Wednesday, December 24, 2008

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - டிசம்பர் 2008

அனைவருக்கும் விடுமுறை வாழ்த்துகள்! இந்த முறை குறுக்கெழுத்துப் புதிர் கொஞ்சம் கடினமாகவே இருக்க வேண்டும் என முனைந்தேன். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டேன் என்பது உங்கள் பின்னூட்டங்களைப் பார்க்கும் பொழுதே தெரிந்தது. வழக்கத்தை விட குறைந்த அளவு பங்கேற்பாளர்களால்தான் அனைத்து விடைகளையும் கண்டுபிடிக்க முடிந்தது. கொஞ்சம் முனைந்திருந்தால் இன்னும் பலரும் முடித்து இருக்கலாம். இந்தப் புதிரின் அனைத்து விடைகளையும் சரியாக அளித்தவர்கள்

  1. பெனாத்தல் சுரேஷ்
  2. ஸ்ரீதர் நாராயணன்
  3. யோசிப்பவர்
  4. அரசு
  5. வடகரை வேலன்
  6. மிஸஸ் யோசிப்பவர்
  7. சின்ன அம்மிணி
  8. திவா
  9. ஏஸ்
  10. மஞ்சுளா ராஜாராமன்
  11. பாச மலர்
அனைவருக்கும் வாழ்த்துகள்! அனைவரின் மதிப்பெண்களை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.

இனி விடைகளைப் பார்க்கலாமா?


இடமிருந்து வலம்

3. மிளகாய் அதிகம் எனச் சொல்லும் ஆளுகை (5)
அதிகாரம்
- மிளகாய் அதிகமானால் அதி காரம். ஆளுகை என்றால் அதிகாரம். பங்கேற்றவர்கள் அனைவரும் சரியான பதில் சொன்ன குறிப்பு என்பதால் மேலும் விளக்கம் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.

6. புகைவண்டியில் ஏற அதன் கீழா செல்ல வேண்டும்? (4)
ரயிலடி
- பெனாத்தல் விடை தமிழ் வார்த்தையா என்று கூட கேட்டுவிட்டார். இருந்தாலும் பரவாயில்லை எனப் போட்ட குறிப்பு இது. ரயில்வே ஸ்டேஷனை ரயிலடி என்றே பலரும் குறிப்பிடுவர். புகைவண்டியின் கீழே என்பதையும் ரயிலடி எனக் குறிப்பிட முடியும் அல்லவா?

7. அவசரக்குடுக்கை பார்த்த பொருள் (4)
சரக்கு
- அவசரக்குடுக்கை என்ற சொல்லின் உள்ளேயே சரக்கு என்ற சொல் இருக்கிறது. அதனைக் குறிப்பிடும் வகையில்தான் பார்த்த என குறிப்பு வருகிறது. சரக்கு என்பதற்கு விளக்கமாய் பொருள் என்பதும் குறிப்பில் தரப்பட்டிருக்கிறது.

8. குதிரையைக் குளிப்பாட்டினால் தூய்மையாகுமே (6)
பரிசுத்தம்
- பலரும் சரியாகப் போட்ட விடைதான். பரி என்றால் குதிரை. குதிரையைக் குளிப்பாட்டினால் அது சுத்தமாகும். ஆக பரிசுத்தம். இதற்கு விளக்கமாக தூய்மை என்பதும் குறிப்பில் வருகிறது.

13. அரிசி வகையைத் தொடங்காமல் உதித்து ஈட்டி வா (6)
சம்பாதித்து
- ஈட்டி என்பதற்கு சம்பாதித்து என்பது பொருள். சம்பா என்பது அரிசி வகை எனவும் தொடங்காமல் உதித்து என்பது தித்து என்ற எழுத்துக்களையும் தருகிறது. அனைவரும் சரியான பதில் சொல்லிய மற்றொரு குறிப்பு இது.

