Wednesday, August 20, 2008

குறுக்கெழுத்துப் புதிர் - விடைகள்

கொஞ்சம் பயந்துக்கிட்டேதான் புதிரைப் போட்டேன். தமிழில் குறுக்கெழுத்து என்பது எவ்வளவு தூரம் வரவேற்கப்படும்? ரொம்ப கஷ்டமா இருக்கு அப்படின்னு எஸ்கேப் ஆயிடுவாங்களோ? இல்லை என்னய்யா குறிப்பு இது அப்படின்னு துப்பிடுவாங்களோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன். ஆனா நிறையா பேரு ஆர்வமா கலந்துக்கிட்டதுல ரொம்ப மகிழ்ச்சி.

பொதுவா எத்தனை பேர் கலந்துக்கிட்டாங்க, யார் யார் எந்தெந்த கேள்விக்கு சரியான விடைகள் சொல்லி இருக்காங்க அப்படின்னு எல்லாம் ஒரு கட்டம் போட்டு காட்டி இருப்பேன். இந்த தடவை அளவு கடந்த ஆணி. அதனால அதெல்லாம் செய்ய முடியலை. அடுத்த முறை நல்லாச் செஞ்சுடலாம். மன்னிச்சுடுங்க. எனக்குத் தெரிஞ்சு ஸ்ரீதர் நாராயணன், கைப்புள்ள, திவா, வடகரை வேலன் இவங்க நாலு பேரும்தான் எல்லா விடைகளையும் சரியாச் சொல்லி இருக்காங்கன்னு நினைக்கிறேன். வாழ்த்துகள்!! வேற யாராவது விட்டுப் போயிருந்தா சொல்லுங்க. சரி பண்ணிடறேன்.

இனி விடைகள்.


இதுதான் நம்ம வலைப்பதிவில் முதல் முறை என்பதால் கொஞ்சம் விரிவாக விடைகளைப் பார்க்கலாம்.

இடமிருந்து வலம்

1. எல்லையில்லாத் தவமும் மகிழ்ச்சி இல்லா மருந்தும் தீச்சொல் ஆகுமே(3)
வம்பு - தவம் என்ற வார்த்தையின் எல்லைகளான த மற்றும் ம் போனால் மிஞ்சுவது வ. இதனோடு மருந்துக்கு இன்னொரு சொல்லான களிம்பு என்னும் சொல்லை எடுத்து அதில் மகிழ்ச்சிக்கு இணையான களி என்ற பகுதியை நீக்கிவிட்டால் ம்பு என்பது மிஞ்சுகிறது. இவை இரண்டையும் சேர்த்தால் வம்பு என்னும் சொல் தீச்சொல் என்னும் பொருள் கொண்டு வருகிறது. வசவு என்ற விடையை பலரும் தந்திருந்தார்கள். ஆனால் அதற்கு குறிப்பு எப்படிப் பயன்படும் என்பதை யோசிக்கவே இல்லை.

2. முதலில் கருணையோடு தலையிழந்த இடபம் என்று நினை (3)
கருது - முதலில் கருணை என்பது கருணை என்னும் சொல்லின் முதல் எழுத்தைக் குறிக்கும் - க. இடபம் (ரிஷபம்) என்றால் எருது. அதில் தலையிழந்த என்று சொன்னதினால் ருது என்னும் எழுத்துகள் மிஞ்சுகின்றன. இவை இரண்டும் சேர்ந்தால் நினை என்னும் பொருள் வர கருது என்றாகிறது

4. இவ்வளவு பெரிய குன்றா என பிரமி (2)
மலை - இது எளிதான குறிப்புதான். பெரிய குன்று என்பது மலை. பிரம்மிப்பது என்றால் மலைப்பது என்பது நமக்குத் தெரியும். ஆக பிரமி என்றாலும் மலை!

5. தாய் தன் கரத்தால் உண்ணச் செய்வதில் ஊழல் (4)
கையூட்டு - இங்கு தாய் என்ற சொல் சரியாகப் பார்த்தால் தேவையே இல்லை. ஆனால் ஊட்டு என்பது உடனடியாகத் தெரிய வேண்டும் என்பதால் அதனைச் சேர்த்தேன். தன் கரத்தால் என்பது கை என்றும் உண்ணச் செய்வது என்பது ஊட்டு எனப் பொருள்படும்படிச் செய்தால் கையூட்டு என்பது ஊழல் என தெரிய வரும்.

7. இங்கிதம் என்றாலும் இனிமைதான், இடையொடிந்தாலும் அதுவேதான் (3)
இதம் - இங்கிதம் என்ற சொல்லின் இடை ஒடிந்தால், அதாவது நடுவே இருக்கும் சில எழுத்துக்களைக் களைந்தால் இதம் என்று வருகிறது. இதம் என்ற சொல்லுக்கும் பொருள் இனிமை என்பதுதானே.

9. அந்த மாம்பழம் என்றதுமே அன்புதானே (3)
அம்மா - அந்த மாம்பழம் என்பதைச் சொல்ல அம்மா என்று சொல்லலாம். அம்மா என்றாலே அன்புதானே.

