Wednesday, March 26, 2008

நட்சத்திர வாத்தியாருக்கு ஒரு கேள்வி!

அன்பு வாத்தியாருக்கு வணக்கங்கள். தங்களின் நட்சத்திர வாரப் பதிவுகளை ஆவலுடன் படித்துக் கொண்டு வருகிறேன். என்னைப் போன்றவர்களுக்கு போன தலைமுறை தலைவர்களைப் பற்றி நீங்கள் தரும் அறிமுகங்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் இந்தப் பதிவைப் படித்த உடன் என் மனதில் எழும் உணர்ச்சிகள் குறித்து எழுதாமல் இருக்க முடியவில்லை. நிற்க.

நான் அண்ணாவின் காலத்தில் பிறக்கவே இல்லை. அதனால் என் கருத்துக்களில் தவறேதும் இருந்தால் தயவு செய்து திருத்தவும். ஆனால் பிறந்தது முதலாக இந்தக் கழகங்கள் அடிக்கும் கூத்துக்களுடனே வளர்ந்தவன் என்கின்ற முறையில் எனக்கு இந்தப் பதிவைப் படிக்கும் பொழுது எழுந்த உணர்வுகள் இவைதான்.

அவரின் பேச்சுத் திறனைப் பற்றி நீங்கள் பெருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். அது பற்றிப் பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவரின் பேச்சுக்களை அதிகமாய்க் கேட்டதோ படித்ததோ கிடையாது. அப்படி இருக்கையில் நீங்கள் இங்கு காட்டாகத் தந்திருக்கும் சிறு பகுதியைப் படித்த பொழுது எனக்கு இதுவா இவரின் பேச்சுத் திறன் என்றே தோன்றுகிறது. சினிமா வசனம் போல் எதுகை மோனைகளும் அடுக்குத் தொடர்களும் இருந்தால் நல்ல பேச்சு என்றே நாம் வளர்ந்து விட்டோமா? அந்த பேச்சின் சாரம் என்ன என்பது பற்றிப் பார்க்கவே வேண்டாமா? நீங்கள் கலக்கல் என்று குறிப்பிட்டு இத்தனை வருட காலம் உங்கள் நினைவில் இருக்கும் இந்தப் பேச்சில் என்ன சொல்ல வருகிறார்? புராண காலங்களில் ரயில் ஓடியதா? டெலிபோன் இருந்ததா? ரேடியோ இருந்ததா? வெயர்லெஸ் இருந்ததா? என்றெல்லாம் கேட்கிறார். இதில் என்ன சொல்ல வருகிறார்? என்ன கருத்து இருக்கிறது? இன்றைக்கு நாம் பார்க்கும் ஹிந்து மத துவேஷம் அன்றே இருந்தது என்பது மட்டும்தான் தெரிகிறது. அன்றைக்கு அவர் ஆரம்பித்து வைத்த அடுக்கு மொழி தமிழில் பேசினால் போதும் ஆனால் அர்த்தம் தொனிக்கப் பேச வேண்டிய அவசியம் இல்லை என்கின்ற சூத்திரம்தான் இன்றைக்கும் நம்மிடையே இருக்கிறது என்று தெரிகிறது. இன்று கூட வேறொரு வலைப்பதிவில் படித்தேன். முதல்வர் கேட்டு இருக்கும் கேள்வி ஒன்று என்ன தெரியுமா? "சீதையை ராவணன் அபகரிச்சுகிட்டுப் போனபோது எந்த போலீஸ்காரர் தடுக்க முயற்சிசெஞ்சார்னு முதல்வர் கருணாநிதி லேட்டஸ்டா கேட்டிருக்காரு." ரெண்டு பேர் பேச்சுக்கும் ரொம்பவும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. அண்ணாவின் வழி நடப்பவன் என்று கலைஞர் சொல்லும் பொழுது உண்மையைத்தான் சொல்கிறார். இந்த அளவிலாவது.

நாமும் இன்று பேசலாம் அண்ணாவின் ஆட்சியில் இண்டர்நெட் இருந்ததா, அண்ணா காலத்தில் டாட்டா நேனோ உண்டா, இல்லை ஐபாட்தான் உண்டா? இப்படிப் பேசினால் என்ன பயன்? இல்லை உருப்படியாக எதாவதுதான் சொல்ல வருகிறோமா? இப்படி அர்த்தமற்ற அடுக்கு மொழி பேசியே நாட்டு மக்களை மயக்கி வாக்குகளை அள்ளிச் செல்வதை விடுத்து இதுவரை செய்தது என்ன, இனி செய்யப் போவது என்ன என்று சொல்லி வாக்கு கேட்கும் நிலை என்றாவது வருமா? இப்படிப்பட்ட பேச்சு ஒன்றைக் கலக்கல் பேச்சு என நீங்கள் சொல்வதால் இதில் அப்படி என்ன கலக்கலை கண்டு கொண்டீர்கள் எனப் புரியாமல் விழிக்கிறேன். கதைகளில் எழுதப்பட்ட வர்ணனைகள் என்றால் சரி அல்லது ஒரு இலக்கிய கூட்டமென்றால் கூட சரி. அரசியல் மேடையில் இது போன்ற பேச்சுக்கு என்ன அவசியம் என்றுதான் புரியவில்லை.

உண்மைத்தமிழன் சொல்லி இருக்கிறார் "பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என்கின்ற தலைப்பிலேயே ஒரு மனிதர் 2 மணி நேரம் பேச முடிகிறதெனில் அவருடைய அறிவுத் திறனை பற்றி யாரால் மதிப்பிட முடியும்.." உண்மைதான். இப்படி எந்தவிதமான தலைப்பில் அழகாகப் பேச தனித்திறமைதான் வேண்டும். ஆனால் அந்தத் திறமையை இலக்கிய மேடைகளோடு நிறுத்திக் கொள்வதுதானே நியாயம். அரசியல் மேடையிலும் இந்த மாதிரி அழகான தமிழில் பேசினால் போதுமே தவிர அர்த்தம் என்ற ஒன்று இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதா சரி? வாத்தியார் என அழைக்கப்படும் நீங்களே இதனை இவ்வளவு பாராட்டிப் பேசுகிறீர்களே. இதுதான் என்னைக் குழப்புகிறது. இன்றைக்கு தமிழ்வலைப்பதிவுகளில் இது போல் கேட்கவேண்டுமானால் புதசெவி என்று சொல்ல வேண்டுமாமே. நானும் சொல்கிறேன். புதசெவி!

