Saturday, December 07, 2019

ராமன் அப்துல்லா

“யுவரானர், இந்த வழக்கு ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு” என்று தன் வாதத்தைத் தொடங்கினார் பரசுராமன். தமிழகத்தின் சிறந்த குற்றவியல் வழக்கறிஞர். வாதாட வந்தால் மணி நேரத்திற்குப் பல லட்சங்கள் வாங்கும் அளவு புகழ் பெற்றவர். வலதுசாரி கட்சி ஒன்றின் வெளிப்படை ஆதரவாளர் என்றாலும் தேவை என வந்துவிட்டால் இவரை அனைத்துக் கட்சியினரும் நாடுவது இவரின் திறமைக்குச் சான்று. பரசுராமன் ஆரம்பித்த விதத்தை ரசித்துக்கொண்டு குற்றவாளிக் கூண்டில் நின்றான் ரமேஷ்.

ரமேஷ் பிரபல தொழிலதிபர். ரமேஷ் பில்டர்ஸ் என்றால் எல்லாருக்கும் தெரியும். அதற்கு புற்றீசல் போல் எல்லா இடங்களிலும் இவர்கள் பெயர் தாங்கி வரும் கட்டடங்கள் மட்டும் காரணமில்லை. பிரபல எதிர்கட்சி அரசியல்வாதி ஒருவரின் பினாமி ரமேஷ் என்றும் அந்த அரசியல் தொடர்பைப் பயன்படுத்தி தனக்கு தேவையான நிலங்களை அபகரித்தும் மிரட்டி வாங்கியும்தான் தன் கட்டுமான சாம்ராஜ்யத்தை நிறுவி இருக்கிறான் என்பதும் பரவலான பேச்சு. இன்று நடக்கும் வழக்கும் அது போலத்தான்.

இணைந்த கரங்கள் என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர் அப்துல்லா. தன் இடமொன்றில் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அந்த இடத்தைக் காலி செய்யும்படி மிரட்டியதாகவும் அந்த வாக்குவாதம் வலுத்து ரமேஷ் கத்தியால் அப்துல்லாவைக் குத்தி இப்பொழுது அப்துல்லா மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறார் என்பது இந்த வழக்கு. உண்மையும் அதுதான். பரசுராமனைப் பிடித்தால் எளிதில் வெளி வந்து விடலாம் என்று செலவுக்குக் கவலைப்படாமல் அவரை நாடினான் ரமேஷ்.

“இதுதானே நீங்கள் குத்தியதாகச் சொல்லப்படும் கத்தி?” என ரமேஷைக் கேட்டார் பரசுராமன்.

“ஆமாம்.”

“யுவரானர், அப்துல்லாவின் கழுத்தில் இருந்து வயிற்றின் இடப்பகுதி வரை குத்திக் கிழித்து இருப்பதாக மருத்துவ அறிக்கை சொல்கிறது. இந்தக் கத்தி, கூர்க்கா இனத்தவரால் பயன்படுத்தப்படும் கூக்ரி என்ற கத்தி. இதன் வெட்டும் பகுதி வளைந்திருப்பதால் இதனைக் கொண்டு குத்தினால் வெட்டு ஆழமாக விழும். இந்தக் கத்தியைக் கொண்டு அறிக்கையில் சொல்லப்படும் படி குத்தினால் கழுத்தில் இருக்கும் ரத்த நாளங்கள் வெட்டுப் பட்டு ஆள் பிழைக்க வழியே இல்லை. நீங்களே பாருங்கள்” எனப் பேசிக் கொண்டே பரசுராமன் தன் கையில் இருந்த கத்தியால் ரமேஷின் கழுத்தைக் கிழித்தார். அங்கேயே துடித்து விழுந்தான் ரமேஷ். 




அவனுக்கு மட்டும் கேட்குமாறு பரசுராமன் சொன்னார்..

"ஏண்டா காசு இருந்தா எந்த வக்கீலும் வாலாட்டுவான்னு நினைச்சியா? அப்துல்லா என் பையனுக்கு காட்பாதர் - அதைக்கூடவா விசாரிக்க மாட்டே?"

ஐம்பதாண்டு கால உயிர்நண்பர் அப்துல்லா உயிர் பிழைத்து வர வேண்டும் என்ற பிரார்தனையோடு கண்கள் கலங்கியபடி விலங்குக்குக் கை நீட்டினார் பரசுராமன்.

2 comments:

said...

பேஸ்புக் நண்பர் கணேஷ் பாலா படத்தினைத் தந்து கதை எழுதச் சொல்லி நடத்தும் போட்டி. பொதுவாக இந்த மாதிரி போட்டிகளில் கலந்து பரிசுகளை வெல்வது எல்லாம் பெனாத்தல் Suresh Babu டிபார்மெண்ட்.

ஆனால் இந்தப் படத்திற்கு வந்த கதைகள் பலவும் அந்த வக்கீல் கருப்பு அங்கியை அணிந்து கொண்டு இந்தக் கத்திக் குத்தை ஏன் செய்கிறார் என்பதைச் சரியாகச் சொல்லவில்லை எனத் தோன்றியது. அதான் நாமளும் எழுதிப் பார்க்கலாமே எனக் களத்தில் இறங்கிவிட்டேன்.

Kukri - கூக்ரி கத்தி நிஜம். அது பற்றி விக்கிப்பீடியாவில் - https://en.wikipedia.org/wiki/Kukri#Weaponry

said...

நண்பர் கணேஷ் அவர்கள் அளித்த படத்திற்கான உங்கள் கதை நன்று. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.