10. இந்நாட்டில் வடமொழியா என்று கேட்கலாமோ (4)
இந்தியா - வடமொழியா என்று கேட்பதை தமிழில் 'இந்தி'யா எனக் கேட்கலாம். இந்தியா என்பது ஒரு நாடு.

12. நண்பகல் முன்பு ஒருவரை வணங்க இதனைப் பிடிக்க வேண்டும் (2)
காலை - நண்பகலுக்கு முன்பான நேரம் காலை. ஒருவரை வணங்க அவர் காலைத்தானே பிடிக்க வேண்டும்.

13. செல்வத்தை கடைசியாக எடு, சொந்தக்காரருக்குத் தெரியாமல் (3)
திருடு - செல்வம் என்றால் திரு. கடைசியாக எடு என்றால் எடு என்ற சொல்லின் கடைசி எழுத்து டு. இவை சேர்ந்தால் திருடு என்றாகிறது. சொந்தக்காரருக்குத் தெரியாமல் எடுப்பது என்பது திருடுவதுதானே.

14. அறுக்க ரம்பம் மட்டும் போதுமா? இதுவும் வேண்டாமா? (3)
கரம் - கரம் என்ற சொல் குறிப்பின் ஒரு பகுதியாகவே இருக்கிறதே! பலரும் இதை மரம் எனச் சொல்லி இருந்தார்கள். ஆனால் மரம் வர குறிப்பு ஒத்து போவதில்லையே.

மேலிருந்து கீழ்

1. ஒரு விதத்தில் பாதி குரு விஜயம் செய்வது (3)
வருகை - ஒரு விதம் என்பதை வகை என்று சொல்லலாம். அதில் பாதி குரு அதாவது ரு என்ற எழுத்தைப் போட்டால் விஜயம் என்ற பொருள் வரக்கூடிய வருகை என்ற விடை கிடைக்கும்.

2. சறுக்கலைப் பார்த்தால் அறுபத்து நான்கில் ஒன்று போல் இருக்கிறதே (2)
கலை - சறுக்கலைப் பார்க்கும் பொழுது அதில் கலை என்ற சொல் தெரிகிறது. ஆயக் கலைகள் 64 என்பது நமக்குத் தெரியுமே.

3. துக்கம் தர முதல் துன்பத்தோடு முடிவிலா ரம்யம் கலைந்திருக்கிறது (4)
துயரம் - முதல் துன்பம் - து. முடிவில்லா ரம்யம் - ரம்ய. இவை கலைந்திருக்கின்றன து + ரம்ய = துயரம் = துக்கம்!

4. பள்ளத்தைப் பார்க்க ஓரமாய் மன்றாடு (2)
மடு - ஓரமாய் மன்றாடு என்பது அச்சொல்லின் ஓரங்களைக் குறிக்கிறது = மடு. மடு என்றால் பள்ளம் என்ற பொருளில் இவ்விடை சரியாக வருகிறது.

6. படை வகுப்பில் ஒரு பகுதி இந்த யுத்தி (3)
யூகம் - படை வகுப்பு வியூகம். அதில் ஒரு பகுதி யுத்தி என்ற பொருள் கொண்ட யூகம்.

8. வதந்தியில் ஒரு பகுதி வீணையில் உண்டு (3)
தந்தி - இருப்பதிலேயே எளிமையான குறிப்பு இதுதான் என நினைக்கிறேன். வதந்தியில் இருக்கும் தந்தி வீணையிலும் உண்டு.

9. அந்த செவிலித்தாய் ஏறக்குறைய ஒரு மாலை தந்தாள் (4)
அந்தாதி - செவிலித்தாய் என்றால் தாதி. அந்த தாதி என்ற சொற்களில் இருக்கும் எழுத்துக்களை கலைத்துப் போட்டால் அந்தாதி வரும். ஆனால் ஒரு 'த' அதிகமிருக்கும். அதனைக் குறிப்பதற்காகத்தான் ஏறக்குறைய எனச் சொன்னது. அந்தாதி என்பதின் முடிவே தொடக்கமாக இருப்பதால் அது மாலை என்றும் அழைக்கப்படுகிறது.

10. இந்தத் தழை ருசியற்று இருக்கிறதே (2)
இலை - தழை என்பதைப் பார்த்து இலை என்று எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால் இலை என்பதற்கு ருசியற்று என்ற பொருள் இருப்பது நமக்குத் தெரியுமா?
நான் பாவிக்கும் அகரமுதலி சொல்வதைப் பாருங்கள் -

இலை (p. 88) [ ilai ] , VI. v. i. be tasteless, ருசியற்றிரு; 2. lose taste for a thing, வாயரோசி.

இலைத்தகரி, a tasteless curry.

இலைத்தபேச்சு, a useless, vain talk.

இலைத்தல், being insipid or tasteless.

11. கொடை ஒன்றின் தலையெடுப்பது வேள்வி (3)
யாகம் - இதுவும் எளிதுதான். கொடை என்றால் தியாகம். அதன் தலையை எடுத்தால் யாகம். அதாவது வேள்வி.