உங்கள் அளவுக்கு, நீங்கள் சிலாகித்த பேச்சில் எந்த ஒரு ஆழமான பொருளும் இல்லை என்று நினைப்பதால், நேரடியாகவே கேட்டுவிடலாமே என்றே இந்தக்கேள்வி. அண்ணாவைப் பற்றி சரியாகவோ, தவறாகவோ பேசும் அளவுக்கு எனக்கு ஒன்றும் தெரியாது. அண்ணாவின் பிம்பமும் கேள்விகள் கேட்கக்கூடாத அளவுக்குக் கட்டமைக்கப்பட்டுவிட்டதா, கேள்வி கேட்டால் தமிழினத் துரோகி என்று பட்டம் கட்டப்படுவேனா - அதுவும்தான் தெரியாது. அப்படியே சொன்னாலும் -- புதுசா என்ன?

33 comments:

said...

வழக்கம் போல தனி மனிதத் தாக்குதல் இல்லாத / ஆபாசமற்ற பின்னூட்டங்கள் தாராளமாக வெளியிடப்படும்.

said...

கொத்ஸ்,

இந்த பூதசெவி என்ன? ஐயோ...இது புதசெவியா?

புதன், செவ்வாய், வியாழன் பதிவு போடணுமா?

நீங்க வாத்தியார் கிட்டே விளக்கம் கேட்டது நல்லதுதான். இப்படித்தான் வகுப்பிலே கவனமா இருந்து கற்றுக்கொள்ளணும்.

நீங்க சொன்ன காலக் கட்டத்தில் நாங்கெல்லாம் பிறந்துட்டோமுன்னாலும், அடுக்கு மொழித்தமிழில் மக்களைக் கவர்ந்தவர்கள் என்றே திக & திமுக தலைவர்களை அறியும்படி ஆனது.

வளர்த்த & வளர்ந்தவிதம் அப்படி.

said...

நல்ல கேள்வி கொத்ஸ். எனக்கும்கூட இதுபோன்ற கேள்விகள் வந்தன அந்தப்பதிவைப் பார்த்தபின்.

ஒரு ஜோக் படித்தேன். ராமன் மானைத் துரத்திக்கிட்டு போனப்ப, லக்ஷ்மணனுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்திருந்தா கூட கதை வளர்ந்திருக்காதேன்னு ஒரு குழந்தை - ரிப்பீட் - குழந்தை சொல்ற மாதிரி. அந்தக்குழந்தைக்கும் அண்ணாவுக்கும் பெரிய வித்தியாசம் என் கண்ணுக்குத் தெரியவில்லை.

இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் கதையில் நாயகன் ஒரு மேடைப்பேச்சை கேட்க நேரிடும். மேடைப்பேச்சாளன் "பஞ்சத்தை மஞ்சத்துக்கு அழைக்கும் ஆட்சி - லஞ்சத்தை நெஞ்சத்துக்கு அழைக்கும் ஆட்சி" ரேஞ்சில் சரமாரியாக அடுக்குத் தொடர் விட, நாயகன் நினைப்பதாக எழுதியிருப்பார் - "வார்த்தைகள் - தலையில்லா முண்டம் போல அர்த்தமில்லாமல் ஊர்வலம் போகும் வார்த்தைகள்" என்று. இந்தப்பேச்சைப் பார்த்ததும் எனக்கு அந்த வரிகள்தான் தோன்றின.

"கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?" கேட்க ஓசை நயத்தோடு இருக்கிறது - ஆனால் அர்த்தம்? "பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் கால்வாங்கித் தேய்" என்று அல்ப தரையில் தேய்ப்பதற்கு நீட்டி முழக்கியதற்கும் இதற்கும் என்னதான் வித்தியாசம்?

ஆனால், அவருடைய பல பேச்சுக்களில் ஒன்றே ஒன்றை மட்டும் படித்துவிட்டு, அவர் இவ்வளவுதான் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அடுக்குமொழி தமிழ் மக்களை மயக்கும் என்று கண்டுபிடித்த சமூகவியல் விஞ்ஞானி அவர்தான் போல :-)

said...

//ஆனால், அவருடைய பல பேச்சுக்களில் ஒன்றே ஒன்றை மட்டும் படித்துவிட்டு, அவர் இவ்வளவுதான் என்று சொல்லிவிட முடியாது.//

சுரேஷ், இதைச் சொன்னதுக்கு நன்றி. நான் அப்படிச் சொல்ல வரவில்லை. அப்படிச் சொல்லும் அளவிற்கு எனக்கு அவரது பேச்சுக்களில் பரிச்சயமும் கிடையாது.

நான் கேட்பது, வாத்தியார் நினைவில் இவ்வளவு நாட்கள் இருக்கும் அளவிற்கு அந்த பேச்சில் ஒன்றும் இல்லையே. அதுமட்டுமில்லாமல் ஒரு அரசியல் மேடையில் பேச அதில் விஷயமே இல்லையே. அதை ஏன் இப்படி சிலாகித்துப் பேசுகிறார் என்பதுதான்.

said...

புதசெவி - அப்டின்னா என்னங்க?

இப்படிக்கு
ஒரு மொடாக்கு

said...

கொத்தனாரே,
அரசியல் நோக்கைப்பற்றி நான் எழுதவில்லை. ஆனால் பூப்போன்ற
ஒரு பரவலான வழக்கத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.
இலக்கியத்திற்குத் தொடர்பில்லாத ஒரு விழா அழைப்பிதழின் நிகழ்ச்சி நிரலில் இறுதியாக "நன்றிப்பூக்கள்" என்று நன்றியுரையை அச்சிட்டிருந்தார்கள்.
மிகவும் குறைவாகப் பேசுபவர்கள் பேசினால் "திருவாய் மலர்ந்ததாக" நாம் நிறைய படிக்கிறோம். செய்தித்தாள்களும்,
பத்திரிகைகளும் "மலர் 32 இதழ் 21" என்ற விதத்தில் தேவையில்லாத இடத்திலும் அலங்காரம் செய்கின்றன.
"பாதமலர்", "பாதாரவிந்தம்" என்றெல்லாம் பார்த்திருக்கிறோம். அதுசரி பாதங்களைப் பார்த்தால் ஏதாவது பூ உண்மையிலே மனதிற்குள் தோன்றுமா?
இத்தகைய சூழலில் அடுக்குமொழிகள் அரசியலில் விலைபோனது ஆச்சரியமில்லை. இதையெல்லாம் தகர்த்த சுஜாதா பிரபலமடையவே பதினைந்து வருடங்களானது!
.

said...

இனிய நண்பருக்கு,

முதலில் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!

