Saturday, November 07, 2020
All in a day's work..
Thursday, October 22, 2020
வல்கனைசிங் வரலாறு!
சிங் என்று பெயர் இருந்தாலே சீக்கியர் என நினைக்கக்கூடாது. தென் தமிழகத்தில், குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி பகுதிகளிலும் சிங் என்ற பெயர் கொண்டவர்கள் உண்டு. ராஜா சிங், ஜெயசிங் என்ற பெயர்களைக் கொண்டவர்களை சர்வசதாரணமாகப் பார்க்க முடியும். இதையே ராஜாசிங் பாண்டியன் என மீசையை முறுக்கவும் வகை செய்து இருப்பார்கள். எனக்கே இந்த மாதிரி சர்தார்ஜி இல்லாத சிங் நண்பர்கள் உண்டு.
கல்லிடையில் இருந்து அம்பையில் உள்ள பள்ளிக்குச் செல்லும் பொழுது வல்கனைசிங் என்ற பெயர் கொண்ட கடைகள் இரண்டு தென்படும். எதேனும் வேலையாக நெல்லைக்குச் சென்றால், போகும் வழியிலும் சரி, அங்கும் சரி பல வல்கனைசிங் கடைகளைப் பார்க்கலாம். என்னடா இது, வல்கனைசிங் என்ற ஒத்தை ஆளு ஊர் ஊராகக் கடை திறந்து வைத்திருக்கிறாரே என எனக்கு ஆச்சரியமாக இருக்கும். வெகு நாட்களுக்குப்பின்தான் அது Vulcanizing எனப்படும் விதத்தில் டயர்களை சரிசெய்து தரும் கடைகள் அவை என அறிந்து கொண்டேன்.
இப்படி மூலம் தெரியாமல் மாறிப் போன சொற்கள் பெயர்கள் மீது ஒரு காதல் வரக் காரணமாக இருந்ததே இந்த நிகழ்வுதான் என நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் பார்ப்போம்.
Hamilton Bridge, அம்பட்டன் வாராவதி ஆகி மீண்டும் Barber's Bridge என்றான கதை எல்லாரும் அறிந்ததே. ஆனால் இது போன்ற பிழைகள் என்றாலே உணவகங்கள்தான் முதலில் நினைவுக்கு வரும். மஞ்சூரி என சீனாவிலேயே கேள்விப்பட்டிராத பெயரை சீன உணவுக்கு வைத்தவர்கள் நம் ஆட்கள். Vanilla என்பதை எந்தத் தயக்கமும் இல்லாமல் வெண்ணிலா என எழுதி, Vanilla Burfi என்பதை வெண்ணிலா பர்பி என்றாக்கி, அதையே மீண்டும் ஆங்கிலத்தில் Vennilla Purby என எழுதும் திறமை கொண்டவர்கள் நம் ஆட்கள். சுக்குணி என்றால் என்ன தெரியுமா? Zucchini என்ற காய்தான் பாவம் சுக்குணி என்றாகி அதையே ஆங்கிலத்தில் Zukkuni என்று எழுதப்பட்டதும் நடந்திருக்கிறது.
மேற்கத்தியப் பெயர்களை தம் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழும் பெற்றோர் அப்பெயர்களை ஆங்கிலத்தில் எழுதும் பொழுது செய்யும் கலவரம் பற்றித் தனிப் பதிவே எழுதலாம். Gorky, தன் பெயர் தமிழில் கார்க்கி ஆகி திரும்பவும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட விதங்களைக் கண்டால் வெறுத்தே போய் விடுவார். சமீபத்தில் அப்படித்தான் ஒரு Bernatsha-வை பார்க்க நேர்ந்தது. இந்த கதி மேற்கத்திய பெயர்களுக்கு மட்டும்தான் என நினைக்க வேண்டாம், வடவர் பெயரையும் இவ்விதமே வதைப்போம். நம் முதல் பிரதமர் Jawagarlal Negru. அவர் அப்பா Modilal. அரசியல் வேண்டாம் என்றால் கிரிக்கெட்டில் Ragul Dravid. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வளவு ஏன் நம் மயிலாப்பூர் கபாலி கூட Kapali என்றாகாமல் Kabali என்றானது சூப்பர்ஸ்டார் கைங்கர்யம்.
