மீண்டும் ஒரு சொலவாடை. அதற்கான பொருள் என்ன என்ற வினா! இந்த முறை ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தது @rsgiri. ”கங்குமில்லே கரையுமில்லே” அப்டின்னு ஒரு சொல்வழக்கு இருக்கா? இல்லைன்னா சரியான வழக்கு + அர்த்தம் சொல்ல முடியுமா என்று ஆட்டத்தை ஆரம்பித்தார்.
@sanchemist என்ன சார் இப்பிடி கேட்டுட்டீங்க? வள்ளலார் பாடல்ல வருமே “ கங்கு கரை காணாத கடலே “ என வள்ளலாரை கூட்டிக் கொண்டு வந்து கங்கு கரை என்ற சொலவாடை பயன்படுத்தியதற்கு சான்று ஒன்று தந்தார். ஆனால் கங்கு கரை என்பதற்கு பொருள் வரவில்லை என்று விடாக் கண்டனானார் கிரி.
@kryes கங்கு என்றால் அளவு. கரை என்றால் ஆற்றின் கரை, கடற்கரை என்பதில் வருவது போல எல்லை என்ற பொருள் கொண்டதாகும். கங்கு கரை காணாத கடலே என்றால் அளவில்லாத, எந்த விதமான எல்லையும் இல்லாத கடலே என விளக்கினார். கங்குமில்ல கரையுமில்ல என்றால் அளவில்லாத எல்லையில்லாத என்ற பொருள் கொண்டதாகும் என்றார்.
கிரி என்ன நினைத்தாரோ தெரியாது. வேறு விளக்கங்கள் வேண்டும் என்று நின்றார்.
அவருக்காக ஒரு ஜாலி விளக்கம்.
கங்கு என்பதற்கு பனையோலை மரத்தில் சேரும் இடம் என்ற பொருளும் உண்டு. கரை என்பதைக் கரைதல் என்ற பொருளிலும் பயன்படுத்தலாம். கங்குமில்ல என்றால் பனையோலை மரத்தைப் பற்றும் இடமில்லை என்றுதானே அர்த்தம். இப்போ பனையோலைன்னு சொன்னா, அதை அப்படியே எடுத்துக்காம அதை ஒரு உவமையாக எடுத்துக்கணும். பற்றுதல் இல்லாமல் இருந்தால்ன்னு பொதுப்படுத்தலாம். கரையுமில்ல என்பதை கரை இல்லைன்னு சொல்ல வராம, செய்வோமுல்ல என்று மதுரை தமிழில் சொல்வது போல, கரையுமில்லன்னு எடுத்துக்கலாம்.
அப்போ பற்றற்று இருந்தா நம்ம ஜீவன், கடவுளோட சேர்ந்து ஒண்ணாகி நமக்கு முக்தி கிடைக்கும். இதைத்தான் கங்குமில்ல, கரையுமில்லன்னு எளிமையாச் சொல்லறாங்க!
இன்னும் ஒரு விதமாச் சொல்லலாமா?
இப்போ கங்குன்னா தீக்கங்கு.கரைன்னா அழைக்கிறது.கரைத்தனன் அப்படின்னு இலக்கியத்தில் வரும். அப்படின்னா அழைத்தான்னு அர்த்தம். இப்போ ஒருத்தர் பசியோட இருக்காரு. அவரு வீட்டுல சாப்பாட்டுக்கு வழி இல்லை. அடுப்படியில் பூனை தூங்குதுன்னு சொல்லற மாதிரி அவங்க வீட்டில் அடுப்பைப் பத்த வெச்சே நாளாச்சு. சரி நம்ம வீட்டில்தான் சாப்பிட வழியில்லை, நம்ம நிலமை தெரிஞ்ச எவனாவது கூப்பிட்டு ஒரு வேளை சாப்பாடு போடுவானான்னு பார்த்தா எவனும் கூப்பிடலை. திண்ணையில் உட்கார்ந்துக்கிட்டு இருந்தவரைப் பார்த்து தெருவில் போகும் ஒருத்தர், இன்னிக்கு என்ன செய்யறதா உத்தேசம்ன்னு கேட்கறாரு. அதுக்கு இவரு பதில் சொல்லறாரு - “கங்குமில்ல,கரையுமில்ல”!
