நான் ஒரு சாப்பாட்டு ராமன். என் சாப்பாட்டுத் தேடலின் எல்லைகளை விரிவு படுத்திக் கொண்டே இருப்பேன். பல நாட்டு உணவுகளை ருசி பார்க்க வேண்டும். அமெரிக்காவின் பல பகுதிகளின் சிறப்பாகத் திகழும் பண்டங்களை உண்ண வேண்டும். அண்மையில் இருக்கும் உணவகங்களில் சாப்பிட்டு எதற்கு மறுபடி போகலாம் போகக்கூடாது என்று முடிவு செய்ய வேண்டும். அவ்வளவு ஏன், நியூயார்க் நகரில் மட்டும் ஒரு முறையாவது சென்று உண்ண வேண்டிய உணவகங்களில் பட்டியல் ஒன்று கூட வைத்திருக்கிறேன். இப்படி என் உணவிற்கானப் பயணத்தில் பல வேண்டும்கள் உள்ளன.
சிலருக்கு வெளியூர் சென்றால் கூட நம் நாட்டு உணவுகளை உண்ணத்தான் விருப்பம். போன கடை எதற்குப் பெயர் போனதோ அதை மட்டுமே ருசி பார்க்க வேண்டும் என நினைப்பவர்களும் உண்டு. ஆனால் எனக்கு வெளியில் சாப்பிடப் போனால் இந்திய உணவல்லாது மற்ற வகை உணவுகளுக்கே முன்னுரிமை. உடன் வருபவர்கள் பலரும் இந்திய உணவகம் செல்லலாம் என்று சொன்னால் மட்டும் இந்திய உணவகங்களுக்குச் செல்வேன். எங்கு சென்றாலும் வித்தியாசமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து ருசி பார்ப்பது என் வழக்கம். ஓர் உணவகம் பிடித்துவிட்டால் அடிக்கடி அங்கு சென்று அவர்களின் உணவுப்பட்டியலில் இருப்பதை எல்லாம் முயன்று பார்ப்பதும் உண்டு. தெருவோரக் கையேந்தி பவன்களில் இருந்து மிசெலின் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உணவகங்கள் வரை தராதரம் பார்க்காது செல்வேன். சாப்பாட்டுக்குச் செலவழிப்பது பரவாயில்லை என்கின்ற ரகம் என்பதால் விலையை வைத்து மட்டும் ஓர் இடத்திற்குப் போகாமல் இருக்க மாட்டேன்.
இப்படிச் செல்வதால் நண்பர்கள் குழாம் என்னைக் கூப்பிட்டு எங்கு செல்லலாம், செல்லுமிடத்தில் எது நன்றாக இருக்கும் என்று விசாரிப்பர். நியூ ஜெர்சியிலிருந்து டெக்ஸாஸ் வந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் அங்கிருக்கும் நண்பர்கள் இன்னும் என்னை அழைத்து கருத்து கேட்பது குறையவில்லை. நான் அங்கு அடிக்கடிச் சென்ற உணவகங்களுக்கு இப்பொழுது செல்ல வாய்ப்பு கிடைத்தால் அங்கிருக்கும் மேலாளர்களோ முதலாளிகளோ இன்னும் பெயரைச் சொல்லி அழைக்கும் வகையில் அந்நியோன்னியம் உண்டு. ஆஸ்டினிலும் கூட பல இடங்களில் இந்த வரவேற்பு கிடைக்கும்.
இந்தியா வந்தால் எனக்கு முதன்மையான உணவு என்பது காலை உணவுதான். நன்றாகச் சாப்பிட்டு விட்டால் மதியம் சாப்பிடக் கூட மாட்டேன். இரவுணவு எதோ இருந்தால் போதும். நிதமும் காலை உணவுக்கு எங்கெல்லாம் செல்ல வேண்டும் எனப் பட்டியல் போட்டுவிடுவேன். சென்னையாக இருந்தால் முதல் நாள் காலை ரத்னா கபேயில் இட்லி சாம்பார் என்பது பாரம்பரிய ஆரம்பம். அடையாரில் அண்ணன் வீட்டுக்கு அருகிலேயே ஒரு கிளையைத் திறந்திருக்கிறார்கள். எனக்காகவே திறந்திருப்பார்களோ என்று நினைப்பேன். அங்கு சாம்பார் இட்லி முடிந்தால் எதிரில் இருக்கும் ஆவின் பூத்தில் ஏலக்காய் பால் ஒன்றும் குடிக்கலாம். ராயர்ஸ் கபேயில் காரச் சட்னிக்காகவே ஒரு முறை போய்விடுவேன். பார்டர் புரோட்டாக் கடை திநகரில் திறந்திருக்கிறார்கள். எங்கள் ஊர் ருசிக்காக அங்கு செல்வது இப்பொழுது வழக்கத்தில் சேர்ந்திருக்கிறது. புதிதாக வந்திருக்கும் கடைகள் பட்டியலை என் அண்ணன் நீட்ட அக்கடைகளும் நம் திட்டத்தில் இணைந்து கொள்ளும்.
