தர்பார் ரிலீஸ் படலம் நடந்துவிட்டது. தூற்றுவார் தூற்றலும் போற்றுவார் போற்றலும் வழக்கம்போல் நடந்துகொண்டு இருக்கிறது. இதில் போற்றுவார் சுட்டும் ஒன்று இப்படத்தில் வரும் மகள்- தந்தை உறவு. பொதுவாக கதாநாயகனைச் சுற்றிச் சுழலும் திரையுலகத்தில் அவன் தாய்மேல் கொண்ட பாசத்தைப் போற்றும் திரைப்படங்கள் அதிகம். தன் பெண் மேல் கொண்ட அன்பினைப் பேசும் படங்கள் உண்டு என்றாலும் அவை அரிதே. ஒரு பெண் தனது தந்தை மேல் கொண்ட பாசத்தினைப் பற்றிப் பேசும் படங்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம்.
தாய் மேல் பாசம் கொண்டவர்கள் மகன்கள், தந்தை மேல் பாசமுள்ளவர்கள் மகள்கள் என்பது பொதுவழக்கு. ஒன்றுக்கு மூன்று தாய்கள் அவர்கள் மேல் பாசம் கொண்ட ராமன் என தாய்ப்பாசம் பற்றிப் பேசி இருக்கும் கம்பன் இந்த தந்தை மேல் மகள் கொண்ட பாசத்தை விட்டு வைத்திருப்பானா என்ன? அதை எப்படிச் சொல்லி இருக்கிறான் எனப் பார்க்கலாம்.
ராமருக்குப் பட்டாபிஷேகம் என அறிவிப்பு வந்தாயிற்று. ஊரே கொண்டாடிக்கொண்டு இருக்க, ஒருத்திக்கு மட்டும் வயிறு எரிகிறது. அது மந்தரை என்னும் கூனி. இந்தப் பட்டாபிஷேகம் நடக்கக்கூடாது என முடிவு செய்து கொண்டு, அதைத் தடுக்க கைகேயியைத் தேடி வருகிறாள். கைகேயி படுத்துத் தூங்கிக் கொண்டு இருக்கிறாள். துன்பம் வரும் போது தூங்கிக் கொண்டு இருக்கிறாயே என அவளை எழுப்புகிறாள் மந்தரை. ராமன் எனக்கு மகனா இருக்கும்போது எனக்கென்ன துன்பம் என்றபடி எழுந்திருக்கிறாள் கைகேயி.
இவளை எப்படி மனம் மாற்ற வைப்பது என நினைத்து மந்தரை முதலில் ஆரம்பிப்பது சக்களத்திச் சண்டை. நேரா ராமனுக்குப் பட்டாபிஷேகம்ன்னு சொல்லலை. உனக்கு எல்லாம் போச்சே, தன்னோட அறிவால் கோசலை எல்லாத்தையும் எடுத்துக்கிட்டாளேன்னு ஆரம்பிக்கறா.
வீழ்ந்தது நின் நலம். திருவும் வீழ்ந்தது
வாழ்ந்தனள் கோசல மதியினால் என்றாள்
"உன்னோட நலம் போச்சு, செல்வமும் போச்சு, அந்தக் கோசலை இருக்காளே புத்திசாலி, அவளுக்குப் பாரு வாழ்வு"ன்னு ஆரம்பிக்கிறா மந்தரை. ஆனா கைகேயி பாவம் நல்லவள். "கோசலைக்கு இது வரை என்ன இல்லை, எனக்குதான் என்ன குறைச்சல்?" அப்படின்னு பதில் சொல்லறா. அப்போதான் கூனி விஷயத்தையே சொல்லறா.
கோடிய வரிசிலை இராமன் கோமுடி
சூடுவன் நாளை வாழ்வு இதெனச் சொல்லினள்
வளைந்த கட்டமைப்பைக் கொண்ட வில் உடைய ராமனுக்கு நாளை பட்டாபிஷேகம், இதனால் கோசலைக்கு வந்ததே வாழ்வு எனச் செய்தியைச் சொல்கிறாள். செய்தியைக் கேட்ட கைகேயிக்கு ஒரே சந்தோஷம். எப்படி சந்தோஷம்ன்னா கோசலைக்கு எவ்வளவு சந்தோஷம் வந்ததோ அவ்வளவு சந்தோஷமாம் கைகேயிக்கும். சந்தோஷத்தில் தான் போட்டுக் கொண்டு இருந்த மணிமாலையைக் கழற்றி மந்தரைக்குப் பரிசாகத் தந்தாள். மந்தரைக்குக் கோவமான கோவம்.
சரி, சக்களத்திச் சண்டை சரி வரலை. அடுத்ததா பரதனைக் காட்டி இவள் மனத்தை மாத்துவோம் என தாய்ப்பாசத்தைக் குறி வைத்து, “அடியே, சீதையும் ராமனும் சிம்மாசனத்தில் உட்கார உன் மகன் வெறும் தரையில் இருப்பான். ராமனுக்கு பேரும் புகழும் கிடைக்கும், உன் மகன் ஒண்ணுமில்லாமல் போவான். அப்படி இருக்கிறதுக்குப் பதிலா பேசாம சந்நியாசியாகக் காட்டுக்கே போகலாம். ஏன் செத்தேக் கூடப் போகலாம்.” என்று அடுத்த அம்பை எய்கிறாள் மந்தரை.
