Monday, November 17, 2025

கள் தந்த போதை!

 

என்ன எழுத எனத் தெரியாமல் இருப்பவர்களுக்கு ஆண்டவனே அடி எடுத்துக் கொடுப்பான் என்பது நம் கலாச்சாரத்தில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவது. கந்த புராணம் எழுத கச்சியப்பச் சிவாச்சாரியாருக்கு, திருப்புகழ் பாட அருணகிரியாருக்கு எனப் பல எடுத்துக்காட்டுகள் உண்டு. 

பண்புடன் இதழில் சிறார் இலக்கியச் சிறப்பிதழ் எனச் சொன்னவுடன் என்ன எழுதுவது என்று எனக்குக் குழப்பமாகவே இருந்தது. ஆசிரியர் குழுவில் இருக்கும் ஷாந்தி மாரியப்பனும், ஐயப்பனும் எழுதிய இரு குறிப்புகள் எனக்கு எழுத வேண்டிய தலைப்பை எடுத்துத் தந்தன. 

சிறார் இலக்கியச் சிறப்பிதழைக் கொண்டு வரக் காரணம் நவம்பரில் குழந்தைகள் தினம் வருவதால் என்று ஷாந்தி எழுதினார். ஒரே வரியில் சிறார் என்றும் குழந்தைகள் என்றும் எழுதி இருந்தது என் கவனத்தை ஈர்த்தது. 

அதற்கு முன்பு வேறு ஒரு குறிப்பில் ஐயப்பன் இவைகள் என்ற சொல்லைப் பயன்படுத்தி இருந்தார். ஐயப்பன் கூட இந்தப் பிழையைச் செய்கிறாரே என்று திகைத்தேன். 

இந்த இரண்டு குறிப்புகளே பன்மை குறித்த விகுதிகளைப் பற்றி எழுதத் தூண்டுதலாக இருந்தன. ‘கள் தந்த போதை’ என்ற கட்டுரை இந்த இதழில் வெளி வந்திருக்கிறது. 

கட்டுரைக்கான சுட்டி இது

Wednesday, November 12, 2025

சாண்ட்விச் தலைமுறையும் சொல்ல இயலா சங்கடங்களும்!

 

என் பெற்றோருக்கு நான் கடைசி மகன். அதனால் வளரும் பருவத்தில் கல்லிடைக்குறிச்சியிலும் பின் சென்னையிலும் அவர்களுடன் பல வருடங்கள் இருக்க எனக்கு வாய்த்தது. படிப்பு முடிந்து வேலைக்குச் சேர்ந்து முதலில் கோவையிலும் பின்னர் பெங்களூரிலும் வாழ நேர்ந்த பொழுதும் கூட அவர்கள் என்னுடனே இருந்தார்கள்.
அமெரிக்கவில் பணி செய்ய வாய்ப்பு கிடைத்த பொழுது அவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நீ கவலைப்படாமல் போ என்று என்னை அனுப்பியது என் அண்ணன்மார் இருவரும்தான். அதன்படியே என் தாய் தந்தை இருவரும் மறையும் வரை அவர்கள்தான் பார்த்துக் கொண்டார்கள். முதுமையில் அவர்களைப் பார்த்துக் கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கம் இன்று வரை எனக்கு உண்டு. ஆனால் அதற்கு அண்ணன்மார் இருந்தது ஒரு விதத்தில் ஆசுவாசம் அளித்ததும் உண்மைதான்.
அந்த ஆதரவு இல்லை என்றால் என்ன ஆயிருக்கும் என்பது நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பது. பெற்ற குழந்தைகள் ஒருவரோ இருவரோ இருந்தாலும் அவர்கள் வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் இருப்பதால் தனிமையில் இருக்கும் பெற்றோர் பலரைப் பார்க்கும் பொழுது எனக்கு வருத்தமாக இருக்கும்.