14. யானை மேல் இருக்க தாயே என ஸ்வரத்தோடு அழை (4)
அம்பாரி
- யானையின் மேல் அமரப் பயன்படும் இருக்கையின் பெயர் அம்பாரி. அம்பா என்றால் தாயே எனப் பொருள். பெரும்பாலும் பாடல்களில் வரும். இதனோடு ஏழு ஸ்வரங்களில் ஒன்றான ’ரி’யைச் சேர்த்தால் அம்பாரி என்ற சொல் கிட்டும்.

15. திறந்த முதலோடு மூடு என அடம் பிடித்து இரு (4)
சாதித்து
- சாதிப்பது என்றால் அடம் பிடிப்பது. சாதித்து என்ற சொல்லுக்குப் பொருளாக அடம் பிடித்து என்று குறிப்பு தந்திருக்கிறேன். மூடு என்பதற்கு சாத்து என்று சொல்லுவோம். அதனோடு திறந்த என்ற சொல்லின் முதலான தி என்ற எழுத்தைச் சேர்த்துக் கொண்டால் சாதித்து என்ற சொல் கிடைக்கும்.

16. அனேகமாகப் பார்த்தனை திடுக்கென முடிவில்லாமல் நோக்கிடு (5)
பார்த்திடு
- நோக்கிடு என்றால் பார்த்திடு. அனேகமாகப் பார்த்தனை என்று சொல்லும் பொழுது பார்த்தனை என்ற சொல்லின் பெரும்பாலான எழுத்துக்களைக் கொண்டு என புரிந்து கொள்ள வேண்டும். இங்கு ’பார்த்’ என்ற எழுத்துக்கள் விடையின் முதல் பகுதியாக வருகின்றன. இவற்றோடு திடுக்கென என்ற சொல் முடிவில்லாமல் போக, அதாவது திடு என்ற எழுத்துக்கள் சேர பார்த்திடு என்ற விடை கிடைக்கிறது.

மேலிருந்து கீழ்

1. அப்பா பம்பரத்தின் தலையெடுத்துக் கலைத்த பெருமை (5)
பிரதாபம்
- பெரும்பாலானவர்கள் தவறு செய்த விடை இது. பரம்பரை என்றே பலரும் பதில் சொல்லி இருந்தார்கள். எப்படி என்பது எனக்குப் புரியவில்லை! அப்பா என்றால் பிதா. பம்பரத்தின் தலை எடுத்து என்றால் பம் என்ற எழுத்துக்கள் விலகி பரம் என்ற எழுத்துக்கள் கிடைக்கும். இவற்றைக் கலைத்தால் பெருமை என்ற பொருள் கொண்ட பிரதாபம் என்ற விடை கிடைக்கும்.

2. மாதொர் பாகன் கடிகாரச்சுற்றின் ஈசனா? (5)
வலஞ்சுழி
- கூகிளாண்டவரை வேண்டிக் கேட்டிருந்தால் விடை எளிதாகக் கிடைத்து இருக்கும்.

ஓத மார்கட லின்விட முண்டவன்
பூத நாயகன் பொற்கயி லைக்கிறை
மாதொர் பாகன் வலஞ்சுழி யீசனைப்
பாத மேத்தப் பறையுநம் பாவமே.
என்பது தேவாரம். திருவலஞ்சுழி என்ற ஊரில் இருக்கும் வலஞ்சுழிநாதரைக் குறித்துப் பாடிய பதிகம். Clockwise என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் கடிகாரச்சுற்றுக்குத் தமிழில் வலஞ்சுழி என்று சொல்வார்கள். இந்த குறிப்பிற்கு உதவிய பெனாத்தலாருக்கு ஒரு தனி நன்றி.

4. பெரும்பாலும் வம்சத்தினைக் கலைக்கத் தரும் திதி (4)
திவசம்
- எளிமையான குறிப்புதான். திவசம் என்றால் திதி. வம்சத்தினை என்ற வார்த்தையில் உள்ள பெரும்பான்மையான எழுத்துக்களை (வம்சதி) எடுத்துக் கலைத்தால் திவசம் என்ற விடை கிடைக்கும்.