டிசெம்பர் மாதம் சீசனுக்குச் சென்னை என்றால், யோசிக்கக் கூட வேண்டாம். மூன்று வேளையும் எதாவது சபா கேண்டீனிலேயே வேலை முடிந்துவிடும். இன்றைக்கு எங்கெல்லாம் கச்சேரிக்குச் செல்ல வேண்டும், யார் பாடுவதை, வாசிப்பதை எல்லாம் கேட்க வேண்டும் என்று யோசிக்கும் பொழுதே அந்த சபாவில் யாருக்கு சமையல் ஒப்பந்தம், அவர்கள் என்னவெல்லாம் நன்றாகச் செய்வார்கள் என்பதும் முடிவு செய்ய துணை செய்யும். மியூசிக் அகாடமியில் காலை நடக்கும் செயல்முறை விளக்கங்கள் எனக்குப் பிடிக்கும் என்பதால் பொழுது பெரும்பாலும் அங்குதான் விடியும்.
பெங்களூரு சென்றால் பிராமின்ஸ் கபே, வித்யார்த்தி பவன், எம்டிஆர், இன்னும் பல தர்ஷணிகள் என்று அந்த ஊருக்கான பட்டியல் உண்டு. அங்கு நான் அதிகம் மூளையைக் கசக்கிக் கொள்ள வேண்டாம். என் கூட்டாளி ஒருவன் இருக்கிறான். ‘திண்டி வாக்’ என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறான். நாற்பது ஐம்பது பேர் கும்பலாகக் கிளம்பி நகரின் ஒரு பகுதியில் இருக்கும் உணவகங்களுக்கு நடந்து சென்று எல்லாவற்றையும் ஒரு கை பார்ப்பார்கள். நான் செல்லும் நேரத்தில் அந்த நிகழ்ச்சிக்கான திட்டம் இல்லை என்றால் கூட என்னை மட்டும் கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்பது அவனுக்கு இட்டிருக்கும் எழுதப்படாத கட்டளை. கூட்டிக் கொண்டு போவான்.
இந்த ஸ்விக்கி, ஜொமாட்டோ எல்லாம் வந்த பின் உணவகங்களுக்குச் செல்லாமல் வீட்டுக்கு வரவழைத்து உண்ணும் வழக்கம் இந்தியாவில் அதிகமாகி விட்டது. ஆனால் நான் இதை எவ்வளவு தவிர்க்க முடியுமோ அவ்வளவு தவிர்ப்பேன். அங்கு சென்று உண்ணும் அனுபவம் இப்படி வரவழைத்து உண்பதில் கிடைப்பதில்லை என்பது என் முடிவு.
இவ்வளவு எல்லாம் சொன்னாலும் ஊருக்குச் சென்றால் அப்பொழுதுதான் செய்த அல்வாவை வாழையிலையில் வைத்துத் தரும் பொழுது வரும் இலைவாசமும் நெய்வாசமும் கலந்து நாசியில் நுழைய, அதே வேகத்தில் அல்வாவும் நம் வாய்க்குள் வழுக்கிச் செல்ல, அந்தச் சூட்டோடு அதை முழுங்கும் சுவையும், அதன் பின் திகட்டாமல் இருக்க கடைக்காரர் தரும் ஒரு கைப்பிடி மிக்ஸரும் (சரியாகச் சொல்ல வேண்டுமானால் மிச்சர்) தரும் அனுபவத்திற்கு ஈடாக இதுவரை எதையும் கண்டதில்லை.
வெளிநாட்டுப் பயணங்களில் போது அந்த நாட்டுச் சிறப்பு உணவுகளைத்தான் தேர்ந்தெடுப்பேன். தங்கும் விடுதிகளில் வேலை பார்ப்பவர்களோடு நட்பு கொண்டாடி, அந்த ஊரில் எங்கெல்லாம் செல்ல வேண்டும், எவற்றை எல்லாம் உண்ண வேண்டும் எனத் தகவல் சேகரித்துக் கொள்வேன். அவர்கள் சொல்லாத இடங்களுக்குச் சென்றேன் என்றால் அது பற்றிய விபரங்களை அவர்களுக்குச் சொல்வேன். அவர்களும் போட்டிப் போட்டுக்கொண்டு இன்னும் சில இடங்களைச் சிபாரிசு செய்வார்கள். இந்தக் கொடுக்கல் வாங்கல் ரொம்பவே பயன்படும் ஒன்று.
சமைக்கத் தெரியும் என்பதால் நன்றாக இருக்கும் பதார்த்தங்களின் செய்முறையைக் கேட்பேன். இப்படி ஆர்வமாகக் கேட்பதைப் பார்த்துவிட்டு சமையலறையில் இருந்து தலைமை சமையல்காரரே நம் மேஜைக்கு வந்து பேசுவார். அடுத்த முறை அங்கு சென்றால் அவரின் பெயரைச் சொல்லி விசாரிக்க நம்மை நல்லபடியாகக் கவனிப்பார்கள். சுவை பற்றிய விமர்சனங்களைச் சொன்னால் கேட்டுக் கொள்வார்கள் அடுத்த முறை அப்பொருளை ஆர்டர் செய்யவில்லை என்றாலும் கூட, சென்ற முறை முழுவதும் திருப்தி தராத பண்டங்களைச் செய்து தந்து இப்பொழுது சரியாக இருக்கிறதா என்று கேட்பார்கள். வீட்டுச் சமையலை இப்படி விமர்சனம் செய்தால் அம்மா, “நாக்கு நாலு முழம்” என ஏசுவார்கள் என்பதால் போட்டதைச் சாப்பிட வேண்டியதுதான்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் வாழ்வதற்காக உண்பவர்கள் உண்டு. உண்பதற்காகவே வாழ்பவர்கள் உண்டு. இதில் நான் எந்த வகை என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா!