May be an illustration of one or more people and briar
என் நண்பர் மருத்துவர் விஜய் (Vijay Sadasivam) சமீபத்தில் இந்தத் தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதிய குறுந்தொடர் என் எண்ணங்களை கிளர்ந்தெழச் செய்தது. இது குறித்த ஒரு விழிப்புணர்வும், உரையாடலும் இன்றைய சூழலில் அவசியம் என்று எண்ணி அந்தத் தொடரை அப்படியே மொழிமாற்றம் செய்யாமல், அதன் சாராம்சத்தை எடுத்துக் கொண்டு அதை தமிழில் மறு உருவாக்கம் செய்ய நினைத்தேன்.
அந்தத் தொடரின் முதல் பாகம் சொல்வனம் இதழில் இப்பொழுது வெளியாகி இருக்கிறது. கட்டாயம் படித்து உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Monday, November 10, 2025

திண்ணைக் கச்சேரி


எங்கள் தெருவில் இருக்கும் வீடுகள் எல்லாம், கிராமப்புற அக்கிரகார வீடுகளின் இலக்கணம் மாறாமல், ஓடு வேய்ந்த கூரை, திண்ணை, ரயில் பெட்டிகளைக் கோத்தாற்போல் ஒன்றன்பின் ஒன்றாக அறைகள் என்று நீண்டு செல்லும். இதில் எங்கள் வீடு கொஞ்சம் வித்தியாசப்படும். அது இரண்டு வீடுகளை இணைத்துக் கட்டப்பட்ட ஒன்று. வெளியில் இருந்து பார்த்தால் இரண்டு வாயில்கள், இரண்டு கதவிலக்கங்கள் என்றிருக்கும். ஆனால் பாதி தூரத்தில் இரண்டு வீடுகளும் ஒன்றாகி விடும். இப்படி இரண்டு வாயில்கள் இருந்ததால் இரண்டு திண்ணைகள் உண்டு. 


தாத்தா இருந்த வரை, இடப்பக்கத் திண்ணை அவர் ராஜ்ஜியம். மரத்தாலான கணக்குப்பிள்ளை மேஜை ஒன்றைப் போட்டுக் கொண்டு எதோ கணக்கு எழுதுவார். அந்த மேஜையில் மேல் புறம் ஒரு கதவு போல திறக்கும். அதற்குள் பேப்பர் வைக்க, ரூபாய் நோட்டுகள் வைக்க, காசு வைக்க என்று அறைகள் இருக்கும். பேங்கர் மாமா என்று அழைப்படும் அவர் வேட்டியும், மேலுடலை மூடிய அங்க வஸ்திரமும், கோபி சந்தனமுமாய் நெடிய உருவமுமாய் மேஜைக்குப் பின் அமர்ந்திருக்கும் பாங்கே தெருவில் போய் வருபவர்களை ஒரு கும்பிடு போடச் செய்யும், பேங்கர் மாமா எனக் கூப்பிடச் சொல்லும். 


சமயத்தில் சும்மா உட்கார்ந்து கொண்டிருப்பார். அப்பொழுது வேட்டி மடிப்பில் ஆரஞ்சு வில்லையோ அல்லது பைசா வடிவத்தில் இருக்கும் பிஸ்கட்டோ அள்ளி வைத்திருப்பார். தெருவில் அலையும் சிறார்களுக்கு எல்லாம் அது ஈயப்படும். இதனால் சிறுவர்களிடையே அவருக்கு வில்லைத்தாத்தா என்ற பெயரும் உண்டு. குடும்பத்தில் யாருக்கேனும் குழந்தை பிறந்திருந்தால், மூட்டை நெல்லைப் பிரித்து வைத்துக் கொண்டு தெருவில் போவோர்க்கெல்லாம் ஒரு படி நெல் அளிக்கும் வழக்கம் அன்றிருந்தது. 


