Thursday, July 31, 2014

விடை கொடு எந்தன் நாடே!

இப்பொழுதுதான் நியூஜெர்ஸி வந்தது போல் இருக்கிறது ஆனால் பன்னிரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. இரண்டே வயது ஆன மகன், மனைவியுடன் நியூயார்க் கென்னடி விமானநிலையத்தில் இறங்கியது இன்னும் நினைவில் இருக்கின்றது. அமெரிக்கா நமக்குப் பிடிக்குமா, இங்கு எவ்வளவு நாள் இருப்போம், திரும்பி விடுவோமா என்று எந்த விதமான திட்டமிடலும் இல்லாமல்தான் வந்தோம். சிறிது சிறிதாக அமெரிக்கா எங்களுள் குடியேற நாங்களும் அமெரிக்காவில் வாழத் தொடங்கினோம். வேலைக்கான விசாவில் வந்து என்னால் எந்த வித முயற்சியும் இல்லாமல் அலுவலகமே க்ரீன் கார்ட்டுக்கு ஏற்பாடு செய்ததும், அதை அடுத்து அமெரிக்க குடியுரிமை பெற்று இந்நாட்டு பிரஜையாகவே ஆனதும் கூட அதிக திட்டமிடல் எதுவும் இல்லாமல் இயல்பாகவே நடந்த ஒன்றானது. நாமிருவர் நமக்கிருவர் என்ற கோஷத்திற்கு ஆதரவாக மகளையும் பெற்றெடுத்து குடும்பம் முழுமையானது நியூஜெர்சியில்தான்.

ஆரம்பத்தில் நியூயார்க் நகரத்தில் வேலை. ஆற்றின் மறுகரையில் வாசம். நிதமும் அந்த பெருநகரத்திற்குள் சென்று பின் மீண்டு வருவது என்ற வாடிக்கை. நகரத்தினுள் இருந்ததால் கார் எல்லாம் வைத்துக்கொள்ள தேவையில்லாது எங்கு சென்றாலும் ரயில் பயணம் மட்டுமே. இலவச காலை மாலை இதழ்களைப் படித்துக் கொண்டு பொழுது போய் விடும். ஸ்மார்ட் போன்கள் இல்லாத காலம் என்பதால் சகபயணிகளின் முகங்களைப் பார்ப்பதும் புன்னகைகளைப் பரிமாறிக் கொள்வதும் பேசுவதும் கூட அப்பொழுது சகஜம். பின் படிப்படியாக அவை எல்லாம் போய் காதில் ஹெட்போன்களை மாட்டிக்கொண்டு மற்ற ஓசைகளைத் தவிர்த்து அனைவரும் தனித்தனியாக ஒரு தீவு போல இருப்பதும் ஆனது இந்த காலகட்டத்தில்தான். பணியிடம் அருகிலுள்ள துணைநகரம் ஒன்றிற்கு நகர, முதலில் ஒரு கார் வாங்கி அதுவும் போதாமல் இரண்டு கார்கள் என்று ஆனபின் இப்படி ரயிலில் போவது என்பது என்றோ ஒரு நாள் அதிசயமாக நடக்கக்கூடிய செயலாகிப் போனது. இப்படி ரயிலை விடுத்து கார்கள் என வாழ்க்கை மாறியது நியூஜெர்சியில்தான்.

ஹட்சன் ஆற்றின் கரையில், ஒரே ஒரு படுக்கையறையுடன் கூடிய புறாக்கூண்டு ஒன்றில்தான் வாழத் தொடங்கினோம். அதன்பின் சற்றே பெரிய வாடகை வீடு, சொந்த வீடு என்று இங்கு வந்த பின் நமக்கான தேவைகளும் வசதிகளும் பெருகப் பெருக அதற்கு ஏற்றாற்போல் இருப்பிடங்களும் வாழ்வு முறைகளும் மாறினாலும் எல்லா முகவரிகளும் NJ என இந்த மாநிலத்தின் பெயர் சுருக்கத்தையே மாறாமல் கொண்டிருந்தன. அமெரிக்க வாழ்வு முறையின் நல்லவை அனைத்தோடு நம் நாட்டுப் பாரம்பரியங்கள் எதையும் விட்டுத் தராத ஒரு புதிய வாழ்வு முறையை இங்குதான் கண்டு கொண்டேன். சரவணபவன் சாப்பாடு, கிராண்ட் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் கடை, கர்நாடக சங்கீதக் கச்சேரி, நவராத்திரி கொலு, நாலு திசைகளிலும் கோயில்கள், இவற்றோடு American Dream என்றழைக்கப்படும் இந்நாட்டின் விழுமியங்களையும் கலந்து கட்டிய கலாச்சாரத்தை உணர்ந்து கொண்டது இந்த நியூஜெர்சியில்தான். 