12. முக்காடு இட்டு வந்தால் இந்த வனம் தெரியுமோ (2)
காடு - முக்காடு என்ற சொல்லில் வனம் என்ற பொருள் கொண்ட விடை இருக்கிறது. அது உள்ளேயே இருக்கிறது என்று உணர்த்தத்தான் தெரியுமோ என்ற குறிப்பு.

இந்த குறுக்கெழுத்து விளையாட்டு நல்லா இருக்குன்னு நினைக்கிறவங்க இங்க போய் பார்த்தீங்கன்னா வாஞ்சிநாதன் தென்றல் என்ற பத்திரிகையில் தரும் குறுக்கெழுத்துப் புதிர்களைக் காணலாம்.

மீண்டும் அனைவருக்கும் நன்றி!

53 comments:

said...

வெள்ளியன்றுதான் விடைகளை வெளியிட நினைத்தேன். ஆனால் அன்று கொஞ்சம் வேலை வந்ததாலும், விடைகள் வருகை நின்று போனதாலும் இன்றே ரிலீஸ்!

said...

இம்மாம் மேட்டரூ இருக்கா!

இதுல யோஜிக்க சரி சரி அப்புறம் அடுத்தது எப்ப? நாங்க ரெடி !

said...

பொழுதோட விடை சொன்னதுக்கு நன்றி.

said...

//கொடை என்றால் தியாகம். அதன் தலையை எடுத்தால் யாகம். அதாவது வேள்வி..//

அர்த்தம் புதுசா இருக்கே??? ம்ம்ம்ம்ம்??? சரியா வரலையோனு ஒரு எண்ணம்.

said...

//இலவசக்கொத்தனார் said...

வாங்க வடகரை வேலன்

இவ 1,2,4,5,7,9,10,12,13,14 - சரி
மேகி 1,2,3,4,6,8,9,10,11,12 - சரி

சபாஷ்! முதல் முயற்சியிலேயே எல்லாம் போட்டாச்சு போல இருக்கே!!

வாழ்த்துகள்!!//

said...

வாஞ்சியின் லிங்க் கொடுத்தற்கு நன்றி. வேலை அதிகம். 1 ac மட்டும் பதில் சொல்ல முடியவில்லை. அது மட்டும்தான் அதிகம் யோசிக்க வைத்தது.

தொடரவும்.

-அரசு

said...

யாருக்கு தங்கம், யாருக்கு வெள்ளி யாருக்கு வெண்கலம் அதை சொல்லுங்க சார்

said...

நல்ல முயற்சி. ஆங்கிலப் புதிர்களுக்கு இணையாக உள்ளது. 'இலை' பற்றி எழுதியது நிறைய பதிவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். பாதி தான் போட முடிந்தது. வாரமொருமுறை சாத்தியமா?

அனுஜன்யா

said...

good show koths..

make it a regular feature

said...

"தவம்" என்ற சொல்லிலிருந்து "வ" வந்ததும், "வசவு" என்று
விடையை நினைத்து என்ன உளறல் இது என்று உம்மை மனதில் திட்டிக் கொண்டிருந்தேன். இப்போதுதான் தெரிகிறது: "களிம்பு" மூலம் வந்திருப்பது. எனவே பிளேட்டை மாற்றி,
வாழ்த்த வயதிருப்பதால் வணங்காமல் ஒரு பா(ராட்டு):

வம்பிலே மாட்டியவன் வாழ்த்துகிறேன் என்றென்றும்
தம்பிநீ நற்புதிரைத் தா

said...

இ கொ,

முதலில் தயக்கமாகத்தான் ஆரம்பித்தேன். இந்த மாதிரி குறுக்கெழுத்துப் போட கொஞ்சம் பயிற்சி தேவை. உதா: 'தலையெடுக்க' என்றால் முதல் எழுத்தை கழிக்க வேண்டும் என்று புரிந்து கொள்வது.

அப்புறம் முதல் முயற்சியில் 2-3 போட முடியவில்லை. போட்டதில் சில தவறுகள் வேறு. தொடர்ந்து நீங்கள் கொடுத்த ஊக்கத்தில் சுவாரசியம் ஏற்பட்டது.

முக்கியமானது ஒன்று தெரிந்து கொண்டேன். இம்மாதிரி குறுக்கெழுத்தில் குறிப்புகளில் இருக்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் விடைக்கும் தொடர்பு இருக்கிறது என்று.

தொடர்ந்து இம்மாதிரி குறுக்கெழுத்து போட்டி நடத்துங்கள்.

உங்கள் அயராத முயற்சிக்கு வாழ்த்துகள் பல.

said...

3 விடைகள் மட்டும் உடனே தெரிந்தது..அப்பறம் திரும்பவும் புதிரைப்படிக்க மறந்துட்டேன்.. :)

said...

//10. இந்நாட்டில் வடமொழியா என்று கேட்கலாமோ (4)
இந்தியா - வடமொழியா என்று கேட்பதை தமிழில் 'இந்தி'யா எனக் கேட்கலாம். இந்தியா என்பது ஒரு நாடு. //


அப்படியா ? இந்தியாங்கறது ஜார்ஜ் புஷோட நாய்க்குட்டி இல்லையா?

said...

