Wednesday, August 13, 2014

Cul De Sac என்ற காரணப்பெயர்!

இன்று வதனஏட்டில் நண்பர் சீமாச்சு ஒரு சுவாரசியமான கேள்வியைக் கேட்டிருந்தார். Cul de sac என்பதற்கு இணையான தமிழ் வார்த்தை என்ன? என்பதே அவர்தம் கேள்வி. கேள்விதனைக் கேட்கும் பொழுதே அவரது முன்முடிவைப் பாருங்கள். இந்தச் சொல் தமிழ் இல்லை, எனவே இதற்கு இணையான சொல் ஒன்று வேண்டும் என்பது இவருடைய முன் முடிவு.

எல்லாமே தமிழ்தான் எனத் தீர்மானமாகச் சொல்ல முடியும் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடைய எனக்கு இந்த முன்முடிவு வருத்தத்தைத் தந்தது. ஆனால் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டதன் மூலம் அந்தச் சொல்லும் தமிழ்தான் என நிறுவ ஒரு வாய்ப்பு கிடைத்ததால் சீமாச்சு அண்ணாவுக்கு ஒரு நன்றியை முதலில் சொல்லி விடுகிறேன்.

ஒரு சொல் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்குச் செல்லும் பொழுது அந்த மொழியின் இலக்கணத்தின்படி சற்று சிதைவது இயல்புதான். அப்படியே ஒரு தமிழ்ச்சொல்லின் சிதைந்த வடிவமே Cul de sac. இதன் மூலம் என்ன என்பதைப் பார்ப்போம்.

தொன்மையான கோட்டைகளில் கோட்டை வாயிலில் இருந்து வரும் வழி நேராக இருக்காது. சற்றே திரும்பிச் செல்லும். கோட்டை வாசலைத் தகர்த்து எதிரி உள்ளே வரலாம் என்ற நிலை வந்தால் அந்தத் திருப்பத்தை ஒட்டி மரங்களை வெட்டி நிறுத்தி வழியை அடைத்துவிடுவார்கள். வாசலைத் தகர்த்து வந்த எதிரிப்படை போக வழி இல்லாமல் திணறும்.

பின்னர் எதிரிகள் இந்த மரங்களை தீ வைத்து எரித்து வழியை மீட்டு ஊரினுள் வரத் தொடங்கிய பொழுது ஒரு பழைய மந்திரி மரங்களை விடுத்து கற்தூண்களை அடித்து நிறுத்தி வழியை அடைத்தால் எதிரிகள் வரமுடியாது போகும் என்பதைச் சொல்ல கல்லடித்து ஆக்கு என்றார். அப்படி கற்தூண்களால் வழியை அடைப்பதை அவர் சொன்ன சொற்களின் நினைவாக கல்லடித்தாக்கு என்றே வழங்கினர்.

கோட்டைகளில் நிகழ்ந்தவற்றைப் பார்த்த குடியானவர்கள், தங்கள் நிலத்திற்கு நீர் வர வேண்டும் என்பதற்காக ஓடைகளை கற்களைக் கொண்டு அடைத்து நீரின் போக்கை மாற்றி தம் நிலத்திற்கு வரச் செய்தனர். அவர்களும் கோட்டையில் வழங்கப்பட்ட கல்லடித்தாக்கு என்ற பெயரையே தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர்.

முறையான கல்விக்கு வழியில்லாத பாமரர்கள்  காலப்போக்கில் கல்லடித்தாக்கு என்பதைக் கல்லடிச்சாக்கு என மருவி வரும்படி உச்சரிக்கத்தொடங்கினர். இப்படி மருவிய பெயருக்கு ஏற்றபடி சாக்குப் பைகளில் மண்ணை அடைத்து அப்பைகள் சரிந்துவிடாமலிருக்க அவற்றின் மேல் கற்களையும் வைக்கத் தொடங்கினர்.  இப்படிக் கற்களுக்கு அடியே சாக்குப் பைகள் இருப்பதால் அது கல்லடிச்சாக்கு என்பது காரணப்பெயர் என்றே நம்பத்தொடங்கினர்.