உறவினர்கள் தவிர்த்துத் தெரிந்தவர்கள் யாருமே இல்லாமல்தான் இந்த ஊருக்கு வந்தேன். மெதுவாக உடன் வேலை செய்பவர்கள், வாடகைக் குடியிருப்பில் உடன் வசிப்பவர்கள், எனக்குப் பின் வந்தவர்கள் என எனக்கான ஒரு நட்பு வட்டாரம் அமைந்தது இங்குதான். சமூக ஊடகங்களில் வலைப்பதிவுகள் மூலம் நுழைந்து பேஸ்புக் ட்விட்டர் எனத் தொடர்ந்து இயங்கத் தொடங்கியதும், தமிழகத்தில் இருந்த பொழுது கூட இல்லாத தமிழார்வமும், அது குறித்த எழுதத் தொடங்கியதும், இவை எல்லாம் மூலம் நட்புகள் உருவாகி, உரமேறி, உலகெல்லாம் விரிந்து கிடப்பதும் நான் இங்கு இருக்கும் பொழுதுதான். இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஊடகங்கள் மூலம் தெரிந்து பின் நேரில் சந்தித்து இன்று என் வாழ்வில் இன்றியமையாத பகுதியாகிவிட்ட, வகிமா எனச் செல்லமாக அழைக்கப்படும் நண்பர்கள் குழாம் அமைந்தது இந்த நியூஜெர்சியில்தான். 

நிற்க. நாளை முதல் நான் நியூஜெர்சியின் குடிமகன் இல்லை. விடிந்தால் விமானம் ஏற வேண்டியதுதான். மேலே சொன்ன அனைத்தையும் விட்டுவிட்டு டெக்ஸஸ் போகிறேன். வாழ்வில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பம் ஆகிறது. 

தகப்பன் கைபிடித்துப் பொருட்காட்சி காணச் செல்லும் சிறுவனைப் போல உற்சாகமாய்ச் செல்கிறேன் எனச் சொல்ல ஆசைதான் என்றாலும் பழகியவை அனைத்தும் விடுத்து மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன் என்ற ஒரு கலக்கத்தோடுதான் செல்கிறேன். இத்தனை வசதிகளோடு போகும் பொழுதே இந்த கலக்கம் என்றால் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் விடுத்துக் கட்டாயத்தினால் புலம்பெயர்ந்தவர்கள் படும் துயரம் எப்படியாக இருக்கும் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. அப்படிப் புலம் பெயர்ந்த பின்னரும் மனவலிமையோடு தமக்கென ஒரு வாழ்வை அமைத்துக் கொண்ட அத்துணை பேர்களுக்கும் என் வணக்கம்.

அன்று அமெரிக்கா வந்தது போல் இல்லாது, இன்று வெறும் கீபோர்ட் தொலைவில் இத்தனை நண்பர்கள் இருப்பதால் இங்கிருந்து சென்றாலும் தனிமையை உணரப்போவதில்லை. அந்த வலிமையை என் மனத்தில் இருக்கச் செய்த அத்துணை நட்புகளுக்கும் என் நன்றி. 

இந்த மாமாங்கம் இனியவை அத்தனையும் தந்தது போல இனியும் என் வாழ்வு இருக்க உங்கள் வாழ்த்துகளை நாடுகிறேன். 

18 comments:

said...

Very emotional!!! Yes the attachment is tough, and should be OK to explore a far off place, in your case another state within the same country, you have made home. Kids might find a bit odd. You might have to re-invent the wheel again. Well the social media shall bring you local friends of your liking. Dallas?

#I Felt the same way when I decided to return back to Bangalore for Good in 1999 after 5 years stay there.

said...

All the best Rajesh! Hope your new place gives you peace prosperity. It is really difficult to move out from the place where you have lived and loved. Your post reminded me of my days with Hudson in NY.

said...

very nice. Moving is always to be looked upon as an adventure. A rolling stone gathers no moss. All the very best :-)

amas32

said...

நமக்கெல்லாம் "பிறக்க ஓர் ஊர் பிழைக்க ஓர் ஊர்" என்று அன்றே கலைஞர் சொல்லிவிட்டாரே :)

எனக்கு என்னவோ உமக்கு டெக்சசில்தான் இன்னும் நன்றாகப் பொழுது போகும் என்று தோன்றுகிறது. நிறைய பேர் துப்பாக்கி வைத்திருப்பார்களாம் அதனால் பஞ்சாயத்துக்கெல்லாம் போகாமல் (இணையம் போல ;)) அமைதியாக, எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகள்.

சரி, தலைப்பு "விடை கொடு எந்தன் மாநிலமே" என்றுதானே இருக்க வேண்டும்.

said...