10. இந்நாட்டில் வடமொழியா என்று கேட்கலாமோ (4)
இந்தியா - வடமொழியா என்று கேட்பதை தமிழில் 'இந்தி'யா எனக் கேட்கலாம். இந்தியா என்பது ஒரு நாடு. //


இதெல்லாம் ஓவரா தெரியல ?

said...

கொத்ஸ்,


////கொடை என்றால் தியாகம். அதன் தலையை எடுத்தால் யாகம். அதாவது வேள்வி..//

அர்த்தம் புதுசா இருக்கே??? ம்ம்ம்ம்ம்??? சரியா வரலையோனு ஒரு எண்ணம்.

//
அமாம். அர்த்தத்துல மிஸ் ஆவுது. இருந்தாலும் நல்ல முயற்சி!!;-)

ஒரு விதத்தில் பாதி குரு விஜயம் செய்வது (3) - இந்தக் கேள்விக்கு, பதில் யோசிச்சுகிட்டு இருந்தப்போ, கடைசி எழுத்து "கை"ன்னு முடிவாயிருச்சு. குறிப்பில் 'குரு விஜயம்' மட்டும் கண்ணை உறுத்திக் கொண்டிருந்தது. ஒரு வேளை குருவி விஜய் என்று இருக்குமோ இன்று யோசித்தபோது "மொக்கை" என்ற விடையே மூளையை ஆக்ரமித்து வேறு விதமாய் யோசிக்கவிடாமல் செய்தது!;-)

அடுத்தாப்புல இந்த மாதிரி புதிர் எப்ப போடுவீங்க? ஆர்வமாய்ட்டேன்!!;-)

said...

செம கலக்கல் கொத்ஸ்! ரொம்ப சுவாரசியமா இருந்தது!! தொடர்ந்து நடத்துங்க!! வாழ்த்துக்கள்!!

said...

//கொத்ஸ்,


////கொடை என்றால் தியாகம். அதன் தலையை எடுத்தால் யாகம். அதாவது வேள்வி..//

அர்த்தம் புதுசா இருக்கே??? ம்ம்ம்ம்ம்??? சரியா வரலையோனு ஒரு எண்ணம்.

//
அமாம். அர்த்தத்துல மிஸ் ஆவுது. இருந்தாலும் நல்ல முயற்சி!!;-)//

illaiye, sariyana pathilam. கொடைக்குத் தியாகம் என்றும் ஒரு அர்த்தம் வருது. கொத்து, அந்த அர்த்தத்தை வச்சு நல்லா விளையாடிட்டார், நான் மூளையைக் கசக்கிட்டு இருந்தேன்.



கொடை koṭai
, n. < கொடு-. [K. kōḍu, koḍage.] 1. Giving away, as a gift; donation; தியாகம். இல்லான் கொடையே கொடைப்பயன் (நாலடி, 65). 2. (Puṟap.) Theme of a king distributing liberally to the poor the enemy's cattle captured by him; கைக்கொண்ட நிரையை இரவலர்க்கு வரையாது கொடுக்கும் புறத்துறை. உண்டாட்டுக் கொடையென (தொல். பொ. 58). 3. Three days' festival of a village deity, dist. fr. paṭukkai; கிராமதேவதைக்கு மூன்றுநாள் செய்யுந் திருவிழா. (G. Tn. D. I, 117.) 4. Round abuse; வசவு. அவள் கொடுத்த கொடை ஏழுசன்மத்துக்குப் போதும். 5. Round blows; அடி.

said...

//என்ன உளறல் இது என்று உம்மை மனதில் திட்டிக் கொண்டிருந்தேன்.//

வாஞ்சி,

இந்த மாதிரி கொத்தனார் உங்களை நிறைய வாட்டி திட்டினாராம். மனசுக்குள்ளத்தான். :-))

அவர் உங்களைப்பாத்துதான் இந்த மாதிரி புதிர் தயாரிக்க துவங்கினதா சொல்லியிருக்கார்.

இந்த மாதிரியான தளராத, முழுமையான, புதிய முயற்சிகளுக்கும், அதனை ஊக்குவிப்பதற்கும் உங்களுக்குத் தனியாக ஒரு ஸ்பெஷல் நன்றி.

said...

கொத்தனார், அருமையான போட்டி இது, முதல் முறையா விளையாடினேன். நேரம் கிடைக்கும்போது இன்னும் ஒண்ணு போடுங்க‌

said...

//இம்மாம் மேட்டரூ இருக்கா!

இதுல யோஜிக்க சரி சரி அப்புறம் அடுத்தது எப்ப? நாங்க ரெடி !//

ஆயில் இது எல்லாமே வாஞ்சி தந்த குறிப்பில் இருக்கறதுதானே! நான் என்ன புதுசா சொல்லிட்டேன். சரி போகட்டும் அடுத்த முறை நீங்கதான் ஓப்பனிங் பேட்ஸ்மேன்.

said...

// பொழுதோட விடை சொன்னதுக்கு நன்றி.//

ரீச்சர், வந்து கலந்துக்கிட்டு சிறப்பித்ததற்கு ரொம்ப நன்னி.

said...

