தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ரெண்டுங்கெட்டான் ஊர். அதில் இருக்கும் தனியார் பள்ளியில் மும்மொழிக் கொள்கை அந்த நாளிலேயே உண்டு. ஆனால் தேர்ந்தெடுக்க எல்லாம் வாய்ப்பு கிடையாது. ஆங்கில வழிக் கல்வி அளிக்கும் பள்ளி என்பதால் ஆங்கிலம் முதல் மொழி. தமிழ் இரண்டாம் மொழி. இந்தி மூன்றாம் மொழி. அனைவருக்கும் இப்படித்தான்.
எதற்காக இந்தி படிக்க வேண்டும் என்று கேள்வி கேட்கத் தெரியாத வயது. ஆனால் அந்த வகுப்பிற்கு வெளியே இந்தியோடு கொஞ்சமும் பரிச்சயம் இல்லாத வாழ்க்கை. இந்தித் திரைப்படங்கள் எல்லாம் கூட வராத ஊர். இந்தித் திரைப்படம் எல்லாம் திருநெல்வேலியோடு நின்றுவிடும். அதற்குத் தெற்கே அவற்றிற்கு அனுமதி கிடையாது.
தொலைக்காட்சி வந்த பின்புதான் இதில் மாற்றம். இரவில் தமிழ் ஒளிபரப்பு முடிந்தவுடன் இந்திக்கு மாறிவிடுவார்கள். அவர்கள் பேசும் இந்தியும் நாம் படிக்கும் இந்தியும் ஒரே மொழிதானா என்று ஐயம் எழும் அளவிற்கு இரண்டும் தொடர்பில்லாமல் இருக்கும். இந்த இழவிற்கு ரூபவாகினியே தேவலாம். ஆய்புவன் என்று கையைக் கூப்பினாலும் அடிக்கடி தமிழில் பேசிவிடுவார்கள். கிரிக்கெட் மேட்ச் நடந்தால் மட்டும் வேறு வழி இல்லாமல் காதில் இந்தி விழும். பல்லேபாசி, சார் ரன் லியா, சக்கா மாறா என்று சில வார்த்தைகள் மட்டும் இந்தியில் சொல்லிவிட்டு இஸ்னே பௌலிங் கியா, உஸ்னே கவர் டிரைவ் கியா என்று பாதிக்குப் பாதி ஆங்கிலம் கலந்து விடுவார்கள் என்பதல் பிரச்னை இருக்காது.
நிலைமை இப்படி இருந்ததால் பள்ளியில் சொல்லித் தரும் இந்தி தலைக்குள் ஏறவே ஏறாது. கோமதி மிஸ் எவ்வளவுதான் முட்டிக் கொண்டாலும் நம்ம திறமை ஏக் காவ் மே ஏக் கிசான் ரகுதாத்தா என்ற அளவைத் தாண்டியதே இல்லை. இதில் இருக்கும் குழப்பங்கள் போதாதென்று உயர்திணை அஃறிணை என்று எல்லாவற்றையும் ஆண் பெண் எனப் பிரித்துவிடுவார்கள். நாற்காலி என்றால் பெண், மேசை ஆண் என்றெல்லாம் எப்படித்தான் பிரிப்பார்களோ, இதை எப்படி ஞாபகத்தில் வைத்துக் கொள்வது. இந்தியில் பாஸ் ஆவது கோமதி மிஸ் பெருங்கருணை கொண்டு முப்பத்தி ஐந்து மதிப்பெண்கள் போடுவதால்தான்.
இதுதான் நம்ம லட்சணம் என்று பல்லிளிக்க, எல்லாரும் கட்டாயம் இந்திப் பிரச்சார் சபா நடத்தும் தேர்வுகளில் பங்கேற்க வேண்டும் என்று பிரின்சிபல் உத்தரவு போட்டுவிட்டார். இங்காவது கருணை அடிப்படையில் மதிப்பெண்கள் கிடைக்கும். யாரோ பெயர் தெரியாத ஆசிரியர் விடைத்தாள்களைத் திருத்தும் பொழுது அந்தக் கருணை அடிப்படை எல்லாம் இருக்காதே. தேற வேண்டுமானால் தனி வகுப்பிற்குச் செல்ல வேண்டும் என்று முடிவானது.