கவியரசர் கண்ணதாசன் சொல்வார்.

”ஆறுகள் பலவாக இருக்கலாம். ஆனால் அவைகள் சென்றடையும் இடம் கடல்
அதுபோல மதங்கள் பலவாக இருக்கலாம். அவைகள் மனிதனைச் சேரச் சொல்லும்
இடம் இறைவனடி!”

இறைவன் ஒருவன்தான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடிவில் அவரை வணங்குகிறார்கள்.
நாணும் அவரை முருகன் வடிவாக வணங்கி மகிழ்பவன்.

நான் தீவிர முருகபக்தன்.

இந்த வாரம் முடியும்வரை காத்திருங்கள். இன்னும் சில பதிவுகள் இருக்கின்றன.
அவற்றையும் படித்து விட்டுப் பின் ஒரு முடிவிற்கு வாருங்கள்

நீங்கள் கேட்டுள்ள கேள்விக்குப் பதில் வரப்போகும் ஆன்மிகப் பதிவு ஒன்றில் உள்ளது.
தமிழ்மணம் நிர்வாகிகள் அழைப்பை இரு வாரங்களுக்கு முன்னதாகவே அறியத் தந்தததால்,
பதிவுகளை எல்லாம் திட்டமிட்டு முன்னதாகவே எழுதி வைத்துவிட்டேன்.

கத்திமேல் நடப்பது போன்ற விஷயங்களுக்கு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எழுதியே
பதிவு இட்டுள்ளேன்.

அதுபோல இந்தப் பதிவில் அறிஞர் அண்ணா அவர்கள் பேசிய பேச்சை, அவர் பேசிய
வேறு எவ்வளவோ உரைகள் இருக்கும்போது, இதை எடுத்து எழுதியதற்கு ஒரு வலுவான
காரணம் இருக்கிறது அதையும் என்னுடைய அந்த ஆன்மிகப் பதிவில் தந்துள்ளேன்.
படித்தால் தெரியவரும்.

அண்ணா அவர்களின் இலக்கிய உரைகளில் மட்டுமே எனக்கு உடன்பாடு!
மற்றபடி அவருடைய நாத்திக வாதங்களில் எனக்கு என்றுமே முரண்பாடு!

பதிவிலுள்ள அந்த உரை ஒரு கல்லூரி விழாவில் பேசியதாகும்.
பதிவில் அதை நான் குறிப்பிட மறந்து விட்டேன்

ஆகவே இரண்டு நாட்கள் காக்திருக்க வேண்டுகிறேன்

அன்புடன்
SP.VR.சுப்பையா

said...

கொதஸ், நான் பிறக்கும் பொழுது அண்ணா ஒரு லெஜண்டாக அறியப்பட்டவர். உங்களுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். வெறும் அடுக்குமொழி மட்டும் பேசினார் என்று நான் நம்பவில்லை. திரைப்படங்களிலேயே நாதா ஸ்வாமியை மாற்றி அத்தான் என்று எழுதினார். அதுவும் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படத்தில். எனக்கென்னவோ வாத்தியார் ஐயா இன்னும் சரியான மேற்கோள்களை எடுத்துக்காட்டவில்லையோ என்றுதான் தோன்றுகிறது.

said...

இரண்டு நாள் கழித்து இங்கு வரதா? அங்கு போவதா?
இ.கொத்தனார் நீங்கள் கேட்ட கேள்வி? வித்தியாசமான சிந்தைனையாக இருக்கு.
இருந்தாலும் நான் உங்களை அண்ணா காலத்தில் வளர்ந்தவராக இருப்பீர்கள் என்று நினைத்திருந்தேன்.

said...

கொத்ஸ்,

நானும் வாத்தியாரின் எல்லா இஸ்டார் பதிவுகளையும் படித்து வருகிறேன். நீங்க குறிப்பிட்ட பதிவினை படித்தவுடன் (அதுவும், ஏ.ஸ்.பி, காமராஜர், கல்கி பற்றிய பதிவுகளுக்கு நடுவில்) எனக்கும் ஏதோ நிரடியது. அந்த நிரடல் காரணமாகவே மற்ற எல்லா இஸ்டார் பதிவுகளிலும் பின்னுட்ட்மிட்ட நான் இந்த பதிவில் ஏதும் சொல்லாது வந்துவிட்டேன். :)

//அவருடைய பல பேச்சுக்களில் ஒன்றே ஒன்றை மட்டும் படித்துவிட்டு, அவர் இவ்வளவுதான் என்று சொல்லிவிட முடியாது. //

சொல்ல முடியாது, கூடாதுதான். ஆனால் இன்றைய தமிகத்தலைவர்கள் ஏன் இப்படி தொடர்பில்லாம பேசறாங்கன்னு அட்லீஸ்ட் தெரியுது. :-)

சரி ஏதோ 2நாட்கள் காத்திருக்கச் சொல்கிறார். வெயிட் பண்ணலாம்.

ஆமாம், அதென்ன புதசெவி?. :)

said...

அண்ணா, கருணாநிதி, வைகோ போன்ற சிலரின் மேடைப்பேச்சுக்கள், முந்திய இருவரின் நாடக, சினிமா வசனங்கள் இவைகளில் இருந்த, இருக்கும் சொல்நயம், மொழி ஆளுமை அதிசயத் தக்கதே. பராசக்தி வசனமும், சேரன் செங்குட்டுவன் வசனமும் இன்றும் கிளர்ச்சி தருவன.

ஆனால் அந்தப் புலிகளைப் பார்த்து சூடுபோட்டுக்கொண்ட பூனைகளே இங்கு அதிகம்.

கழகப் பேச்சாளர்கள் என்றில்லாது பொதுவாகவே மேடைப் பேச்சு என்று வந்துவிட்டால் (தமிழ், ஆங்கில பேச்சுப் போட்டிகளுக்கு நடுவராக இருந்த அனுபவத்தில் ..) உரத்துப் பேசுவதும், மிகுந்த உடல்மொழியும் (!)தமிழ்ப் பேச்சுக்கு அவசியமானதொன்று என்றொரு நினைப்பு எல்லோருக்குமே உண்டு. நாடகத்தன்மை அதிகமாகவே இருக்கும். நம் பட்டிமன்றப் பேச்சாளர்களின் (குரங்கு) சேஷ்டைகளே அதற்குச் சான்றுகள். அண்மையில் இதெல்லாம் கொஞ்சம் குறைந்து வருவது மகிழ்ச்சியானதுதான்.

said...