5. பலதார சிக்கலைப் பார்த்துச் சுவைக்க வேண்டும் (4)
ரசிக்க
- குறிப்பினுள்ளே ரசிக்க என்ற சொல் ஒளிந்து கொண்டிருக்கிறது. சுவைக்க என்றால் ரசிக்க. எளிமையான குறிப்புதான்.

9. மனைவியின் காலொடித்த குணம் (3)
தரம்
- மனைவி என்ற சொல்லுக்கு ஒரு மாற்றுச் சொல் தாரம். இதில் தா என்ற எழுத்தைக் குறுக்கி த எனச் செய்தால் தரம் என்ற சொல் கிட்டும். இதைத்தான் காலொடித்து எனக் குறிப்பில் தந்திருந்தேன். தரம் என்றால் குணம். இதற்கு விடையைச் சொல்லாமல் எனக்கும் என் தங்கமணிக்கும் சிண்டு முடியப் பார்த்த சின்ன அம்மிணியை என்ன செய்யலாம்? :))

10. அரை தொடங்காமல் குத்திடு அடுத்தவரை தாக்கிடு (5)
பாதித்திடு
- அரை என்றால் பாதி. தொடங்காமல் குத்திடு என்பதில் இருந்து த்திடு என்ற எழுத்துக்கள் கிடைக்கின்றது. இரண்டையும் சேர்த்தால் பாதித்திடு என்ற விடை கிடைக்கும். பாதிப்பு என்றால் தாக்கம் என்பதால் பாதித்திடு என்பது தாக்கிடு என குறிப்பில் உணர்த்தப்பட்டது. ஆனால் அரை தொடங்காமல் என குறிப்பை பலரும் பிரித்து விடை போடமுடியாமல் கஷ்டப்பட்டார்கள்.

11. பயன்படுத்தா ஆடை தீபாவளித் தேவை (5)
புதுத்துணி
- எளிமையான குறிப்புதான். பயன்படுத்தா ஆடை என்பது புதுத்துணி. தீபாவளி பண்டிகைக்கு புதுத்துணியும் பட்டாசும்தானே தேவை. நாங்க எல்லாம் பொங்கலுக்குத்தான் புதுத்துணி எடுக்கறது என்று அரசியல் பேசும் இடம் இது இல்லை! :)

12. இட்லியைக் காதலிப்பதில் மன்னனோ? (4)
சாம்பார்
- இட்லிக்கு சரியான சைட் டிஷ் சாம்பார்தான். காதல் மன்னன் ஜெமினி கணேசனை சாம்பார் என்று சொல்பவர்கள் உண்டு. இது இரண்டையும் சேர்த்துதான் குறிப்பு உருவானது. வாஞ்சி அவர்கள் இதனை சரியாக அமையும்படி செய்தார். அவருக்கு நன்றி.

13. சராசரி பாதிப்பு ரெண்டில் ஒரு பங்கு (4)
சரிபாதி
- சராசரி, பாதிப்பு என்ற இரண்டு சொற்களிலும் ஒரு பங்கு எடுத்துக் கொண்டால் இரண்டில் ஒரு பங்கு என்ற பொருள் வரும் சரிபாதி கிடைக்கும்!


இந்த குறுக்கெழுத்து விளையாட்டு நல்லா இருக்குன்னு நினைக்கிறவங்க இங்க போய் பார்த்தீங்கன்னா வாஞ்சிநாதன் தென்றல் என்ற பத்திரிகையில் தரும் குறுக்கெழுத்துப் புதிர்களைக் காணலாம். அது மட்டும் இல்லாமல் அவர் நடத்தும் ஒரு கூகிள் குழுமத்தில் இணைய kurukkumnedukkum@googlegroups.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.

மீண்டும் என் நன்றிகள். மீண்டும் அடுத்த மாதம் ஒரு புதிய புதிருடன் சந்திக்கும் முன் வரும் மற்ற பதிவுகளையும் மறக்காமல் படியுங்கள்!

15 comments:

said...

அனைவருக்கும் கிருத்துமஸ் நல்வாழ்த்துகள் மற்றும் புதிய வருடம் நன்றாய் அமைய வாழ்த்துகள்!

said...