//அர்த்தம் புதுசா இருக்கே??? ம்ம்ம்ம்ம்??? சரியா வரலையோனு ஒரு எண்ணம்.//

கீதாம்மா, இதைப் பாருங்க. நம்ம அகரமுதலி இதைத்தான் சொல்லுது.

தியாகம் (p. 518) [ tiyākam ] {*}, s. gift, donation, கொடை; 2. liberality, bounty, உதாரம்; 3. leaving, departing from, desertion, abandonment, விடுதல்.

தியாகம் கொடுக்க, to give presents.

தியாகம்வாங்க, to receive presents.

தியாகன், தியாகி, a liberal donor, a charitable man.

பிராணத்தியாகம், the giving up of life.

நீங்களே பின்னாடி சொல்லி இருக்கீங்களே!! ஓக்கே ஓக்கே!!

said...

//இலவசக்கொத்தனார் said...

வாங்க வடகரை வேலன்

இவ 1,2,4,5,7,9,10,12,13,14 - சரி
மேகி 1,2,3,4,6,8,9,10,11,12 - சரி

சபாஷ்! முதல் முயற்சியிலேயே எல்லாம் போட்டாச்சு போல இருக்கே!!

வாழ்த்துகள்!!//


வடகரை வேலன். மன்னிச்சுடுங்க. உங்களை லிஸ்டில் இருந்து விட்டுடேன். ஆனா உங்க பின்னூட்டத்தைப் பார்த்த பின் சேர்த்தாச்சு.

பொதுவா இந்த மாதிரி தப்பெல்லாம் செய்ய மாட்டேன். இந்த முறை ரொம்ப வேலை அதிகமாயிடுச்சு. மீண்டும் மன்னிச்சிடுங்க தல.

said...

//வாஞ்சியின் லிங்க் கொடுத்தற்கு நன்றி. வேலை அதிகம். 1 ac மட்டும் பதில் சொல்ல முடியவில்லை. அது மட்டும்தான் அதிகம் யோசிக்க வைத்தது.

தொடரவும்.

-அரசு//

வாங்க அரசு. ஆமாம். 1 இவ நிறையா பேரை ரொம்ப சுத்தி விட்டது போல! :))

said...

//யாருக்கு தங்கம், யாருக்கு வெள்ளி யாருக்கு வெண்கலம் அதை சொல்லுங்க சார்//

நாங்க என்ன ஒலிம்பிக்ஸா நடத்தறோம்? இதெல்லாம் ஒரு பொழுது போக்கு ஐயா!!

said...

//நல்ல முயற்சி. ஆங்கிலப் புதிர்களுக்கு இணையாக உள்ளது. 'இலை' பற்றி எழுதியது நிறைய பதிவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். பாதி தான் போட முடிந்தது. வாரமொருமுறை சாத்தியமா?

அனுஜன்யா//

வாங்க அனுஜன்யா, போட்ட வரை வந்து சொல்லி இருக்கலாமே!! வாரமொருமுறை எல்லாம் சான்ஸே இல்லை. மாதம் ஒரு முறை முயற்சி பண்ணறேன்.

said...

//good show koths..

make it a regular feature//

வாங்க பீட்டர் சுரேஷ்! சாரி பெனாத்தல் சுரேஷ்!!

உங்களை ரொம்ப மிஸ் பண்ணினேன். அடுத்த முறை கட்டதை உங்க ப்ளாஷில் போட்டுக் கலக்கலாம்.

said...

//வம்பிலே மாட்டியவன் வாழ்த்துகிறேன் என்றென்றும்
தம்பிநீ நற்புதிரைத் தா//

வெண்பாவாவே எழுத்திட்டீங்களா? அப்போ நானும்

உம்புதிர் பார்த்தே உருவான தென்பதால்
வம்போப் புகழோ உமக்கு!

அப்படின்னு சொல்லி எல்லாத்துக்கும் உங்களையே கை காமிச்சுட்டு நிக்கறேன்!! :))

said...

//முதலில் தயக்கமாகத்தான் ஆரம்பித்தேன். இந்த மாதிரி குறுக்கெழுத்துப் போட கொஞ்சம் பயிற்சி தேவை. உதா: 'தலையெடுக்க' என்றால் முதல் எழுத்தை கழிக்க வேண்டும் என்று புரிந்து கொள்வது.//

ஆமாம் ஸ்ரீதர். அதுவும் ஒவ்வொரு புதிர் போடுபவர்களுக்கும் இப்படி சில செல்ல டெக்னிக்ஸ் இருக்கும். அதெல்லாம் போட போடத்தான் தெரியும்.

//முக்கியமானது ஒன்று தெரிந்து கொண்டேன். இம்மாதிரி குறுக்கெழுத்தில் குறிப்புகளில் இருக்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் விடைக்கும் தொடர்பு இருக்கிறது என்று.//

தேவையில்லாத வார்த்தைகளே குறிப்பில் இருக்கக்கூடாது. அப்படிப்பட்ட குறிப்புதான் சிறந்த குறிப்பு எனச் சொல்வார்கள்.