அண்ணாவின் எடுப்பான அடுக்குமொழிமேல்
துடுக்காய் தொடுத்தீர் கேள்விகளை.
பொறுப்பாய் ஆராய்ந்து பெறுக பதில்களை.

அதாகப்பட்டதாவது தமிழர் காதுகள் உபன்யாசங்களாலும், கதாகாலாட்சேபங்களாளும், சம்பாஷணைகளாலும், பிரசங்கங்களாலும் தீய்ந்து போயிருந்த காலத்தே அண்ணா அவற்றையெல்லாம் கடாசிவிட்டு "சொற்பொழிவு" நிகழ்த்தினார்.

இவ்வகையில் அன்னார் தனிப்பட்டு நின்றதும், தமிழர்தமக்கு தாம் முன்பின் அறியாத புதியதொரு பேச்சு வடிவத்தை தந்ததும் அண்ணாவின் பால் இளைஞர்கள் ஈர்க்கப்படக் காரணமாயிற்று. இன்றைய மேடைப்பேச்சு மொழிக்கு அடிகோலியது.

பிரச்சாரகர்கள் பிரசங்கம் செய்த தமிழை மீட்டு பேச்சாளர்களின் "சொற்பொழிவு" ஆக்கிய பெருமை அண்ணாவையே சேரும்.

அன்றைய நிலையில் பேச்சாளர்களுக்கிடையே அண்ணாவின் பேச்சுக்கள் பாலைவனச்சோலை. "இயன்றவரை இனிய தமிழில்" பேச தமிழரை தயார்படுத்திய உரைகளின் சொந்தக்காரர்.
எத்தனையோ இதயங்களி்ல் தமிழார்வம் ஊட்டிய தீப்பொறி.


அந்த தீப்பொறி எத்தனை டிகிரி செண்டிகிரேட் என்று அளக்கவிரும்பினீர்கள் என்றால் சொல்ல ஒன்றுமில்லை.

It was one among the first neutrons that created the chain reactions.

said...

நீங்கள் அண்ணாவிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் ? இலக்கிய சொற்பொழிவா ?
அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி. ஒரு சிறந்த அரசியல்வாதி மக்களிடம் செல்வாக்கு பெறவேண்டும். இன்றைய கதாநாயகர்கள் தங்கள் கதாபாத்திரங்களின் பின்னணியில் செல்வாக்கு பெற முயல்கிறார்கள். அவர் காலத்தில் அவர் பேச்சு அவருக்கு தமது கட்சியை சூனியத்திலிருந்து கோட்டையை பிடிக்கும் அளவிற்கு வளர்க்க உதவியது. திமுக வின் வாஜ்பேயி அவர். புனித பிம்பங்கள் கட்டமைப்பதில் நமக்கு தானே முதலிடம்.

காங்கிரஸ்காரர்கள் தாங்கள்தான் சுதந்திரத்தை பெற்றுத்தந்தவர்கள் என்று மக்களிடம் அசைக்கமுடியாத செல்வாக்கு பெற்றிருந்த காலம். தேசிய உணர்வுகளுடன் தமிழுணர்வுகளும் இளைய சமுதாயத்தில் தழைத்த நேரம். இதனை சரியாக பயன்படுத்தி தமது இருமொழி தேர்ச்சியினால் கவர்ச்சிகரமாகப் பேசி மக்களை தம் பக்கம் இழுத்தார். நாத்திகம் பேசினாலும் இன்றைய வாஜ்பேயி இஸ்லாமியருக்கு உடன்பாடு போல பல ஆத்திகர்களும் அவர் பேச்சுக்கு மயங்கியதுண்டு. அவரது ஆங்கில ஆளுமை, படித்த ,பழமையின் பிடிகளிலிருந்து வெளிவர விரும்பிய, ஆதிக்கசாதி இளைஞர்களுக்கும் பிடித்திருந்தது. மிகவும் கண்ணியமான அரசியல்வாதியாக விளங்கியதும் பெரிதும் பாராட்டப்பட்டது. திராவிடர் (அல்லது கட்சிகள்) ஆட்சி மலர அடிக்கோளிட்டார்.

மற்றபடி அவர் பெரியார் போல சிந்தனாவாதியல்ல. ஆட்சியில் சாதனைகள் காட்ட அதிக நாட்கள் ஆண்டவருமில்லை. அவரது ஆட்சிபற்றி கூறிய அவரது மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த டி என் சேஷனுக்கு கிடைத்த வரவேற்பு உங்களுக்கு நேரடியாக தெரியும்தானே :)

said...

//எனக்கென்னவோ வாத்தியார் ஐயா இன்னும் சரியான மேற்கோள்களை எடுத்துக்காட்டவில்லையோ என்றுதான் தோன்றுகிறது.
//

நானும் இப்படியே கருதுகிறேன் கொத்ஸ்!

அறிஞர் அண்ணா என்றால் வெற்று அடுக்குமொழி மட்டுமில்லை! அதற்கும் மேல் அன்றைய நாட்களில் பல துறைகளில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் என்றே படித்து இருக்கிறேன்!

அடுக்குமொழி உண்டு தான்! அரசியல் மேடைகளில் சீனி மிட்டாய் தருவது போல் அது! ஆனால் அதையும் தாண்டி தமிழிசை மேம்பாடு, திரைப்பட வசனத்தில் புது உத்திகள், மேடை நாடகங்கள் என்று பல துறை வித்தகர் அண்ணா.

கர்நாடக சங்கீத பெரும் ரசிகரும் கூட. எம்.எஸ்.அம்மா தமிழிசையில் கால் பதிக்கத் துவங்கிய போது, பண்ணாராய்ச்சியில் அண்ணாவின் உதவி பற்றிக் குறிப்பிட்டு இருப்பார்கள்.

நாத்திக வாதம் இவரின் முற்காலங்களில் தான்! கம்பரசம் படிச்சா மயக்கம் போட்டு விழுந்துருவீங்க! :-)
ஆனா நீதிதேவன் மயக்கம், ஓர் இரவு எல்லாம் ஒப்பற்ற உரைநடை நூல்கள்!

இறை மறுப்பு நிலையில் இருந்து மாறி, ஒன்றே குலம் ஒருவனே தேவன் வரை வந்தவர் அண்ணா! திராவிட இயக்கத் தலைவர்களிலேயே மிகவும் சாத்வீகமானவர் என்று போற்றப்பட்ட பெரும் தலைவரும் கூட! வெறும் அடுக்குமொழி வித்தகர் மட்டுமல்லர்! அதையும் தாண்டி இலக்கியமானவரு! :-)

said...

