ஊரில் நான் வளர்ந்த காலத்தில் மின்சாரம் எப்பொழுதும் இருக்கும் என்று சொல்ல முடியாது. திட்டமிட்ட லோட் ஷெட்டிங், திட்டமிடாமல் நடக்கும் மின்சார வெட்டு என்று எப்பொழுதும் மின்சாரம் இருக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது. காற்று அடித்தால் கரெண்ட் போய் விடும். மழை பெய்தால் மின்சாரம் இருக்காது. அது என்னவோ என்றைக்குப் புழுக்கமாக இருக்குமோ அன்றைக்குப் பார்த்து ப்யூஸ் பிடுங்கி விடுவார்கள். எங்கள் வீட்டு வாசலில் ஒரு மின்சாரக் கம்பம் நிற்கும். அதிலிருந்து யார் வீட்டுக்கு எந்த வயர் போகிறது என்று தெரியாத மாதிரி சிக்கலாக வயர்கள் தொங்கும். காக்கி உடை போட்ட மின்சாரத்துறை பணியாளர்கள் அதில் ஏறி எதையோ கழட்டி மாட்டுவது அடிக்கடி நடக்கும். எங்கள் வீட்டு மொட்டை மாடிக்குப் போக எனக்கு அந்த மின்சாரக் கம்பம்தான் குறுக்கு வழி.
இப்படி மின்சாரம் இருந்தால் உண்டு என்று இருந்ததால் எல்லார் வீட்டிலும் ஹரிக்கேன் விளக்கு, சிம்னி விளக்கு, அகல் விளக்கு, டார்ச் லைட், மெழுகுவத்தி என்று இருக்கும். ஒவ்வொரு அறை மாடத்திலும் தீப்பெட்டியும் மெழுகுவத்தியும் கட்டாயம் இருக்கும். அதிக நேரம் எரிய வேண்டுமானால் ஹரிக்கேன் லைட்டைத்தான் ஏற்றுவார்கள்.
காற்றில் அணையாது, கைப்பிடி இருப்பதால் தூக்கிக் கொண்டு போவது எளிது என்று பல காரணங்களைச் சொல்லலாம். மண்ணெண்ணெய் ரேஷன் கடைகளில் கிடைக்கும் என்பது முக்கியக் காரணம். ஆனால் ஆஸ்துமாத் தொல்லையில் அவஸ்தைப்பட்ட எனக்கு அந்த மண்ணெண்ணெய்ப் புகை ஆகாது. அதன் அருகே சிறிது நேரம் அமர்ந்தாலே மூச்சு முட்டத் தொடங்கிவிடும். அதே காரணத்தினால் சிம்னி விளக்கும் எனக்குச் சரி வராது.
வெளியில் செல்லும் பொழுதோ வீட்டுக்குள் நடமாடும் பொழுதோ மட்டும்தான் டார்ச் லைட். பேட்டரிக் கட்டை விலை அதிகம் என்பதால் அதை அதிக நேரம் போட மாட்டார்கள். அதிலிருந்து வரும் வெளிச்சம் ஒரு இடத்தில் குவிந்திருக்கும் என்பதால் அறை முழுவதுமெல்லாம் வெளிச்சம் வராது. அகல் விளக்குகளில் இருந்து வரும் வெளிச்சம் மிகக் குறைவாக இருக்கும். அதனால் நான் படிக்க வெளிச்சம் வேண்டுமென்றால் மெழுகுவத்திதான். எங்கள் ஊரிலே மெழுகுவத்தி செய்யும் நிறுவனங்கள் சில இருந்ததால் உள்ளூர் தயாரிப்புகளின் விலை குறைவாகத்தான் இருக்கும்.
