Wednesday, December 17, 2025

என் பணி கடன் செய்து கிடப்பதே!


கடன் என்ற சொல்லுக்குக் கடமை என்ற பொருளும் உண்டு. 


நன் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்,

தென் கடம்பைத் திருக்கரக்கோயிலான்

தன் கடன் அடியேனையும் தாங்குதல்;

என் கடன் பணி செய்து கிடப்பதே!


இது கடம்பூர் என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஈசனைக் குறித்து அப்பர் பெருமான் பாடிய தேவாரப் பாடல். கடவுளின் கடமை அடியார்களைத் தாங்குவது. அந்த அடியார்களின் கடமை எதையும் எதிர்பாராமால் பணி செய்து கிடப்பது என்பது இந்தப் பாடலின் பொருள். இப்படி கடவுளின் கடமையையும் அடியார்களின் கடமையையும் கடன் என்றே குறிப்பதால்தான் என்னவோ, பலருக்கு கடன் தருவது என் கடமையாகவே ஆகி இருக்கிறது. 


எனக்குக் கடன் வாங்குவது பிடிக்காது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் நண்பர்களிடமோ சொந்தத்திலோ கடன் வாங்குவது பிடிக்காது. அதற்காக கடனே வாங்காத வாழ்க்கை என்றும் இல்லை. வீடு வாங்குவதற்கும் மகிழுந்து வாங்குவதற்கும் கடன் தான். ஆனால் அவற்றைத் திரும்பக் கட்ட முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட கடன்களை வாங்குவேன். கடனட்டைகளைப் பயன்படுத்தினாலும் அதற்குண்டான தொகையை மாதாமாதம் செலுத்திவிடுவேன். அதனால் அவை கந்துவட்டிக் கடன்களாக மாறா. 


எதோ அவசரத்திற்கு யாரிடமேனும் உதவி கேட்க நேர்ந்தால் அதைத் திரும்பத் தரும் வரை முள் மேல் நிற்பது போல அசௌகரியமாகவே இருப்பேன். எவ்வளவு சீக்கிரம் திரும்பத் தர முடியுமோ அப்படித் தந்துவிடுவேன். கடன்கொண்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கம்பன் சொன்னதாக பலரும் சொல்வார்கள். ஆனால் அது கம்பன் எழுதியது இல்லை. நண்பர் ஐயப்பனிடம் முன்பு ஒரு முறை இதைக் கேட்க அவர் மூலப் பாடலைத் தேடி எடுத்துத் தந்தார். விநோதரச மஞ்சரி என்ற தொகுப்பில் உள்ள பாடல் இது. 


விடங்கொண்ட மீனைப் போலும்

      வெந்தழல் மெழுகைப் போலும்

படங்கொண்ட பந்தழல்வாய்

       பற்றிய தேரை போலும்

திடங்கொண்ட இராமன் பாணம்

       செருக்களத்துற்ற போது

கடன்கொண்ட நெஞ்சம் போல்

        கலங்கினான் இலங்கை வேந்தன் 


கடன் வாங்குவதில் இருக்கும் இந்தக் கண்டிப்பால் எனக்கு இலங்கை வேந்தன் போல கலங்க வேண்டிய நிலை வரவில்லை. ஆனால் வாங்குவதில் இருக்கும் சாமர்த்தியம் கடன் கொடுப்பதில் ஏனோ இருப்பதில்லை. 


நண்பர்கள் உதவி எனக் கேட்டால் இல்லை என்று சொல்லத் தெரிந்ததில்லை. என்னால் முடிந்ததைத் தந்துவிடுவேன். பெரும்பாலானோர் முன்னப் பின்னே ஆனாலும் திருப்பித் தந்துவிடுகின்றனர். ஆனால் சிலர் மட்டும் வாங்கும் பொழுது காண்பிக்கும் நட்பு அதற்குப் பின் காணாமல் போய்விடுகிறது. நம் கண்ணில் கூடப் படாமல் பார்த்துக் கொள்வார்கள். இத்தனைக்கும் நான் பணத்தைத் திரும்பக் கூடக் கேட்பதில்லை. ஆனாலும் கேட்டுவிடப் போகிறேனே என்பதற்காக அவர்கள் என்னைத் தவிர்க்கச் செய்யும் முயற்சிகள் சிரிப்பைத்தான் வரவழைக்கும். 