கொஞ்சம் பயந்துட்டேன், தலைப்பைப் பார்த்துட்டு! அதே அமெரிக்கா தானே! மாநிலம் தானே மாறுகிறது! டெக்ஸஸ் ஊரிலேயேவா? அல்லது டெக்ஸஸ் மாநிலத்தில் எந்த ஊரில்? எங்கிருந்தாலும் நன்றாக வாழ வாழ்த்துகள். ஆனால் டெக்ஸாஸ் எல்லோருக்கும் பிடிக்கும்னு சொல்ல முடியாது. erratic weather! :)

said...

நல்லாயிருங்க!!

said...

Good luck to you, gai and the kids mate...the memories of avalon cove and bertucci pizza is still very fresh (that was my first meal in NJ :) )

said...

ஏங்க இதெல்லாம் உங்களுக்கே ரொம்ப ஓவராத் தெரியலையா?

இந்தியாவை புறக்கணித்து அமெரிக்க குடிமகனா ஆயாச்சு. அப்போயெல்லாம் எதுவும் என் நாடு என் தேசத்தை துறந்துட்டேன்னு நீலிக் கண்னீர் வடிச்சதா ஞாபகம் இல்லை எனக்கு..

இப்போ, நியூ ஜேர்ஸியையும், டெக்ஸாஸையும் தனித்தனி நாடாக்கி..காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க..

நான் பெரிய நியு யார்க் ஜயண்ட்ஸ் விசிறி, இனிமேல் இந்தப் பாழாப்போன "கவ்பாய்ஸ்" ஊரில் இருந்து எப்படி என் ஃபுட்பால் தாகத்தை தீருக்குவேன்? னு சொன்னாலாவது கொஞ்சம் அர்த்தமா இருக்கும். அதைவிட்டுப்புட்டு..

மன்னிச்சுக்கோங்க, இதென்னவோ..நீங்களே உங்க எழவுக்கு ஒப்பாரி வைக்கிறமாதிரி இருக்கு!

You can buy a huge house for a much cheaper price in Texas. The traffic will not be hectic. There wont be any basement in your house to accumulate "trash" and the weather will be dry and hot just like what we got "back home"..There is no state-tax for your income in Texas. Think about those things and enjoy your life in the lone star state! :)

said...

Austin is a nice college town. How did I know it is Austin which is your "new home town"? I checked out your twitter update! :-))I would say it is better than humid Houston or Dallas/FW as it is not too big. Lots of educated community in Austin. It is much cleaner than dirty NJ! ENJOY being a Texan.

But one thing..In Austin they dont have any home-owned American sports teams (nfl, nba or mlb or nhl teams as far as I know). It does not matter to you. I dont think you care much about american sports (I really feel sorry for you :( ) as I could see how much you obsessed with the cricket even now! lol

said...

ஒ, சென்னையில் இருந்து திருச்சி மாவட்டம் போல ஒரு மாற்றம். எல்லாம் நன்றாக அமைய வாழ்த்துக்கள். நாங்கள் வாழும் கலிபோர்னியாவில் ஒர்ர் வாசாகம் உண்டு. " Once a Californian, always a Californian" என்று.. அருமையான பதிவு, தொடர்ந்து டெக்ஸாஸ் அனுபவங்களை பகிருங்கள். ஒரு பாட்டு தான் நினைவிற்கு வருகிறது.. " All my Ex-'s live in Texas..."

said...

டெக்ஸஸ், நான் இன்னும் பார்க்கலை.

போய் நல்லபடி செட்டில் ஆனதும் தகவல் சொல்லுங்க. வந்துருவோம்!

தலைப்பைப் பார்த்ததும் எந்த நாடோன்னு ஒரு திகைப்பு வந்தது உண்மை! அப்புறம்...... பார்த்தால் எல்லாம் ஒரு நாட்டுக்குள்ளேதானே:-)

said...

நான் இத்தணை நாள் இந்தியர் என்றல்லவா நினைத்து பின்தொடர்ந்து கொண்டிருந்தேன். கடைசியில் நீரும் இன்னொரு நாட்டில் இரவல் சுகம் பெறும் ஒரு முன்னாள் இந்தியர்தானா

said...

பிறந்த மண்ணை விட்டு நீங்கும் போது இல்லாத வருத்தம் வளர்ந்த மண்ணை விட்டுப் போகும்போது வருகிறதே ... !

வாழ்க ... வளர்க ...

said...

best wishes

said...

Have you resigned from OFSS? or got transfer from OFSS?

will check Aria later..

said...

Congrats & Best wishes. I know ..I am late :) so what ...wish is a wish

said...

Where in Texas - Calgary Siva

said...

Write your settling experience in Texas like finding house, kids school, local Indian diaspora friends etc. Will be helpful for newcomers.