அது என்னவோ கொஞ்சம் அழுத்திச் சொல்ல வேண்டியதை எல்லாம் அழுத்தாமல் மென்மையாகச் சொல்வது நம் மொழிக்கே உரிய அழகுதான் போல. அதை அப்படியே ஆங்கிலத்தில் எழுதும் பொழுதுதான் கொஞ்சம் உதைக்கிறது. Boori, Gireedam, Kaligambal, Magarashtra, Sagunthala, Rasiga, நவராத்திரி சமயத்தில் Golu, எனப் பார்க்கும் போதும் கேட்கும் போதும் கொஞ்சம் பல் கூசத்தான் செய்கிறது. ஒரு துணிக்கடையில் Frogs என்ற பெயர்ப்பலகை பார்த்தது இதன் உச்சம். இவங்களை எல்லாம் உள்ள தள்ளி உட்கார வைக்கலாம்ன்னு Barole கேட்பாங்களேன்னு பயமா இருக்கு.
இந்தக் கொடுமை ஒரு பக்கம்ன்னா கர்நாடிக் பாட்டு பாடறவங்க கிட்ட தமிழ் மாட்டிக்கிட்டு முழிக்கிறது இன்னுமொரு விதக் கொடுமை. ஆஷை முகம் மறந்து போச்சேன்னு ஆரம்பிச்சா அந்தப் பாட்டைக் கேட்கும் ஆசையே இல்லாம ஆகிடும். பாசம் நேசம் எல்லாம் பாஷம் நேஷம்ன்னு ஷமத்தா பாடுவாங்க. இல்லை தளை விடும் ஆயர்கள்ன்னு பாட வேண்டிய பாசுரத்தை தலை விடு மாயர்கள்ன்னு பாடி அர்த்தத்தை அனர்த்தம் ஆக்கிடுவாங்க. திரைப்படப் பாடல்களில் லகர, ளகர, ழகர வித்தியாசங்கள் இல்லாமல் போனது தாண்டி இப்போ ந,ன,ண வித்தியாம் கூட இல்லாமப் பாடறதுதான் புதுமை.
குறங்குதமிழ் என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதி இருக்கும் கட்டுரையை இன்று படித்த பின் நினைவுக்கு வந்தவை இவை. ரொம்ப முக்கியமா,
பொதுவாகவே தமிழ்க்கல்வி தமிழகத்தில் இல்லாமலாகிவிட்டது. புதிய தலைமுறையினரில் சரளமாகத் தமிழ்படிப்பவர்கள், பெரிய எழுத்துப்பிழைகள் இல்லாமல் ஓரிரு பத்திகள் எழுதுபவர்கள் மிகமிக அரிதாகிவிட்டார்கள். ஆகவே நாளிதழ்கள்கூட அவர்களால் வாசிக்கப்படுவதில்லை.
எனச் சொல்லி இருக்கிறார். ஆனால் நாளிதழ்களில் மட்டும் தமிழ் நல்லாவா இருக்கு. எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும்தான் இருக்கு. நல்ல தமிழ் என்பது இல்லாமலேயே போய்விட்ட ஒன்றாகி நாளாச்சு. ஒருமை பன்மைன்னா வீசை என்ன விலைன்னு கேட்பாங்க. எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் இயக்குனர், நியாபகம், ஞாயம்ன்னு தப்பாவே எழுதுவாங்க. இந்த நாளிதழ்களையும் வாரயிதழ்களையும் படிக்காம இருந்தாத் தப்பே இல்லை ஜெயமோகன். இவங்க மட்டும்தான்னு இல்லை. பிரபல எழுத்தாளர்களிடம் கூட தமிழ் மாட்டிக்கிட்டு கதறிக்கிட்டுதான் இருக்கு. ஆனா சொன்னால் நீ யாரு சொல்ல என்ற மனோபாவம்தான் முதலில் வரும்.
ஆனா இதை எல்லாம் எடுத்துச் சொன்னா அதுக்குப் பேரு குத்தம் கண்டுபிடிக்கிறது. இப்படிச் செய்யறவங்களை கிண்டல் பண்ணுவது போகும் போக்கில் ரெண்டு சாத்து சாத்துவதும் எப்போதும் நடப்பதுதான். இதே கட்டுரையில் ஜெயமோகன் கூட "பிழைதிருத்தி பிழைசமைத்து உயிரைவாங்கும் பிராமணர்கூட்டம் ஒன்று இணையத்தில் உண்டு." என்றுதான் எழுதி இருக்கிறார். வேறெப்பொழுதும் சாதி பார்க்காத பெரியார் மண்ணும் இந்த சமயத்தில் மட்டும் மறக்காமல் சாதியை துணைக்குக் கூட்டிக் கொள்ளும். ஆனால் பண்ணும் தப்பை மட்டும் திருத்திக் கொள்ளவே கொள்ளாது.