எங்கள் தெருவிலேயே இருந்த இந்தி டீச்சர் வீட்டுக்குச் செல்லப் பணிக்கப்பட்டேன். அவர்களும் பாவம், முட்டி மோதிப் பார்த்தார்கள். ஆனால் கல்லில் நாரை உரிக்கவா முடியும்? ஏறும் அளவிற்குத்தான் இந்தி என் மண்டையில் ஏறியது. என்னவோ தெரியலை என்ன மாயமோ தெரியலை என்று கமலஹாசன் சொல்வதைப் போல பிராத்மிக், மத்யமா என்ற இரண்டு தேர்வுகளில் இந்தியே தெரியாமல் தேர்ச்சியும் பெற்றுவிட்டேன். அதற்கு அடுத்து ராஷ்ட்ரபாஷா தேர்வு. இந்தி ஒன்றும் எங்கள் தேசிய மொழி இல்லை என்பதை அன்றே அறிவித்தவன் நான். முட்டி மோதினேன். இரண்டவது முயற்சியிலோ மூன்றாவதிலோ தேர்வானேன் என்று நினைக்கிறேன். இல்லை கடைசி வரைத் தேர்ச்சி பெறவே இல்லையோ? ஞாபாகம் இல்லை. ஆனால் அதோடு இந்திக்கு முழுக்குப் போட்டாகி விட்டது. அமெரிக்கா வந்த பின் உடன் வேலை செய்தவர்களில் பலர் இந்திக்காரர்கள். அடுத்தவனுக்குப் புரியுமோ புரியாதோ என்று எண்ணமே இல்லாமல் இந்தியிலே பேசுவார்கள். அதனால் கொஞ்சம் புரிபடத் தொடங்கியது. ஆனால் இந்தி தெரியாது என்றே அவர்களிடம் தோள்களை இறக்காமல் இருப்பேன்.
இந்திக் கதவு மூடினாலும் இந்தி டீச்சர் வீட்டில் வேறு ஒரு கதவு திறந்தது. அவர் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு வணிகக் கணக்கியல் பாடமும் எடுப்பார். ஆறாம் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த எனக்கு அவர்களுக்குச் சொல்லித் தந்தது நன்றாகப் புரிந்தது. அவர்களையும் விட. என் இந்திப் பாடத்தை விட்டு அந்தப் பாடத்தின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பேன். இவனுக்குக் கணக்கு வருகிறது என்று தெரிந்த அண்ணன்மார் அவர்கள் வீட்டுப்பாடத்தை எல்லாம் என் தலையில் கட்டுவார்கள். நானும் சரியாகச் செய்து தந்துவிடுவேன். அப்பொழுதே நாம் படிக்க வேண்டியது வணிகக் கணக்கியல்தான் என்று முடிவெடுத்தேன்.
பத்தாம் வகுப்பில் ஓரளவு நன்றாக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அறிவியல் பக்கம் ஒதுங்காமல் வணிகவியல், வணிகக் கணக்கியல் பாடங்களையே விருப்பப் பாடங்களாகத் தேர்ந்தெடுத்தேன். சென்னைக்கு இடம் மாறினோம். அங்கு சேர்ந்த பள்ளியில் நன்றாகவே படித்தேன். பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள், பின்னர் பி.காம், காஸ்ட் அக்கவுண்டன்ஸி என்று வணிகக் கணிக்கியலில் தொடர்ந்து படித்துக் கொண்டு வந்தேன். இதன் அடுத்த கட்டம் பட்டையக் கணக்காளர் ஆவது.
அதற்கு பட்டையக் கணக்காளர் ஒருவரின் கீழ் வேலை பார்த்துத் தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர் நிறுவனங்களைத் தணிக்கை செய்யப் போகும் பொழுது எங்களையும் கூட்டிக் கொண்டு போவார். எப்படி கணக்கு வழக்குகளைச் சரி பார்க்க வேண்டும் என்பதைக் கற்றுத் தருவார். ஆரம்பத்தில் எளிமையான வேலைகள், பின் கொஞ்சம் சிக்கலான வேலைகள் என்று மெதுவாக முன்னேற வேண்டும். ஒரு கட்டத்தில் நம்மைத் தனியாக தணிக்கை செய்ய அனுமதிப்பார், கடைசிக் கட்டத்தில் வந்து இணைந்து கொள்வார். இப்படிப் பல நிறுவனங்களுக்குச் சென்று தணிக்கை செய்ய வேண்டி இருக்கும்.
அப்படி நான் தணிக்கை செய்யச் சென்ற நிறுவனங்களில் ஒன்று - இந்திப் பிரச்சார் சபா!
பிகு: இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்திப் பிரச்சார் சபா என் வாழ்வில் நுழைந்திருக்கிறது. சொக்கன் எழுதிய காந்தி பற்றிய புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யும் பொழுது இந்திப் பிரச்சார் சபாவைப் பற்றிப் படிக்கக் கிடைத்தது.


0 comments:
Post a Comment