Sunday, July 13, 2008

பொதுப்புத்தி அங்கலாய்ப்புக்கு புதரக பதில்

நியூயார்க் நகரில் இருக்கும் நம் தூதரகத்திற்குச் செல்ல வேண்டுமானால் கொஞ்சம் கடுப்புதான். ஒழுங்குமுறையற்ற கூட்டம், ஏகப்பட்ட கெடுபிடிகள் என்று ரொம்பவே கஷ்டப்படுத்தும் நினைவுகள்தான். அதுவும் அதிகாலையிலேயே எழுந்து, ரயிலைப் பிடித்து நியூயார்க் நகரம் சென்று வரிசையில் நிற்க வேண்டும் என்ற நினைப்பே சோகத்தைக் கிளப்பி விடும். இந்த அனுபவம் இல்லாதவர்கள் நம்ம டுபுக்கு எழுதி இருப்பதை ஒரு பார்வை பார்த்துவிட்டு வரவும். லண்டனில் அவர் சொல்லி இருக்கும் நிலமைதான் இங்கேயும். விஷயம் இது போல இருக்க நம்ம வீட்டுப் புது வரவுக்கு இந்திய நுழைவிசைவு (Visa, பொருள் சரியாத்தான் இருக்கு, கொஞ்சம் எளிமையா சொல்லி இருக்கலாமோ?) எடுக்க வேண்டும் என்ற நினைப்பே அலுப்பாக இருந்தது. சரி என்னென்ன ஆவணங்கள் தேவை எனத் தெரிந்து கொள்ள இந்திய தூதரகத்தில் வலைத்தளத்திற்குச் சென்றால் நுழைவிசைவு தொடர்பான வேலைகளை தனியார் வசம் அளித்துவிட்டதாக அறிவித்திருந்தனர்.

அமெரிக்காவில் ஐந்து நகரங்களில் இயங்கும் ட்ராவிசா என்ற நிறுவனம் இப்பொழுது நுழைவிசைவு குறித்த முதற்கட்ட வேலைகளை இவர்கள் எடுத்து செய்கிறார்கள். இவர்களது வேலை குறித்து ஒரே ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்றால் அது -

சபாஷ்!

முதலில் எல்லா விபரங்களையும் இணையத்தில் பதிவு செஞ்சுடச் சொல்லி இருக்காங்க. நானும் எத்தனையோ நாடுகளின் தூதரக வலைத்தளங்களில் சென்று இது மாதிரி படிவங்களைப் பூர்த்தி செஞ்சு இருக்கேன். ஆனால் இவ்வளவு எளிமையான வலைத்தளத்தைப் பார்த்ததே இல்லை. அனாவசியமாக என் முப்பாட்டனின் ஜாதகத்தை எல்லாம் கேட்கவில்லை. அங்கு நாம் பதிவு செய்ய வேண்டிய ஒவ்வொரு விபரத்திற்கும் அதன் அருகிலேயே உதவித் தகவல்கள் என அமர்க்களமாக இருக்கிறது வலைத்தளம்.


விண்ணப்பத்தினை முழுவதும் பூர்த்தி செய்த பின்னர் அதனோடு கொண்டு வர வேண்டிய மற்ற ஆவணங்களின் இடாப்பு ஒன்றினையும் தந்து விடுகிறார்கள். அதனால் நாம் கொண்டு செல்ல வேண்டியவை பற்றிய முழு விபரமும் நமக்குக் கிடைத்து விடுகிறது.

நியூயார்க் நகரில் இவர்களது அலுவலகம் சென்றால் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமே வரவில்லை. முதலிலேயே ஒருவர் நம் விண்ணப்பத்தினை முழுவதும் சரி பார்த்துவிடுகிறார். நாம் தவறேனும் செய்திருந்தாலோ அல்லது இணையத்தில் பூர்த்தி செய்யாமல் வந்துவிட்டால் அங்கிருக்கும் பல கணினிகளில் ஒன்றினைப் பயன்படுத்தி நம் வேலையை முடித்துவிடலாம். இதற்காகவே ஓரிடத்தில் பத்துப் பன்னிரண்டு கணினிகளை நிறுவியுள்ளனர்.

விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யும் பொழுதே நம் கடனட்டையின் எண்களையும் கொடுத்தாலும் நம் விண்ணப்பம் அவர்கள் கையில் சென்று சேர்ந்த பின்னரே அத்தொகை வசூலிக்கப்படுகிறது. கடனட்டை விபரமும் விண்ணப்பத்திலேயே இருப்பதால் அதிக நேரமாவதில்லை. நான் அங்கு செலவழித்த நேரம் மூன்று நிமிடங்களுக்கும் குறைவாகவே. நான் நண்பகல் நேரத்தில் சென்றதால் கூட்டம் குறைவாகவே இருந்திருக்கலாம். ஆனால் காலை நேரங்களில் கூட இது போன்று செம்மையாகச் செய்திருப்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

தற்சமயம் இவர்கள் நுழைவிசைவு சம்பந்தப்பட்ட வேலைக்கு மட்டுமே இவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றனர். கடவுச்சீட்டு குறித்த சேவைகள், மற்ற சேவைகளுக்கு இன்னமும் நேரடியாகத் தூதரகம்தான் செல்ல வேண்டும். இந்தப் பணி தனியார் வசம் வந்ததால் தூதரகத்தில் எதேனும் மாற்றம் உண்டா எனத் தெரியவில்லை. இந்த முடிவினை எடுத்த அதிகாரிகளுக்கு நம் பாராட்டுகள். Well done guys!

டிஸ்கி 1: மகளுக்கு நுழைவிசைவு எடுத்தது இந்தியா வருவதற்குத்தான். தற்போதைய திட்டத்தின் படி, பெரும்பாலும் மும்பையில் இருப்பதாகத்தான் இருக்கிறது. சென்னை வருவது இன்னும் உறுதியாகவில்லை.

டிஸ்கி 2: ஸ்ரீதர் வெங்கட் தனியாக வலைப்பதிவு ஒன்றினை துவக்கி எழுதத் தொடங்கி இருப்பதற்கும், நான் ஊரை விட்டு ஓடுவதற்கும் தொடர்பு கண்டுபிடித்தால் அவர்களுக்குப் பகூத் அறிவுப் பாவலர் என்ற பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப் படும் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Monday, July 07, 2008

புதசெவி - 7/7/2008

போன புதசெவி பதிவை படிச்ச மக்கள் எல்லாம் அடுத்தது எப்போ எப்போன்னு கேட்கும் போது நாம தரும் சுவையான செய்திகளுக்காகத்தான் கேட்கறாங்கன்னு சந்தோஷப்பட்டேன். இன்னிக்கு ஸ்ரீதர் வெங்கட்தான் உம்ம பதிவு யாருக்கு வேணும் நாங்க பஞ்ச் அண்ணாவோட பஞ்சுக்கு இல்ல கேட்கறோம் அப்படின்னு குட்டை உடைச்சுட்டாரு. என்ன இருந்தா என்ன, மக்களின் ஏகோபித்த (ஏ இருக்கு. அதனால கோபித்த எனப் படிக்க வேண்டாம். ஏ இருக்கு என்பதால் இதையும் காமக்கதைகள் வரிசையில் சேர்க்க வேண்டாம்!) வேண்டுகோளுக்கு இணங்கி புதசெவி அடுத்த பாகம்.

செய்தி 1

தனக்கு வேலை கிடைக்காததினால் தன் தந்தை பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முந்திய நாள் அவரைக் கொலை செய்துவிட்டானாம் பிகாரில் ஒருவன். பணியில் இருக்கும் பொழுது மரணமடைந்தால் கருணை அடிப்படையில் தந்தையின் வேலை தனக்குக் கிடைக்கும் என்று திட்டம் போட்டதாகச் சொல்லி இருக்கிறான். இந்தக் கொலையைச் செய்ய கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறான். அந்தப் பணத்தில் ஒரு பெட்டிக் கடை வெச்சு இருக்க முடியாதோ?

உங்களுக்கென்ன.. சாதாரணமா சொல்லிட்டீங்க பெட்டிக்கடை வச்சு பொழைச்சுக்கலாமேன்னு! பெட்டிக்கடை வச்சா "பயப்படாதவன்" "சேனாதிபதி"ன்னு எல்லாம் பேரு வருமா? அப்பா முன்னே சம்மந்தம் வச்சுக்கிட்டிருந்த பெட்டிக்கடை காம்படிஷனை எப்படி முறியடிக்கறதுன்னு ரென்சன் வராதா? தம்பி தங்கச்சிங்க பேர்லே எல்லாம் நம்பிக்கை இருக்குமா? எல்லாத்துக்கும் மேலே, கொலைன்னு ஆனபிறகுதானே அவனைப்பத்தி நீங்களே பேச ஆரம்பிச்சிருக்கீங்க?