கைகேயி இதைக் கேட்டுக் கோவப்படறா. “நீ எனக்கும் பரதனுக்கும் நல்லது செய்ய வந்தா மாதிரி தெரியலை. என் தோழியாப் போனதால உன்னைச் சும்மா விடறேன். இல்லைன்னா இப்படிப் பேசின உன் நாக்கை வெட்டி இருப்பேன். பேசாம இருக்கிற வழியைப் பாரு” அப்படின்னு கொந்தளிக்கறா.
மந்தரை விடலை. “நீ என்னை என்ன வேணுமானாலும் திட்டு. ஆனா நான் இங்க இருந்து போகறதா இல்லை. ராமன் பட்டம் சூட்டிக்கிட்டான்னா கோசலையும் சீதையும் உன்னைச் சீந்த மாட்டாங்க. அவங்க பார்த்துத் தரதை வெச்சுதான் நீ வாழணும். அதை வெச்சுதான் நீ மற்றவர்களுக்கும் தர முடியும். ஆனா அதை எல்லாம் விடு. இன்னும் ஒரு பிரச்னை இருக்கு.” எனச் சொல்லி அடுத்த குண்டைப் போடறா
காதல் உன் பெருங் கணவனை அஞ்சி, அக் கனி வாய்ச்
சீதை தந்தை, உன் தாதையைத்தெறுகிலன்; இராமன்மாதுலன் அவன்; நுந்தைக்கு வாழ்வு இனி உண்டோ?
பேதை! உன்துணை யார் உளர் பழிபடப் பிறந்தார்?
"இப்படி ஒண்ணும் தெரியாம இருக்கியே. உன் காதல் கணவன் தசரதனுக்குப் பயந்துதானே சீதைக்கு அப்பா, ராமனுக்கு மாமா அந்த ஜனகன் உன் அப்பாவின் மேல் போர் தொடுக்காமல் அமைதியாக இருக்கான். இனிமேலும் அவங்க அப்படி இருப்பாங்களா? உன்னைச் சார்ந்ததினால் இப்போ அவங்களுக்கு ஆபத்து வரப் போகுதே"
மற்றும் நுந்தைக்கு வான் பகை பெரிது உள; மறத்தார்
செற்றபோது, இவர் சென்று உதவார் எனில், செருவில்கொற்றம் என்பது ஒன்று, எவ் வழி உண்டு? அது கூறாய்!
சுற்றமும் கெட, சுடு துயர்க் கடல் விழத் துணிந்தாய்!
"உங்கப்பாவுக்கு ஊரெல்லாம் சண்டை. அந்தப் பகைவர்கள் யாராவது உங்கப்பாவோட சண்டை போட வந்தால் இவங்க போய் உதவுவாங்கன்னு நினைக்கிற? மாட்டாங்க. அப்படி இவங்க உதவாம போரில் உங்க அப்பாவால ஜெயிக்க முடியுமா? அதுக்கு வழி இருந்தாச் சொல்லு. இல்லைன்னா உன் உறவெல்லாம் துன்பக் கடலில் விழுவாங்க. கூடவே நீயும் சேர்ந்து விழப் போற. இதுதான் நடக்கப் போகுது" என மந்தரை தனது கடைசி ஆயுதத்தைப் பயன்படுத்தினாள்.
தீய மந்தரை இவ் உரை செப்பலும், தேவி
தூய சிந்தையும் திரிந்தது
இப்போதான் கைகேயி மனம் மாறுது. சக்களத்தி சண்டை வேலைக்காகலை, உனக்கு ஒண்ணும் இல்லாமப் போகப் போகுதுன்னு சொன்னது வேலைக்காகலை, பரதன் வேலைக்காரனாகப் போறான், சந்நியாசி ஆகிடுவான், செத்தே போயிடுவான்னு சொன்னது கூட உரைக்கலை. ஆனா உங்க அப்பாவுக்குக் கஷ்டம் வரப் போகுதுன்னு சொன்ன உடனே பதறி அடிச்சு எங்கப்பாவுக்குப் பிரச்னையா, என்ன செய்யலாம் சொல்லுன்னு கைகேயி கிளம்பறா பாருங்க. அதுதாங்க ஒரு பொண்ணுக்கு அப்பா மேல இருக்கிற பாசம்!! அதை இவ்வளவு அழகாச் சொன்ன கம்பருக்கு ஜே!!
பின்குறிப்பு:
அந்தக் கடைசி பாட்டோட முழு வடிவம் இது.
தீய மந்தரை இவ் உரை செப்பலும், தேவி
தூய சிந்தையும் திரிந்தது - சூழ்ச்சியின் இமையோர்மாயையும், அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும்,
ஆய அந்தணர் இயற்றிய அருந் தவத்தாலும்.
கூனி சொன்னதுனால மனம் மாறிடும் அளவுக்கு கைகேயி சிறிய மனம் படைத்தவள் இல்லை. தேவர்கள் திருமால் கிட்ட போய் ராவணன் எங்களைப் படுத்தறான் நீங்கதான் காப்பாத்தணும்ன்னு வேண்ட, அவரும் நான் ராமனா அவதாரம் எடுத்து ராவணனைப் பார்த்துக்கிறேன்னு சொன்னார். அதே மாதிரி இந்த அந்தணர்கள் எல்லாம் அரக்கர் கொட்டம் அடங்க வேண்டும் என்று தவம் செய்தார்கள். இவைதான் மந்தரையாக வந்து கைகேயி மனத்தைக் கலைத்தது என்பது முழுப்பொருள்.