காலையில் பத்து பத்தரை மணிக்கெல்லாம் சாப்பாட்டுக் கடை முடிந்துவிடும். இன்று போல காலையில் டிபன் பின் மதியம் என்ற வழக்கம் அப்பொழுது கிடையாது. சாப்பிட்ட பின் திண்ணையில் கொஞ்சம் சாய்ந்து கொண்டோ அல்லது நன்றாகவே படுத்துக் கொண்டோ ஒரு தூக்கம் போடும் வழக்கமும் அவருக்கு இருந்தது. அதிகம் வீட்டுக்குள்ளே செல்லக்கூட மாட்டார். சாயங்காலம் காப்பி எல்லாம் திண்ணையில்தான். அதற்குப் பின் அவர் நண்பர்களோடு ஜமா சேர்ந்து கொண்டு சீட்டு விளையாட்டு தொடங்கிவிடும். அவர்களுக்கெல்லாமும் காப்பி பக்ஷணம் என்று உபச்சாரம் நடக்கும். அதெல்லாம் போதாது என்று அவர் மடியில் சொருகி வைத்திருக்கும் டப்பியில் இருந்து மூக்குப்பொடி விநியோகம் வேறு நடக்கும். 


அவர் காலத்துக்குப் பின் திண்ணை அப்பா வசம் வந்தது. ஆனால் அப்பாவுக்கு ஏனோ வலப்பக்கத் திண்ணைதான். மற்றபடி அப்பாவுக்குத் தப்பாத மகனாக அவரும் திண்ணைக் காப்பி, சீட்டாட்டம் என்று காலத்தைக் கழித்தார். காய்கறி விற்பவர், அரைக்கீரை முளைக்கீரை தண்டுக்கீரை என வகைவகையாக கீரை விற்பவர், மோர் தயிர் வெண்ணெய் கொண்டு வருபவர், பேப்பர் போடுபவர் எனத் தெரு வழியாக வியாபாரம் செய்து கொண்டு போகும் அனைவரும் ஒரு நிமிடமாவது எங்கள் வீட்டுத் திண்ணையில் பாரத்தை இறக்கி வைத்துக் கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டுதான் போவர். ஒரு புறம் அவர்களிடம் கறாராகப் பேரம் பேசும் அம்மா, வியாபாரம் முடிந்தது அவர்கள் குடிக்க வெண்ணெய் எடுத்த மோரைத் தருவதும் பழைய துணிகள் இருந்தால் தருவதும் எனக் கருணை வடிவாக மாறிவிடுவார். வியாபாரம் இல்லை என்றாலும் கூட அம்மா எனக் குரல் கொடுத்துக் கொண்டு அவர்கள் ஆஜராகாமல் போனதே இல்லை. 


பெரியவர்கள் அப்படி என்றால் சிறுவர்களுக்குத் திண்ணைகள் எல்லாம் விளையாட்டுத் திடல்கள். தாயம், ஆடுபுலி ஆட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள், சீட்டு, செஸ், கேரம் போர்ட் என்று நவீன விளையாட்டுகள், ஒரு சுவரில் துணியைக் கட்டி திரைப்பட அரங்கில் கெஞ்சிக் கூத்தாடி வாங்கி வந்த பிலிம்களை வைத்துப் படம் காட்டுதல் என்று விதவிதமாக விளையாடுவது உண்டு. திண்ணைக்குக் கீழ் இருக்கும் சுவரில் செங்கல்லால் ஸ்டம்ப் வரைந்து அதன் முன் பேட்ஸ்மன் இருக்க, விக்கெட் கீப்பர் திண்ணையில் சப்பளமிட்டு அமர்ந்து விளையாடும் விநோதமெல்லாம் ஊரில் உண்டு. 


கையை விட்டுப் போன பின் அழகு அழிந்து போன எங்கள் வீடு.


