Showing posts with label vacation. Show all posts
Showing posts with label vacation. Show all posts

Wednesday, November 17, 2010

ஞாயிறு ஒளி மழையில்...


"இன்று 60 டிகிரி போகப் போகிறதாம்" என்ற ஒற்றை வரி அறிவிப்பிலேயே இந்த ஞாயிறு புட்பால் பார்ப்பது நடக்காத காரியம் என்றானது. நவம்பர் மாதத்தில் இப்படி ஒரு நாள் கிடைப்பது அபூர்வம் என்பதால் வெளியே சென்றாக வேண்டும் என்பது முடிவானாலும், எங்கு செல்லலாம் என்று முடிவு செய்ய முடியாத காரணத்தினால் குழந்தைகளை அள்ளிக் காரில் போட்டுக் கொண்டு ஒரு நண்பனின் வீட்டிற்குச் சென்றோம். அங்கும் பேச்சு வார்த்தை தொடர்ந்ததில் அரை நாள் ஓடிவிட்டது. நாளை பள்ளி உண்டு எனவே இரவு அதிகம் தாமதம் ஆக முடியாது, நேரத்திற்கு குழந்தைகளை சாப்பிட வைக்க வேண்டும் என்று மேலும் பல கட்டுப்பாடுகள் வர, ஐம்பது மைல் தொலைவை தாண்டாமல் எதேனும் இடத்திற்குச் செல்லலாம் என முடிவாகியது.

அப்பொழுது...

மேலும் படிக்க தமிழோவியத்துக்கு வாங்க!

Sunday, July 13, 2008

பொதுப்புத்தி அங்கலாய்ப்புக்கு புதரக பதில்

நியூயார்க் நகரில் இருக்கும் நம் தூதரகத்திற்குச் செல்ல வேண்டுமானால் கொஞ்சம் கடுப்புதான். ஒழுங்குமுறையற்ற கூட்டம், ஏகப்பட்ட கெடுபிடிகள் என்று ரொம்பவே கஷ்டப்படுத்தும் நினைவுகள்தான். அதுவும் அதிகாலையிலேயே எழுந்து, ரயிலைப் பிடித்து நியூயார்க் நகரம் சென்று வரிசையில் நிற்க வேண்டும் என்ற நினைப்பே சோகத்தைக் கிளப்பி விடும். இந்த அனுபவம் இல்லாதவர்கள் நம்ம டுபுக்கு எழுதி இருப்பதை ஒரு பார்வை பார்த்துவிட்டு வரவும். லண்டனில் அவர் சொல்லி இருக்கும் நிலமைதான் இங்கேயும். விஷயம் இது போல இருக்க நம்ம வீட்டுப் புது வரவுக்கு இந்திய நுழைவிசைவு (Visa, பொருள் சரியாத்தான் இருக்கு, கொஞ்சம் எளிமையா சொல்லி இருக்கலாமோ?) எடுக்க வேண்டும் என்ற நினைப்பே அலுப்பாக இருந்தது. சரி என்னென்ன ஆவணங்கள் தேவை எனத் தெரிந்து கொள்ள இந்திய தூதரகத்தில் வலைத்தளத்திற்குச் சென்றால் நுழைவிசைவு தொடர்பான வேலைகளை தனியார் வசம் அளித்துவிட்டதாக அறிவித்திருந்தனர்.

அமெரிக்காவில் ஐந்து நகரங்களில் இயங்கும் ட்ராவிசா என்ற நிறுவனம் இப்பொழுது நுழைவிசைவு குறித்த முதற்கட்ட வேலைகளை இவர்கள் எடுத்து செய்கிறார்கள். இவர்களது வேலை குறித்து ஒரே ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்றால் அது -

சபாஷ்!