//உண்மைத்தமிழன் சொல்லி இருக்கிறார் "பேசுவதற்கு ஒன்றுமே இல்லை என்கின்ற தலைப்பிலேயே ஒரு மனிதர் 2 மணி நேரம் பேச முடிகிறதெனில் அவருடைய அறிவுத் திறனை பற்றி யாரால் மதிப்பிட முடியும்.." உண்மைதான். இப்படி எந்தவிதமான தலைப்பில் அழகாகப் பேச தனித்திறமைதான் வேண்டும். ஆனால் அந்தத் திறமையை இலக்கிய மேடைகளோடு நிறுத்திக் கொள்வதுதானே நியாயம். அரசியல் மேடையிலும் இந்த மாதிரி அழகான//

True????????

said...

//இந்த பூதசெவி என்ன? ஐயோ...இது புதசெவியா?//

பூத செவியா? அது சரி. பூதர், அரக்கர் எல்லாம் பத்திப் பேச தனித்தகுதி வேணுமே. அது உங்களுக்கும் எனக்கும் இருக்கா?

//புதன், செவ்வாய், வியாழன் பதிவு போடணுமா?//

அட இப்போ சீசன் எல்லாம் ஒரு நாளைக்கு ரெண்டு போடறது. போடவே மாட்டேன்னு சொன்னாக்கூட. நீங்க வேற.

//நீங்க வாத்தியார் கிட்டே விளக்கம் கேட்டது நல்லதுதான். இப்படித்தான் வகுப்பிலே கவனமா இருந்து கற்றுக்கொள்ளணும்.//

இதெல்லாம் செஞ்சாத்தான் நம்ம மானிட்டர் பதவியைத் தக்க வெச்சுக்க முடியும்.

//நீங்க சொன்ன காலக் கட்டத்தில் நாங்கெல்லாம் பிறந்துட்டோமுன்னாலும், அடுக்கு மொழித்தமிழில் மக்களைக் கவர்ந்தவர்கள் என்றே திக & திமுக தலைவர்களை அறியும்படி ஆனது.

வளர்த்த & வளர்ந்தவிதம் அப்படி.//

நான் வளர்ந்த விதம் அப்படி என்னா பண்ணுவேன்னு போகாம தெரிஞ்சுக்கலாமே. அதான் பதிவு. வாத்தியார் ரெண்டு நாள் வெயிட் பண்ணச் சொல்லி இருக்காரு. இவ்வளவு செஞ்சவங்க அதையும் செய்ய மாட்டோமா?! :))

said...

//புதசெவி - அப்டின்னா என்னங்க?//

அதெல்லாம் கோப்பிரைற் மேட்டர். என்னைப் போய் கேட்டா நான் என்ன சொல்ல, வலைப்பதிவில் சொல்லணும் அப்படின்னு சொன்னாங்க. நானும் சொல்லறேன். அம்புட்டுதான்.

//இப்படிக்கு
ஒரு மொடாக்கு//

வாத்தி நீங்களுமா? மொடாக்கு - - -!

அப்படின்னு பில் அப் தி பிளாங்க்ஸ் செஞ்சா மீனிங்கே தடுமாறுதே!! :)

said...

//ஆனால் அடுக்குமொழி தமிழ் மக்களை மயக்கும் என்று கண்டுபிடித்த சமூகவியல் விஞ்ஞானி அவர்தான் போல :-)//

அதாவதுங்கண்ணா, தமிழ் அபின் என்ற போதை மருந்துக்குப் பிரிஸ்க்ரிப்ஷன் எழுதின டாக்டர் இவர்தான்னு சொல்லறீங்க. இல்லையா?

said...

அருமையான கேள்வி !
இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதை சரியாக எடுத்துச் சொல்லாத தலைவர்களின்.பெற்றோர்களின்,ஆசிரியர்களின் குற்றம்.
தமிழ்:அண்ணா படித்த காலத்திலே தமிழ் அழிந்து கொண்டிருந்தது.ஒரு திருமண அழைப்பிதழ் விவாஹ சுப முஹூர்த்தம் என்று ஆரம்பித்து இப்போதுள்ளவர்களுக்கு படித்தால் புரியாத தமிழில் தான் எல்லாமே எழுதப் பட்டு வந்தது.எவ்வளவு தூரம் என்று கேட்டால் ஒரு வடமொழி அறிஞர் தமிழ்நாட்டுக்காரர் தான் கேட்டார்"தமிழில் மூன்று எழுத்து தவிர வேறு என்ன இருக்கிறது.எல்லாம் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது தான்" என்று.

பக்தி: பக்தி எந்த அளவுக்கு இருந்தது என்றால் "எல்லாம் அவன் செயல்""தலையில் எழுதியதை யார் மாற்ற முடியும்".காலை எழுந்தது முதல் தூங்கும் வரை சிறு குழந்தைகள் முதல் அனைத்தும் சாமி சாமி தான்.இதையெல்லாம் சொல்லி புரிய வைக்க முடியுமா என்று கூடத் தெரிய வில்லை.
படிப்பு:கல்வி அனைவர்க்கும் என்றெல்லாம் கிடையாது.உங்களுக்கெல்லாம் படிப்பு வராது,குலத் தொழிலைச் செய்யுங்கள் என்பதுதான் பெற்றோர்களின் மூளையில் ஏற்றப் பட்டுவிட்ட மந்திரம்.
ஆம்! அண்ணா அவர்களையே அவருடைய ஆசிரியர் பச்சையப்பன் கல்லூரியிலே பொருளாதாரம் எடுத்திருந்தவரை"டேய்!நோக்கெல்லாம் இதெல்லாம் வராதுடா!வேறு சப்ஜக்ட் எடுத்துடு" என்றாராம்.பல்கலைக் கழகத்திலே முதல் மதிப்பெண் பெற்று தங்கப் பதக்கம் பெற்றுத் தேறினார் அண்ணா.
அரசியல்:அண்ணா படித்ததும் பணம் சம்பாதித்திருக்கலாம்.ஆனால் பெரியாரிடம் சென்றார்.பெரியார் நீ படித்த படிப்பிற்கு எனக்கு வேலை தர முடியாது என்றார்.ஆனால் விடாமல் பெரியார் வீட்டிலேயே ஈரோட்டில் தங்கி
குடி அரசு பத்திரிக்கைக்கு வேலை செய்தார்.
ஒரு தலை முறையின் தலை எழுத்தையே மாற்றி மொழி,இனம்,கல்வி என்று பாடு பட்டச் சமூக சிந்தனையாள்ர்.அரசியல் வாதியல்ல.அரசியலாக்கப்ப்ட்டு விட்டதுதான் சமூகத்திற்குப் பேரிழப்பு.