தொலைக்காட்சிப் பெட்டிகள் வரத் தொடங்கிய காலத்தில் அவை திண்ணைக்கு அடுத்து இருக்கும் அறையில்தான் வைக்கப்பட்டிருக்கும். அந்த வீட்டில் உள்ளவர்கள் தங்கள் நெருங்கிய நண்பர்களோடு அறையில் உட்கார்ந்து பார்க்க, எங்களைப் போன்ற அரை டிக்கெட்டுகள் திண்ணையில் அடித்துப் பிடித்து அமர்ந்துகொண்டு அங்கிருக்கும் ஜன்னல் வழியாகப் பார்ப்போம்.   மாலை நேரங்களில் மின்சாரம் போய்விட்டால் தெருவில் இருக்கும் அனைவரும் திண்ணைக்கு வந்துவிடுவர். வயதான ஆண்கள் ஒரு வீடு, வயதான பெண்கள் ஒரு வீடு, இளம் வயதுப் பெண்கள் வேறு ஒரு வீடு எனப் பிரிந்து அவரவர் வயதுக்கேற்ற அரட்டையை அடித்துக் கொண்டிருப்பார்கள். ஆண்கள் எல்லாரும் ஒரு வேட்டியை விரித்துக்கொண்டு திண்ணையிலேயே படுத்துத் தூங்கவும் செய்வர். 


சில வீடுகளில் வேறு எந்த வேலையும் இல்லாத தாத்தன்மார் திண்ணையில் அமர்ந்து கொண்டு தெருவில் போவோரிடம் யார், எங்கிருந்து வருகிறார், எங்கே போகிறார், எந்த விஷயமாகப் போகிறார் என்றெல்லாம் ஸ்காட்லாந்து யார்டு லெவலுக்கு விசாரணை நடத்துவர். வேலையாய்ப் போகிறவர்கள் நிற்கவும் முடியாமல் போகவும் முடியாமல் அவஸ்தைப் படுவர். உள்ளிருந்து பாட்டி, என்ன வேலையாய் போகிறார்களோ அவர்களை நிறுத்தி வைத்துக் கொண்டு என்ன நாட்டாமை என்று ஒரு குரல் விட்ட உடன் இவருக்கு விடுதலை கிடைக்கும், சிட்டாய் பறந்து விடுவர். 


தெருவில் இருப்பவர் எல்லோரும் பெரும்பாலும் உற்றார் உறவினராக இருப்பர். அதனால் செய்திருக்கும் பண்டங்கள் இந்த வீட்டுத் திண்ணையில் இருந்து அந்த வீட்டுத் திண்ணைக்கு அனுப்பப்படும். சிறு வயதுப் பயல்கள்தான் பெரும்பாலும் கூரியர் வேலை பார்ப்பர். அவரவர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு உள்ளூர் உலகச் செய்திகளோடு தம் வீட்டுச் செய்திகளையும் ஒலிபரப்புவர். இப்படி பல்சுவை விருந்தளிப்பதால்தானோ என்னவோ இப்படி வம்படிப்பதற்குத் திண்ணைக் கச்சேரி என்று பெயர். 


இன்று தெருவில் முக்கால்வாசி பேர் வீடுகளை விற்றுவிட இந்த குடும்பப் பின்னணி குலைந்து போய்விட்டது. வீடு வாங்கியவர்களும் ஒட்டி இருக்கும் வீடுகளை இடித்துவிட்டுத் தனித்தனியாக இருக்கும்படி வீடுகளைக் கட்டிக் கொள்கிறார்கள். திண்ணை இருந்த இடத்தில் இன்று பெரிய கேட் போட்டு மூடிய வண்ணம் பல வீடுகள் இருக்கின்றன. 


திண்ணைக் கச்சேரிக்கு மங்களம் பாடியாகிவிட்டது. 


Monday, November 03, 2025

கந்தல் கதை!

 

தொடக்கப்பள்ளியில் தரையில்தான் உட்கார்ந்து கொள்ள வேண்டும். அந்த சிமெண்டுத் தரையில் உட்காருவதாலும் தேய்த்துக் கொண்டே நகர்வதாலும் போட்டுக் கொண்டிருக்கும் அரை டிராயர்களின் (பூவைப்…) உட்காரும் பகுதி பிரிப்பிரியாக கிழியும். வருட ஆரம்பத்தில் புதுத்துணி எடுத்துத் தந்தாலும் பாதி வருடம் முடிவதற்கு முன் அது பழைய டவுசர் (பூவென்றும்… ) கிழிந்த இடத்திலேயே கிழிந்துவிடும். “உட்காரும் இடத்தில் கத்தியாடா இருக்கு?” என்று வசை அனேகமாக எல்லார் வீட்டிலும் கேட்டிருக்கும். 