போகட்டும். அதற்காக, கம்பரசர் என எழுதி இருப்பதைக் கிண்டல் பண்ணும் ஆசான் விளக்கமாக கம்ப்ரஸர் என எழுதாமல் கம்பிரஷர் என எழுதி இருப்பதை சொல்லிக் காட்டாமல் இருக்க முடியுமா என்ன!
Sunday, August 02, 2020
A Day of Dwijavanthi
Saturday, August 01, 2020
அகரம் இகரம் உகரம் ஆச்சு...
இந்தத் திரைப்பட விளம்பரம் இன்று பரவலாகப் பகிரப்படுகிறது. ஞேயங் என்ற சொல்லே இல்லை என்னும் கருத்தோடு.
ஞேயம் என்பது நேயம் என்ற சொல்லின் திரிபு எனச் சொல்கிறது அகராதி. நேயம் காத்தல் என்பதை இணைத்தால் நேயங்காத்தல் எனப் புணரும். அதே போல ஞேயங்காத்தல் என எழுத நினைத்திருந்தால் அங்கே இடைவெளி வந்திருக்கக்கூடாது. ஞேயங்காத்தல் எனச் சேர்த்தே எழுதி இருக்க வேண்டும்.
இன்று பலரும் ஞாபகம் என்பதை நியாபகம் என்றும், நியாயம் என்பதை ஞாயம் என்றும் எழுதி வருகின்றனர். இதையும் திரிபு என ஏற்றுக் கொள்ள வேண்டும் எனச் சொல்வார் உண்டு. ஆனால் திரிக்கத்தான் வேண்டுமா என்ற கேள்விக்குப் பதில் இல்லை.
இதே போல அய்யா, அவ்வை என்றெல்லாம் எழுதத் தொடங்கி இன்று அய்ந்து என்றெல்லாம் எழுதி ஐ ஔ என எழுதினாலே பாவம் என்ற அளவுக்குப் போய்விட்டது. கேட்டால் தொல்காப்பியரே சொல்லி இருக்கிறார். அகரம் இகரம் ஐகாரமாகும், அகரம் உகரம் ஔகாரமாகும், எனவே இப்படி எழுதுவது தவறில்லை. எழுத்துப் போலி எனத் தமிழில் உள்ளதே என்பர்.
ஆனால் ஐ என்றால் இரு மாத்திரை அது அய் எனும் பொழுது ஒன்றரை மாத்திரை ஆகிறதே ஐயா, அது எந்த விதத்தில் சரி எனக் கேட்டால் பதிலே இருக்காது.
என்னளவில் இந்தத் திரிபுகளைத் தவிர்த்து ஐயா, ஔவை, ஞாபகம், நியாயம் எனச் சரியாக எழுதுவதே நலம்.
இந்தத் திரைப்படப் பெயர் நேயம் காத்தல் செய் என இருந்திருந்தால் இந்தப் பேச்சு வந்திருக்காது என்பதால் ஒரு பரபரப்புக்கு ஞேயங்காத்தல் செய் என வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த இடைவெளி இருப்பதால் அது தவறே. கா என்றாலே காத்தல் செய். காத்தல் செய் என நீட்டி முழக்க வேண்டுமா?
முயல் என்பதை முயற்சி செய் என்பது போலத்தானே இதுவும்? முயல் எனத் தொடர்ந்து சொல்லி இருந்தால் முயற்சித்து என்ற கொடுமை வந்தே இருக்காது. இன்று விஷச்செடி போல மெத்தப் படித்தவர்களில் தொடங்கி அனைவரும் முயற்சித்து என எழுத முயல் எனப் புழங்காததும் காரணம்.
நல்ல தமிழில் எழுதுவோம். இந்த நலங்கெடல் தவிர்ப்போம்.
Thursday, July 09, 2020
கோபால கிருஷ்ண நாயர்!
