Tuesday, October 01, 2013

வெண்பா வழியாக வேங்கடவன் வந்தானே!

இன்று(ம்) சொக்கன் ஒரு வெண்பா எழுதினார்.

காளிங்கன் மீது களிநடனம் செய்ததுவும்
கேளிரைக் காக்கக் கிரியொன்றை ஏந்தியதும்
வாளியொன்றால் சீரிலங்கை வல்லவனை வென்றதுவும்
கேளிக்கை தானவனுக் கே

சும்மா அவரை வம்புக்கு இழுக்க

கண்ணனாய்ச் செய்த களிகள் இரண்டோடு
மன்னனாய்ச் செய்த மரணத்தை ஒன்றாக்கி
அண்ணாவே நீரும் அவியலாய்ச் செய்தீரே
பண்ணாதே இப்படி பார்த்து!

என்று நான் எழுதினேன்.  அவர் ரெண்டுமே திருமால் அவதாரம்தானேன்னு பதில் வெண்பா எழுதினார்.

இருவேடம் போட்டால் எனக்கென்ன ஆங்கே 
திருமாலும் ஒன்றே, தெளி

வெண்பா எழுதும் பொழுதெல்லாம் க்ரேசி மோகன் ஞாபகம் வந்துவிடுகிறதே. அதனால் சொக்கனுக்குப் பதில் எழுதும் பொழுது க்ரேசியின் படைப்பையே உதாரணமாகத் தந்து ஒரு வெண்பா எழுதினேன்.

அப்புசெய்த வேலைக்கு அப்பாவி ராஜாவும்
தப்பாக மாட்டியே தான்தவித்தான் - செப்புவேன்
வேடங்கள் தானவை வேறான பின்னாலே
பாடலில் பார்த்துப் பகு

சொக்கனும் இந்தப் பேச்சு நியாயம்தான்னு ராமனுக்கு ஒன்று, கண்ணனுக்கு ஒன்று என்று

வாளியொன்றால் சீரிலங்கை வல்லவனை வென்றவன்,
தூளியொன்றால் பெண்ணின் துயர்துடைத்து நின்றவன்,
ஆளியெனச் சோதரரை ஆக்கிமகிழ் வல்லவன்
தோளிரண்டை எண்ணித் தொழு

[வாளி = அம்பு, தூளி = தூசு (ராமன் பாததூளி அகலிகையை மீண்டும் பெண்ணாக்கியது), ஆளி = ஆள்பவன் (முறையே அயோத்திக்குப் பரதன், கிஷ்கிந்தைக்குச் சுக்ரீவன், இலங்கைக்கு விபீஷணன்)]

காளிங்கன் மீது களிநடனம் செய்ததுவும்
கேளிரைக் காக்கக் கிரியொன்றை ஏந்தியதும்
வாளின்றி போர்க்களத்தில் வாகைமலர் சூடியதும்
கேளிக்கை தானவனுக் கே

என்று ரெண்டு வெண்பா எழுதினார்.

இப்படி வெண்பாவில் விளையாடிக் கொண்டு இருந்த பொழுது இவர் ஒரு வெண்பாவில் ரெண்டு அவதாரம்தானே தொட்டார். நாம ஏன் பத்து அவதாரத்தையும் கொண்டு வரக்கூடாதுன்னு ஒரு எண்ணம் தோன்ற எழுதிப் பார்த்தேன்.
முதலில் பத்து அவதாரங்களையும் சொல்ல ஐந்து அடிகள் எடுத்துக் கொண்டேன்.  அது

கயலும் கமடம் கனலியும் ஆனான்
பயமற்ற சீயம் பலியும்தான் ஆனான்
முயன்றவன் ராமர்கள் மூவராய் ஆனான்
கயவனாம் கண்ணனே கல்கியும் ஆவான் 
அயனவன் தோற்றம் அறி!

[கயல் - மீன், கமடம் - ஆமை, கனலி - பன்றி, சீயம் - சிங்கம், பலி - மகாபலி (வாமனன்), ராமர் மூவர் - பரசுராமன், ஜானகிராமன், பலராமன்]

பின்பு அதை கொஞ்சம் செதுக்கி நாலு வரிக்குள்ள கொண்டு வந்துட்டேன். அந்த வெர்ஷன் இது.

கயலும் கமடம் கனலியும் சிங்கம்
பயலாம் பலியொடு பார்மூன்று ராமர்
கயவனாம் கண்ணனே கல்கியும் ஆவான்
அயனவன் தோற்றம் அறி

ரொம்பப் பெருமையா சொக்கனிடம் போய்ச் சொன்னால் நாலு வரி எதுக்கு? அன்னிக்கே காளமேகம் ரெண்டு வரியில் எழுதிட்டாரேன்னு ஒரு குட்டு வெச்சார்.

மெச்சு புகழ் வேங்கடவா வெண்பாவில் பாதியில்என்
இச்சையில்உன் சென்மம் எடுக்கவா, மச்சாகூர்
மாகோலா சிங்காவா மாராமா ராமாரா
மாகோபா லாமாவா வாய்

இதுக்கு விளக்கம் வேணுமானா சொக்கன் எழுதின இந்தப் பதிவில் பார்த்துக்குங்க. காளமேகம், டெக்னிக்கலா ரெண்டு அடிக்குள்ள எழுதலை என்று சொல்லி கொஞ்சம் சந்தோஷப்பட்டுக்கிட்டேன். ஹிஹி.