யாருக்கேனும் நன்றாகக் கிழிந்துவிட்டால் அன்று பூராவும் அவனைத் தபாலாபீஸ் என்றுதான் அழைப்போம். கையில் கிடைக்கும் பேப்பர், சாக்பீஸ் துண்டு, சிறு கூழாங்கற்கள் என எல்லாவற்றையும் அந்த ஓட்டை வழியாகப் போட்டுவிட்டு சார் போஸ்ட் என்று கூவுவது ஒரு விளையாட்டு. இதிலிருந்து அவன் தப்பிக்கப் பார்ப்பதும், அவனைச் சுற்றி மற்றவர்கள் ஓடுவதுமாகப் பொழுது போகும். இதுதான் சாக்கு என்று அவன் கொஞ்சம் பெரிதாகக் கிழித்துக் கொள்வான், அப்பொழுதுதான் ஒட்டுப் போட்டு விடாமல் புது டௌசர் ( புய்ப்பம் என்றும்…) கிடைக்கும் என்பது அவன் எதிர்பார்ப்பு. ஆனால் பெரிய ஒட்டுப் போட்டுக் கொண்டு அந்த அரைக்கால்சட்டை (நீங்க சொல்ற மாதிரியும்..) மீண்டும் சுழற்சிக்கு வரும். 


இத்தனைக்கும் இன்றிருப்பது போல் நைஸான துணிகள் எல்லாம் கிடையாது. அது ஒரு முரட்டுத் துணி, காக்கிக் கலரில் இருக்கும். அதையும் கூடக் கிழிக்க முடிவது என்பது ஒரு தனித்திறமைதான். இதில் என் பாடு கொஞ்சம் பரவாயில்லை. என் அண்ணன்மார் வயதில் பெரியவர்கள் என்பதால் அவர்கள் போட்டுக் கொண்டது மறுசுழற்சி முறையில் எனக்கு வராது. ஆனால் சில வருடங்களே மூத்தவர்கள் வீட்டில் இருந்தார்களேயானால் அவர்கள் போட்டுக் கொண்ட துணிதான் வழி வழியாக வரும். கொஞ்சம் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் ‘Ship of Theseus’ என்று சொல்லப்படும் கதையில் வருவது போல எது அசல் துணி எது ஒட்டு என்று தெரியாத வகையில் ஒரு கதம்பமாகப் போட்டுக் கொண்டு வருவார்கள். 


தொடக்கப் பள்ளி விட்டு உயர்நிலைப்பள்ளிக்குப் போன பொழுது சீருடை எல்லாம் நல்லபடியாகப் போட்டுக் கொண்டு வரவேண்டும் என்ற விதிகள் எல்லாம் இருந்ததால் இந்த தபாலாபீஸ் மொத்தமாக இழுத்து மூடப்பட்டுவிட்டது. அதன்பின் கிழிந்த உடைகளை எல்லாம் போட்டுக் கொள்ள சந்தர்ப்பம் வராதது நல்லூழ்தான்.  


அமெரிக்காவில் அரசுப்பள்ளிகளில் சீருடைகள் எல்லாம் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. என் பையன் கையில் கிடைத்த சட்டையையும் கால்சட்டையையும் மாட்டிக் கொண்டு கிளம்பிவிடுவான். ஆனால் மகள் அப்படி எல்லாம் செய்ய மாட்டாள். நேர்த்தியான உடைகள், அதிலும் அந்த வண்ணத்திற்கு இந்த வண்ணம் சேரும் சேராது என்று போடும் உடையைத் தேர்ந்தெடுப்பதையே ஓர் அறிவியல் செயல்திட்டமாகச் செய்வாள். அந்த வயதினருக்கே உரிய எதிர்பார்ப்புகள் அவளுக்கு உண்டு. பிரபல நிறுவனங்களின் துணிமணிகளை வாங்கிக் கொள்ள விருப்பபடுவாள். சமயத்தில் விலை அதிகமாக இருந்தால் அவ்வளவு விலைக்குத் தேவையா என்று கேட்பேன். என் நண்பர்கள் எல்லாம் கேட்பதில் கால்வாசி கூட நான் கேட்பதில்லை என்பாள். 