இந்தப் பாடலை வேறு யாரோ பாடும் பொழுது வார்த்தைகளைத் தவறாகப் பிரித்து “தாயே யசோதே உந்த நாயர் குலத்துதித்த மாயன்” எனப் பாடிவிட்டதாகவும், விமர்சகர் சுப்புடு இப்படி கண்ணனை நாயர் ஆக்கிவிட்டீர்களே என எழுதியதாகவும் ஒரு கதை உண்டு. இன்று இதனைப் புதுக்கதை போல பேஸ்புக்கில் போட்டு வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டியில் விட்டுக் கொண்டான் ஐயப்பன். அங்கு ஒரு சிறு விளக்கம் தந்தாலும் இதனை முழுதாக விளக்கிச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பதிவு.
வெண்பா எழுதும் பொழுது எதிர்மறையாக எதையும் எழுதாதே, அது பலித்துவிடும் என்பார் ஹரியண்ணா. ஒரு கவிஞன் தன்னை வஞ்சனை செய்தவர்களைச் சபித்து பாடுவதை அறம் பாடுதல் என்பார்கள். தமிழில் எதைச் சொன்னாலும் அது தவறாது என்பதே அதற்குக் காரணம். அது போல தமிழில் என்ன சொன்னாலும் அது உண்மையாகிவிடும் என்பதற்கு இந்தப் பாடலே உதாரணம்.
இவர்கள் தவறென்று பழித்துச் சிரிப்பதைப் பார்க்குமுன்னர் ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் எழுதியதுதான் தவறென்று என்னிடம் வந்து கடிந்து கொண்ட நண்பர் ஒருவரும் உண்டு. அது எப்படி கண்ணனை ஆயர் குலத்தில் உதித்த எனச் சொல்லலாம்? அவன் ஆயர் குலத்திலா உதித்தான்? வசுதேவருக்கும் தேவகிக்கும் பிறந்த குழந்தை அல்லவா அவன்? அவன் எப்படி ஆயர்குலத்தில் உதித்தவனாக முடியும் என்பது அவர் கேள்வி. உதித்த என்றால் பிறந்த என்ற பொருள் உண்டு என்றாலும் அது மட்டுமே பொருள் இல்லை. தோன்றிய, உதயமாகிய என்றெல்லாமும் சொல்லலாம் என்பதால் ஆயர் குலத்தினர் இடையே தோன்றிய எனப் பொருள் கொண்டால் பாடலில் தவறில்லை என விளக்குவதற்குள் எனக்குப் போதும் போதும் என்றானது.
சரி, இன்றைய சர்ச்சைக்கு வருவோம். அப்படி என்ன மாற்றிப் பாடிவிட்டார்கள்? உந்த நாயர் குலத்துதித்த மாயன் எனப் பாடிவிட்டாரகள் அவ்வளவுதானே ஐயா. அதற்கேன் இவ்வளவு சினம்?
கிருஷ்ண என்றால் கருப்பு. ப்ரெஞ்சில் Noir என்றால் கருப்பு. உச்சரிப்பு அப்படியே இல்லை என்றாலும் அப்படி ஒரு குழப்பம் வந்திருக்கலாம் எனச் சப்பைக்கட்டு கட்ட முடியும். அதைச் செய்ய வேண்டாம்.
வெளிப்படையான பொருளைக் கொண்டால், நாயர் குலத்தில் உதித்திருக்கும் மாயன் என்பதில் இருந்து அந்தக்காலத்திலேயே சேர நாட்டிற்கும் தற்பொழுது மெக்ஸிகோ என அழைக்கப்படும் அந்த நாளைய மாயன் சாம்ராஜ்ஜியத்திற்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பு இருந்திருப்பதையும் கண்ணனே இவ்விரு பிரிவுகளின் கலப்பு என்பதையும் ஒரு பாடலின் வரி மூலம் நம்மை உணரச்செய்கிறார் கவிஞர்.