//தொடர்ந்து இம்மாதிரி குறுக்கெழுத்து போட்டி நடத்துங்கள்.

உங்கள் அயராத முயற்சிக்கு வாழ்த்துகள் பல.//

செய்யலாம். ஊக்கத்திற்கு நன்றி.

said...

//3 விடைகள் மட்டும் உடனே தெரிந்தது..அப்பறம் திரும்பவும் புதிரைப்படிக்க மறந்துட்டேன்.. :)//

அக்கா, தெரிஞ்ச விடைகளைப் போட்டு இருக்க வேண்டாமா?

இப்படி எல்லாம் மறந்தா என்ன தண்டனை தெரியுமா?

said...

//அப்படியா ? இந்தியாங்கறது ஜார்ஜ் புஷோட நாய்க்குட்டி இல்லையா?//

யோவ் பதிலைப் போடுன்னா அங்க ஒண்ணும் காணும். இந்த நக்கலுக்கு மட்டும் குறைச்சலே இல்லை.

அது கே ஆர் எஸ் ஸோட கேர்ள் பிரண்டுக்காக போட்டதுன்னு வெச்சுக்குங்க!

said...

//இதெல்லாம் ஓவரா தெரியல ?//

மத்த எல்லாத்துக்கும் விளக்கம் குடுத்ததுனால இதுக்கும் குடுத்தால்தான் முழுமையாகும் என்பதற்காக போட்டேன்.

ரொம்ப ஓட்டாதீங்கப்பா!

said...

//அமாம். அர்த்தத்துல மிஸ் ஆவுது. இருந்தாலும் நல்ல முயற்சி!!;-)//

இல்லை. என் விளக்கத்தைப் பாருங்க!!

//மொக்கை" என்ற விடையே மூளையை ஆக்ரமித்து வேறு விதமாய் யோசிக்கவிடாமல் செய்தது!;-)//

:))

//அடுத்தாப்புல இந்த மாதிரி புதிர் எப்ப போடுவீங்க? ஆர்வமாய்ட்டேன்!!;-)//

சீக்கிரமாவே......... இல்லை!! கொஞ்ச நாள் போகட்டும். அதுக்குள்ள நீங்க ஒண்ணு போடுங்க!

said...

//செம கலக்கல் கொத்ஸ்! ரொம்ப சுவாரசியமா இருந்தது!! தொடர்ந்து நடத்துங்க!! வாழ்த்துக்கள்!!//

டேங்க்ஸ் தல! :))

said...

//illaiye, sariyana pathilam. கொடைக்குத் தியாகம் என்றும் ஒரு அர்த்தம் வருது. கொத்து, அந்த அர்த்தத்தை வச்சு நல்லா விளையாடிட்டார், நான் மூளையைக் கசக்கிட்டு இருந்தேன்.//

அதானே!! நான் பதில் சொல்லறதுக்கு முன்னாடி நீங்களே சொல்லிட்டீங்க!! நன்னி!! :))

said...

//இந்த மாதிரி கொத்தனார் உங்களை நிறைய வாட்டி திட்டினாராம். மனசுக்குள்ளத்தான். :-))//

வாங்க நாரதரே, ஐ மீன், ஸ்ரீதர்!!

//இந்த மாதிரியான தளராத, முழுமையான, புதிய முயற்சிகளுக்கும், அதனை ஊக்குவிப்பதற்கும் உங்களுக்குத் தனியாக ஒரு ஸ்பெஷல் நன்றி.//

ஆமாம் அவரோட நேரத்தை நிறையா சாப்பிட்டு இருக்கேன்!! :)

said...

//கொத்தனார், அருமையான போட்டி இது, முதல் முறையா விளையாடினேன். நேரம் கிடைக்கும்போது இன்னும் ஒண்ணு போடுங்க‌//

சின்ன அம்மிணி, கேட்டுட்டீங்க இல்ல! போட்டுடலாம்!!

said...

கொதஸ்
நான்றாக இருந்தது ஆடை. அடுத்த முறை சீக்கிரமே வர பார்க்கிறேன்..

இந்த முறை ...
Me the La(o)st !

said...

முதல்ல எனக்கு ஒண்ணும் தலைகால் புரியல. வாஞ்சி தென்றல்ல போடற குறுக்கெழுத்துப் போட்டி பார்த்துருக்கேன். விட்டுடுவேன் சாய்ஸ்ல... எதுக்குடா இவ்வளவு கஷ்டப்படுத்திக்கிறாருன்ன்னு (மூக்கு முகத்துல இருக்கும் போது, ஹிஹி, கைய எடுத்துத் தலையச் சுத்தி...) !

போட்டின்னா நாங்க விட்டுடுவோமா? அப்புறம் கடைசியிலிருந்து போடத் தொடங்கினேன். அப்ப ஒண்ணொண்ணா போட்டதும் நல்லா இருந்தது. தியாகம்... அது கஷ்டமாத் தான் இருந்தது.. நேரமே இல்லை, அப்பப்ப சமைச்சிட்டே எட்டிப் பார்க்கறதுன்னு முயற்சி செய்துட்டு விட்டாச்சு.