தரையில் வைத்தால் அதன் வெளிச்சம் ஒரு சிறிய வட்டத்தில்தான் இருக்கும் என்பதால் அதற்குக் கொஞ்சம் உயரம் வேண்டும். கண்ணாடியில் செய்யப்பட்ட மெழுகுவத்தி ஸ்டாண்டுகள் உண்டு. மெழுகுவத்தியில் அடியில் கொஞ்சம் சூட்டைக் காட்டி லேசாக இளகச் செய்து இந்த ஸ்டாண்டுகளி ஒட்டி வைத்தால் அவற்றில் நெட்டுக்குத்தாக மெழுகுவத்தி நிற்கும். எரியும் பொழுது வழியும் மெழுகு இந்த ஸ்டாண்டுகள் இருக்கும் குழியில் சேரும். அதை இளக்கி ஒரு திரியை சொருகி மீண்டும் பயன்படுத்துவது உண்டு. ஸ்டாண்ட் கிடைக்காத நேரத்தில் பழைய பாட்டி ஒன்றைக் கவிழ்த்து அதன் மேல் மெழுகுவத்தியை நிறுத்துவதும் உண்டு.
மெழுகுவத்தியின் அருகே அமர்ந்து கொண்டு வீட்டுப்பாடம் செய்யும் பொழுதோ, பள்ளிக்கூடப் புத்தகங்களைப் படிக்கும் பொழுதோ ஒன்றும் சொல்லாத அம்மா, கதைப்புத்தகங்கள் படித்தால் மட்டும் கண் கெட்டுப் போய்விடும் என்பார். அன்றைக்குக் கதைப்புத்தகங்கள்தான் அதிகம் படித்ததாலோ என்னவோ இன்றைக்குக் குறைவான பார்வையும் கண்ணாடியுமாக இருக்கிறேன். சமயத்தில் இந்த மெழுகுவத்தியைத் தூக்கிக்கொண்டு நடக்கும் பொழுது உருகிய மெழுகு நம் கைகளில் பட்டுவிடும். ஒரு நொடி சுட்டாலும் அதன் பின் அது நம் தோலில் ஒரு உறைந்து அதை உரித்து எடுப்பது விளையாட்டாகவே இருக்கும். அதற்காகவே மெழுகுவத்தியின் திரிக்கு அருகில் தொடுவதும் நடக்கும்.
மெழுகில் அதிகக் கலப்படம் கிடையாது என்பதால் மெழுகுவத்திப் புகை கருப்பாக வராது. லேசான நறுமணம் கூட இருக்கும். ஆனால் பின்னாட்களில் மெழுவத்திகளில் இருந்து கரும்புகை கிளம்புவதைப் பார்க்கும் பொழுது என்னவெல்லாம் கலந்திருக்கிறார்களோ என்று கவலையாகவே இருக்கும். ஆனால் ஒரு தாளை எடுத்து தீச்சுடரின் மேலே காட்டினால் லேசாக கரி படியும். அதன் பின் அதில் தீக்குச்சியை வைத்துப் படம் வரையலாம்.
சென்னைக்கு வந்த பின் ஒரு நண்பனோடுதான் கிறுத்துமஸ் இரவுகள் கழியும். அப்பொழுது அவன் குடும்பத்தோடு சர்ச்சுக்குச் செல்லும் பொழுது மெழுகுவத்தி கொண்டு சென்று அங்கே ஏற்றி வைப்போம். சர்ச் முழுவதும் மெழுகுவத்தி வாசனை பரவி இருக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்த பொழுது அந்த ஊர்களில் உள்ள சர்ச்சுகளிலும் இதே அனுபவம் கிடைத்திருக்கிறது.
இன்றைக்கு நானிருக்கும் இடத்தில் மின்சரத் தடை மிக அரிது என்பதால் வீட்டில் மெழுகுவத்தியே கிடையாது. தீப்பெட்டியே கூட எங்கோ ஒன்று இருக்கும் வீட்டில் மெழுகுவத்திக்கு ஏது இடம்? குழந்தைகளுக்குப் பிறந்தநாள் வரும் பொழுது கேக்கின் மேல் வைக்கத்தான் மெழுகுவத்தி வாங்குவது. அதை ஏற்றி உடனே ஊதி அணைத்துவிட்டு எங்கேனும் வைத்துவிட்டால் அது இருக்கும் இடம் மறந்துவிடும். அடுத்த வருடம் மீண்டும் வாங்குவோம். இப்பொழுது அவர்கள் பெரியவர்களாகிவிட்டதால் இதற்கும் தேவை இல்லாது போய்விட்டது.
மெழுகுவத்தியின் வாசம் மட்டும் இன்னும் நினைவில் நிற்கிறது.


0 comments:
Post a Comment