முன் குறிப்பு: தீபாவளி (அல்லது) விடுமுறை நாட்களில் சினிமா சம்பந்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் தருவது நம் பொழுதுபோக்கு ஊடகங்களின் பாரம்பரியம். நீங்கள் அனைவரும் படித்து மகிழும் நம் பதிவிலும் அந்த பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்க உந்துசக்தியாய் இருந்த நண்பர் சொக்கனுக்கு நம் நன்றிகள்.
இனி பதிவு.
சொக்கன் இன்று உய்யலாலா என்ற பதத்தின் பொருள் என்ன என்று வினவி இருந்தார். பொருளற்ற சொல்லாக இருக்குமோ என்ற ஐயத்தால் எழுந்த வினா அது என்று உணருதல் அவ்வளவு சிரமமில்லை. ரஜினி சார் நடித்த பாண்டியன் திரைப்படத்தில் வரும் பாடல் ஒன்றில் உய்யலாலா என்ற சொல்லைப் பயன்படுத்தியது பஞ்சு அருணாசலம். கண்ணதாசன் தயாரிப்பென்பதால் அத்துணை பொறுப்பின்றி தமிழைக் கையாண்டிருக்க மாட்டார் என நம்பிக்கை நமக்குண்டு.
முதலில் அப்பாடல் வரிகளைப் பார்க்கலாம்.
பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டிநின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
கையில் தந்தேன் கல்யாண மாலை
மையல் கொண்டேன் நானிந்த வேளை
மொத்தப் பாடலையும் பற்றிப் பேசத் தொடங்கினால் இன்று ஒரு நாள் போதாது என்று சொல்லத்தக்க அளவு சிறந்த பாடல். நாம் உய்யலாலா என்ற பதத்தினை மட்டும் பார்க்கலாம்.
இந்தப் பாடலில் உய்யலாலா என்ற சொல்லைக் கவிஞர் மிகவும் அழகாகக் கையாண்டிருக்கிறார். முதலில் நாம் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். இங்கு உய்யலாலா என்பது செயற்கையாக உருவாக்கம் செய்யப்பட்ட ஒரு பதம் அல்ல. உய்யல், ஆலா என்ற இரண்டு சொற்களின் கூட்டே அந்தப் பதம். புணர்ச்சி விதிகளின்படி உய்யல் + ஆலா என்ற இரு சொற்கள் கூடி உய்யலாலா என்ற பதம் நமக்குக் கிடைக்கிறது.
அது என்ன உய்யல்? அது என்ன ஆலா? அதை ஏன் இங்கு கவிஞர் பயன்படுத்தி இருக்கிறார் என்ற கேள்விகள் நமக்கு எழுவது இயற்கையே. இந்தக் கவிதை ஆழமாகப் படித்துப் புரிந்து அனுபவிக்க முயற்சி செய்தோமானால் கவிஞர் எத்துணை அழகாக இச்சொற்களை ஆண்டிருக்கிறார் என்பது புரியவரும். வாருங்கள் பார்க்கலாம்.
நாயகனை தலைவனாக, அரசனாகப் பாவிப்பது என்பது தமிழ் மரபு. கவிஞர் மரபுவழி வந்தவர் என்பதால் அதிலிருந்து சிறிதும் வழுவாமல் தலைவனை ஒரு அரசனாகவும் அவன் எவ்வளவு பெரிய நாட்டினை ஆண்டு வருகிறான் என்பதையும் முதல் வரியில் கவிஞர் எடுத்துரைக்கிறார். அப்பொழுது மிகவும் அழகாக அறிவியல் துணுக்கொன்றையும் நமக்குத் தருகிறார்.
உய்யல் என்றால் உயர்தல். நம் நாயகனின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் அப்படி உயர்ந்து நிற்பது எது என்றால் ஆலா என்ற ஒரு பறவையாம். அதனால்தான் அந்த நாட்டில் உயர்ச்சி என்பதே ஆலா எனப் பொருள் வருமாறு கவிஞர் பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யல் ஆலா என்கிறார்.
ஆலா என்றால் ஆங்கிலத்தில் Tern என அழைக்கப்படும் பறவை. அதிலும் குறிப்பாக Arctic Tern என்ற வகை ஒன்று உண்டு. இப்பறவை என்ன செய்யும் என்றால் வடதுருவப்பகுதிகளில் குளிர்காலம் ஆரம்பிக்கும் முன் அங்கிருந்து பறக்கத் தொடங்கி தென் துருவப் பகுதிகளுக்குச் செல்லும். அதே போல தென் துருவத்தில் குளிர் தொடங்கும் முன் மீண்டும் வட துருவத்திற்குப் பறந்து செல்லுமாம். இது அப்படி ஓர் ஆண்டில் பறக்கும் தூரம் 70,000 கிலோமீட்டர்களுக்கும் அதிகம்.
பாண்டியனின் ராஜ்ஜியம் அப்படிப் பரந்து விரிந்தது. அதை முழுவதும் பார்க்கக்கூடியது ஆலாப் பறவைகள் மட்டுமே என்று ஒரு வரியில் நாயகனின் பெருமையையும் கூடவே ஒரு அருமையான அறிவியல் குறிப்பையும் தருகிறார் கவிஞர்.
சரி. பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யல் ஆலா. அதைத் தொடர்ந்து அது என்ன வேண்டி நின்றப் பைங்கிளிக்கு உய்யலாலா?
கவிஞரின் மொழிவளமைக்குச் சான்று இது. அழகான சொல் விளையாட்டு. நாயகனுக்கு முதல் வரியைத் தந்தவர் அடுத்த வரியில் நாயகிக்குச் செல்கிறார். நாயகியைப் பைங்கிளியாக உருவகப்படுத்தியவர் அந்த கிளிக்கு என்ன தேவை எனச் சொல்கிறார்?
