Tuesday, October 29, 2013

அவையத்து முந்தி இருப்ப...

படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது என் மகன் சொன்னான். “You know Dad, I wasn't comfortable".

வீட்டிற்கு அருகிலேயே உள்ள மால், அங்கே புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் ஐமாக்ஸ் திரையரங்கம், முழு உடலையும் உள்ளே இழுத்துக்கொள்ளும் குஷன் நாற்காலிகள், பாப்கார்னா ஐஸியா என்று பார்த்துப்பார்த்து உபசரிக்கும் தேவதைகள் - இதில் எதுதான் அன்கம்ஃபர்டபிள் என்று எனக்குப் புரியவில்லை. கேட்டேன்.

“I cant see these types of movies with you dad" என்றான். இத்தனைக்கும் அனிமேட்டட் படம். அவன் வளர்ந்துவிட்டானாம். நிழலிலேயே வளர்ந்தவனுக்குத் தெரியுமா நிழலின் அருமை?

அவனுக்கு என்ன தெரியும்? அப்பாவுடன் படம் பார்ப்பதில் உள்ள அருமை அப்பாவுடன் சினிமா என்ற ஏக்கம் என் நெஞ்சை விட்டு அகலாத பெருஞ்சோகம்.

சின்ன வயதில் நான் நிறைய சினிமா பார்த்திருக்கிறேன்.எல்லாம் வைராவி அண்ணா திரையரங்கில். திரையரங்கு என்ற பெயருக்குச் சற்றும் சம்மந்தமில்லாமல் சுவரே இல்லாத திறந்த கொட்டகை, மாலை ஆன உடன் வீசத் தொடங்கும் மெல்லிய குளிர் கொண்ட காற்று, அதே போல குளிரத் தொடங்கி இருக்கும் மணல், ஆண்கள் பெண்கள் பகுதிகளுக்கிடையே ஆன மரத்தடுப்பு, பின்புறம் பெஞ்ச் மற்றும் சேர்கள், துப்பிய புகையிலையும் பிடித்த பீடியும் கலந்த ஒரு வாசம், முறுக்கு விற்கும் சிறுவர்கள், தீ என்று எழுதப்பட்ட துருப்பிடித்த சிவப்பு வாளிகளில் மண், அதைத் தாண்டி மூத்திர வாடை அடிக்கும் வேலியோரம் என்று டூரிங் கொட்டகைகளுக்கேயான அடையாளங்கள் அனைத்தும் அதற்கு உண்டு. மீன்கொடி நாட்டிய தேவா பாடல் கேட்டதும் உடல் சிலிர்க்கும்- படத்துக்குப் போயே ஆகவேண்டும் என்று நாடி நரம்பெல்லாம் புடைக்கும். அப்பாவிடம் நேராகப் பேச பயந்துகொண்டு மூர்த்தி மாமாவிடம் சொல்வேன்.

மூர்த்தி மாமா அப்பாவிடம் பேசும்போது ”அதானே பார்த்தேன்.சாயங்காலம் ஆறுமணியாச்சே. சனிக்கிழமை வேற.இன்னும் அலாரம் அடிக்கலையேன்னு..”என்ற நக்கலான பதில் கேட்கும். தொடர்ச்சியாக “நீங்களும் வாங்களேன் அத்திம்பேர்” என்பார் மாமா.

“உனக்குதான் எல்லாம் தெரியுமே.. நான் என்னிக்கு படம் பார்க்க வந்திருக்கேன்”

சினிமா போகும் அவசரத்தில் அப்பா ஏன் சினிமா வருவதில்லை என்ற கேள்வி எழவே எழாது. நம் சுயநலங்கள் மட்டுமே பூதாகாரமாக நின்ற தருணங்கள். என்னைப்பற்றி நானே வெட்கித்து நிற்கும் தருணங்கள் அவை.

இந்த சஸ்பென்ஸுக்கும் ஒருநாள் முடிவு வந்தது. கிளிக்கு இறக்கை முளைத்துவிட்டு, கட்டடித்து சினிமா போக ஆரம்பித்துவிட்ட நேரம் அது. ஒரு நாள் சினிமாவெல்லாம் பார்த்துவிட்டு வரும்போது இரவு 10மணி. வரும்வழியில்தான் நினைவுக்கு வந்தது, மூர்த்திமாமாவிடம் கூடச் சொல்லாமல் சென்றிருந்தது. அப்பா அம்மா மாமா எல்லாரும் வாசலிலேயே காத்திருந்தனர்.