நீங்க அடிக்கடி குறுக்கெழுத்துப் புதிர் செய்யலாம்.

said...

கொத்ஸ்,

மொதல்ல கொஞ்சம் போட்டுட்டு அது சரியான்னு தெரிஞ்சிகிட்டு மேற்கொண்டு கண்டுபிடிக்கலாம்னு நினச்சேன்.. அப்புரம் இந்த பக்கம் வரவே முடியல. :-(

புதிர் நல்லா இருந்தது. இந்த மாதிரி தொடர்ந்து போடவும்.

இது மட்டும் இன்னும் புரியல..:-(

//14. அறுக்க ரம்பம் மட்டும் போதுமா? இதுவும் வேண்டாமா? (3)
கரம் - கரம் என்ற சொல் குறிப்பின் ஒரு பகுதியாகவே இருக்கிறதே! //
????

அப்புரம் உங்க குறிப்புகள் நல்லா இருக்கு. கண்டுபிடிச்ச சில பதில்கள்லகூட முழு குறிப்பும் நான் சரியா புரிஞ்ச்சிக்கலன்னு இப்பதான் தெரியுது.

உதா:
காலை - நண்பகலுக்கு முன்பான நேரம் காலை.
இது கண்டுபிடிச்சது.

//ஒருவரை வணங்க அவர் காலைத்தானே பிடிக்க வேண்டும். //
இத யோசிக்கவே இல்ல..:-)

//செல்வம் என்றால் திரு.//
இதுவும் கண்டுபிடிக்கல... :-)

said...

//கொதஸ்
நான்றாக இருந்தது ஆடை. அடுத்த முறை சீக்கிரமே வர பார்க்கிறேன்..

இந்த முறை ...
Me the La(o)st !//

சின்னவன் அண்ணா, ரொம்ப அவசரம் போல! lostஆ lastஆ தெரியலை. ஆனா ரொம்ப fast! :))

அடுத்த முறை ஆட்டத்துக்குக் கட்டாயம் வந்திடுங்க!

said...

//முதல்ல எனக்கு ஒண்ணும் தலைகால் புரியல. வாஞ்சி தென்றல்ல போடற குறுக்கெழுத்துப் போட்டி பார்த்துருக்கேன். விட்டுடுவேன் சாய்ஸ்ல... எதுக்குடா இவ்வளவு கஷ்டப்படுத்திக்கிறாருன்ன்னு (மூக்கு முகத்துல இருக்கும் போது, ஹிஹி, கைய எடுத்துத் தலையச் சுத்தி...) !//

முதலில் அப்படித்தான் இருக்கும். ஆனா சித்திரமும் கைப்பழக்கம் இல்லையா! :))

//போட்டின்னா நாங்க விட்டுடுவோமா? அப்புறம் கடைசியிலிருந்து போடத் தொடங்கினேன். அப்ப ஒண்ணொண்ணா போட்டதும் நல்லா இருந்தது. தியாகம்... அது கஷ்டமாத் தான் இருந்தது.. நேரமே இல்லை, அப்பப்ப சமைச்சிட்டே எட்டிப் பார்க்கறதுன்னு முயற்சி செய்துட்டு விட்டாச்சு.//

அப்புறம் ரங்கமணி நிறையா உதவி பண்ணி இருப்பாரே! கிச்சனிலும் சரி புதிரிலும் சரி!! அது பத்தி ஒண்ணுமே சொல்லலை!! :))

//நீங்க அடிக்கடி குறுக்கெழுத்துப் புதிர் செய்யலாம்.//

அப்பப்போ செய்யலாம். அடிக்கடி எல்லாம் ரொம்ப ரூஊஊஊ மச்சு! :))

said...

//மொதல்ல கொஞ்சம் போட்டுட்டு அது சரியான்னு தெரிஞ்சிகிட்டு மேற்கொண்டு கண்டுபிடிக்கலாம்னு நினச்சேன்.. அப்புரம் இந்த பக்கம் வரவே முடியல. :-(//

அப்படி எல்லாம் வராம இருக்கலாமா? அப்புறம் கொஞ்சம் போட்டுக்கிட்டா எல்லாம் ரெண்டு ரெண்டாத் தெரியுமாமே. அப்புறம் எப்படி சரியாத் தெரியறது?! :))

//புதிர் நல்லா இருந்தது. இந்த மாதிரி தொடர்ந்து போடவும்.//

எல்லாரும் சொல்லிட்டீங்க. செய்யலாம்.

//இது மட்டும் இன்னும் புரியல..:-(

//14. அறுக்க ரம்பம் மட்டும் போதுமா? இதுவும் வேண்டாமா? (3)
கரம் - கரம் என்ற சொல் குறிப்பின் ஒரு பகுதியாகவே இருக்கிறதே! //
????//

அதாவதுங்க, வெறும் ரம்பம் இருந்தா மட்டும் போதுமா? அறுக்கக் கை வேண்டாமா? அதனாலதான் விடை கரம். அந்த கரம் என்பது குறிப்பினுள்ளேயே இருக்கு பாருங்க. அறுக்க ரம்பம் எனச் சொல்லும் பொழுது! இப்போ புரியுதா?

