படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது என் மகன் சொன்னான். “You know Dad, I wasn't comfortable".
வீட்டிற்கு அருகிலேயே உள்ள மால், அங்கே புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் ஐமாக்ஸ் திரையரங்கம், முழு உடலையும் உள்ளே இழுத்துக்கொள்ளும் குஷன் நாற்காலிகள், பாப்கார்னா ஐஸியா என்று பார்த்துப்பார்த்து உபசரிக்கும் தேவதைகள் - இதில் எதுதான் அன்கம்ஃபர்டபிள் என்று எனக்குப் புரியவில்லை. கேட்டேன்.
“I cant see these types of movies with you dad" என்றான். இத்தனைக்கும் அனிமேட்டட் படம். அவன் வளர்ந்துவிட்டானாம். நிழலிலேயே வளர்ந்தவனுக்குத் தெரியுமா நிழலின் அருமை?
அவனுக்கு என்ன தெரியும்? அப்பாவுடன் படம் பார்ப்பதில் உள்ள அருமை அப்பாவுடன் சினிமா என்ற ஏக்கம் என் நெஞ்சை விட்டு அகலாத பெருஞ்சோகம்.
சின்ன வயதில் நான் நிறைய சினிமா பார்த்திருக்கிறேன்.எல்லாம் வைராவி அண்ணா திரையரங்கில். திரையரங்கு என்ற பெயருக்குச் சற்றும் சம்மந்தமில்லாமல் சுவரே இல்லாத திறந்த கொட்டகை, மாலை ஆன உடன் வீசத் தொடங்கும் மெல்லிய குளிர் கொண்ட காற்று, அதே போல குளிரத் தொடங்கி இருக்கும் மணல், ஆண்கள் பெண்கள் பகுதிகளுக்கிடையே ஆன மரத்தடுப்பு, பின்புறம் பெஞ்ச் மற்றும் சேர்கள், துப்பிய புகையிலையும் பிடித்த பீடியும் கலந்த ஒரு வாசம், முறுக்கு விற்கும் சிறுவர்கள், தீ என்று எழுதப்பட்ட துருப்பிடித்த சிவப்பு வாளிகளில் மண், அதைத் தாண்டி மூத்திர வாடை அடிக்கும் வேலியோரம் என்று டூரிங் கொட்டகைகளுக்கேயான அடையாளங்கள் அனைத்தும் அதற்கு உண்டு. மீன்கொடி நாட்டிய தேவா பாடல் கேட்டதும் உடல் சிலிர்க்கும்- படத்துக்குப் போயே ஆகவேண்டும் என்று நாடி நரம்பெல்லாம் புடைக்கும். அப்பாவிடம் நேராகப் பேச பயந்துகொண்டு மூர்த்தி மாமாவிடம் சொல்வேன்.
மூர்த்தி மாமா அப்பாவிடம் பேசும்போது ”அதானே பார்த்தேன்.சாயங்காலம் ஆறுமணியாச்சே. சனிக்கிழமை வேற.இன்னும் அலாரம் அடிக்கலையேன்னு..”என்ற நக்கலான பதில் கேட்கும். தொடர்ச்சியாக “நீங்களும் வாங்களேன் அத்திம்பேர்” என்பார் மாமா.
“உனக்குதான் எல்லாம் தெரியுமே.. நான் என்னிக்கு படம் பார்க்க வந்திருக்கேன்”
சினிமா போகும் அவசரத்தில் அப்பா ஏன் சினிமா வருவதில்லை என்ற கேள்வி எழவே எழாது. நம் சுயநலங்கள் மட்டுமே பூதாகாரமாக நின்ற தருணங்கள். என்னைப்பற்றி நானே வெட்கித்து நிற்கும் தருணங்கள் அவை.
இந்த சஸ்பென்ஸுக்கும் ஒருநாள் முடிவு வந்தது. கிளிக்கு இறக்கை முளைத்துவிட்டு, கட்டடித்து சினிமா போக ஆரம்பித்துவிட்ட நேரம் அது. ஒரு நாள் சினிமாவெல்லாம் பார்த்துவிட்டு வரும்போது இரவு 10மணி. வரும்வழியில்தான் நினைவுக்கு வந்தது, மூர்த்திமாமாவிடம் கூடச் சொல்லாமல் சென்றிருந்தது. அப்பா அம்மா மாமா எல்லாரும் வாசலிலேயே காத்திருந்தனர்.
“ஏண்டா.. எங்கேடா போயிட்டே சொல்லாம கொள்ளாம?” அம்மாவை அவ்வளவு கோபமாக நான் பார்த்ததே இல்லை.
“சினிமாவுக்கு” என் குரல் எனக்கே கேட்கவில்லை.
“சொல்லியிருந்தா நானே கூட்டிப்போயிருப்பேனேடா” என்றார் மூர்த்தி மாமா.