“ஏண்டா.. எங்கேடா போயிட்டே சொல்லாம கொள்ளாம?” அம்மாவை அவ்வளவு கோபமாக நான் பார்த்ததே இல்லை.

“சினிமாவுக்கு” என் குரல் எனக்கே கேட்கவில்லை.

“சொல்லியிருந்தா நானே கூட்டிப்போயிருப்பேனேடா” என்றார் மூர்த்தி மாமா.

அப்பா கொஞ்ச நேரம் ஒன்றும் பேசவில்லை. “ போய் சாப்பிடு. யாரும் திட்டாதீங்க. சினிமாக்குதானே போயிருக்கான்” என்றார் பொறுமையாக.

சூறாவளியை எதிர்பார்த்துக் காத்திருந்த எனக்கு அதிர்ச்சி. இவரோ ஒரு சினிமாவுக்கும் போனதில்லை - சினிமாவே பிடிக்காத ஆசாமி. சொல்லாமல் போனதற்கும் கோபமில்லை என்றால் ஆச்சரியமாக இருக்காதா? இத்தனைக்கும் கோபமே வராதவர் எல்லாம் இல்லை. ஒருமுறை காலாண்டுத் தேர்வு மார்க்குக்காக ரெண்டு தெரு துரத்தித் துரத்தி அடித்தவர்.

சாப்பிட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அவரிடம்.. “அப்பா..ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?” என்றேன்.

“என்னடா? ஏன் இவனுக்குக் கோபமே வரலைன்னுதானே கேக்கப்போறே?” என்றார்.

கொஞ்சம் அமைதியாக இருந்தவர், “எனக்கும் சினிமா எல்லாம் பிடிக்காம இல்லைடா.. நிறையப்படம் பார்த்திருக்கேன். ஒரு படம் கூட விடாமப் பார்த்துக்கிட்டிருந்தவன்தான்”

“ஒரு நாள் படம் பார்க்கக் காசில்லை. அப்பாவோட வெத்தல செல்லத்தில் இருந்த பழைய நாலணாக் காசை எடுத்துக்கிட்டு ஓடிட்டேன்.”

”திரும்பி வந்தா பெல்டால அடிச்சுப் பின்னிட்டாரு.. அவரைச்சொல்லியும் குத்தமில்லை. அந்தக்காசு அவரோட அப்பா போனப்போ நெத்தியில் வெச்சு எடுத்த காசாம். ஞாபகமா வெச்சிருந்தாராம். அதுவும் கூட எனக்கு ரொம்பநாள் கழிச்சுதான் தெரிஞ்சுது.”

“அன்னிக்குப் போட்ட சண்டைல மும்முரத்துல, உன்னையும் ஒரு சினிமாவுக்குக் கூட்டிக்கிட்டுப் போறேன்.. அதுவும் என் காசுல.. அன்னிவரைக்கும் நானும் சினிமா பார்க்க மாட்டேன். இனிமேல் என் மேலே கைய வச்சே..”ன்னு கத்திட்டேன்”

அப்புறம் ஒரு நாலஞ்சு வருஷம் படிச்சு, வேலைக்குப்போய்..சம்பளம் கிடைச்சவுடனே முதல் வேலையா சினிமா தியேட்டருக்குத்தாண்டா போய் நின்னேன். நீளமான க்யூ. புதுப்படம் வேற. இந்தாளுக்குமா சேர்த்து ரெண்டு டிக்கட் வாங்கிட்டு - பழிக்குப்பழி வாங்கணுமில்ல - வீட்டுக்கு வந்தா..

“காலையில இருந்து ஒரே ஆட்டம்.. என் புள்ள சம்பாதிக்கறான், இன்னிவரைக்கும் நானே வாங்காத சம்பளம் முதல் முறையே வாங்கறான்னு ஊரெல்லாம் தண்டோரா போட்டுகிட்டிருந்தாராம். வீட்டுக்கு வந்தவர் நெஞ்சைப் பிடிச்சுகிட்டு கீழே விழுந்தவர்தான்.. எழுந்துக்கவே இல்லையாம்.”