வேண்டுமென்றால் மாயர்கள் பிள்ளையார் வழிபாடு செய்திருப்பதையும், அங்கிருந்து புலம் பெயர்ந்தவர்கள் இங்கு காடு சூழ்ந்த இடங்களில் குடியேறியதால் முல்லை நிலக் கடவுளின் பெயரையையே தமிழில் மாயோன் என நம் வரலாற்றில் சுட்டி இருப்பதையும் பேசி மேலும் பல தரவுகள் தரலாம். கூடவே மாயக்கண்ணன் விஷ்ணுவின் அவதாரம். ஆனால் அந்த அவதாரத்திற்கு முன்னர் வந்தவர் பரசுராமர். அவர் தனது கோடாலியைக் கடலில் எறிந்து கேரள கர்நாடக நிலப்பரப்பை உண்டாக்கியதால் அங்குள்ள அனைவருக்கும் அவரே மூதாதையர் எனக் கொண்டு நாயரும் அவரே ராயரும் அவரே என்பதிலும் தவறில்லை.
நாயருக்கு விளக்கம் தருவது இருக்கட்டும் அதற்கு முன்னால் என்ன உந்த? யார் உந்த எதற்கு உந்த எனக் கேள்வி. அங்கேதான் தமிழின் அழகு வெளிப்படுகிறது. இவன் என்றால் இங்கே இருப்பவன், அவன் என்றால் அங்கே இருப்பவன். உவன் என்றால் அவனுக்கும் இவனுக்கும் நடுவே இருப்பவன். அது போல தமிழ்நாட்டில் இருந்து பேசும் பொழுது இந்தத் தமிழன், அந்த வடநாட்டவன். அப்பொழுது கேரள நாயரை என்னவென அழைக்க? அதனால்தான் உந்த நாயர். என்னே தமிழின் சிறப்பு எனச் சொல்லி முடித்துவிடலாம்.
Saturday, March 14, 2020
Pi Day - Blast from the Past!
Sunday, January 12, 2020
தசரதன் தர்பார்
வீழ்ந்தது நின் நலம். திருவும் வீழ்ந்தது
வாழ்ந்தனள் கோசல மதியினால் என்றாள்
கோடிய வரிசிலை இராமன் கோமுடி
சூடுவன் நாளை வாழ்வு இதெனச் சொல்லினள்
காதல் உன் பெருங் கணவனை அஞ்சி, அக் கனி வாய்ச்
சீதை தந்தை, உன் தாதையைத்தெறுகிலன்; இராமன்மாதுலன் அவன்; நுந்தைக்கு வாழ்வு இனி உண்டோ?
பேதை! உன்துணை யார் உளர் பழிபடப் பிறந்தார்?
மற்றும் நுந்தைக்கு வான் பகை பெரிது உள; மறத்தார்
செற்றபோது, இவர் சென்று உதவார் எனில், செருவில்கொற்றம் என்பது ஒன்று, எவ் வழி உண்டு? அது கூறாய்!
சுற்றமும் கெட, சுடு துயர்க் கடல் விழத் துணிந்தாய்!
தீய மந்தரை இவ் உரை செப்பலும், தேவி
தூய சிந்தையும் திரிந்தது
தீய மந்தரை இவ் உரை செப்பலும், தேவி
தூய சிந்தையும் திரிந்தது - சூழ்ச்சியின் இமையோர்மாயையும், அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும்,
ஆய அந்தணர் இயற்றிய அருந் தவத்தாலும்.
Saturday, January 04, 2020
And whisper'd in the sounds of silence.....
Friday, January 03, 2020
அழுதற் பொருட்டன்று அன்பு....
கிள்ளையொடு பூவையழுத கிளர் மாடத்து
உள்ளுறையும் பூசையழுத வுருவறியாப்
பிள்ளையழுத பெரியோரை யென் சொல்ல
வள்ளல் வனம் புகுவானென்றுரைத்த மாற்றத்தால்.
கிள்ளையொடு பூவை அழுத, கிளர் மாடத்து
உள் உறையும் பூசை அழுத, உரு அறியாப்
பிள்ளை அழுத, பெரியோரை என் சொல்ல
‘வள்ளல் வனம் புகுவான்’ என்று உரைத்த மாற்றத்தால்.
ஆவு மழுதவதன் கன்றழுத வன்றலர்ந்த
பூவு மழுதபுனற் புள்ளழுத கள்ளொழுகம்
காவு மழுத களிறழுத கால்வயப்போர்
மாவு மழுதன வம்மன்னவனை மானவே
ஆவும் அழுத அதன் கன்று அழுத அன்றலர்ந்த
பூவும் அழுத புனல் புள் அழுத கள்ளொழுகும்
காவும் அழுத களிறு அழுத கால்வயப்போர்
மாவும் அழுதன அம்மன்னவனை மானவே
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து