Anna peramaippu தளத்தில் மேலே அறிந்து கொள்ளலாம்.

said...

//"கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?" கேட்க ஓசை நயத்தோடு இருக்கிறது - ஆனால் அர்த்தம்?//

இதுக்கு அர்த்தம் இருக்குதே. சாப்பாடில்லாதவனின் நிலையிலிருந்து இதைப் பேசிப் பாருங்க.

இ.கொத்ஸ். வளர்ச்சி என்பது படிப்படியாக வருவது அடுக்குமொழி பேச்சுத் தமிழின் வளர்ச்சியில் ஒரு படி.

திராவிட மத மறுப்புப் பேச்சுக்களில் எழும் எள்ளல்களும் எள்ளலுக்குட்படுத்தப்படவேண்டியவையே. மதங்கள் பல அரிய விஷயங்க்களை எளிமைப்படுத்திவிட்டதென்றால் மத எதிர்ப்பும் அதே தளத்திலேயே நிகழ்கிறது. இரண்டுமே அடிமட்ட மக்களுக்காக வடிவமைக்கப்படுகிறது.

வணங்கப்படும் ஒன்றை (கடவுள்) இப்படி எள்ளி நகையடுவதுகூட ஒரு வகை போராட்டமில்லையா?

இது சரி, தவறு எனச் சொல்லவரவில்லை.

said...

புதசெவி - புரியவில்லை, தயவு செய்து விளக்கவும்.

said...

இலவசம்,மிகச் சரியான ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள்.

அண்ணாவின் ஒரே ஒரு பங்களிப்பு என்று எதைச் சொல்லலாம் என்றால்,வடமொழி கலந்து பேசும் தமிழ்தான் தமிழ்ப் பாண்டிதர்களுக்கு அழகு என்று இருந்த ஒரு காலத்தில்,ஆற்றொழுக்கான தனித் தமிழே நல்ல தமிழ் என்ற பாதைக்கு வலு சேர்த்தது.
மகாகவி என நாம் போற்றும் பாரதியும் உரைநடை எழுதும் போது மணிப்பிரவாளம் எனச் சொல்லப்பட்ட வடமொழி கலந்தே எழுதினார்;அவ்வாறு எழுதுவதே கற்றறிந்தவர் எழுதும் தமிழ் எனக் கருதப்பட்டது.
அக்கருத்தை வலுப்படுத்தியவர்கள் ஆரியர்கள் எனச் சொல்லப்படும் பிராமணர்கள்.ஆயினும் அக்காலத்திலேயே நேர்பட,தமிழின் தொன்மையும் அழகும் செறிவும் தெரிந்த பிராமண சமூகத்தவர்களும் இருந்தார்கள்,பரிதிமாற்கலைஞர் என தன் பெயரை தூய தமிழில் மாற்றிக் கொண்ட சூரிய நாராயண சாஸ்திரி அவர்களில் ஒருவர்.மேலும் மறைமலையடிகள்(வேதாசலம் எனற பெயரை மாற்றிக் கொண்டார்) மற்றும் பாவாணர் போன்றோர் அண்ணாவின் காலத்துக்கு முன்பே தனிதமிழ்க் கொடியை உயரப் பிடித்து விட்டார்கள்.
அண்ணா அப்பேச்சை நாடகங்களிலும் புகுத்தினார்,தமிழர்களில் சாபக்கேடு என்னவெனில்,பொழுதுபோக்கு ஊடகங்களுக்கு அவற்றின் தகுதிக்கு அதிகமான பதிப்பு கொடுப்பது.இதன் காரணமாக அண்ணாவின் தமிழும்,மேடைப் பேச்சும் ரசிக்கப்பட்ட அளவுக்கு அவர் அரசியல் தலைவராகவும் உருவகம் செய்து ரசிக்கப்பட்டார்,போற்றப்பட்டார்..
இந்த உந்துவிசைக்கு மேலும் வேகம் சேர்க்க,பெரியாரின் சில சமூக சீர்திருத்தக் கருத்துக்களை-விதவைகள் திருமணம்,பால்ய விவாகத்தை தடுத்தல்,சமூகத்தில் பெண்களுக்கு உரிய உரிமைகள்-தங்கள் இயக்கக் கொள்கைகளாக வரித்துக் கொண்டார்கள்.
இவை ஒரு சமூக ஆர்வலரின் ஆர்வங்களே ஒழிய சுதந்திரம் அடைந்து வளர்ந்து கொண்டிருந்த ஒரு நாட்டை வழிநடத்த தேவையான சிறந்த தகுதிகள் இல்லை.
துரதிருஷ்டவசமாக பெருவாரியான மக்கள் அண்ணாவின் மேல் இந்த உருவகத்தையும் அணிந்தே பார்த்தார்கள்;ஒரு மீட்பர் என்ற அளவுக்கு உயர்த்தினார்கள்.
அண்ணாவுக்காவது ஓரளவுக்கு,இந்த மக்களுக்கும்,நாட்டுக்கும் ஏதாவது முன்னேற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற ஆசையாவது இருந்தது.
இந்த நேரத்தில் அண்ணா நோய்வாய்ப்பட,பின்னர் மறைய(மறையவைக்கப்பட்டார் எனவும் வதந்தி உண்டு !) முக வெற்றிகரமாக அவருக்கேயுரிய cunningness(இதற்கான சரியான ஒரு தமிழ்ச் சொல்லை முன்பொருமுறை உபயோகித்தபோது கடும் கண்டனங்கள் எழுந்தன,எனவே ஆங்கில வார்த்தையையே வைக்கிறேன்!) உடன் கட்சித் தலைமையையும்,ஆட்சியையும் பிடித்தார்.
அவரின் நல்ல நேரமோ,தமிழகத்தின் போதாத நேரமோ,அவ்வகையான மேடைப்பேச்சு ஒன்றே அரசியல் வாதிக்கான தகுதி என்றாகிப் போனது.
அவர்களில் செயல்பாடு சமூகத்தில்,நாட்டில் என்ன மாற்றங்களைக் கொண்டு வந்தது என்ற வகையில் அளவீடுகளே இல்லாமல் போனது !!!!!!