செய்தி 2

புதரகத்தில் எதுக்கு வேணாலும் வழக்குப் போடலாம் அப்படின்னு சொல்லி கேட்டு இருப்பீங்க. காப்பி சூடா இருந்ததுன்னு மெக்டொனால்ட் நிறுவனத்திற்கு எதிரா போட்ட வழக்கு பத்தி நிறையா பேருக்குத் தெரிஞ்சு இருக்கும். இந்த வழக்கு இன்னும் விநோதம். நடக்கும் பொழுது பறவை எச்சத்தில் வழுக்கி விழுந்ததால் அடிபட்டதாக அந்த பாதை இருந்த தோட்ட நிர்வாகத்தினை எதிர்த்து ஒருவர் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இதில் இன்னும் விசேஷம் என்னவென்றால் அது ஒரு பறவைகள் சரணாலயம்! இவர் அங்கு சென்றது பறவைகளைப் பார்க்கவும் அவற்றைப் படம் பிடிக்கவுமாம். அங்கு நடைபாதையில் இது போன்று நடக்கலாம் என்ற எச்சரிக்கை பலகை இல்லாதது பெரும் குறையாம்!

என்னாது? "எச்ச"ரிக்கைப் பலகை வேணுமா? இவனுங்களையெல்லாம்.. ஒரு காகிதம் எடுத்து ரெண்டு பக்கமும் P.T.O போட்டுக் கொடுத்துடணும். வாழ்க்கை புல்லா திருப்பித்திருப்பி பாத்துக்கிட்டே இருந்துடுவான். அயர்ன் பாக்ஸிலே கூட "அணிந்திருக்கும் ஆடைகளை தேய்க்க முயலாதீர்கள்" ன்னு இவனை மாதிரி ஆளுங்களாலேதான் எழுதறாங்க போல உங்க புதரகத்துல!

செய்தி 3

எப்பொழுதும் கருப்பினத்தவருக்கு எதிராகவே இனவெறித் தாக்குதல்கள் நடப்பதாக நாம் நினைக்கிறோம். ஆனால் இந்தப் பரிதாபக் கதையைப் படியுங்கள். தான்சானியா நாட்டில் மரபணு குறையினால் வெள்ளையாக இருப்பவர்கள் (ஆல்பினோக்கள் என்று அறியப்படுபவர்கள்) தற்பொழுது தம் உயிருக்கே பயந்த நிலையில் இருக்கிறார்களாம். கருப்பின மக்கள் இடையே வெள்ளையாகத் தோற்றம் அளிக்கும் இவர்களுக்கு மந்திர சக்தி இருப்பதாகவும் அதனால் இவர்களைக் கொன்று இவர்களின் உடற்பகுதிகளை உண்டால் தமக்கும் மந்திர சக்தி கிடைக்கும் என்ற புரளி பரவி பலர் கொல்லப்பட்டு விட்டனராம். இது இப்பொழுது இந்நாட்டு எல்லைகளைத் தாண்டி கென்யா, காங்கோ போன்ற நாடுகளுக்கும் பரவி விட்டதாம். ரொம்பவே நோகச் செய்யும் செய்தித் தொகுப்பு. முழுமையாகப் படித்துப் பாருங்கள்.

இதுக்குதான் சூப்பர் ஸ்டார் சொன்னாரா? வெள்ளையாக இருக்கும் உணவுவகைகளைத் தவிருங்கள்னு! பாருங்கய்யா.. எங்க தலை எந்த ஊரு வரைக்கும் அட்வைஸ் பண்றாருன்னு!

செய்தி 4

இதுவும் ஆப்பிரிக்கா செய்திதான். தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக் கொடுமைகள் நடந்ததால் அதனால் பாதிப்படைந்தவர்களுக்கு பல விதமான சலுகைகளைத் தந்து வந்தது அந்நாட்டு அரசு. கருப்பின மக்கள், இந்திய வம்சாவழி மக்கள் என பல தரப்பு மக்களுக்கு கிடைத்த சலுகை சீன வம்சாவழியினருக்குக் கிடைக்க வில்லை. பல போராட்டங்களுக்குப் பின் அவர்களுக்கும் இந்த வசதி கிடைக்க நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் அந்நீதிமன்றத் தீர்ப்பு என்னவென்று தெரியுமா? "தென்னாப்பிரிக்க சீன வம்சாவழியினர் இனி கருப்பினத்தவர்!"