அவளுடைய நெருங்கிய தோழி ஒருவள் அப்படி விலை உயர்ந்த துணிகளை அணிவாள். அவள் போடும் உடைகளில் விலையைப் பற்றி என் மகள் சொல்லும் பொழுது எனக்கு பகீரென்று இருக்கும். அன்றொரு நாள் அந்தப் பெண் வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் போட்டு இருந்த கால்சட்டைதான் என் கவனத்தை ஈர்த்தது. அதில் துணியை விட கிழிந்த பகுதிதான் அதிகமாக இருந்தது. அதுதான் இன்றைய போக்காம், அந்த கிழிந்த துணிக்கு விலை வேறு அதிகமாம். நமக்கென்ன தெரியும். 






அவள் வீட்டுக்குள் நுழைந்த உடனே கையில் இருக்கும் பேப்பரை கிழிந்த இடத்தில் நுழைத்துவிட்டு ‘சார் போஸ்ட்’ என்று கத்த மனம் பரபரத்தது. கந்தல் கதை இருக்கட்டும், நம் கதை கந்தலாகிவிடும் என்பதால் நினைத்ததோடு நிறுத்திவிட்டேன். 

Saturday, November 01, 2025

தயிர்த் தாய் வாழ்த்து!

 

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும் என் மகளுக்கு இந்திய உணவு வேண்டும் அதிலும் தென்னக, தமிழக உணவுகள் இருக்க வேண்டும். எங்கேனும் பயணம் செய்யும் பொழுது கூட மூன்று நான்கு நாட்கள் நம் உணவு கிடைக்கவில்லை என்றால் தோசைக்கடை ஒண்ணைப் பாரப்பா என்பாள். தயிர் சாதத்திற்குத் தொட்டுக்க என்ன பிடிக்கும் என்ற குறிப்புக்குக் கட்டுரை எழுத வேண்டும் என அவளிடம் சொன்னேன்.  அதற்குப் பதிலாக, “தயிர்சாதத்திற்கு எதுக்குப்பா தொட்டுக்க ஏதேனும்?” என்று ஒரு கேள்வியைக் கேட்டாள். 


நான் செய்யும் தயிர்சாதம் அவளுக்குப் பிடிக்கும். அப்படியே சாப்பிடலாம் என்ற விளம்பரம் போல, அதை அப்படியே சாப்பிடுவாள். அந்தத் தயிர்சாதம் பற்றித் தெரிந்து கொள்ள கல்லிடைக்குறிச்சிக்குத்தான் செல்ல வேண்டும். 


மார்கழி மாதம். பனிக்கொட்டும் அதிகாலை நேரம். பஜனைக்கு நேரமாச்சு என்று எழுப்பிவிட்டுவிடுவார்கள். நாங்கள் வசித்த தெரு முனையில் மூன்று கோயில்கள். வாய்க்காலை ஒட்டிப் பிள்ளையார் கோயில். அதற்கு இந்தப் பக்கம் ஒரே சுற்றுச் சுவருக்குள் சிவன் கோயிலும் பெருமாள் கோயிலும். இந்த பெருமாள் கோயிலில் ஒரு பஜனை மடம் உண்டு. அங்கிருந்து கிளம்பி கோயில்களைச் சுற்றி இருக்கும் நான்கு தெருக்களில் பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டே செல்லவேண்டும். சில பெரியவர்கள் முன்னே பாடிக் கொண்டு செல்ல, சிறுவர்கள் அவர்கள் பின்னே அவர்கள் பாடியதைத் திரும்பப் பாடிக் கொண்டே செல்ல வேண்டும். தம் வீடுகளின் வழியே செல்லும் பொழுது பிரதான பாடகர் வைத்திருக்கும் துணிப்பையில் அரிசி போடுவார்கள். 


