சமீபத்தில் நியூஜெர்ஸியில் நடந்த கச்சேரியில் பாடகர் டிஎம் கிருஷ்ணா அவர்கள், எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் எழுதிய பாடல் ஒன்றை ரீதிகௌளை ராகத்தில் பாடினார். சுவாரசியம் அப்பாடலின் பாடுபொருள்.
பொதுவாக கர்நாடக இசையில் பெரும்பாலும் பக்தி சார்ந்த பாடல்களே பாடப்பெறும். மிகக் குறைவான அளவில் ஜாவளி போன்ற வடிவங்களில் காதற் பாட்டுகள் இடம் பெறும். அல்லது கச்சேரியின் இறுதிப் பகுதியில் பாரதியார் பாடல்கள் போன்ற நாட்டுப்பற்று பாடல்கள் இடம் பெறும். இவ்வகையில் இல்லாத பாடல்கள் மிகவும் அரிதே.
இந்தக் கச்சேரியில் பாடிய பாடல் ஒரு பறவையைப் பற்றிய பாடல். அதுவும் பொதுவாக அதிகம் பேசப்படாத ஆந்தையைப் பற்றிய பாடல். ஆந்தையும் கண்கள் பற்றியும் அதன் அலறல் பற்றியும் அழகாக எழுதப்பட்ட இந்தப்பாடலை பாடிக் கேட்கும் பொழுது அத்தனை அற்புதமாக இருக்கிறது. உடன் வாசிக்கும் கலைஞர்கள் ஶ்ரீராம்குமாரும், அருண்பிரகாஷும் இப்பாடலின் தன்மையை உணர்ந்து வெகு அழகாக வாசித்தனர். குறிப்பாக இருளின் தன்மையைக் கொண்டு வர மிருதங்கத்தில் ஒரு பக்கம் மட்டும் கொண்டு அருண்பிரகாஷ் வாசித்த இடங்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். இந்தப் பாடலுக்கு மெட்டமைத்தவர் டிஎம் கிருஷ்ணா.
ஆந்தை மட்டுமல்லாது மேலும் சில பறவைகள் மேல் பாடல் புனைந்திருப்பதாக பெருமாள் முருகனிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சொன்னார். அவையும் விரைவில் மேடை ஏறும் என எதிர்பார்க்கிறேன். தற்பொழுது பாடப்படும் பாடு பொருளினால் கர்நாடக இசையினுள் வரத் தயக்கம் கொண்டோரை உள்ளே இழுக்க இது அற்புதமான வழி. தொடர்ந்து பல கலைஞர்களும் இது போன்ற பாடல்களைப் பாட முன் வர வேண்டும்.
இப்பாடலின் தனித்தன்மையை உணர்ந்து இதனை எல்லாரும் கேட்க வகை செய்த CMANA இயக்கத்தினருக்கு என் நன்றி.
ஆந்தைப் பாட்டு
பல்லவி
இருட்டுக்கும் குரலுண்டு
ஆந்தையின் அலறலது
பொருட்டாக்கிக் கேட்டால் பல
பொருளுணர்த்தும் மொழியாகும் (இருட்டுக்கும்)
அனுபல்லவி
இருளின் கனத்தை உடைத்து
பெருத்த அமைதி கலைத்துத்
தரும்பயம் போக்கிப் பேசும் (இருட்டுக்கும்)
சரணம்
உருட்டி விழிக்கும் கண்கள்
உருளும் பந்தாய் மிளிரும்
விருட்டென்று வாய்திறந்து
மருட்டி அலறி ஒலிக்கும்
விரித்து மனதைத் திறந்தால்
சிரிக்கும் குழந்தைக் குரல்போல்
இருளை உருக்கி நெஞ்சில்
முருகு பெருக்கி வளர்க்கும் (இருட்டுக்கும்)
2 comments:
புறம்போக்கு பாடலும் இதே இராகமா ? இதைக் கேட்கும் போது அது நினைவு வந்தது. அது இராகத்தினாலா அல்லது அவரின் குரலினாலா என்று தெரியவில்லை. குறிப்பாக "கேள்வி கேட்டா மேக் இன் இண்டியான்னு வடசுடுவான்" என்ற வரிக்கு அண்மையில் போல.
பிகு: "இருளை உருக்கி" என்பதை "இருளை இறுக்கி" என்று ஒரு முறை பாடுகிறார்.
சங்கர்
இந்தப் பாடலின் ராகம் ரீதிகௌளை. இந்த ராகம் பொறம்போக்குப் பாடலில் இல்லை என்றே நினைக்கிறேன். மீண்டும் கேட்க வேண்டும் ஆனால் இல்லை என்றே நினைக்கிறேன். இப்பொழுதுதான் உங்கள் கேள்வியைப் பார்த்தேன் எனவே பதிலளிக்கத் தாமதம். மன்னிக்கவும்.
Post a Comment