பணத்தைக் கொடுத்துவிட்டு எப்படி உன்னால் இவ்வளவு இயல்பாக இருக்க முடிகிறது என மனைவி கேட்பார். அவரிடம் நான் சொல்லும் பதில் - திரும்பப் பெற முடியவில்லை என்றாலும் நமக்கு பெரிய வகையில் பாதகமில்லை என்னும் அளவிற்குத்தான் தருவேன். தரும் பொழுதே இது திரும்ப வராது என்று முடிவு செய்துவிடுவேன். அதனால் அக்கடன் திரும்பச் செலுத்தப்படவில்லை என்றால் அது எதிர்பார்த்ததுதானே என்று செல்ல முடிகிறது. அவர்கள் திருப்பித் தந்தால் அது ஒரு மகிழ்ச்சியான அதிர்ச்சி என்று எடுத்துக் கொள்வேன் என்பதுதான். 


இந்த அசட்டுத்தனம் எல்லாம் தனிப்பட்ட வாழ்க்கையில்தான். பட்டையக் கணக்காளருக்கான தேர்வுக்குப் பின் நான் ஒரு வங்கியில் பணிக்குச் சேர்ந்தேன். அங்கு கடன் கேட்டு வரும் நிறுவனங்களில் நிதி நிலை அறிக்கைகளை ஆராய்ந்து, அக்கடனைத் திரும்பக் கட்டும் திறன் அவர்களுக்கு இருக்கிறதா என்பதைச் சரி பார்த்து, கடன் அளிக்கலாம் வேண்டாம் என்பதைச் சொல்வது என் கடமைகளில் ஒன்று. அந்த வேலையில் இருந்த ஐந்து வருடங்களில் நான் தரலாம் என்று சொல்லி அளிக்கப்பட்ட கடன்கள் பெரும்பாலும் திரும்பக் கட்டப்பட்டன என்பதும், நான் வேண்டாம் என்று சொன்ன நிறுவனங்கள் விரைவில் இழுத்து மூடப்பட்டன என்பதும் நான் என் கடமையைச் சரியாகச் செய்தேன் என்பதற்கு அத்தாட்சிகளே. 


இந்த வேலையைச் செய்யும் பொழுது நான் வேலை பார்த்த வங்கியின் கிளைகள் பலவற்றுக்குச் செல்ல வேண்டியதாக இருக்கும். அங்குள்ள அனுபவம் வாய்ந்த மேலாளர்களோடு இணைந்து பணியாற்றி நிதிநிலை அறிக்கைகளை எப்படி ஆராய்வது, எப்படி முடிவெடுப்பது என்பதை எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கும். அப்படி அந்த வங்கியின் மண்டல அலுவலகத்தில் ஒரு துணைப் பொது மேலாளரோடு பல சமயம் இணைந்து வேலை செய்யக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது இன்றைக்கும் எனக்குத் துணையாக இருக்கிறது. 


அச்சமயத்தில் அவர் கடன் தரும் துறையின் மண்டல அதிகாரியாக இருந்தார். வைப்புத்தொகை பற்றிய பொறுப்பு அவருக்கு இல்லை. எனவே, கடனுக்கான கோரிக்கைகளைப் பரிசீலிப்பது, கடன் தரலாமா வேண்டாமா என்ற முடிவை எடுப்பது, கடனை வசூலிப்பது போன்றவையே அவரின் பொறுப்பாக இருந்தது. அதனைப் பிரதிபலிக்கும் வகையில் அவர் மேசையில் ஒரு மரத்துண்டில் ‘என் பணி கடன் செய்து கிடப்பதே’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டு இருக்கும். 


அவர் பெயர் - திருநாவுக்கரசு! 







பிகு:

​​விடங்கொண்ட மீனைப் போலும்

வெந்தழல் மெழுகு போலும்

படங்கொண்ட பாந்தள் வாயில்

பற்றிய தேரை போலும்

திடங்கொண்ட ராம பாணம்

செருக்களத் துற்ற போது

கடன்கொண்டார் நெஞ்சம் போலும்

கலங்கினான் இலங்கை வேந்தன் 


இப்படி ஒரு வெர்ஷன் இருக்கு. கடன்கொண்டார் நெஞ்சம் என்பது நிறைவேற்றப்பட வேண்டிய கடமை உள்ளவர்கள் நெஞ்சம் என்று கொள்ளலாம். அப்போ இதுவும் வாங்கிய கடன் இல்லை செய்ய வேண்டிய கடன்தான். 


1 comments:

said...

எனக்கெல்லாம் சுப்பிரமணிய ராஜு பாடிய "கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் .. dadada டா.." தான் நினைவுக்கு வருகிறது.