இப்படி நான்கு தெருக்களையும் சுற்றி வந்த பின்னும் பஜனை மடத்தில் உட்கார்ந்து பாடல்கள் தொடரும். சிறுவர்கள் எல்லாரும் எப்படா முடிப்பார்கள் எப்படா பிரசாதம் கிடைக்கும் என்ற நினைப்பிலேயே அமர்ந்திருப்போம். புளியோதரை, எலுமிச்சை சாதம், எள்ளு சாதம் என கலந்த சாதம் ஏதாவது கிடைக்கும். கூடவே தயிர் சாதம். தொன்னை (இலைகளால் செய்த கிண்ணம்) வழிய இரண்டையும் தருவார்கள். அது தனித்தனியாக எல்லாம் இருக்காமல், ஒன்றோடொன்று கலந்து ஒரு புதப் பதார்த்தமாக உருவெடுக்கும்.  சில நாட்களில் வெறும் தயிர்சாதம்தான் இருக்கும். கையில் பிடிக்க முடியாத சூட்டில் இருந்தாலும் அந்த அதிகாலை குளிருக்கு அருமையாக இருக்கும். 


குழைய வடித்த சாதம். சாதம் வடித்த கஞ்சியால் கொஞ்சம் சொதசொத என்றே இருக்கும். அதை நன்றாகப் பிசைந்து, அதில் போடப்பட்ட கல் உப்பு, கொஞ்சம் பால், கொஞ்சம் தயிர். அவ்வளவுதான். ஆனால் அதன் மேல் தாராளமாக பச்சை மிளகாய், இஞ்சி, உளுத்தம் பருப்பு, கடுகு தாளித்து கொட்டி மேலே கொத்தமல்லித் தழையைத் தூவி  இருப்பார்கள். அந்த வாசம் பாத்திரத்தைத் திறக்கும் பொழுதே மூக்கைத் துளைக்கும். வாயில் உமிழ் நீர் ஊறும். வயிற்றில் கடா முடா எனச் சத்தம் வரும். இதை எழுதும் பொழுது கூட பஜனை மடத்தின் பழைய வாசனை, பூ வாசனை, ஊதுப்பத்தி வாசனை, எண்ணெய் விளக்குகளின் வாசனை, அந்த எண்ணெய் பிசுக்கோடு  இருக்கும் அழுக்குத்துணி வாசனையோடு இந்தத் தயிர்சாத வாசனையையும் என்னால் முகர முடிகிறது. 


அப்படித் தயிர்சாதத்தை வீட்டில் செய்தால் எவ்வளவு செய்தாலும் பாத்திரம் காலி ஆகிவிடும். சட்டென வாயில் அகப்படும் கல் உப்பு, தூக்கலாக இருக்கும் இஞ்சிக் காரம், கொத்தமல்லி வாசம், கடித்துச் சாப்பிட வேண்டிய கஷ்டமெல்லாம் இல்லாத தயிர்சாதத்தை உண்ணத் தொட்டுக் கொள்ள எல்லாம் ஒன்றுமே வேண்டாம். தேவாமிர்தம் தேவாமிர்தம் என்பார்களே, அது கூட இதுக்கு அடுத்த படிதான். “அது என்னவோ நீ செய்வதைப் போல அம்மா செய்வது ருசிப்பதில்லை” என்ற பாராட்டு கொஞ்சம் கூடுதல் ருசியை வேறு தரும். 


நானே சமைச்சதுன்னா நம்பணும்!

இந்த திராட்சைப்பழம், மாதுளம் பழம், முந்திரிப்பருப்பு, உலர்திராட்சை எல்லாம் போட்ட ஹோட்டல் தயிர்சாதம் எல்லாம் கணக்கிலேயே சேர்த்துக் கொள்ளக்கூடாது. சிலர் நறுக்கிய வெங்காயத்தை மேலே தூவுவார்கள். அது சாம்பர்வடைக்குப் பொருத்தமே தவிர தயிர்சாதத்திற்குச் சேராது. உள்ளி என நாங்கள் சொல்லும் சின்ன வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் இரண்டாகக் கீறு உப்பில் பிரட்டித் தொட்டுக் கொள்ளலாமே தவிர அதைச் சாதத்தில் எல்லாம் போடக்கூடாது. இந்த சேமியா பகளாபாத் என்ற கொடுமையை எல்லாம் தயிர்சாத வகைகள் வரிசையில் சேர்க்கவே கூடாது. 