நம் நாட்டில் இருந்து மிளகு வாங்கிச் செல்ல வந்த பிரெஞ்சு வணிகர்கள் இது போலத் தடுத்து நிறுத்தப்படும் வழிமுறைக்கு கல்லடிச்சாக்கு என்ற பெயர் இருப்பதைக் கண்டு அவர்கள் மொழியிலும் அதையே எடுத்தாளத் தொடங்கினர். அம்மொழி இலக்கணத்திற்கு ஏற்றவாறு இது கல் டி சாக் என்று வழங்கப்பட்டது. நாளாவட்டத்தில் இந்தச் சொல் ஆங்கிலத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றானது.

இது குறித்த ஒரு சுவராசியமான கட்டுக்கதையும் உண்டு. கணவனை வீட்டோடு வைத்துக்கொள்ள ஒரு வழி அவனுக்குப் பிடித்ததை சமைத்துத் தருவது என்பது உலகத்தில் பல நாடுகளில் பழமொழியாகச் சொல்லப்பட்ட ஒன்று. அப்படி அரிசியில் இருந்து கற்களைப் பொறுக்கி அதனை சாப்பாடாகச் செய்து தர உன் கணவன் ஊர் பொறுக்காமல் உன்னுடனே இருப்பான். அவனுடைய வழியானது உன் வீட்டுக்கு வரும் ஒரு வழிப்பாதை ஆகிவிடும். இதைத்தான் கல் எடுத்து ஆக்கு என்பார்கள் என்பதும் இப்படி ஒரு செவிவழிக்கதையே. கல் பொறுக்கின் ஊர் பொறுக்கான் என்ற சொலவாடையும் இப்படி வந்ததே. கல் என்பது சாப்பிடும் பொழுது வாயில் வரும் கல் என்று கொள்ளாமல் மனத்தை நெருடும் விஷயங்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இப்படி கல் அடித்து ஆக்கு -> கல்லடித்தாக்கு -> கல்லடிச்சாக்கு -> cul de sac என்று மாறியதே வரலாறு. இன்று முட்டுச்சந்து Cul de sac என்று அழைக்கப்பட்டாலும். அதன் மூலம் நம் தமிழ்தான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

#எல்லாமேதமிழ்தான்

பிகு: ஆய்வில் முக்கிய பங்காற்றிய உபிச பெனாத்தலுக்கு என் தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

8 comments:

said...

சிறப்பானதொரு ஆய்வினை செய்து அதை அனைவரும் உணர்ந்து தமிழின் வலிமை தமிழனின் பெருமையை நிலைநாட்டியமைக்கு நன்றீஸ்ஸ்ஸ்ஸ் :))

said...

கற்பனை செட்டை கட்டிப் பறக்கிறது :)

சபா

said...

அட்டகாசம்.

said...

தமிழ் எப்படி வளர்ந்திருக்கின்றது! வியப்பு!!

தங்கள் ஆராய்ச்சி மிக்க சிறப்பு!!!

said...

இந்த ஆராய்ச்சிக்கு ஒரு cul de sacல் வைத்து உங்களுக்கு ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தி .......!

said...

சென்ற ஆண்டு போட்ட பின்னூட்டம் இப்போது தான் தங்களால் அனுமதிக்கப் படுகிறது. இதுவரை அது cul de sacலேயே நின்று விட்டதொ?

said...

தலைவரே பதிவு போட்ட ரெண்டு நாளைக்கு இந்தப் பக்கம் வரேன். இல்லைன்னா அடுத்த பதிவப்போதான்!! :)) அடுத்த பதிவைப் படித்துவிட்டீர்களாஆஆஆ? :)

said...

வெண்பா பாவலரே,

படிச்ச்சுட்டோம்ல ...