//அப்புரம் உங்க குறிப்புகள் நல்லா இருக்கு. கண்டுபிடிச்ச சில பதில்கள்லகூட முழு குறிப்பும் நான் சரியா புரிஞ்ச்சிக்கலன்னு இப்பதான் தெரியுது.

உதா:
காலை - நண்பகலுக்கு முன்பான நேரம் காலை.
இது கண்டுபிடிச்சது.

//ஒருவரை வணங்க அவர் காலைத்தானே பிடிக்க வேண்டும். //
இத யோசிக்கவே இல்ல..:-)

//செல்வம் என்றால் திரு.//
இதுவும் கண்டுபிடிக்கல... :-)//

அதாவதுங்க, ஒவ்வொரு குறிப்பிலும் இரு வகையில் விடை வழங்கப் பெற்றிருக்க வேண்டும். அது மட்டுமில்லை குறிப்பின் ஒவ்வொரு வார்த்தையும் அந்த விடையைக் கண்டுபிடிக்கத் தேவையானதாக இருத்தல் வேண்டும். அதான் இந்த விளையாட்டின் சுவாரசியமே!

said...

////14. அறுக்க ரம்பம் மட்டும் போதுமா? இதுவும் வேண்டாமா? (3)//

நான்கூட மொதல்லெ இதுக்கு 'பதிவு'ன்னு போட நினைச்சேன்.:-) ச்சீச்சீ இதுவா இருக்காதுன்னு மரம் னு எழுதுனேன். அதுவும் சரியில்லைன்னதும்தான் 'கரம்' ஆச்சு:-)

said...

ரீச்சர், அந்த குறிப்புக்குப் பதிவுன்னு போட நினைச்சீங்களா? இதெல்லாம் உங்களுக்கே ரூ மச்சா தெரியலை! :))

said...

இப்பப் புரிஞ்சு போச்சு புதிர்.
கொத்ஸ் நல்ல அழகா யோசித்திருக்கீங்க.

இந்த எல்லையில்லா வர்த்தைக்கு ஒரு பக்கம் தான் ,அதாவது முடிவு எழுத்து மத்திரம்தான் என்று நினைத்தேன்.இரண்டு எழுத்துக்களுமே ஏடுத்துவிடணும்னூ தோன்றவில்லை. உங்கள் விளக்கத்தைப் பார்த்ததும் புரிந்தது.

said...

//இப்பப் புரிஞ்சு போச்சு புதிர்.
கொத்ஸ் நல்ல அழகா யோசித்திருக்கீங்க.//

வல்லிம்மா, இப்போ புரிஞ்சாச்சு இல்ல! அடுத்த புதிரில் நூத்துக்கு நூறு எடுக்கணும்!! :))

said...

இலவசமா "கொத்தனார் நோட்ஸ்" போட்டுடுங்க.

இல்லையென்றால், பிட் நோட்டீஸ் அடிக்கப்படலாம்; கூகிள்குரூப் ஏற்படுத்தப்படலாம் (ஆட்டோ வரும்ங்கறதை மாத்தி!)

said...

கெ.பி.

கொத்தனார் நோட்ஸ்தான் ஏற்கனவே வாஞ்சி போட்டு இருக்காரே. நாமும் போன பதிவிலேயே சுட்டி எல்லாம் குடுத்தாச்சே.

அப்புறம் எதுக்கு தானிப் படை பத்தி எல்லாம் பேசிக்கிட்டு! :)

said...

//துளசி கோபால் said...
////14. அறுக்க ரம்பம் மட்டும் போதுமா? இதுவும் வேண்டாமா? (3)//

நான்கூட மொதல்லெ இதுக்கு 'பதிவு'ன்னு போட நினைச்சேன்.:-) //

:))))))

அப்ப இங்கதான் 50-ஆ? சொல்லவேயில்ல!

said...

ரொம்ப நேரமா 49ல் இருந்ததேன்னு நினைச்சேன். நல்ல வேளை வந்து 50 அடிச்சீரு. நன்னி!

said...

விடைகளை எல்லாம் படிக்கச் சுவையாக இருக்கின்றன கொத்ஸ். நல்ல பணி (Good Job) :-)

அடுத்த புதிர் போட்டாச்சுன்னு தெரியும். அதுக்கும் விடை சொன்ன பிறகு வர்றேன். :-)

said...

//விடைகளை எல்லாம் படிக்கச் சுவையாக இருக்கின்றன கொத்ஸ். நல்ல பணி (Good Job) :-)//

என்ன குமரன் நம்ம முன்ன சொன்னது மறந்து போச்சா? நல்ல வேலையை மேலே வைக்கவும்!! இதுதானே நாம சொல்வது. :))


//அடுத்த புதிர் போட்டாச்சுன்னு தெரியும். அதுக்கும் விடை சொன்ன பிறகு வர்றேன். :-)//

இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயமே இல்லை!! கொஞ்சமாவது முயற்சி செஞ்சுப் பார்க்க வேண்டாமா?!! :((