
சனிக்கிழமை, மார்ச் 29, 2008
இன்று மதியம் நம்ம ஆன்மீகச் செம்மல் கேஆர்எஸ் சொன்ன அவரைக்காய் பொரிச்ச கூட்டுதான் மெனு. நல்லாவே இருந்தது. முக்கியமா அவரு சொன்னா மாதிரி காயை வெட்டினது வித்தியாசமா இருந்தது.
நம்ம ஜூனியர் நேத்து ஒரு விஷயம் சொன்னாரு. நம்ம ரீச்சர் பதிவிலும் அதைப் பத்தி பின்னர் படிச்சேன். அதாவது நேத்து பூமிக்காக ஒரு மணி நேரம் அப்படின்னு பூமி பற்றிய விழிப்புணர்வுக்காக ஒரு மணி நேரம் வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அணைத்து விட்டு இருக்க வேண்டுமாம். எவ்வளவோ செஞ்சுட்டோம், இதைச் செய்ய மாட்டோமா அப்படின்னு நாங்களும் அந்த திட்டத்திற்கு சரி என்று சொல்லியாகிவிட்டது. வீட்டில் பொதுவாக மெழுகுவர்த்தி எல்லாம் வைத்துக் கொள்வது இல்லை என்பதால் இந்த நிகழ்ச்சிக்காக போய் சிலவற்றை வாங்கிக் கொண்டு வந்தோம். சீக்கிரமே சாப்பாட்டை எல்லாம் முடித்துக் கொண்டு விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு மெழுகுவர்த்திகளை ஏற்றிவிட்டு குடும்பமே அதனைச் சுற்றி அமர்ந்து கொண்டு பேசத் தொடங்கினோம். நம்ம தங்கமணியின் தந்தை அவர் சிறுவயது நிகழ்வுகளை எல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தார். ரொம்ப சுவாரசியமா இருந்ததால ஒரு மணி நேரம் போனதே தெரியலை. இந்த ஒரு மணி நேரமும் குடும்பத்தில் எல்லாரும் ஒரு இடத்தில் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்ததே ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. உலகத்தைக் காக்கறோமோ இல்லையோ, குறைந்தபட்சம் இப்படிப் பேசவாவது மாசம் ஒரு மணி நேரம் ஒதுக்க வேண்டியதுதான். என்ன சொல்லறீங்க?

ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 30, 2008
Horton hears a Who அப்படின்னு ஒரு திரைப்படம் போனோம். Dr.Seuss
என்பவர் குழந்தைகளுக்கான கதைகள் பலவற்றை எழுதி உள்ளார். எதுகை மோனையுடம் பாட்டுப் போல எழுதப்பட்டிருக்கும் இவரது கதைகள் குழந்தைகளின் கற்பனைக்கு நல்ல தீனி. இவருடைய கதைதான் இந்த திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.
ஒரு காட்டில் ஒரு யானை. அதன் பெயர் ஹார்டன். அந்த யானையின் அருகே பறந்து செல்லும் ஒரு தூசில் இருந்து அபயக் குரல் ஒன்று கேட்டதாக நினைத்து அத்தூசின் பின் சென்று உதவ நினைக்கிறது ஹார்டன். தூசில் இருந்து குரல் கேட்பதாவது எனச் சொல்லி யானைக்குப் பயித்தியக்கார பட்டம் கட்ட நினைக்கின்றன சில மிருகங்கள். தூசினுள் ஒரு உலகம், அதில் ஹூ என்ற ஒரு வித உயிரினம், அவர்களின் வாழ்க்கை, அவர்களுக்கு உண்டான சோதனை எனப் படம் விரிகிறது. ஹார்டனால் ஹூக்களுக்கு உதவி செய்ய முடிகிறதா, பயித்திக்காரப் பட்டம் கிடைத்ததா என்பதுதான் படம்.
"I meant what I said, and I said what I meant" என்று பஞ்ச் டயலாக் பேசும் யானை அழகு! என் பையன் மட்டுமின்றி நானும் எங்களுடன் வந்திருந்த தங்கமணியின் தாயாரும் கூட ரசித்துப் பார்க்கும் வண்ணம் படத்தை எடுத்திருக்கும் குழுவினருக்கு ஒரு சபாஷ்!
இன்று இரவு ரீச்சரின் பள்ளிக்கூடத்தில் கற்றுத் தந்த பீர்க்கங்காய் வாட்டெவர் இட் இஸ் செய்தேன். நன்றாக இருந்தது. சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள நன்றாகவே இருக்கிறது.
டிஸ்கி: என்னிடம் கேள்வி கேட்டுப் பதிவு போட்ட பொழுது ஆபாசப் பின்னூட்டங்கள் அதிகம் வருவதாக நண்பர் டிபிசிடி சொன்ன பொழுது மிக வருத்தமாய் இருந்தது. நான் இது வரை எழுதியது எதுவுமே கண்ணியம் குறைந்து இல்லை. என் நண்பர்கள் யாரும் அது போல செய்பவர்கள் இல்லை. இது வரை இந்த மாதிரி குற்றச்சாட்டு வந்ததும் இல்லை. அது பற்றிய விபரங்கள் (பெயர், ஐபி முகவரி போன்றவை) இருந்தால் அவைகளை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். அல்லது எனக்கு அவற்றைப் பின்னூட்டமாக தந்தால் நான் வெளியிடுகிறேன். இப்படி ஒரு டிஸ்கி போட வேண்டிய நிலையில் தமிழ்வலையுலகம் இருப்பதற்காக வருந்துகிறேன்.