என் பெற்றோர் கர்நாடக இசைப்பிரியர்கள். என் அம்மாவிற்கு தன் பெற்றோர் தனக்கும் இசை பயிற்றுவிக்கவில்லை என்பதைக் குறையாகச் சொல்வார். அதிலும் அவர் அக்கா வீணை வாசிக்கக் கற்றிருந்தார் என்பதால் இது பெருங்குறையானது. அப்படி இருந்தும் நான் இசை பயில அவர் ஏன் வழி செய்யவில்லை என்பது கொஞ்சம் புதிர்தான். எதோ இரண்டு நாள் யாரோ பக்கத்து வீட்டு மாமா மிருதங்கம் கற்றுத் தருகிறேன் பேர்வழி என்று சொல்ல எங்காத்துக்காரரும் கச்சேரிக்குப் போறார் என்பதைப் போல நானும் போய் வந்தேன் என்ற ஞாபகம் ஆனால் தொடர்ந்து போகவில்லை.
கர்நாடக சங்கீதத்துடனே வளர்ந்தாலும் பின்னர் பல வகை இசை வடிவங்களைக் கேட்டு வளர்ந்தேன். திரை இசை, ஆங்கிலப் பாடல்கள், மேற்கத்திய செவ்வியல் இசை, ஜாஸ் என்று பல்வேறு இசை வடிவங்களை வளரும் பொழுது வேறு வேறு நேரங்களில் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் மீண்டும் கர்நாடக இசையை விரும்பிக் கேட்கத் தொடங்கினேன். ஒரு ரசிகனாகக் கேட்டேனே தவிர அப்பொழுதும் கற்றுக் கொள்ளத் தோன்றவில்லை.
வாழ்க்கை எங்கெங்கோ அலைக்கழித்தாலும் கர்நாடக இசை ரசிகனாகத் தொடர்ந்து கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். என் பையனுக்குப் பத்து வயது ஆகும் சமயத்தில் அவனை பாட்டு வகுப்பில் சேர்த்தோம். அப்பொழுது நாமும் கற்றுக் கொண்டால் என்ன என்று உந்தப்பட்டு நானும் அந்த ஆசிரியரிடமே சேர்ந்தேன். கொஞ்ச காலம் வகுப்புகளுக்குச் சென்றாலும் அப்பொழுது இருந்த பணி நிர்பந்தங்களினால் தொடர்ந்து போக முடியாமல் போனது. அது மட்டுமில்லாமல் நல்ல பாடகர்கள் பாடிக் கேட்ட பாடல்களை நான் கொலை செய்வதை என்னாலே தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் ஒரு சுபயோக சுபதினத்தில் பாட்டு வகுப்புக்கு முழுக்குப் போட்டாகிவிட்டது.
ஆனாலும் வீட்டில் எப்பொழுதாவது ரெண்டு வரி பாட நினைத்தால் என் மகள் வந்து உடனே வாயைப் பொத்தி விடுவாள். அவள் பாடகி என்பதால் என் அபஸ்வரம் பாவம் அவளுக்குத் தாங்காது. ஆக நமக்குப் பாட வராது, வேறெந்த வாத்தியமும் வாசிக்கத் தெரியாது என்பது தெளிவானதும் வேறு ஒரு முடிவு எடுத்தேன். நமக்குப் பாட வராவிட்டால் என்ன, பாடத் தெரிந்தவர்கள் பாட நாம் பாடல்களைப் புனையலாமே என்பதுதான் அந்த முடிவு.
அப்படி சிலப் பாடல்களை எழுதி இருக்கிறேன். முதலில் விளையாட்டாக எழுதிய பாடல்கள் சிலவற்றை என் நண்பரின் மகள் பாடி இருக்கிறார். அதன் பின் எழுதியவற்றை மிருதங்க வித்வான் நண்பர் ஈரோடு நாகராஜன் மெட்டமைத்துப் பாடிக் காட்டி இருக்கிறார். இப்படி கொஞ்சம் விளையாட்டுத்தனமாக எழுதிக் கொண்டிருந்த பொழுது பாடகர் விக்னேஷ் ஈஷ்வர் புறம்போக்கு என்பதைப் பற்றி ஒரு பாடலை எழுதித் தர வேண்டும் எனக் கேட்டார். நான் எழுதித் தந்ததை கர்நாடக இசையில் விருத்தம் என்ற முறையில் பாடி அதன் பின் பாரதியார் பாடல் ஒன்றையும் பாடினார். மேடையேறிய என் முதல் பாடல் இதுதான். அவர் முதலில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்தப் பாடலைப் பாடினார். பின் ஒரு சமயம் டாலஸ் நகரில் நடந்த நிகழ்ச்சியில் எனக்காக மீண்டும் இப்பாடலைப் பாடினார் - https://youtu.be/6vbiBPLvZAI?si=FrPtuJ5bLtkECBd2
அதே போல வித்வான் அருண்பிரகாஷ் எதேனும் மெட்டமைத்து அனுப்பினால் அதற்கு பாடல் புனைந்து அனுப்புவேன். நான் எழுதும் பாடல்களுக்கு அவர் மெட்டமைத்துத் தருவதும் நடக்கும். சமீபத்தில் என் மகளுக்குச் சொன்ன அறிவுரையை ஒரு பாடலாக எழுதி, அவருக்கு அனுப்பினேன். அதை அடாணா ராகத்தில் மெட்டமைக்க வேண்டும். அது கட்டளைத் தொனி இல்லாமல் அன்பாகப் பேசுவது போல அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். அவர் அதை அழகாக மெட்டமைத்துப் பாடி இருக்கிறார் - https://youtu.be/ubSIH5vh_qk?si=LA5Hil-pJ9MvhMXP
நாம் எழுதியது மெட்டமைத்துப் பாடலாகப் பாடப்படுவதைக் கேட்கும் பொழுது பெரும் மகிழ்ச்சி உண்டாவது வார்த்தையில் விவரிக்க முடியாத ஓர் உணர்ச்சிதான். பாடல் புனைவது ஆயக்கலைகளில் ஒன்றா என்பது தெரியவில்லை. இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். இல்லை என்றாலும் இருப்பதாக வைத்துக் கொள்ள வேண்டியதுதான்!
பிகு: ஆய கலைகளில் அரைகுறையாகத் தெரிந்த கலை பற்றி எழுதவும் என்ற குறிப்புக்கு எழுதியது.


0 comments:
Post a Comment