படித்தான் முருகன் வந்தார். கச்சேரி முழுக்க இதே வேகம்தான். கச்சேரியில் பக்கவாத்தியமாக வயலின் பி யூ கணேஷ் பிரசாத், மிருதங்கம் நெய்வேலி நாராயணன். இருவரும் அத்தனை வேகத்திற்கும் ஈடுகட்டி அருமையாக உடன் வாசித்தார்கள். அவர்கள் துணையில்லாமல் கச்சேரி இப்படி சோபித்து இருக்காது. 




மீண்டும் சொல்கிறேன். குறை ஒன்றும் சொல்ல முடியாத இசை. மூன்று மணி நேரம் ஒரு இடத்தில் என்னைக் கட்டிப் போட்ட மாதிரி இருந்து கச்சேரியை ரசித்தேன். என்றோ ஒரு நாள் கேட்பதால், மேலேறிக் கீழிறங்கி, மூச்சுவாங்கி, Rafting சென்ற பரவசம் இன்றைக்கு இருந்தாலும் அடிக்கடி விரும்பிக் கேட்கவும், கேட்கும் பொழுது மனம் லேசாகி நாம் நெகிழ்ந்து போவதிற்குமான இசை இது அல்ல என்றே கச்சேரி முடிந்த பின் என் எண்ணமாக இருந்தது. இவ்வளவு திறமை இருக்கும் அபிஷேக்கால் எல்லாப் பாடல்களிலும் வேகம் காட்டாது கொஞ்சம் நிதானமான, சௌக்கியமான இசையை தர முடியும் என்பதில் சந்தேகமே இல்லை. தர வேண்டும் என்பதே என் ஆசை.

6 comments:

said...

உங்க வகையில் இல்லாத வித்தியாசமான பதிவு. போட்டோ பாத்தவுடனே ஒரு ட்வீட் வரும்னு நினைச்சேன். பதிவே வந்திருக்கு. அவ்வளவா ஞானம் இல்லை. நுணக்கமா தெரியாது. ஏதாவது யூட்யூப் லிங்க் இருந்தா கொடுங்க. கேட்டுப்பார்க்கிறேன்.

அறிமுகத்துக்கு நன்றி.

said...

சென்னையில் அடுத்த முறை அபிஷேக் ரகுராமின் கச்சேரி இருக்கும்போது உங்களுக்காகப் போய் கேட்கிறேன். எனக்கும் கொஞ்சம் ஞானம் வரட்டும் :-)

amas32

said...

வெகு வேகமாய் பாடுவதென்பது தீக்குழி மிதிக்கும்போது தபதபவென்று ஓடுவது போன்றது என்று எனக்கு அடிக்கடித் தோன்றும்

said...

சத்யா

/அவ்வளவா ஞானம் இல்லை. நுணக்கமா தெரியாது. /

இதையேதானே நானும் சொல்லி இருக்கேன். இது இசை விமர்சனம் இல்லை. என்னுடைய Point of View மட்டுமே. :)

இன்றைய கச்சேரி யூட்யூபில் வருமான்னு தெரியாது. இந்தப் பாட்டு அங்க இருக்கு - http://www.youtube.com/watch?v=OKClbVfXqbg

இன்னிக்குப் பாடினது இதை விடவும் வேகம்.

said...

அடடடா........ இன்றைக்குத்தான் இந்தப்பதிவையே பார்த்தேன்.

அபிஷேக் ஒரு மீன் குஞ்சு.(இசைக்) கடலில் நீந்தக் கற்றுக்கொடுக்கணுமா?

நானும் ஒருமுறை சென்னையில் கேட்டுருக்கேன். பரவசம்.

said...

Rajesh, Arumaiyaana vimarsanam. Ungal kannottam arumai.