அந்த தியேட்டருக்குப் போய் க்யூல ஒரு மணி நேரம் நிக்காம இருந்திருந்தா.. ஒருவேளை ஹாஸ்பிடலுக்குப் போய் காப்பாத்தி இருக்கலாம். ஏன்.. ஒரு வார்த்தையாச்சும் பேசியிருக்கலாம்.. ஆனா எதுவும் நடக்கலை.

அன்னிக்கு விட்டவந்தாண்டா இந்த சினிமா எழவை.” அப்பாவின் குரல் இன்னும் என் காதில் ஒலிக்கிறது.

அதற்குப்பிறகு நானும் பல சினிமா தியேட்டர்களைப்பார்த்துவிட்டேன் - ஆனாலும் அப்பாவின் நினைவு வராமல் ஒரு சினிமாகூடப் பார்க்க முடிந்ததில்லை.அவர் குஷனைப்பார்த்ததில்லை. ஏசியைப் பார்த்ததில்லை. நான் எதையும் அவர் நினைவில்லாமல் பார்த்ததில்லை.

மகனைப் பார்த்தேன். “உனக்கு அப்பாவோட பார்க்கிறது வசதியா இல்ல. எனக்கு அப்பா இல்லாமப் பார்க்கறது வசதியே இல்லை” என்றேன், கண்களை அனிச்சையாகத் துடைத்துக்கொண்டே.

25 comments:

said...

டச்சிங்கான பதிவுடா..

அப்புறமா உணர்ச்சியைக் கட்டுப்படுத்திகிட்டு விரிவா கமெண்ட் போடறேன்.

said...

உணர்ச்சிகளின் உச்சம். மனதை நிரடிய பதிவு.

said...

சில விஷயங்களை நம் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். என் தந்தை 18 வயதில் தெரியாத ஊரான கல்கத்தாவில் வேலைத் தேடி அலைந்த போது அவரின் நண்பரின் நண்பர் ஒருவர் வீட்டுத் திண்ணையில் தான் தங்கியிருந்தார். அந்த நண்பரின் நண்பர் மனைவிக்கோ என் தந்தைக்கு அந்தத் திண்ணையைக் கொடுத்ததுக் கூடப் பிடிக்கவில்லை. ஆனால் என் தந்தை பல மயில் தூரம் நடந்துக் களைத்துப் பசியோடு இரவில் வரும் பொழுது அந்தத் திண்ணை வீட்டு சொந்தக்காரர் மனைவிக்குத் தெரியாமல் ஒரு பாத்திரத்தில் தயிர் சாதமும் மாவடுவும் எடுத்து வைத்திருப்பாராம். என் அப்பாவோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டே அவரை கூச்சப்பட விடாமல் சாப்பிட வைப்பாராம். இந்தக் கதையை என் தந்தை என்னிடம் பல முறை சொல்லியிருக்கிறார். சொல்லும்போதெல்லாம் என் கண்ணில் நீர் வழியும். இதை நான் என் குழந்தைகளுக்கும் சொல்லியிருக்கேன், ஏனென்றால் இந்த மாதிரி சம்பவங்கள் அவர்கள் வாழ்வில் நடந்ததில்லை, பார்த்ததும் இல்லை.

ரொம்ப நல்லப் பதிவு. உங்கள் குழந்தைகளுக்குப் படித்துக் காட்டவும்.

amas32

said...

யாம் இவ்விடம் வந்திருந்தோம்...

ப்பாஆ!

said...

Touching da Rajesh...

said...

நெஜமா நெகிழ்ந்து போயிட்டேன் !!!

ஆத்மார்த்தமா எழுதும் விஷயங்கள் எப்போதுமே அற்புதமா இருக்கும்-னு நிரூபிக்கப்பட்டது!!

என்னளவில், நீர் எழுதி நான் வாசிச்சதில் பெஸ்ட், அஷ்டே!

said...

நெகிழ்வான பதிவு... பிரமாதம்...

said...