கலந்த சாதம் செய்தால் அந்தப் புளியோதரைக்கோ எலுமிச்சை சாதத்திற்கோ தயிர்சாதத்தைத் தொட்டுக் கொள்வது உண்டு. ஒரே தொன்னையில் கலந்து கட்டிய நினைவினைக் கிளறுவதாலோ என்னவோ இந்தக் கலப்புப் பிடிக்கும். மத்தபடி ஒரு கரண்டி ரசம், வத்தக் குழம்பு, வடு மாங்காய், ஆவாக்காய் தொக்கு என மாங்காய் ஊறுகாய்,  பூண்டு, நெல்லிக்காய், உப்பு எலுமிச்சை, கார எலுமிச்சை, ஈர நார்த்தங்காய், காய்ந்த நார்த்தங்காய் போன்ற ஊறுகாய் வகைகள், வேப்பிலைக்கட்டி என வழங்கப்படும் கறிவேப்பிலைக்கட்டி மோர் மிளகாய், கார வேர்க்கடலை, மசாலா வேர்க்கடலை, மிக்ஸர் என்பதை எல்லாம் மற்றவர்கள் சொல்வதுதான். 


மாங்காயைத் தோலைச் சீவி விட்டு பல் போன்ற அளவில் வெட்டி அதில் உப்புக் காரம் போடும் மிளகாய் மாங்காயை ஏனோ யாரும் சொல்வதில்லை. அது போல காலையில் வைத்து மீதமான குழம்பையும் கீரையையும் ஒன்றாகச் சேர்த்து கட்டியான பதம் வரும் வரை கொதிக்க விடும் குழம்புங்கீரையையும் அதிகம் தெரிவதில்லை.


சின்ன வயதில் விடுமுறைக்கு வந்திருக்கும் சொந்தக்காரப்பிள்ளைகள் எல்லாரும் முற்றத்தில் அரைவட்டமாக உட்கார்ந்து கொள்ள ஒரு சட்டியில் தயிர்சாதத்தைப் பிசைந்து, ஒரு கவளம் எடுத்து அதில் தன் கட்டைவிரலால் அழுத்திப் பள்ளமொன்றைச் செய்து, அந்தப் பள்ளத்தில் குழம்புங்கீரையையோ வத்தக்குழம்பையோ நிரப்பி அம்மா ஒவ்வொருவர் கையிலும் தருவாள். அதை வாயில் போட்டு முழுங்குவதற்குள் மற்றவர்களுக்கு ஒரு முறை கொடுத்து மீண்டும் நம் முறை வந்துவிடும். எதேதோ கதைகள் சொல்லி அவள் இப்படித் தரும் பொழுது எவ்வளவு சாப்பிட்டோம் என்றே தெரியாமல் வயிறுமுட்டத் தின்போம். தின்று முடிக்கும் பொழுது தூக்கம் கண்களைச் சுற்றிக் கொண்டு வந்துவிடும். 



தயிர்த்தாய் வாழ்த்து எனச் சொன்ன பின் ஒரு வெண்பாவேனும் எழுத வேண்டாமா. 

முன்னொரு நாளெங்கள் முற்றத்தில் வைத்தெனக்கு

அன்னையும் தந்தாள் அமிர்தமதை - அந்தோ

உயிரினும் மேலாம் உறவைத் தொலைத்தேன்

தயிர்சாதம் தந்த தவிப்பு! 

அம்மா, முற்றம், அவள் கதைகள், சுற்றி அமர்ந்து உண்ணும் பழக்கம் என எல்லாவற்றையும் தொலைத்தாகிவிட்டது. தயிர்சாதம் ஒன்றுதான் எஞ்சி இருக்கிறது.