அட... என்னோட விடைகள் எல்லாமே சரியாதான் இருக்கு... :)

said...

அட போட்டிருந்தா மார்க் குடுத்திருப்போமில்ல! :)

said...

//இதற்கு விடையைச் சொல்லாமல் எனக்கும் என் தங்கமணிக்கும் சிண்டு முடியப் பார்த்த சின்ன அம்மிணியை என்ன செய்யலாம்? :))//

ஆஹா, அது மஞ்சுளா ராஜாராமன். நானில்லையாக்கும். :)

said...

//அரை தொடங்காமல் என குறிப்பை பலரும் பிரித்து விடை போடமுடியாமல் கஷ்டப்பட்டார்கள்.//

அட! அப்படியா? :-)) துணைக்கு ஆள் இருந்தா மகிழ்ச்சிதான்.

said...

//ஆஹா, அது மஞ்சுளா ராஜாராமன். நானில்லையாக்கும். :)//

அது மஞ்சுளாவா? என்ன செய்ய வம்புன்னா உடனே உங்க பெயர்தான் ஞாபகத்துக்கு வருது! :))

said...

//அட! அப்படியா? :-)) துணைக்கு ஆள் இருந்தா மகிழ்ச்சிதான்.//

அடுத்தவனும் என்னை மாதிரி தப்பு செஞ்சான் அப்படின்னு நினைச்சு மகிழ்ச்சியா? நல்லா இரும் சாமி!!

said...

வலஞ்சுழியில் பிள்ளையார்தான் பேமஸ்ன்னு கேள்விபட்டிருக்கேன். அதனால் போட்டபிறகு கூட உறுதியா நிக்க முடியலை. வஞ்சுழின்னு கூகிளினா அப்பவும் தேறலை. அப்புறமா மாதொர் பாகனை கூகிள் பண்ணி சரிதான்னு கண்டு பிடிச்சேன் (அப்பாடா!)
ஆனை இருக்கிற இடத்திலே பாகன் வேண்டியதுதானே! இருக்கட்டும்.

said...

திவா

எனக்கு வலஞ்சுழி விநாயகரைக் கூடத் தெரியாது. வாஞ்சி அண்ணாதான் சொன்னார்.

யானை, பாகன் எனக் கலக்கலாக விளையாடி இருக்கீரு!! :))

said...

ஆஹா... நானெல்லாம் சொந்தமா யோச்சிச்சித்தான் போடறேன்னு தெரிஞ்சுதா... கூகிளெல்லாம் பாக்கறதில்லேண்ணா..... :-))

said...

\\வலஞ்சுழி - கூகிளாண்டவரை வேண்டிக் கேட்டிருந்தால் விடை எளிதாகக் கிடைத்து இருக்கும். //

அதே அதே

-அரசு

said...

புத்தாண்டு நல்வாழ்த்துகள் கோத்ஸ்,. இந்தப் புதிரி நான் கலந்து கொள்ள முடியாமல் போச்சு,.
புத்தாண்டுப் புதிரில் பங்கெடுத்துக் கொள்ளுகிறேன்.

said...

பதிலை பார்த்தாதான் எனக்கு கேள்வியே புரியுது, அடுத்த முறை ஒன்னுக்காவது விடை சொல்ல முயற்சி செய்றேன்

said...

/////அட! அப்படியா? :-)) துணைக்கு ஆள் இருந்தா மகிழ்ச்சிதான்.//

அடுத்தவனும் என்னை மாதிரி தப்பு செஞ்சான் அப்படின்னு நினைச்சு மகிழ்ச்சியா? நல்லா இரும் சாமி!!///

அப்படி இல்லீங்க.அடுத்தவனும் என்னை மாதிரிதான் யோசிக்கிறான்..இலவசம் தான் "ஒரு மாதிரியா" யோசிக்கிறார் அப்படீன்னு அர்த்தம் :).

இப்படிக்கு அதே மாதிரி யோசிச்சு விடை போடாத இன்னொரு ஆள்

said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கொத்தனாரே!

(எப்பவும் போல லேட்டா தான் இந்த பக்கம் வந்துருக்கேன்.)