கருப்பாக இருப்பவர்கள் மட்டுமே கருப்பினத்தவர் என்று நினைக்கும் உம்ம காழ்ப்புணர்ச்சிப் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது (6 நியூஸ்லே ஒருமுறைகூட வெளிய வராட்டி எப்படி?) கிரீம் கலரில் சீனாக்காரர்கள் இருப்பதால் அவர்களை கிரீமி லேயர் எனச் சித்தரிக்கும் உங்கள் பாசிஸப் போக்கு அருவருக்க வைக்கிறது. முற்படுத்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களாகவும், பிற்படுத்தப்பட்டவர்கள் மி. பிற்படுத்தப்பட்டவர்களாகவும் ஆகும் இன்றைய சூழலில் முன்னோர் செய்த தவற்றை ஒரு நீதிமன்றம் சரிசெய்வதைக்கூட தவறாக பார்க்கும் உங்கள் ______ முகம் வெளிப்பட்டு விட்டது - அப்படின்னெல்லாம் கமெண்டு வரும்னு பாக்கறீங்களா? அதெல்லாம் ஒண்ணும் வராது!


செய்தி 5

புதரகத்தில் பணப்புழக்கம் ரொம்ப கம்மியானதுனால புது வகைத் திருட்டுக்கள் எல்லாம் நடக்க ஆரம்பிச்சு இருக்கு. மின்சாரக் கம்பிகளைத் திருடுதல், பாதாளச் சாக்கடை மூடிகளைத் திருடுதல் என்று நம்ம ஊர் நாளிதழ்கள் நூதனத் திருட்டு என வகைப்படுத்தும் திருட்டுகள் நடக்கத் தொடங்கி இருக்கின்றன. செம்பு போன்ற உலோகங்களுக்கான விலை மிகவும் அதிகமாகிவிட்டதால் இப்படி உலோகங்களில் செய்யப்பட்டவற்றை பல கும்பல்கள் திருடத் தொடங்கி விட்டன. இப்படித்தான் டெட்டராயிட் நகரில் உள்ள ஒரு தேவாலய வாயிலில் இருந்த ஒரு எட்டு அடி யேசு சிலையை திருடிக் கொண்டு சென்றுவிட்டனர். ஒரே ஒரு பிரச்சனை. அது பிளாஸ்டர் ஆப் பாரிஸினால் செய்யப்பட்டது! அம்புட்டு அறிவு!

சரியாப் பாருங்கப்பா. அங்க சிலை உடைப்புப் போராட்டம் எதாவது ஆரம்பிச்சு இருக்கப் போறாங்க. நீங்க விஷயம் தெரியாம செம்பு கொம்புன்னுக்கிட்டு. இருந்தா என்ன, ஆரம்பிச்சு வெச்சவரு இல்லை அவரோட சிஷ்யர் யாராவது இன்னும் கொஞ்ச நாளில் மஞ்சள் இல்ல பச்சை அங்கி போட்டுகிட்டு, திருடின கடவுளை நாம ஏத்துக்கறோமா, கடவுள் நம்மை ஏத்துக்குவாரா ன்னு சிலைய வித்தவங்க வாங்கினவங்க கிட்ட பேச்சு வார்த்தை நடாத்திக்கிட்டு இருப்பார்.

செய்தி 6

இந்தப் படத்தைப் பாருங்க.



Dangerous Turn - Funny home videos are a click away

சின்ன டயர் வண்டியெல்லாம்தான் ஒழுங்கா போகணும், பெரிய டயர்க்காரங்க கொஞ்சம் அப்படி இப்படிதான் இருப்பாங்க.. இல்லாட்டி எப்படி அஞ்சு வருஷம் எதிர்த்திசையில ஓட்டறதாம்? மன்மோகன் சிங்குக்கே இப்ப புரிஞ்சிருக்கும் -இந்த நுண்ணரசியல்கூடத் தெரியாம எப்படித்தான் குப்பை கொட்டறீங்களோ!