வேற எப்படியாவது சொல்ல முடியுமா?
4 comments:
அடிச்ச ஐரீன் புயல்ல, இலவசம் வீட்ல கரண்ட் இல்ல போல.. திண்ணைல உக்காந்து “கங்குமில்ல, கரையுமில்ல” ன்னு சொல்லிட்டு இருக்காரோ?
கங்கு = அணை. கங்குகரையில்லைன்னா எல்லையுமில்ல அணையுமில்ல. இப்ப பொருள் வருதா?
நான் தான் ரொம்ம்ம்ப நாள் கழிச்சு வர்ரேன்னா நீங்களும் இடையில எழுதல போல?
கங்குகரை காணாத பகிர்வு!
இ.கொ,
என்ன ரொம்ப கரைய ஆரம்பிச்சுட்டிங்க, ஹி..ஹி.. கடல் சார் சொலவடைய கொத்த ஆரம்பிச்சிடிங்களே!
கங்கு= நீங்க சொன்னாப்போல தீக்கங்கு தான், கரை = கடற்கரை தான் , ஆனால் பொருள் வேற.
கடலில் கப்பலில் பயணம் செய்பவர்களுக்கு கரை எங்கே இருக்குனு காட்ட லைட் ஹவுஸ் இப்போ இருக்கு, அந்த காலத்தில ஒரு உயரமான மேடை போல அமைப்பில கட்டைய போட்டு எரிச்சு நெருப்பு உண்டாக்குவாங்க அதான் லைட் ஹவுஸ். மகாபலிபுரத்துக்கு போன பாருங்க அங்கே பல்லவர் கட்டிய விறகு அடுப்பு லைட் ஹவுஸ் பாறை மேல இன்னும் இருக்கு.
கங்கு கரை காணாத கடலேனு சொன்னா கடலில் இருந்து பார்த்தா கரைல எரியற கங்கு(தீ) கண்ணுக்கே தெரியாதாம் ,அவ்வவு பெரிய கடல், அளவு தெரியாம தூரமா போகக்கூடாதுனு கூட எடுத்துக்கலாம்.
இல்லைனா இறைவனின் எல்லை எதுனு கண்டுப்பிடிக்க முடியாதுனும் சொல்லலாம், ஒரு புராணக்கதை கூட இருக்கு சிவனின் உச்சி எது பாதம் எதுனு கண்டுபிடிக்க போட்டி போட்டதா.
மீனவர்கள் அவங்க சொலவடைல 'கங்குமில்ல கரையுமில்லனு' , கட்டுமரத்தில இருந்து கரைய தேடினா சொல்வாங்க என்னப்பா கரையே கண்ணுக்கு தெரியலை இன்னும் எவ்வளவு தூரம் போகனுமோனு.
லைட் ஹவுஸ் இருந்தாலும் இல்லைனாலும் இப்ப கூட கணவனுக்காக மீனவ பெண்கள் கரையில லாந்தர் வச்சுக்கிட்டு நிப்பாங்க.
இப்பவும் இலங்கைல கரையாளர்னு சொன்னா மீனவர்களில் ஒரு பிரிவினர் ஆவார். புலி த்தலைவர் பிரபாகரன் கரையாளர் சமூகம் எனவும் சொல்கிறார்கள். அதனால தானோ என்னவோ இலங்கை நேவி தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்லுது போல , இனத்வேஷம்!.
இது என்னோட வெர்ஷன் அவ்வளவு தான் ஆதாரத்துக்கு சுட்டி/சட்டிலாம் கேட்கப்படாது :-))
Post a Comment