(இப்போதும் பொங்கத் தயாராக இருக்கும் அடிப்பொடிகள்,சிங்கப்பூர் போன்ற நாட்டில் ஒரு அரசின் தலைவன் என்ன செய்யமுடியும் என்ற விதயங்களை படித்து அறிந்து கொண்டு பின்னர் என்னை விமர்சிக்க வருமாறு அன்புடன் வேண்டுகிறேன்)

சுப்பையா அவர்களின் பதிவைப் பார்த்தவுடனேயே இதை எல்லாம் எழுதத் தோன்றியது;ஆனால் பதிவுலக அடிப்பொடிகள் பலர் உடன் வரிந்துகட்டிக் கொண்டு வருவார்கள்,எனவே விட்டுவிட்டேன் !

said...

// கேள்வி கேட்டால் தமிழினத் துரோகி என்று பட்டம் கட்டப்படுவேனா - அதுவும்தான் தெரியாது. அப்படியே சொன்னாலும் -- புதுசா என்ன? //

மூலவியாதிக்காரன் மாதிரி எதுக்கு ஓய் இப்படி போற இடமெல்லாம் இந்த பொலம்பலை இழுத்துக்கிட்டே திரியரீர்?

சொல்லறவன் சொல்லிவிட்டுப்போகிறான். அவனுக்குத்தான் அறிவில்லை. சொல்லிவிடுவானோ சொல்லிவிடுவானோனுட்டு போறவிடமெல்லாம் நீர் அட்வான்ஸா பொலம்பறது அன்சகிக்கபிளா இருக்கு :(

said...

கொத்ஸ்,

பெரியார் பற்றி தெரியாமல் இருந்தது, வலைப்பதிவில் படித்து ஓரளவுக்கு தெரிந்து கொண்டேன், இங்கே அருமையாக அண்ணாவைப் பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் உங்கள் கேள்வி வழியாக பலருக்கும் கிடைத்துவிடும் என நினைக்கிறேன்.

கேள்வி கேட்பது நல்லது, சரியான நேரத்தில் தான் கேட்டு இருக்கிறீர்கள். எவ்வளவு நாளக்கைக்குதான் திராவிட தோழர்கள் பெரையாரை மட்டுமே பேசிக் கொண்டிருப்பார்கள். மாற்று(ம்) இருக்கட்டும்.

அருமையாக தொடங்கப்பட்டு இருக்கும் இந்தபதிவும், பினாத்தலார் அவர்களின் இதே ஐயமும் மிகத் தெளிவாக எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

பாராட்டுக்கள் கொத்தனாரே !

said...

இது என் கருத்து:
அந்தக் காலத்தில மக்களுக்கு நல்ல தமிழ் மேல ஈடுபாடு இருந்தது, அதை யாரு சரியா பேசறாங்களோ அவுங்க பெரியாளானாங்க. பேச்சு, பேச்சு, பேச்சு.. ஒரு நல்ல அரசியல்வாதின்னு அடையாளம் காட்டுச்சு. வாத்தியார் வந்தாரு(இது எம்.ஜி.ஆர்) அவர் சினிமைவை முன்னிறுத்தினாரு. ஏதாவது ஒன்னை முன்னிறுத்திதான் நம்ம மக்களை கவர வேண்டியது இருந்தது. அதுதான் trump card. அண்ணா பேச்சை வெச்சாரு. கலைஞர் கவிதை வெச்சாரு. அப்புறம் கவர்ச்சி.

அவ்வளவுதான் சூட்சுமம். இன்னும் நாம கவரப்பட்டுகிட்டுதான் இருக்கோம். இப்போ தொலைக்காட்சி அவ்வளவே.

said...

அறிஞர் என்ற பெயருக்குப் பொருத்தமாக கல்வி அறிவும் ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறந்த பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் கொண்ட மனிதர். இதனாலேயே கட்சி எல்லைகளைக் கடந்து நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.

ஆனால் அவரைப் பற்றிய உண்மை மதிப்பறிய வேண்டுமானால் அந்நாளைய முரசொலி மற்றும் நவசக்தி நாளிதழ்களை ஒரு சேர படிக்க வேண்டும். சுப்பையா தேர்ந்தெடுத்திருக்கும் பேச்சுகளைப் போன்ற பேச்சுகள்தான் தமிழகத்தை 1967ல் திசை மாற்றிச் செலுத்தியது. பொதுக்கூட்டங்களில் ' மஹாஜனங்களே' என விளித்து எளிதாக பேச்சை ஆரம்பித்துவிடும் காங்கிரஸ்காரர்கள் இருந்த நாட்களில் 'தலைவர் அவர்களே...' என்று ஆரம்பித்து நீண்ட விளிப்புபசாரம் நடத்தும் வழக்கம் திமுகவினரால் வளர்க்கப்பட்டது. மேடைப் பேச்சுக்கு அண்ணா அவர்கள்தான் திமுகவினருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதும் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணமுண்டு என்பதும் இவரது புகழ் பெற்ற சொல்லாடல்கள்.

1967 தேர்தலுக்கு முன்பு 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூபாய்க்கு மூன்று படி அரிசி தருகிறோம் அப்படித் தராவிட்டால் எங்களை முச்சந்தியில் நிறுத்தி சாட்டையால் அடியுங்கள்' என்ற பரப்புரை அண்ணா அவர்களை முதலமைச்சர் ஆக்கியது.

said...

---நான் உங்களை அண்ணா காலத்தில் வளர்ந்தவராக இருப்பீர்கள் என்று நினைத்திருந்தேன்.---

நானும் இப்படித்தானே நினைத்திருந்தேன்!

said...

வாங்க...வாங்க... :)

http://tbcd-tbcd.blogspot.com/2008/03/blog-post_26.html

said...

நான் அண்ணாவை அருகில் இருந்து பார்த்தவன், அவர் பேச்சுக்களை அருகில் நின்று கேட்டவன் என்ற முறையில் கூறுகிறேன். அண்ணாவின் பேச்சுத்திறனை யாரும் மறுக்க முடியாது. இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தை நினைவு கூறுகிறேன்.

ஒரு முறை கல்லூரி மாணவர்கள் ஒரு பத்திரிக்கை அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் செய்து கொண்டு இருந்தனர். செய்தி கேட்டு அண்ணா அங்கே வந்தார். இரண்டு நிமிடங்கள்தான் பேசினார். ஆர்பாட்டமாக இருந்த இடம் அமைதிக்கடலாய் மாறியது.

அவருடைய கொள்கைகள் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அவருடைய பேச்சாற்றல் வியக்கத்தக்கது.

said...

சரி கொஞ்சம் அலை அடங்கினப்புறம் எட்டிப் பார்ப்போம் என்று நினைத்திருந்தேன்.