நெகிழ்ந்தேன்.. ,மனதை தொட்ட பதிவு.

said...

//மகனைப் பார்த்தேன். “உனக்கு அப்பாவோட பார்க்கிறது வசதியா இல்ல. எனக்கு அப்பா இல்லாமப் பார்க்கறது வசதியே இல்லை” என்றேன், கண்களை அனிச்சையாகத் துடைத்துக்கொண்டே.//

கண்ணீர் விட வைச்ச பதிவு. பல ஆண்டுகள் கழிச்சு இ.கொ.வின் டச்சிங்!

சினிமா குறித்த இப்படியான உணர்வுபூர்வமான அனுபவங்கள் எனக்கும் நேர்ந்திருக்கு. :))))

ஆனாலும் இக்காலக் குழந்தைகள் தங்கள் பிரைவசியைக் காப்பாற்றிக் கொள்வதில் முனைந்திருக்கிறார்கள். அப்பா, அம்மா கூட அவங்க அறைக்குள்ளே கேட்டுக் கொண்டு தான் உள்ளே வரணும். இது நன்மையா, தீமையானு தெரியலை. எங்க காலத்திலே ஒரே அறையிலே நாங்க மூணு பேரும் படிச்சுப் பேசிச் சிரிச்சு, படுத்துத் தூங்கி, சண்டை போட்டுனு வருடங்கள் கழிஞ்சிருக்கு. அதிலே உள்ள சுகம் இப்போத் தனி அறையிலே வருமா? வருதா?

said...

கண்கள் பனித்தது :-(

said...

படித்து முடித்த கையோடு, எனது தந்தைக்கு போன் பண்ணி ஒரு அரை மணி நேரம் பேசினேன், பிறகு தான் மனது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனது.....கலங்க வெச்சிட்டிங்க.

said...

காலையில் படித்தபோது மிகவும் நெகிழ்ந்து போனேன். கிண்டலாகவே பேசும் , ஜாலியாகவே எழுதும் இலவசத்துக்கு இப்படிபட்ட எழுத்தும் கைவரும் என்பது மகிழ்ச்சி.
இப்போது மற்றொரு முறை படிக்கும்போது தோன்றுவது இது ஒரு சின்ன குறும்படமாக எடுக்கக்கூடியது.

said...

அப்படியே அலேக்காக 80-களுக்கு கொண்டு போய் விட்டீர்.

படித்து முடித்து சில மணி நேரங்கள் அப்படியே உட்கார்ந்திருந்தேன்.

என்னவொரு வசீகரிக்கும் எழுத்து நடை?

ஒவ்வொரு தந்தையும் தனது மகனுக்கும், ஒவ்வொரு மகனும் தனது தந்தைக்கும் இந்தக் கட்டுரையை மின்னஞ்சலில் கண்டிப்பாக அனுப்பி படிக்கச் செய்ய வேண்டும்.

இது போன்ற கட்டுரைகளை வெகுஜன ஊடகங்கள் ஊக்குவித்து பிரசுரம் செய்யாதது தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டான சாபக்கேடு.

Nostalgia!

said...

அப்படியே அலேக்காக 80-களுக்கு கொண்டு போய் விட்டீர்.

படித்து முடித்து சில மணி நேரங்கள் அப்படியே உட்கார்ந்திருந்தேன்.

என்னவொரு வசீகரிக்கும் எழுத்து நடை?

ஒவ்வொரு தந்தையும் தனது மகனுக்கும், ஒவ்வொரு மகனும் தனது தந்தைக்கும் இந்தக் கட்டுரையை மின்னஞ்சலில் கண்டிப்பாக அனுப்பி படிக்கச் செய்ய வேண்டும்.

இது போன்ற கட்டுரைகளை வெகுஜன ஊடகங்கள் ஊக்குவித்து பிரசுரம் செய்யாதது தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டான சாபக்கேடு.

Nostalgia!

said...

அப்படியே அலேக்காக 80-களுக்கு கொண்டு போய் விட்டீர்.

படித்து முடித்து சில மணி நேரங்கள் அப்படியே உட்கார்ந்திருந்தேன்.

என்னவொரு வசீகரிக்கும் எழுத்து நடை?