இப்படியாக இன்னிக்குத் திருமால் பெருமையை வெண்பாவா எழுதிப் பொழுது போச்சு. ஆரம்பிச்சு வெச்சதும் இல்லாம தொடர்ந்து எசப்பாட்டும் எதிர்பாட்டுமாய் அள்ளி விட்ட சொக்கருக்கு நன்றி!

(பதிவில் இருக்கும் படம் இணையத்தில் திருடப்பட்டது)

அபூர்வ சகோதரர்கள், அழகிய பெருமாள்ன்னு கலந்து கட்டி எழுதி இருக்கோமேன்னு க்ரேசி மோகனுக்கு பதிவின் சுட்டியை அனுப்பினேன். உடனே வந்த பதில் இது - தசாவதாரத் திருப்புகழ்!

"மீனமென வந்துமறை காத்தமுகம் ஒன்று
        மேருமலை தாங்கவரும் ஆமைமுகம் ஒன்று
 ஏனமென பூமிதனை ஏந்துமுகம் ஒன்று
         தூணதிர சீயமென தோன்றுமுகம் ஒன்று
தானமுற மாபலிமுன் ஓங்குமுகம் ஒன்று
         மூணுவித ராமனென மூண்டமுகம் ஒன்று
கானமுர ளீதரமு ராரிமுகம் ஒன்று
         ஞாலபரி பாலதச மானபெரு மாளே"

சந்தக் கவிதை என்றால் என்ன என்பதற்கு எடுத்துக்காட்டு இந்தப் பாட்டு! இதுக்காக நான் எழுதின வெண்பா 

மந்தை வெளிராயர் மன்னுபுகழ் க்ரேசியவர்
தந்த கவியிதனைத் தான்படிப்பீர் மேன்மக்காள்
சந்த விளையாட்டுச் சாகரம் தானிவரே
அந்த கிரியார்க்(கு) அடுத்து!

9 comments:

said...

ஆஹா, ஆஹா, ஆஹா! என்ன சொன்னாலும் அது வெறும் வார்த்தைகள் தான். உணர்வை வெளியிட மொழியில்லை. :)

said...

Superb da

said...

Superb da

said...

சொக்கன் வெண்பாவையும் உங்களோடதையும் மாறி மாறி படித்து மகிழ்ந்தேன். ஆஹா என்ன அற்புதமாய் எழுதுகிறீர்கள் என்று வியந்து நின்றேன். அடுத்து வந்த கிரேசி மோகனின் பாடலைப் பார்த்ததும் அசந்து விட்டேன். என்ன ஒரு எளிய நடை, என்ன அழகு, என்ன நேர்த்தி :-)
நன்றி இலவசம், இங்கு வரவழைத்ததுக்கு. நன்றி இறைவனுக்கு, உங்கள் நட்பும் சொக்கன் நட்பும் கிட்டியதற்கு :-)

amas32

said...

என்ன சொல்ல!! ஒவ்வொன்ணும் மத்ததை விட அருமை! வாழ்த்துகள்! குறிப்பா உங்களுதும் கிரேசியின் பாடலும்.... இந்தமாதிரி எழுத எனக்கு வக்கில்லையே என்று தோன்றுகிறது!

said...

சொக்கன் செய்ததில் என்ன பிழை?

(1) பத்துத்தலை தத்தக் கணைதொடு
(2) ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
(3) பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே

என்று ஒரே அரை அடியில் மூன்று அவதாரங்களைப் பாடியவர்தானே அருணகிரிநாதர். (1) இராமன் (2) அமுதம் கடைகையில் கூர்மாவதாரமும், பகிர்கையில் மோகினியாகவும் மாறியவன் (3) மஹாபாரதத்தில் அர்ஜுனனுக்குத் தேரோட்டிய கண்ணன்! சொக்கா.. இதுக்கெல்லாம் அசைஞ்சி கொடுத்துறாதீங்க! கொத்ஸை கொத்ஸு பண்ணிடலாம். :))

said...

ஹரி அண்ணா

நான் சொக்கன் பிழையா சொன்னார்ன்னு ஒண்ணும் சொல்லலையே.

நான் நாலு வரியில் எழுதினேன்னு பெருமையாச் சொன்னா, இதெல்லாம் மேட்டரா காளமேகம் ரெண்டு அடியில் சொல்லிட்டாரேன்னு குட்டு வெச்சார்ன்னுதானே சொன்னேன்.

மச்சாகூர் என்பது இரண்டாவது அடியில் வந்ததால் இரண்டு அடி + ஓர் அசை, ஆகவே டெக்னிக்கலா இரண்டு அடிகள் இல்லைன்னு நானும் சும்மா மீசையில் மண் ஒட்டலைன்னு சொல்லிக்கிட்டேன்.

மத்தபடி நீங்க ரெண்டு பேரும் கொத்ஸு பண்ண ரெடின்னா நான் கத்திரிக்காயாக ரெடி. :)

said...

எல்லா கவிதைகளையும் படித்தேன்;ரசித்தேன்; பின்னூட்டங்களையும் வாசித்து மகிழ்ந்தேன்.
கொத்சு என்னவாச்சு? அறிய ஆவல்!
இன்றைய வலைச்சரம் மூலம் வந்தேன். பாலகணேஷ்-க்கு நன்றி இந்த தளத்தை எனக்குக் காட்டித் தந்ததற்கு.

said...

வணக்கம்.
இனி தொடர்கிறேன்.