அண்ணாதுரை அவர்களின் சில பேச்சுகளை கேட்டிருக்கிறேன். ஓகை ஐயா சொன்னது போல் அவருடைய மொழி ஆளுமை வியக்கதக்கதுதான். Duty, Discipline and Dignity என்பதை மிக அருமையாக கடமை, கண்ணியம், கட்டுபாடு என்ற சொல்லாடல் ஒரு உதாரணம்.

பெரியாரின் திராவிடர் கழகத்தில் ஒரு புதிய பரிமானத்தை கொண்டு வந்து திராவிட முன்னேற்ற கழகமாக முன்னெடுத்து சென்றது அவர் சாமர்த்தியம்.

அரசியல் பாதையை தேர்வு செய்தது, கடவுள் மறுப்ப்பு கொள்கையிலிருந்து ஒன்றே குலம்; ஒருவனே தேவன்; என்று மாற்றி வந்தது. சினிமாவின் முழு வீச்சையும் உணர்ந்து நடிகர்களை (எம் ஜி ஆர் உட்பட) கட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தியது, முதல் திராவிட அரசை தமிழகத்தில் ஏற்படுத்தியது, தேர்தல் வாக்குறுதியாக சொன்ன 'ரூபாய்க்கு மூன்று படி; முச்சந்ந்தியில் சவுக்கடி' நிறைவேற்ற பாடுபட்டது போல பல சாதனைகள் நிகழ்த்தியிருக்கிறார்.

முக்கியமாக திமுக தொடங்கிய பிறகு பெரியாரால் பல குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டாலும், திராவிட கழகத்தின் முக்கியத்துவத்தை குறைக்காமல், பெரியாரை தன் அரசியல் ஆசானாக இறுதி வரை நினைத்திருந்தார். அவர் கட்டமைத்த பாதையில்தான் பெரும்பாலும் இன்றைய திமுக சென்று கொண்டிருக்கிறது.

அவர் ஆட்சிக்காலம் குறைவே. ஆனால் காமராசருக்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற, திறமையான முதலமைச்சராக பரிமளிக்க அவருக்க்கு வாய்ப்புகள் அதிகம் இருந்தது. அவருடைய இறுதி ஊர்வலம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் அளவில் அதிக மக்கள் பங்கேற்று தங்கள் துக்கத்தை பகிர்ந்து கொண்டார்கள்.

அடுக்குமொழி மட்டுமே ஆக்கபூர்வ செயலைத் தராது என்பது மிகவும் உண்மை. அதைத் தாண்டியும் அவரிடம் வியத்தகு ஆளுமை பண்புகள் இருந்தன.

எம்.எஸ். உதயமூர்த்தி தனது சுயசரிதையில் (ஆனந்த விகடனில் வெளியாகியது) அண்ணாதுரை அமெரிக்கா வந்த போது ஏற்பட்ட அனுபவங்களை குறிப்பிடுகிறார். அதில் அண்ணாவின் பண்புகளை புகழும் அதே வேளையில், அவரைப் பற்றி அதீதமாக தமிழர்கள் கொண்டாடுவதைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

டி.என்.சேஷனின் புத்தகத்தில், அண்ணாவை பற்றி ஒரு விவாதத்தை குறிப்பிட போய் அவர் புத்தகம் தடைசெய்யபட்டது மட்டுமல்லாமல் (ஒருமுறை அல்ல, மூன்று முறை. திமுக, அதிமுக, மதிமுக - தலைக்கு ஒரு தடை வாங்கினார்கள்) சேஷன் தமிழகத்தில் ஏற்பட்ட்ட அச்சுறுத்தல்கள் ஏராளம்.

அண்ணாவைப் பற்றி மட்டுமல்ல, எல்லா தலைவர்களுமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நம்பும் போக்கு நம்மிடையே நிறைய இருப்பதால், இந்த விவாதம் அதன் இலக்கை அடையுமா என்பது சந்தேகம்தான்.

said...

சரியான கேள்விதான்.வாழ்த்துக்கள்:)

said...

//பெரியார் பற்றி தெரியாமல் இருந்தது, வலைப்பதிவில் படித்து ஓரளவுக்கு தெரிந்து கொண்டேன், இங்கே அருமையாக அண்ணாவைப் பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் உங்கள் கேள்வி வழியாக பலருக்கும் கிடைத்துவிடும் என நினைக்கிறேன்//

கோவி கண்ணனை நான் வழிமொழிகிறேன். திராவிட தலைவர்களில் அண்ணாதுரை டீசெண்டானவர் என நினைத்திருத்தேன். இந்த பதிவின் மூலம் அவர் ஒரு, ஊறிக்கிடக்கும் மட்டைகளில் முதல் மட்டை என்று தெரிந்து கொண்டேன்.

இந்த பகுத்தறிவு கோமாளிகளின் முதல் கோமாளி இந்த அண்ணாதுரை என்பது நிரூபணமாகிறது.

ஒருவர் அண்ணாதுரை யூ னோ யு என் ஓ என பேசியதை மிக புளகாங்கிதப்பட்டு எழுதியுள்ளார். இந்த பக்கம் நடக்கும் எல்லா ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ களில் எல்லா காமெடியர்களும் இந்த மாதிரிதான் பேசுவார்கள்.

ஒரு காமெடியனை வைத்து ஆரம்பித்த கட்சி ஒரு திருடனிடமும் அவரது குடும்பத்தினருடமும் வளர்கிறது. இதைப் பார்த்து பகுத்தறிவு மிக்க தமிழ் உலகம் சந்தோசபடுகிறது. வேதனை சாமி

said...

கொத்ஸ்,

எங்கோ படிச்சது, நம்ம எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்......

மீட்டிங் லேட்டா வந்தா அண்ணா அங்கு சோர்ந்து போயிருந்த மக்களை ஓரே நிமிசத்திலே சுட்டியிழுந்த வார்த்தை தான்.

"மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, உங்களை தழுவுதோ நித்திரை, குத்துங்கள் முத்திரை"

இந்த மாதிரி நம் ஊரு'லே அழகான தமிழிலே பேசாமே அமெரிக்கா போயி அங்க டிரென்ஸ்லெட்டர் வைச்சிக்கிட்டா பேசமுடியும்....? :)

எப்பிடியோ Vote - Canvassing அவருடைய மொழியாளுமை உபயோகபட்டுச்சு.... இப்போ அதுவே கவர்ச்சி சிம்ரனும், வாழைப்பழ புகழ் செந்தில் 'ஏய் ஒண்டிக்கு ஒண்டி வர்றியா'கிற அளவுக்கு போச்சு.....:(