அப்பா கொஞ்ச நேரம் ஒன்றும் பேசவில்லை. “ போய் சாப்பிடு. யாரும் திட்டாதீங்க. சினிமாக்குதானே போயிருக்கான்” என்றார் பொறுமையாக.
சூறாவளியை எதிர்பார்த்துக் காத்திருந்த எனக்கு அதிர்ச்சி. இவரோ ஒரு சினிமாவுக்கும் போனதில்லை - சினிமாவே பிடிக்காத ஆசாமி. சொல்லாமல் போனதற்கும் கோபமில்லை என்றால் ஆச்சரியமாக இருக்காதா? இத்தனைக்கும் கோபமே வராதவர் எல்லாம் இல்லை. ஒருமுறை காலாண்டுத் தேர்வு மார்க்குக்காக ரெண்டு தெரு துரத்தித் துரத்தி அடித்தவர்.
சாப்பிட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அவரிடம்.. “அப்பா..ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?” என்றேன்.
“என்னடா? ஏன் இவனுக்குக் கோபமே வரலைன்னுதானே கேக்கப்போறே?” என்றார்.
கொஞ்சம் அமைதியாக இருந்தவர், “எனக்கும் சினிமா எல்லாம் பிடிக்காம இல்லைடா.. நிறையப்படம் பார்த்திருக்கேன். ஒரு படம் கூட விடாமப் பார்த்துக்கிட்டிருந்தவன்தான்”
“ஒரு நாள் படம் பார்க்கக் காசில்லை. அப்பாவோட வெத்தல செல்லத்தில் இருந்த பழைய நாலணாக் காசை எடுத்துக்கிட்டு ஓடிட்டேன்.”
”திரும்பி வந்தா பெல்டால அடிச்சுப் பின்னிட்டாரு.. அவரைச்சொல்லியும் குத்தமில்லை. அந்தக்காசு அவரோட அப்பா போனப்போ நெத்தியில் வெச்சு எடுத்த காசாம். ஞாபகமா வெச்சிருந்தாராம். அதுவும் கூட எனக்கு ரொம்பநாள் கழிச்சுதான் தெரிஞ்சுது.”
“அன்னிக்குப் போட்ட சண்டைல மும்முரத்துல, உன்னையும் ஒரு சினிமாவுக்குக் கூட்டிக்கிட்டுப் போறேன்.. அதுவும் என் காசுல.. அன்னிவரைக்கும் நானும் சினிமா பார்க்க மாட்டேன். இனிமேல் என் மேலே கைய வச்சே..”ன்னு கத்திட்டேன்”
அப்புறம் ஒரு நாலஞ்சு வருஷம் படிச்சு, வேலைக்குப்போய்..சம்பளம் கிடைச்சவுடனே முதல் வேலையா சினிமா தியேட்டருக்குத்தாண்டா போய் நின்னேன். நீளமான க்யூ. புதுப்படம் வேற. இந்தாளுக்குமா சேர்த்து ரெண்டு டிக்கட் வாங்கிட்டு - பழிக்குப்பழி வாங்கணுமில்ல - வீட்டுக்கு வந்தா..
“காலையில இருந்து ஒரே ஆட்டம்.. என் புள்ள சம்பாதிக்கறான், இன்னிவரைக்கும் நானே வாங்காத சம்பளம் முதல் முறையே வாங்கறான்னு ஊரெல்லாம் தண்டோரா போட்டுகிட்டிருந்தாராம். வீட்டுக்கு வந்தவர் நெஞ்சைப் பிடிச்சுகிட்டு கீழே விழுந்தவர்தான்.. எழுந்துக்கவே இல்லையாம்.”
அந்த தியேட்டருக்குப் போய் க்யூல ஒரு மணி நேரம் நிக்காம இருந்திருந்தா.. ஒருவேளை ஹாஸ்பிடலுக்குப் போய் காப்பாத்தி இருக்கலாம். ஏன்.. ஒரு வார்த்தையாச்சும் பேசியிருக்கலாம்.. ஆனா எதுவும் நடக்கலை.
அன்னிக்கு விட்டவந்தாண்டா இந்த சினிமா எழவை.” அப்பாவின் குரல் இன்னும் என் காதில் ஒலிக்கிறது.
அதற்குப்பிறகு நானும் பல சினிமா தியேட்டர்களைப்பார்த்துவிட்டேன் - ஆனாலும் அப்பாவின் நினைவு வராமல் ஒரு சினிமாகூடப் பார்க்க முடிந்ததில்லை.அவர் குஷனைப்பார்த்ததில்லை. ஏசியைப் பார்த்ததில்லை. நான் எதையும் அவர் நினைவில்லாமல் பார்த்ததில்லை.
மகனைப் பார்த்தேன். “உனக்கு அப்பாவோட பார்க்கிறது வசதியா இல்ல. எனக்கு அப்பா இல்லாமப் பார்க்கறது வசதியே இல்லை” என்றேன், கண்களை அனிச்சையாகத் துடைத்துக்கொண்டே.