Sunday, October 07, 2018

ஏ ரிக்‌ஷா!!

ரிக்‌ஷா ஒன்றினை ஒரு இளம்பெண் ஓட்டுவது போலவும் அதில் அந்த ரிக்‌ஷாவினை பொதுவாக ஓட்டும் தொழிலாளி அமர்ந்திருப்பது போலவும் ஒரு புகைப்படைத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்தப் பெண் இந்த ரிக்‌ஷாக்காரரின் பெண் என்றும் இஆப பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தோஷத்தை தன் தந்தையை அமர வைத்து இப்பெண் இழுத்துச் சென்று கொண்டாடியதாகவும் வாட்ஸப்பில் ஒரு கதை சுற்றி வந்தது. அது வழக்கம் போலப் பொய் என்றும் இது ஒரு விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் எனச் சொல்லி நல்ல கதையை இல்லாமல் செய்த நல்ல உள்ளங்களுக்கு என் கண்டனங்கள்.



இன்றைக்கு ட்விட்டரில் இது தொடர்பாக ஒரு நண்பர் கேட்ட கேள்வி - ரிக்‌ஷா என்றால் என்ன? ட்விட்டரிலேயே சிறுபதில் தந்துவிட்டாலும் இதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.

முதலில் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். சக மனிதனைக் கால்நடைபோல் கருதி ஒரு மனிதனை மனிதன் வண்டியில் இழுத்துச் செல்வது என்பது தமிழர் பண்பாடு கிடையாது என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. வேண்டாத பல பழக்கங்கள் வெளியில் இருந்து வந்து நம் பண்பாட்டைக் குலைத்ததுபோல் இந்தப் பழக்கமும் நடுவிலே சில காலம் நம்மிடையே இருந்தது ஒரு துன்பியல் சம்பவமே. நல்லவேளை நம்மை நாமே மீட்டுக் கொண்டோம். போகட்டும்.

ஷா என்றால் மன்னர்கள், அரசர்கள், பேரரசர்கள். இன்றைய ஈரான், அன்றைய பெர்ஷியாவில் பயன்பட்ட சொல் என்றாலும் இதற்கு மூலம் வடமொழியில் இருக்கும் க்ஷத்ர என்ற சொல்தான். அதே வேர்ச்சொல்லில் இருந்து வந்த க்ஷத்திரிய என்ற சொல் வீரர்களைக் குறிக்கப் பயன்படுவதாக விக்கிப்பீடியா சொல்கிறது.(1) ஆக ஷா என்ற வடமொழிச்சொல் வட இந்தியாவில் மன்னர்களைக் குறிக்கப் பயன்பட்ட சொல் என்பது நிரூபணமாகிறது.

வேதங்களில் பழமையானது ரிக் வேதம் (2). பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பத்து மண்டலங்களாகக் கொண்ட ரிக் வேதத்திற்கு நான்கு வேதங்களில் என்றுமே முதன்மையான இடம்  உண்டு. இந்த ரிக் வேதத்தைக் கற்றுணர்ந்து அதனைப் பின்பற்றுபவர்களுக்கு ரிக்வேதிகள் என்று பெயர். இவர்களில் முதன்மையானவர், ரிக்வேதிகள் அனைவருக்கும் தலைவராகக் கருதப்படுபவரை ரிக்வேதிகளின் மன்னர், ரிக் வேதத்தில் மன்னர் என்ற பொருள் வரும்படி  ரிக்‌ஷா என்று அழைப்பார்கள். மிகவும் ஞானம் உள்ளவராகக் கருதப்படும் இவரை அக்காலச் சமூகம் போற்றிக் கொண்டாடும். அவர் வெளியே செல்லும் பொழுது அவரின் வண்டியை இழுத்துச் செல்வது பெரும்பாக்கியமாகக் கருதப்பட்டு அதில் மாடுகளோ குதிரைகளோ பொருத்தப்படாமல் அவரின் சீடர்களே அவ்வண்டியை இழுத்துச் செல்வது வழக்கம்.

ரிக்‌ஷா வரும் நேரம் என்ன? ரிக்‌ஷா வந்தாகிவிட்டதா? என்றெல்லாம் மக்கள் பேசியதால் காலப்போக்கில் ரிக்‌ஷா என்பது ரிக்வேதிகளின் தலைவரைக் குறிப்பது போய்,  மனிதரால் இழுக்கப்படும் அவ்வண்டிக்கான பொதுப்பெயராகிவிட்டது. ரிக்வேதிகளின் தலைவருக்கு மட்டும் இப்படிப்பட்ட மரியாதையா என எண்ணிய மற்ற வேதங்கள் ஓதுபவர்களின் தலைவர்கள் தமக்கு இது போல வண்டி வேண்டும் என மரியாதையைக் கேட்டு வாங்க ஆரம்பித்தார்கள். நாள்போக்கில் யாரிடமெல்லாம் அந்தஸ்தும் பணமும் அதிகாரமும் இருக்கிறதோ அவர்கள் எல்லாருமே இவ்வண்டிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஆனால் வண்டியின் பெயர் மட்டும் அதன் மூல காரணமாக இருந்த ரிக்வேதிகளின் தலைவரின் நினைவாக ரிக்‌ஷா என்றே நிலைத்துவிட்டது.

தானே ஒரு ரிக்‌ஷா ஓட்டுநராய் நடித்த பொழுது, இந்த ரிக்‌ஷா ஓட்டுநர்களின் சிரமம் அறிந்த புரட்சித் தலைவர் அவர்களுக்கு மழைக்கவசம் தந்து மகிழ்வித்தது நம் நாட்டின் வரலாறு. கொடுத்து சிவந்த கரங்கள் கொண்ட தெய்வம் அவர் என்பதற்குச் சான்றல்லவா இது.  இயந்திரம் பொருத்திய வண்டி பின் தானி என மாறி இன்று நம் மாநிலத்தில் இப்படி கால்நடை போல மனிதன் நடத்தப்படும் அவலம் இல்லாமல் போய்விட்டது.  நம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இவ்வண்டி கிடையாது. ஆனால் தொழிலாளிகளின் நலனுக்காகப் போராடும் இடதுசாரிகளின் கோட்டையான மேற்குவங்கத்தில் மட்டுமே இவர்கள் இன்னும் இருப்பது ஒரு நகைமுரணே.


(1) https://en.wikipedia.org/wiki/Shah
(2) https://en.wikipedia.org/wiki/Vedas

7 comments:

said...

மன்னர் போன்றே மக்களையும் உட்கார வைக்கும் சாதனமன்றோ? இருக்கச் செய்யும் இரிக்கச்செய்யும் ஷா போல.. இரிக்க ஷா-என்றுதான் இத்தனைநாளும் நினைந்திருந்தேன்.

said...

மக்கள் அமர்ந்து செல்லும்போழ்து மன்னரைப்போலுணர்வர். என்னே.... நெஞ்சம் விம்முகிறது பழந்தமிழரை நினைக்க நினைக்க.

said...

:P:P:P:P:P:P

said...

தவறான தகவலாக இருந்தாலும்
நகைச்சுவை பதிவாக கருதி சிரித்து விட்டு செல்கின்றேன்

Raj

said...

Hello, I enjoy reading through your article.
I wanted to write a little comment to support you.

said...

Wow! This blog looks just like my old one! It's on a
completely different topic but it has pretty much the same layout and design. Great choice of colors!

said...

Superb, what a blog it is! This website presents valuable information to us, keep it up.