ஒவ்வொரு தந்தையும் தனது மகனுக்கும், ஒவ்வொரு மகனும் தனது தந்தைக்கும் இந்தக் கட்டுரையை மின்னஞ்சலில் கண்டிப்பாக அனுப்பி படிக்கச் செய்ய வேண்டும்.

இது போன்ற கட்டுரைகளை வெகுஜன ஊடகங்கள் ஊக்குவித்து பிரசுரம் செய்யாதது தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டான சாபக்கேடு.

Nostalgia!

said...

பதிவு தந்த பாதிப்பிலிருந்து இன்னும் முழுமையாக மீளாததால், 3 முறை ஒரே பின்னூட்டத்தை அனுப்பிவிட்டேன்! :(

said...

அருமை.

said...

அருமை. ரசிக்கவில்லை, உணர்ந்தேன்.

said...

we spend so much time in understanding unknown people... but we rarely spend time to understand our known people....

said...


யாரோ இலவசக் கொத்தனார் கணக்கைத் திருடிக் கொண்டு விட்டனர். இவர் இவ்வளவு உணர்ச்சி வசப்படும் ஆள் இல்லையே !? ஒரு வேளை நான் டுவிட்டர் பக்கம் வராமல் இருப்பதால், புத்தர் சித்தார்த்தன் ஆனது மாதிரி கொத்தனார் உணர்ச்சி வசப்படுபவராக மாறி விட்டாரா ?!

மிகவும் நல்ல பதிவு. சற்றே பணப் பற்றாக்குறை, குறைந்த வசதிகள் (மின்சாரமில்லா வீடு, அம்மியில் சட்னி, ஆட்டுக்கல்லில் இட்லி மாவு முதலியன) என்று வாழ்ந்திருந்தாலும் நம் தலைமுறையிலும் அதற்கு முந்தைய தலைமுறையிலும் நிறைய நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிறைந்திருக்கின்றன. ஒவ்வொரு தலைமுறையிலும் வாழ்க்கையில் வசதிகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஆழம் குறைந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் நான் யோசித்தது, "என் பெற்றோர் என்னை விட சிறந்த பெற்றோராக இருந்திருக்கின்றனர்". உங்கள் பதிவில் கிட்டத்தட்ட அதையே உணர்ந்தேன் (நம் சுயநலங்கள் மட்டுமே பூதாகாரமாக நின்ற தருணங்கள். என்னைப்பற்றி நானே வெட்கித்து நிற்கும் தருணங்கள் அவை. )

> அதற்குப்பிறகு நானும் பல சினிமா தியேட்டர்களைப்பார்த்துவிட்டேன் - ஆனாலும் அப்பாவின் நினைவு வராமல் ஒரு சினிமாகூடப் பார்க்க முடிந்ததில்லை.அவர் குஷனைப்பார்த்ததில்லை. ஏசியைப் பார்த்ததில்லை. நான் எதையும் அவர் நினைவில்லாமல் பார்த்ததில்லை.

இதைப் படிக்கையில் கண்ணீர் வந்து விட்டது.


பிகு; இதனை ஆழம் இதழுக்கு அனுப்புங்கள் :)

said...

நெகிழ்ச்சியான நினைவுகள்..

said...

>>> யாரோ இலவசக் கொத்தனார் கணக்கைத் திருடிக் கொண்டு விட்டனர். இவர் இவ்வளவு உணர்ச்சி வசப்படும் ஆள் இல்லையே !? ஒரு வேளை நான் டுவிட்டர் பக்கம் வராமல் இருப்பதால், புத்தர் சித்தார்த்தன் ஆனது மாதிரி கொத்தனார் உணர்ச்சி வசப்படுபவராக மாறி விட்டாரா ?! <<<

+1

said...

நெகிழ்வான பதிவு...அவரவர்க்கும் ஏதோ ஒரு வகையில் அப்பாவின் இழப்பை நினைவூட்டும் பதிவு. நன்றி!

said...

Ilavasam

After long time opened the blog and browsed...WORTH IT.

Thanks for this nice post.

said...

பல நினைவுகளை மீட்டவைத்துவிட்டீர்கள்