முதலில் எல்லா விபரங்களையும் இணையத்தில் பதிவு செஞ்சுடச் சொல்லி இருக்காங்க. நானும் எத்தனையோ நாடுகளின் தூதரக வலைத்தளங்களில் சென்று இது மாதிரி படிவங்களைப் பூர்த்தி செஞ்சு இருக்கேன். ஆனால் இவ்வளவு எளிமையான வலைத்தளத்தைப் பார்த்ததே இல்லை. அனாவசியமாக என் முப்பாட்டனின் ஜாதகத்தை எல்லாம் கேட்கவில்லை. அங்கு நாம் பதிவு செய்ய வேண்டிய ஒவ்வொரு விபரத்திற்கும் அதன் அருகிலேயே உதவித் தகவல்கள் என அமர்க்களமாக இருக்கிறது வலைத்தளம்.


விண்ணப்பத்தினை முழுவதும் பூர்த்தி செய்த பின்னர் அதனோடு கொண்டு வர வேண்டிய மற்ற ஆவணங்களின் இடாப்பு ஒன்றினையும் தந்து விடுகிறார்கள். அதனால் நாம் கொண்டு செல்ல வேண்டியவை பற்றிய முழு விபரமும் நமக்குக் கிடைத்து விடுகிறது.

நியூயார்க் நகரில் இவர்களது அலுவலகம் சென்றால் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமே வரவில்லை. முதலிலேயே ஒருவர் நம் விண்ணப்பத்தினை முழுவதும் சரி பார்த்துவிடுகிறார். நாம் தவறேனும் செய்திருந்தாலோ அல்லது இணையத்தில் பூர்த்தி செய்யாமல் வந்துவிட்டால் அங்கிருக்கும் பல கணினிகளில் ஒன்றினைப் பயன்படுத்தி நம் வேலையை முடித்துவிடலாம். இதற்காகவே ஓரிடத்தில் பத்துப் பன்னிரண்டு கணினிகளை நிறுவியுள்ளனர்.

விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யும் பொழுதே நம் கடனட்டையின் எண்களையும் கொடுத்தாலும் நம் விண்ணப்பம் அவர்கள் கையில் சென்று சேர்ந்த பின்னரே அத்தொகை வசூலிக்கப்படுகிறது. கடனட்டை விபரமும் விண்ணப்பத்திலேயே இருப்பதால் அதிக நேரமாவதில்லை. நான் அங்கு செலவழித்த நேரம் மூன்று நிமிடங்களுக்கும் குறைவாகவே. நான் நண்பகல் நேரத்தில் சென்றதால் கூட்டம் குறைவாகவே இருந்திருக்கலாம். ஆனால் காலை நேரங்களில் கூட இது போன்று செம்மையாகச் செய்திருப்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

தற்சமயம் இவர்கள் நுழைவிசைவு சம்பந்தப்பட்ட வேலைக்கு மட்டுமே இவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றனர். கடவுச்சீட்டு குறித்த சேவைகள், மற்ற சேவைகளுக்கு இன்னமும் நேரடியாகத் தூதரகம்தான் செல்ல வேண்டும். இந்தப் பணி தனியார் வசம் வந்ததால் தூதரகத்தில் எதேனும் மாற்றம் உண்டா எனத் தெரியவில்லை. இந்த முடிவினை எடுத்த அதிகாரிகளுக்கு நம் பாராட்டுகள். Well done guys!

டிஸ்கி 1: மகளுக்கு நுழைவிசைவு எடுத்தது இந்தியா வருவதற்குத்தான். தற்போதைய திட்டத்தின் படி, பெரும்பாலும் மும்பையில் இருப்பதாகத்தான் இருக்கிறது. சென்னை வருவது இன்னும் உறுதியாகவில்லை.

டிஸ்கி 2: ஸ்ரீதர் வெங்கட் தனியாக வலைப்பதிவு ஒன்றினை துவக்கி எழுதத் தொடங்கி இருப்பதற்கும், நான் ஊரை விட்டு ஓடுவதற்கும் தொடர்பு கண்டுபிடித்தால் அவர்களுக்குப் பகூத் அறிவுப் பாவலர் என்ற பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப் படும் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.