உய்தல் என்ற சொல்லின் மற்றொரு பொருள் வாழ்தல். அந்தப் பைங்கிளி வாழ என்ன தேவை எனச் சொல்கிறார்.
நம் கிராமப்புறங்களில் ஆற்றங்கரையில் ஆலமரங்கள் இருக்கும். அவற்றில் கிளிக்கூட்டங்கள் வசிக்கும். எப்பொழுது கீகீ எனக் கத்திக் கொண்டு ஆரவராமாய் வாழும் அக்கிளிக்கள் புசிப்பது அந்த ஆலமரத்தில் இருக்கும் பழங்களை.
ஆனால் இந்தப் பைங்கிளிக்கு ஆலம்பழமா தேவை? இந்தக் கேள்வியையே வேண்டி நின்றப் பைங்கிளிக்கு உய்யல் ஆலா? என எழுதுகிறார் கவிஞர். இங்கு தேவை அது இல்லையே. அதை உணர்ந்தே தான் அவள் கையில் கல்யாண மாலையை நான் தந்தேன் என நாயகன் பாடுவதாகப் போகிறது இந்தப் பாடல்.
தமிழ் மரபு சார்ந்த நாயக உருவாக்கம், மிகைப்படுத்தல், அறிவியல் செய்தி, சொல் விளையாட்டு என இரண்டு வரிகளில் பஞ்சு அருணாச்சலம் செய்து இருப்பது திரையிசைப்பாடல்களில் ஒரு உச்சம் எனச் சொல்லலாம். இந்தப் பாடலை மீண்டும் ஒரு முறை அசை போட சந்தர்ப்பம் தந்த சொக்கனுக்கு நன்றி.
நேயர்கள் அனைவரும் நம் தீபாவளி (அல்லது) விடுமுறை தின வாழ்த்துகள்.
16 comments:
20 வருடத்திற்கு மேலாக, இப்பதத்தின் பொருள் தெரியாமல் விழித்து கொண்டிருந்த எமக்கு, இது பொருளற்ற சொல் அல்ல என்று, இத் தீப திருநாளில் உணரத்தியதர்க்கு, நாம் என்றென்றும் உமக்கு கடமை பட்டிருகின்றோம் :)))).
Posted. Read ed. Commented.
That's that.
அப்படியே லோலாக்கு டோல் டப்பிமா, சலோமியா போன்றவற்றின் அருஞ்சொற்பொருள் சொன்னால் தண்டமிழுலகம் மகிழும்.
இப்படியே தொடர்ந்து, லாலாக்கு டோல்டப்பி மா, ஜிங்குச்சாங், ஜிலேலோ போன்ற தமிழ்ப்பதங்களுக்குக் பகுபத உறுப்பிலக்கணம் எழுதுமாறு ப்ரூஃப்ரீடர் வட்டார எட்டாவது ரசிகர்மன்றம் வேண்டிக்கேட்டுக்கொள்கிறது.
உய்யல் ஆலா. கிளிக்குக் கல்யாணமாலை கொடுத்த பாண்டியன். சொக்கன் மணந்த பைங்கிளி. நன்றி கொத்ஸ்.
வெகு அழகான விவரம் . நன்றிமா. இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.
:P :P :P
ஐயாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!
எங்கியோ போயிடீங்க!
// ஆரவராமாய் //
- ப்ரூஃப்ரீடர் வட்டார ஒன்பதாவது ரசிகர்மன்றம்
ஐயா சாமி நீர் எங்கியோ போய்ட்டிர்
உய்யலாலா-க்கு அர்த்தம் என்னான்னு ஆலாப் பறந்த என்னை உய்ய விட்ட உயர்வானவரே, நன்றி.
உய்யலாலா-க்கு அர்த்தம் என்னான்னு ஆலாப் பறந்த என்னை உய்ய விட்ட உயர்வானவரே, நன்றி.
உய்யலாலா-க்கு அர்த்தம் என்னான்னு ஆலாப் பறந்தவனுக்கு, உய்ய வழி செய்த உயர்ந்தவரே, நன்றி.
உய்யல் ஆலா என்று பிரித்துப் பொருள் கொண்டது சரிதான். ஆனால் கவிஞர் ஆலா என்று பேசிக் கொண்டிருப்பது ஆலகால நஞ்சு உண்ட சிவனிடம். பாண்டியன் திறம்பட ஆட்சி நடத்தியதால் பாண்டிய நாட்டு மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி பெருகியதால் அவன் ஆட்சி உயர்ந்ததை குறிப்பிட, பாண்டியனின் ஆட்சியில் உய்யல் ஆலகாலனே, என்று முதல் வரியிலும், மதுரையில் கிளி கொண்ட மீனாட்சிக்கு கோவில் கட்டியதால், மீனாட்சியின் மற்றும் கிளியின் புகழ் கடல் கடந்து பரவி, சிவனை மற்றும் பார்வதியை வேண்டி நின்ற கிளிக்கும் உயர்வு ஆலகாலனே என்று இரண்டாவது வரியிலும் பொருள் கொள்ளலாம்.
நாயோன்றித்தனமாக யோசித்ததில் ஒரு நநிகீ கூட தோன்றியது. உய்ய என்றால் உயர என்று பொருள். உய்யலாலா என்றால் "உயர லாலா" என்று பொருள் கொள்ளலாம். லாலா என்பது பாண்டிய நாட்டைச் சேர்ந்த திருநெல்வேலி லாலா கடை அல்வாவுக்கு இடவாகு பெயராக வருகிறது. இதிலிருந்து நீங்களே பொருள் கொள்ளவும்.
Post a Comment