Monday, November 03, 2025

கந்தல் கதை!

 

தொடக்கப்பள்ளியில் தரையில்தான் உட்கார்ந்து கொள்ள வேண்டும். அந்த சிமெண்டுத் தரையில் உட்காருவதாலும் தேய்த்துக் கொண்டே நகர்வதாலும் போட்டுக் கொண்டிருக்கும் அரை டிராயர்களின் (பூவைப்…) உட்காரும் பகுதி பிரிப்பிரியாக கிழியும். வருட ஆரம்பத்தில் புதுத்துணி எடுத்துத் தந்தாலும் பாதி வருடம் முடிவதற்கு முன் அது பழைய டவுசர் (பூவென்றும்… ) கிழிந்த இடத்திலேயே கிழிந்துவிடும். “உட்காரும் இடத்தில் கத்தியாடா இருக்கு?” என்று வசை அனேகமாக எல்லார் வீட்டிலும் கேட்டிருக்கும். 


யாருக்கேனும் நன்றாகக் கிழிந்துவிட்டால் அன்று பூராவும் அவனைத் தபாலாபீஸ் என்றுதான் அழைப்போம். கையில் கிடைக்கும் பேப்பர், சாக்பீஸ் துண்டு, சிறு கூழாங்கற்கள் என எல்லாவற்றையும் அந்த ஓட்டை வழியாகப் போட்டுவிட்டு சார் போஸ்ட் என்று கூவுவது ஒரு விளையாட்டு. இதிலிருந்து அவன் தப்பிக்கப் பார்ப்பதும், அவனைச் சுற்றி மற்றவர்கள் ஓடுவதுமாகப் பொழுது போகும். இதுதான் சாக்கு என்று அவன் கொஞ்சம் பெரிதாகக் கிழித்துக் கொள்வான், அப்பொழுதுதான் ஒட்டுப் போட்டு விடாமல் புது டௌசர் ( புய்ப்பம் என்றும்…) கிடைக்கும் என்பது அவன் எதிர்பார்ப்பு. ஆனால் பெரிய ஒட்டுப் போட்டுக் கொண்டு அந்த அரைக்கால்சட்டை (நீங்க சொல்ற மாதிரியும்..) மீண்டும் சுழற்சிக்கு வரும். 


இத்தனைக்கும் இன்றிருப்பது போல் நைஸான துணிகள் எல்லாம் கிடையாது. அது ஒரு முரட்டுத் துணி, காக்கிக் கலரில் இருக்கும். அதையும் கூடக் கிழிக்க முடிவது என்பது ஒரு தனித்திறமைதான். இதில் என் பாடு கொஞ்சம் பரவாயில்லை. என் அண்ணன்மார் வயதில் பெரியவர்கள் என்பதால் அவர்கள் போட்டுக் கொண்டது மறுசுழற்சி முறையில் எனக்கு வராது. ஆனால் சில வருடங்களே மூத்தவர்கள் வீட்டில் இருந்தார்களேயானால் அவர்கள் போட்டுக் கொண்ட துணிதான் வழி வழியாக வரும். கொஞ்சம் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் ‘Ship of Theseus’ என்று சொல்லப்படும் கதையில் வருவது போல எது அசல் துணி எது ஒட்டு என்று தெரியாத வகையில் ஒரு கதம்பமாகப் போட்டுக் கொண்டு வருவார்கள். 


தொடக்கப் பள்ளி விட்டு உயர்நிலைப்பள்ளிக்குப் போன பொழுது சீருடை எல்லாம் நல்லபடியாகப் போட்டுக் கொண்டு வரவேண்டும் என்ற விதிகள் எல்லாம் இருந்ததால் இந்த தபாலாபீஸ் மொத்தமாக இழுத்து மூடப்பட்டுவிட்டது. அதன்பின் கிழிந்த உடைகளை எல்லாம் போட்டுக் கொள்ள சந்தர்ப்பம் வராதது நல்லூழ்தான்.  


அமெரிக்காவில் அரசுப்பள்ளிகளில் சீருடைகள் எல்லாம் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. என் பையன் கையில் கிடைத்த சட்டையையும் கால்சட்டையையும் மாட்டிக் கொண்டு கிளம்பிவிடுவான். ஆனால் மகள் அப்படி எல்லாம் செய்ய மாட்டாள். நேர்த்தியான உடைகள், அதிலும் அந்த வண்ணத்திற்கு இந்த வண்ணம் சேரும் சேராது என்று போடும் உடையைத் தேர்ந்தெடுப்பதையே ஓர் அறிவியல் செயல்திட்டமாகச் செய்வாள். அந்த வயதினருக்கே உரிய எதிர்பார்ப்புகள் அவளுக்கு உண்டு. பிரபல நிறுவனங்களின் துணிமணிகளை வாங்கிக் கொள்ள விருப்பபடுவாள். சமயத்தில் விலை அதிகமாக இருந்தால் அவ்வளவு விலைக்குத் தேவையா என்று கேட்பேன். என் நண்பர்கள் எல்லாம் கேட்பதில் கால்வாசி கூட நான் கேட்பதில்லை என்பாள். 


அவளுடைய நெருங்கிய தோழி ஒருவள் அப்படி விலை உயர்ந்த துணிகளை அணிவாள். அவள் போடும் உடைகளில் விலையைப் பற்றி என் மகள் சொல்லும் பொழுது எனக்கு பகீரென்று இருக்கும். அன்றொரு நாள் அந்தப் பெண் வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் போட்டு இருந்த கால்சட்டைதான் என் கவனத்தை ஈர்த்தது. அதில் துணியை விட கிழிந்த பகுதிதான் அதிகமாக இருந்தது. அதுதான் இன்றைய போக்காம், அந்த கிழிந்த துணிக்கு விலை வேறு அதிகமாம். நமக்கென்ன தெரியும். 






அவள் வீட்டுக்குள் நுழைந்த உடனே கையில் இருக்கும் பேப்பரை கிழிந்த இடத்தில் நுழைத்துவிட்டு ‘சார் போஸ்ட்’ என்று கத்த மனம் பரபரத்தது. கந்தல் கதை இருக்கட்டும், நம் கதை கந்தலாகிவிடும் என்பதால் நினைத்ததோடு நிறுத்திவிட்டேன். 

1 comments:

said...

///நேர்த்தியாந // எழுத்து பிழையா ??